Home » » இசுராலின்கிராட் சமர் (Battle of Stalingrad)

இசுராலின்கிராட் சமர் (Battle of Stalingrad)

Written By DevendraKural on Wednesday, 6 August 2008 | 00:00

இசுராலின்கிராட் நகரைக் கைப்பற்ற முனைந்த யேர்மன் படைகளுக்கும் சோவியத் படைகளுக்கும் 17 யூலை 1942 இல் இருந்து 02.02.1943 வரை இடம்பெற்ற சமரானது வரலாற்றில் குருதி தோய்ந்த சமர்களில் ஒன்றாகும்.
இசுராலின்கிராட் நகரைக் கைப்பற்ற முனைந்த யேர்மன் படைகளுக்கும் சோவியத் படைகளுக்கும் 17 யூலை 1942 இல் இருந்து 02.02.1943 வரை இடம்பெற்ற சமரானது வரலாற்றில் குருதி தோய்ந்த சமர்களில் ஒன்றாகும்.
இரண்டு பக்கமும் 1500000 படையினருக்குமேல் கொல்லப்பட்டனர்.

இறுதியில் யேர்மனியின் ஆறாவது படையும் அதனது தோழமைப் படையும் உருசியப் படைகளாற் சுற்றிவளைக்கப்பட்டு அழிவுக்குள்ளாகின.
இது இரண்டாம் உலகப்போரில் ஒரு படை எதிர்கொண்ட மிகப்பெரிய தோல்விகளில் இரண்டாவதாகும். இந்தச் சமரின் முடிவில் சரணடைந்த 230000 படையினரில் 91000 பேர் யேர்மன் படையினர். இவர்களுள் பீல்ட்மார்சல் போலசும் 22 ஜெனரல்களும் அடங்குவர்.

போரின் முடிவில் சரணடைந்தோரில் 5000 பேரே உயிர் தப்பினர். 11000 யேர்மன் படையினர் சரணடைய மறுத்து 1943 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் வரை சண்டையிட்டனர். அவர்களில் பலர் கொல்லப்பட எஞ்சியோர் சரணடைந்தனர்.

இசுராலின்கிராட் சமரின்போது நகரை விட்டு மக்கள் நீங்குவதை இசுராலின் தடுத்தார். பொதுமக்களில் பெண்கள், சிறுவர்கள் உட்பட எல்லோரும் அகழிகள் வெட்டுதல், அரணமைத்தல் போன்ற பணிகளிலீடுபடுத்தப்பட்டனர். அங்கு மக்கள் இருப்பது நகரைக் காக்கும் படையினருக்குச் சண்டையிடத் தூண்டுதலைத் தரும் என இசுராலின் நம்பினார்.

யேர்மனியின் வான்படைக்கு எதிராக வானூர்தி எதிர்ப்புக் கலங்களைப் பயன்படுத்தும் பணி 1077 ஆவது வானூர்தி எதிர்ப்பு ரெஜிமென்டிடம் தரப்பட்டது.

இந்தப் பிரிவில் பணியாற்றியவர்களில் பெரும்பாலோர் தன்னார்வத்துடன் படையிலிணைந்த பெண்களாவர். இவர்களுக்குத் தரைவழித் தாக்குதல் நடத்தும் எதிரியைத் தாக்குவதற்கான பயிற்சி இருக்கவில்லை.

இருந்தபோதும் வேறு சோவியத் பிரிவுகளின் ஆதரவு இல்லாத நிலையிலும் இந்தப் படைக் கலங்களைக் கையாண்டோர் யேர்மனியின் 16 ஆவது பன்சர் (ராங்கி) டிவிசன் முன்னேறிய போது அதனை எதிர்த்து நின்றனர். அங்கிருந்து 37 வானூர்திகளின் எதிர்ப்புப் படைக்கலங்களையும் அதை இயக்கியோரையும் சூட்டுக்கு சூடு என இடம்பெற்ற சண்டையின் பின்பே யேர்மனியர் அழித்தனர்.
இந்தக் காலப்பகுதியில் இந்தப் பகுதிக்கு சண்டையிட வந்த சோவியத்தின் புதிய காலாட்களின் வாழ்வு 24 மணிநேரத்திற்குக் குறைவாக இருந்தது. அதிகாரிகள் வாழ்வு அண்ணளவாக மூன்று நாட்களாக இருந்தது.
~ஒரு அடிகூட பின்னால் வைக்கக்கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஒப்புதலில்லாமல் பின்வாங்கும் தளபதிகளுக்கு படைய மன்றில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சமரின் தொடக்கத்தில் சோவியத்தானது நேரடியாகப் போர் உற்பத்தியில் தொடர்பு கொண்டிராத ~தொழிலாளர் படையை நம்பியே சமரை நடத்தியது. சமரின் தொடக்கத்தில் குறுகிய காலம் ராங்கிகளை உற்பத்திசெய்ததோடு, அதனை ஓட்டும் பணியையும் இந்தத் தொழிலாளரே செய்தனர்.
ராங்கிகள் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக முன்னணிக் கோட்டுக்கு வண்ணம் பூசப்படாமலும் அல்லது குறிகாட்டி பெருத்தப்படாமலும் ஓட்டிச் செல்லப்பட்டன.

