Home » » இருவப்பபுரம் பஞ்சாயத்து!

இருவப்பபுரம் பஞ்சாயத்து!

Written By DevendraKural on Friday, 18 July 2008 | 04:43

அஜித் பல வேடங்களில் நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு கிராமத்தையே இந்திய வரைபடத்திலிருந்து அழித்து விடுவது போன்ற பிரம்மாண்ட கற்பனை அடிப்படையில் கதை பின்னப்பட்டிருக்கும். அது சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்க, "வாதாபி ஜீரணமாவாய்" என்று அகத்தியர் வயிற்றைத் தடவி வாதாபியை ஜீரணம் செய்தது போல், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பஞ்சாயத்தை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது ஜாதி துவேஷம்.

இருவப்பபுரம் என்கிற பஞ்சாயத்து 1950 - 60 களில் நல்ல செல்வாக்குடன் இருந்த தேவேந்திரர்கள் பஞ்சாயத்து. 12 கிராமங்களையே உள்ளடக்கி இருந்தாலும் கூட, 2500க்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலங்களையும் அவற்றில் முனைப்புடன் வேலை செய்த உழைப்பாளிகளையும் உள்ளடக்கி இருந்ததால் பணவரவுக்குக் குறைவில்லாத வளமான பஞ்சாயத்தாகவே இருந்திருக்கிறது அந்தக் காலத்தில். தேவேந்திர தலைவர்களால் திறம்பட நிர்வகிக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த பஞ்சாயத்துக்களுள் ஒன்றாக மாநில அளவில் பலமுறை அங்கீகாரமும் பெற்றிருந்திருக்கிறது.பக்கத்து மற்றும் சுற்றுவட்டார உயர்ஜாதி இந்துக்களால் இந்த விஷயத்தை ஜீரணிக்க முடியுமா? இன்றைக்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் தமிழகத்தின் தென்கோடி மாவட்டத்தில் ஜாதி துவேஷம் எந்த அளவுக்குத் தீவிரமாக இருந்திருக்கும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த நடுநிலை மக்களால் நிச்சயம் ஊகிக்க முடியும்.வழக்கம் போல் சதி செய்து 1963-ல் சப்தமில்லாமல் ஓர் அரசாணை மூலம் அந்தப் பஞ்சாயத்தைப் பக்கத்து சாயர்புரம் பஞ்சாயத்துடன் இணைத்து விட்டார்கள். மாநில அமைச்சர் கக்கன் மற்றும் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகர் ஆகியோரின் முயற்சி மற்றும் தலையீட்டில் அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.ஆனால் நினைத்தது சாதிக்கும் வரை தான் ஜாதிப் பேய் அடங்குவதில்லையே.

மெல்லக் காத்திருந்து 1964 அக்டோபரில் இன்னொரு அரசாணை மூலம் அந்தப் பஞ்சாயத்து தனித்தன்மை இழக்கப் பெற்று சாயர்புரம் பஞ்சாயத்தில் வெறும் இரண்டு கவுன்சிலர் பதவிகளுடன் இணைக்கப்பட்டு விட்டது. (இது மாதிரியான சப்தமில்லாத நசுக்கல் வேலைகள், ஒருசாராரால் தமிழகத்தின் புனித முதல்வராக அளவுக்கு மீறிப் பிரகடனப்படுத்தப்படும் காமராஜர் ஆட்சியில் நிறைய நடந்திருக்கின்றன). இந்த மெர்ஜருக்கான நிர்வாகக் காரணம், இன்றுவரை ரெவென்யூ அதிகாரிகளுக்குமே புரியாத புதிராகத் தான் இருக்கிறது என்பது நிஜம்.'பொறுத்தார் பூமி ஆழ்வார்' என்று போதிக்கப்பட்டுள்ள அந்த பூமாதேவியின் புதல்வர்கள், சரி தொலையட்டும் என்று நீண்டகாலம் பொறுமை காத்திருக்கிறார்கள்.

