Home » » தன்னம்பிக்கை-I

தன்னம்பிக்கை-I

Written By DevendraKural on Thursday, 17 July 2008 | 22:13

அரசியலில் தமிழகத்து இளைய தலைமுறையினர் அடுத்தடுத்து மத்திய அமைச்சர்களாகிக் கொண்டிருக்கின்றனர். திரைத்துறையில் புதுப்புது இளம் நாயகர்கள் வருகிறார்கள். பாடலாசிரியர்களாக இளம் கவிஞர்கள் படையெடுக்கிறார்கள். இவையெல்லாவற்றையும்விட இன்றைக்கு முக்கியமானது தொழில்துறை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான தொழில்துறையில் இளைஞர்களின் பங்கேற்பும் பங்களிப்பும் எப்படி இருக்கிறது?அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கோப்புகள் (Files) தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனம் இது. பாரம்பரியமிக்க இந்த நிறுவனத்தின் உயர் பொறுப்பை ஏற்றிருக்கிறார் 20 வயதேயான இளைஞர் அபுபக்கர் சித்திக். தன்னம்பிக்கையும் துணிவும் வணிக நுணுக்கமும் ஒருங்கே பெற்றிருக்கும் அந்த இளைஞனின் பேச்சு, தொழில்துறையில் கால் வைக்கத்துடிக்கும் இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கம் அளிக்கிறது.""எங்கள் கிங்ஸ் நிறுவனம் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ்பெற்றது. என் தந்தை மீரான்கனி 1978இல் இந்நிறுவனத்தை அடைகிறார். இதன் வளர்ச்சியை மனத்திற்கொண்டு, காலத்தின் தேவைக்கேற்ப புதிய புதிய கோப்புகளை தயாரித்தார்.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் கோப்புகளை உடனுக்குடன் தயாரித்துத் தரும் வகையில் எங்கள் நிறுவனத்திற்கான இயந்திரங்களை அமைத்தார். 1 நாளைக்கு 1 லட்சம் கோப்புகள் விநியோகிக்க வேண்டும் என்றாலும் தாமதிக்காமல் தயாரித்துவிடுவார். எண்ணிக்கை அதிகரித்தாலும் தரத்தில் குறைபாடு இல்லாமல் நேர்த்தியாகக் தயாரிப்பதே எங்கள் கிங்ஸ் நிறுவனத்தின் பலம்'' என்கிறார் அபுபக்கர்.2002இல் செப்டம்பர் 13 அன்று கிங்ஸ் கோப்புகள் நிறுவனம் பெரும் விபத்தை சந்திக்கிறது. அது ஒரு தீ விபத்து. மொத்தமாக எல்லாவற்றையும் இழக்க நேரிட்டாலும், எதிர்நீச்சல் போட்டு ஏழே நாட்களில் உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறார்கள். 15 நாட்களில், அதே பழைய இடத்தைச் சீரமைத்து விற்பனையையும் செய்திருக்கிறார்கள். அந்த இழப்பை முழுமையாக ஈடுசெய்ய 3 அண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.""இந்த மீட்சிக்குக் காரணமாக இருந்தது, அப்பாவின் தன்னம்பிக்கைதான். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகா முலையூர்ங்கிற சின்ன கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த எங்கப்பா கடுமையான உழைப்பாளி. திட்டமிட்டுச் செயல்படக்கூடியவர். எந்தச் சூழலையும் சமாளிக்கும் ஆற்றலுடையவர். அதுதான் அவரை மீண்டெழச் செய்திருக்கிறது.அவர் அடிக்கடி ஒரு உதாரணம் கூறுவார். சிலந்தி வலையில் வேறு ஒரு பூச்சி போனால் மாட்டிக்கொள்ளும். அது ஏன் மாட்டிக் கொள்கிறது என்றால், அந்த வலைக்குள் போவதால் மட்டுமல்ல. அதற்குள் போனதும், இதிலிருந்து தப்பிக்கணுமேங்கிற பதற்றத்தில் கால்களை உதறுவதால்தான் நன்றாக சிக்கிக் கொள்கிறது. அதுபோல, சிலந்தி வலை மாதிரியான சிக்கல்கள் ஏற்படும்போது நாம் பதற்றப்பட்டால், அந்தச் சிக்கலில் வசமாக மாட்டிக்கொள்வோம். அமைதியாக இருந்து, என்ன செய்யவேண்டும் என யோசித்துத் திட்டமிட்டால் மீண்டு விடலாம். இதுதான் அப்பா அடிக்கடி சொல்லும் உதாரணம். விபத்து ஏற்பட்டபோது காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை கைவிட்டபோதும், துணிவை இழக்காமல் அவர் பதற்றப்படாமல் சிந்தித்துச் செயல்பட்டதால்தான் மீண்டிருக்கிறார்'' என்கிறார் மகன்.காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்வதில் "கிங்ஸ்' நிறுவனம் முன்னிலையில் நிற்கிறது. எந்தெந்த வகைகளில் கோப்புகள் தேவைப்படுகின்றனவோ அதற்கான வடிவமைப்புகளைச் செய்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனைகளில் தற்போதைய அளவுக்குக் கோப்புகள் தேவைப்பட்டதில்லை. ஆனால், தற்போது எந்த நோயாளியாக இருந்தாலும் அவர்களுக்கென தனித்தனிக் கோப்புகள் உள்ளன. இதுபோன்ற காலமாற்றத்தைக் கவனித்து பல வகையான கோப்புகளைக் கிங்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. லயோலா கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின்போது பயன்படுத்தப் பட்டவை கிங்ஸ் கோப்புகள்தான் எனப் பெருமையுடன் சொல்கிறார்கள் தந்தையும் மகனும்.இவையெல்லாவற்றையும் விடப் பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக கிங்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய கோப்பு ஒரு புதுமை என்கிறார் அபுபக்கர்.""செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் நோட்டுப்புத்தகம் தூக்கிச் செல்வதற்குப் பதிலாக ஒரு கோப்பை மட்டும் எடுத்துச் செல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியர் தரும் குறிப்புகளைத் தாளில் எழுதி, அதில் இணைத்துக்கொள்ள வேண்டும். இதனை நாங்கள் வடிவமைத்துக் கொடுத்தோம். அது மாணவர்களுக்குப் பெருமளவு பாரத்தைக் குறைத்தது. இப்படி நடைமுறைத் தேவையறிந்து எங்கள் தயாரிப்புகளை உருவாக்குகிறோம். என்னதான் தகவல் தொழில்நுட்பத்துறை கவர்ச்சிகரமாக வளர்ந்தாலும் அது எந்தப் பொருளையும் உற்பத்தி செய்வதில்லை. தொழில் என்பது, ஒரு பொருளை தேவைக்கேற்ப உற்பத்தி செய்து, சந்தைப்படுத்துவதுதான், அதனால், மனித சமுதாயத்திற்குத் தேவைகள் இருக்கும்வரை தொழில்துறைக்கு அழிவில்லை என்ற தன்னம்பிக்கை இந்த இளைஞரிடம் இருக்கிறது.""நான் லயோலாக் கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனில் வணிக மேலாண்மைக்கான சான்றிதழ் படிப்புப் பயின்று வருகிறேன்.தனது தேவையும் ஆர்வமும் தொழில் முனைவதில்தான் என்பதில் தெளிவாக இருக்கும் இவர், பாரம்பரியமிக்க கிங்ஸ் நிறுவனத்தில் கிங்ஸ் மார்ட் என்ற புதிய பிரிவைத் தொடங்கவிருக்கிறார். தற்போது, பாரி முனையில் உள்ள அலுவலகத்திற்கு வந்தால்தான் கிங்ஸ் தயாரிப்புகளை குறைந்த விலையில் வாங்க முடியும் என்ற நிலைமை இருப்பதை மாற்றி, தாம்பரம் உள்ளிட்ட 10 இடங்களில் கிளைகளைத் திறந்து, அதே விலைக்கு விற்பனை செய்வதுதான் கிங்ஸ் மார்ட்டின் நோக்கம்.அத்துடன், வெளிநாட்டுப் பயணத்திற்கும் அபுபக்கர் தயாராகி வருகிறார். தற்போது சீனாவிலிருந்துதான் இந்தியாவுக்கு பொருட்கள் இறக்குமதியாகின்றன. சீனாவுக்கு இங்கிருந்து பொருட்களை அனுப்புவது தொடர்பாகச் சந்தை நிலவரமறிய, சீனப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் அபுபக்கர், டெல்லியில் உள்ள சந்தை நிலவரத்தையும் கவனித்து, அதற்கேற்பத் தனது தொழிலில் புதிய உத்திகளை கையாள தயாராகி வருகிறார்.தன்னைப் போன்ற இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் மீது அபுபக்கருக்கு எந்தளவில் அக்கறை இருக்கிறது?""எங்கள் நிறுவனத்தின் மூலம் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் அளிக்கமுடியும். இப்போதே பலர், எங்கள் தயாரிப்புகளுக்கான ஆர்டரை பெற்றுவந்து, அதற்குரிய தொகையைப் பெறுகிறார்கள். கிங்ஸ் மார்ட் உருவாகிவிட்டால், அதன் முகவராகப் பல இளைஞர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதன் மூலம் அந்த இளைஞர்கள் தொழில் முனைவோர் ஆகிவிடலாம். எங்கள் தொழிலில் அவர்களும் பங்குதாரர் என்ற நிலை வரும். ஆர்வமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் போது இளைஞர்களால் வெற்றிபெறமுடியும் என்கிறார் உறுதியான குரலில்.நாளைய இளைஞர் உலகத்தின் வெற்றிக்கு இன்றைய அடையாளம் "கிங்ஸ் மார்ட்' அபுபக்கர் சித்திக்.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்