Home » » தனி நபர் போராட்டம்

தனி நபர் போராட்டம்

Written By DevendraKural on Thursday, 17 July 2008 | 22:42

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஷர்மிளா சானு. ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர் 2006 அக்டோபர் 2ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார்.ஷர்மிளா சானு என்ன குற்றம் செய்தார்? எதற்காகச் சிறைத்தண்டனை பெற்றார்?அவர் பட்டினி கிடந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்பது தான் அவர் மீதான வழக்கு.ஷர்மிளா ஒரு காந்தியவாதி. அதனால் `சத்யாக் கிரகி'யான அவர் உணவை மறுத்து, பட்டினிகிடந்து, தம்மை வருத்திக் கொண்டார். காரணம்?மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்கிற பெயரில் அசாம் துப்பாக்கிப் படை ரௌடிகள் சந்தேகப்படுகிற வர்களையெல்லாம் சித்திரவதை செய்தார்கள்.

பயந்து ஓடுகிறவர்களைச் சுட்டுக் கொன்றார்கள். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறி எந்த வீட்டுக்குள்ளும் நுழைந்து பெண்களைத் தூக்கிக் கொண்டு போய் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார்கள்.

இந்தச் சீருடை அணிந்த ரௌடிகளால் பல பெண்கள் காணாமற் போனார்கள்.தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்கிற பெயரில் காமவேட்டை நடத்தினார்கள். எதிர்த்தவர்களைசம் சுட்டுக்கொன்றார்கள்.
கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டார்கள்.ராணுவத்தின் இம்மாதிரியான காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டித்து மணிப்பூரில் அணிதிரண்ட பெண்கள் இந்தியாவே வெட்கித் தலைகுனியும் விதத்தில், ராணுவத் திமிரை உலகே கண்டிக்கும் விதத்தில் நேர்மையுணர்ச்சியுள்ள மனிதர்களின் தூய இதயங்களெல்லாம் கசிந்துருகிக் கனல் பற்றும் விதத்தில் ஒரு போராட்டமே நடத்தினார்கள்.

பெண்களின் மான உணர்ச்சியை மிதித்துக் கசக்கும் ராணுவ வெறியர்களின் முகத்தில் அறைகிறமாதிரி, ஆடை களைந்து நிர்வாணமாய் ஆயிரக்கணக்கான பெண்கள் `இந்திய ராணுவம் எங்களைக் கற்பழித்து' என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு, இந்திய அரசையும் அதன் பட்டாளத்தையும் சொற்களால் தாக்கி ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்தினார்கள்.

மான உணர்ச்சி மிகுந்த மணிப்பூர் பெண்களின் இந்தப் போராட்டம் உலகையே குலுக்கியது.பேரணி நடத்திப் போராடிய பெண்கள் `பொத்தாம் பொதுவாக' முழக்கமிடவில்லை. குற்றம் செய்த ராணுவ மிருகங்களின் பெயர் களைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆனால் இந்திய அரசு சம்பந்தப்பட்ட காலிகள் எவர்மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
படை வீரர்களைப் பகைத்துக் கொண்டு எந்த நாட்டின் அரசும் ஆட்சி நடத்திவிட முடியாது. அரசு என்பதே இம்மாதிரியான பயிற்சியளிக்கப்பட்ட அடியாட்களின் பலத்தில் நிற்பதுதானே! அதனால் இந்திய அரசும் ராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்க வில்லை. உண்மையில் ராணுவ வரலாற்றில் அத்து மீறல் என்று எதுவும் கிடையாது. ராணுவம் செய்வதெல்லாம் நன்மைக்கே என்று நம்பவைப்பதுதான் அரசுகளின் வேலை.

ஈராக்கில் அந்த நாட்டின் ராணுவ `வீரர்களையே' அமெரிக்க பெண்படைப் பிரிவினர் நிர்வாணப்படுத்தி முறைகேடாகப் பயன்படுத்திய கொடுமையான செய்திகள் படத்துடன் வெளியிடப்பட்டன. அதற்காக அமெரிக்க கூட்டணிப் படைகளோ, புஷ்ஷோ, பிளேயரோ வேதனைப்படவில்லை; வெட்கப்படவில்லை.``அது''தான் ராணுவம்!`அப்படி' நடந்து கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டு!''-`இது'தான் அரச நீதி! இப்படித்தான் இந்திய அரசும் நடந்து கொண்டது. தீவிரவாதிகளைத் `தேடும்' பணி தீவிரப்படுத்தப்பட்டது.