பஞ்சாயத்தின் மொத்த வருமானத்தையும் ஏப்பம் விட்டுக் கொள்ளும் சாயர்புரம், இரண்டே இரண்டு கவுன்சிலர்கள் அதுவும் தேவேந்திர கவுன்சிலர்களை மட்டும் கொண்டுள்ள 12 கிராமங்களுக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்கும் என்பதை எல்லோருடைய கற்பனைக்கே விட்டு விடலாம். குறைந்தது மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தால் தான் ரேஷன் கடை, குழந்தைகள் பல கிலோமீட்டர் தூரம் நடந்தால் தான் ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், சோடியம் விளக்கு பார்த்தறியாத வீதிகள், ஃப்யூஸ் ஆன டியூப் லைட்டுகள் மாற்றப்படாத சாலை விளக்குக் கம்பங்கள், சுடுகாட்டின் அருகில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான பால்வாடி, அந்தக் கூட்டத்திலும் தலித்துகள் அல்லாத உயர்ஜாதியினர் வசிக்கும் இரண்டாம் வார்டுக்கு மட்டும் சாலை வசதி இவையெல்லாம் 2007-08 ன் நிதர்சனம்.வேணாம்சாமி எங்க பஞ்சாயத்தை எங்களுக்குத் திருப்பிக் கொடு என்று அந்தப்பகுதி மக்கள் கேட்பதையும் நூறுநாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதம் இருப்பதையும் எப்படி சட்ட ஒழுங்குப் பிரச்னையாக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பது போல் PEACE COMMITTEE போட்டிருக்கிறார்களாம்.

இங்கே என்னங்க சண்டையா சச்சரவா கலவரமா ஆர்ப்பாட்டமா; பீஸ் கமிட்டி போடற அவசியம் என்னங்க வந்தது என்று விவரம் தெரிந்த இருவப்பபுர மக்கள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை.சாயர்புரம் டவுன் பஞ்சாயத்தாக உயர்வு பெற்று இருக்கிறதாம். ஒவ்வொரு உயர்வுக்குள்ளும் இப்படிப்பட்ட வெளித்தெரியாத அழுத்தங்களும் நசுக்கல்களும் இருக்கும் போலும்.அரியலூரை மீண்டும் தனி மாவட்டமாக அறிவிப்பதில் மாநில அரசுக்கு ஆர்வம் இருந்தது, ஏனென்றால் அது ஜெயலலிதாவுக்கு எதிரான காரியம். இந்தப் பஞ்சாயத்துப் பிரச்னையும் ஜெயலலிதாவின் ஆட்சியில் நிகழ்ந்திருந்தது என்றால் இந்நேரம் மீண்டும் தனி பஞ்சாயத்து ஆகியிருக்கும். குறைந்தபட்சம் நிறைய ஓட்டுக்களாவது இருந்தால் பெரிய கட்சிகள் முனைந்திருக்கும்.மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஒரு தமிழர் (மணிசங்கர் ஐயர்). அவர் காலத்தில் தமிழகத்தில் இப்படி ஓர் அநீதி! அவர்களுக்கு நீதி கிடைக்கவும் நல்வாழ்வு மீளவும் ஏதாவது நடந்தால் சரி. ஜாதி அரக்கனிடமிருந்து மீண்டு அரசியல் பிசாசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் அந்த மக்கள்.

அரசாங்கமே அவன் பின்னால் உள்ளது, அரசாங்கமே முடிவு செய்து விட்டது என்று புலம்புவதால் ஒன்றும் நடக்க போவதில்லை, துணிந்து அவனா , நம்மளா என்று பார்த்து விடுவோம். நம் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குபவனை பார்த்து வேடிக்கை பார்க்க முடியுமா ? போராடுவதைத் தவிர வேறு வழிதான் இருக்க முடியுமா? வாருங்கள், அத்தகையதொரு போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்.
Share this article :

+ comments + 1 comments

26 March 2013 at 05:50

purachi illamal vidivu pirakkathu........

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்