`தீவிரவாதிகள்' என்கிற பிரச்னை அரசுகளுக்கும் ராணுவத்தினருக்கும் கிடைத்துள்ள `வரம்' என்றே சொல்லலாம். தீவிரவாதிகளின் பெயரால் ஓர் அரசு தனக்குப் பிடிக்காதவர்களையும், அரசியல் ரீதியில் தனக்குப் போட்டியாளர்களையும் தேடிப்பிடித்து விசாரணை இல்லாமல், விளக்கம் கூறத் தேவையில்லாமல் சிறையில் அடைக்கலாம்; ஒழித்துக் கட்டலாம்.அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சீருடை அணிந்த படையினருக்கு தீவிரவாதிகளைத் தேடுதல் என்பது சலிப்பைப் போக்கிக் கொள்ள சரீர சுகமளிக்கும் ஒரு திருவிழாக் கொண்டாட்டம்தான்.

மணிப்பூரில் நடந்த ராணுவத் திருவிழாக்களில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதும், தடுக்க முயன்ற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுமான, கோரச் சம்பவங்களைக் கண்ணெதிரே கண்ட ஷர்மிளா சானு, மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளுக்கெல்லாம் காரணம் ராணுவத்துக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதுதான்.எனவே ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்திக் காந்திய வழியில் `உண்ணாவிரதப்' போராட்டம் தொடங்கினார்.

அப்போதும் ராணுவத்தின் சிறப்புரிமைச் சீரழிவுகள் நிறுத்தப்படவில்லை. மாறாக கொடுமைக்கு எதிராகப் போராட்டம் தொடங்கிய ஷர்மிளா சானு மூன்றாவது நாளில் தற்கொலைக்கு முயன்றார் என்கிற பெயரில் கைது செய்யப்பட்டார். ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை.சிறையிலும் ஷர்மிளா தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். தண்டனைக் காலமான 6 ஆண்டுகளும் பட்டினியாகவே இருந்தார்.

உடல் நிலை மோசமாகும் போதெல்லாம் வலுக்கட்டாயமாக மூக்குவழியாகக் குழாய் மூலம் மருந்தும் திரவ உணவும் தரப்பட்டன.உடல் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டு, குழாய்கள் அகற்றப்பட்டால் ஷர்மிளாவின் மன உறுதி போராட்டத்தையே வெளிப்படுத்தியது. ஆறு ஆண்டுகளாக அவர் சாப்பிடாமலேயே தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.இவ்வளவு நீண்ட உணவு மறுப்புப் போராட்டத்தை இதுவரை யாருமே நடத்தியதில்லை.ஆறு ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிந்து அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் விடுதலை செய்யப்பட்டார்.விடுதலை செய்யப்பட்ட தினம் காந்தி பிறந்த நாள் என்பதால் டெல்லியில் உள்ள காந்தி சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செய்தார்.தன்னைக் காணவந்த மக்கள் கூட்டத்தையும் செய்தியாளர்களையும் பார்த்துக் கூறினார்: ``விடு தலையானதால் நான் எனது போராட்டத்தை நிறுத்தி விடமாட்டேன். ராணுவ அராஜகம் நிறுத்தப்படும் வரை எனது போராட்டம் தொடரும். எனது மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகள் என்னை ஒரு `மகா சக்தி'யாக மாற்றி விட்டது.

’’ ஷர்மிளா ஜந்தர் மந்தர் பகுதியில் மறுபடியும் தனது போராட்டத்தைத் தொடங்கினார். மறுபடியும் கைது செய்யப்பட்டார்.``எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை எதிரிதான் முடிவு செய்கிறான்'' ``ஆயுதத்துக்கு எதிராக ஆயுதம்'' - என்கிறான் தீவிரவாதி.``தனி நபர் சத்தியாக் கிரகம் சர்வாதிகாரத்தையும் வீழ்த்தும்’’ என்பது காந்தியவாதிகளின் நம்பிக்கை.துப்பாக்கி முனையானாலும் சரி; சத்தியாக்கிரகமானாலும் சரி, மக்களை வெல்லாமல் பகை வெல்ல முடியாது என்பதுதான் எதார்த்தம்.
Share this article :

+ comments + 1 comments

போராளி இம்மானுவேல் தேவேந்திரர்

மற்றும்

தளபதி சுந்தரலிங்க குடும்பனார்

புத்தகம் தேவை படுவோர் கீழ் கண்ட முகவரியில் உள்ள புத்தக கடையில் 10% தள்ளுபடி விலையில் வாங்கி படித்து பயன் பெறுவீர்.

செம்மொழி புக் ஸ்டோர் ,

12-G, K.M.A காம்ப்லெக்ஸ் ,

பை பாஸ் ரோடு ,

ராம் நகர் ,

மதுரை -625016.

மொபைல் நம்பர் :- 9600971961 9442731335

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்