யேர்மனியின் அப்போதைய படைத்துறைக் கோட்பாடு இணைந்த படைகளின் பிரிவுகள் மூலம் நடத்தப்படும் தாக்குதலாக இருந்தது. இதனை அவர்கள் மின்னற் போர்முறை (டீடவைணமசநைப) என அழைத்தனர்.
ராங்கிகள், காலாட்கள், பொறியியலாளர், ஆட்டிலறி, தரையில் தாக்கும் வானூர்திகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாடாக இது இருந்தது. இதனை எதிர்கொள்ள சோவியத் தளபதிகள் ஓர் எளிய முறையைக் கையாண்டனர். யேர்மனியர்களைக் ~கட்டித் தழுவுதல் என இந்தத் தந்திரத்தைச் சோவியத் தளபதி சுக்கோவு அழைத்தார்.

எவ்வளவுக்கு இயலுமோ அவ்வளவுக்கு நெருக்கமாக யேர்மனியக் கோட்டுக்கு (Line) அருகே சோவியத்தின் கோட்டை அமைப்பதே இந்தத் தந்திரமாகும். இதனால் யேர்மன் படைகளுக்கு அவற்றின் ஆதரவுப் படைகளின் அதாவது ஆட்டிலறி, தரையில் தாக்கும் வானூர்திகளின் ஆதரவைப் பெறமுடியாது செய்யப்பட்டது.

ஒவ்வொரு வீதி, தொழிற்சாலை, வீடு, அடித்தளம், படிக்கட்டு ஆகியவற்றிற்காகக் கடும் சண்டை நடந்தது. இந்த நகரப் போர்முறையை யேர்மனியர் ~எலிப் போர் (Rattenkrieg) என அழைத்தனர்.
அடுக்களையைப் பிடித்தாயிற்று இருந்தபோதும் ஆட்கள் வாழும் அறையைப் பிடிக்கச் சண்டை பிடிக்கிறோம் என யேர்மனியர் இந்தச் சண்டை குறித்துக் கசப்புடன் அதேவேளை நகைச்சுவையுடன் கூறிக்கொண்டனர்.

மாமெயவு கேர்கன், எனும் மலையைக் கைப்பற்ற நடந்த சண்டையும் ~பவலொவின் வீடு என அழைக்கப்பட்ட வீட்டுக்காக நடந்த சண்டையும் இசுராலின்கிராட் சமரின் கடுமையை எடுத்துக்காட்டக் கூடிய இரு நிகழ்;ச்சிகளாகும்.

மாமெயவு கேர்கன் மலைக்கும் முதலாம் தொடர்வண்டி நிலையத்திற்கும் செப்ரெம்பர் 13 ஆம் நாள் நடந்த சண்டையில் சோவியத்தின் 13 ஆவது காவலர் சுடுகலம் டிவிசன் கலந்து கொண்டது.
யேர்மனியிடமிருந்து இந்தப் பகுதியைக் கைப்பற்ற முனைந்த சோவியத் படைகள் ஓரளவே அதன் இலக்கில் வெற்றி பெற்றன. ஆறு மணி நேரத்துள் பதினான்கு தடவைகள் இவை கைமாறின.

13 ஆம் திகதி சண்டையிலீடுபட்ட 10,000 சோவியத் படையினரில் ஒருவர் கூட அடுத்த நாள் காலை உயிரோடிருக்கவில்லை. யேர்மனியர்களும் இதேயளவுக்கு இழப்புக்களைச் சந்தித்தனர்.
யக்கோவு பவலோவுவின் கீழ் செயற்பட்ட சோவியத் பிளாட்டூன் ஒன்று குடியிருப்புக் கட்டடத் தொகுதி ஒன்றைத் தகர்க்க முடியாத அரண்கோட்டையாக மாற்றியிருந்தது. அந்தப் பிளாட்டூன் அந்தப் பகுதியைச் சூழ கண்ணிகளைப் புதைத்தது. சாளரங்களில் கனரகப் படைக்கலங்களை நிலைப்படுத்தியது.

அடித்தளத்தைத் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தியது. ஓய்வின்றிச் சிறிய அளவில் பெற்ற வலுவூட்டல் படையுடன் இரண்டு மாதங்கள் இந்தப் பிளாட்டூன் அந்தக் குடியிருப்புக் கட்டடத் தொகுதியைக் காத்து நின்றது.
~பிரெஞ்சின் தலைநகர் பாரிசைக் கைப்பற்றக் கொல்லப்பட்ட யேர்மனியர்களைக் காட்டிலும் கூடிய யேர்மனியர் பவலோவுவின் வீட்டைக் கைப்பற்றும் முயற்சியில் கொல்லப்பட்டனர் என சுக்கோவு பின்னாளில் நகைச்சுவையாகக் கூறுவதுண்டு. இரண்டாம் மாதத்தில் யேர்மன் படையினர் அணி அணியாக வந்து அந்த வீட்டுத் தொகுதியைத் தாக்கினர்.

முதல் வந்த அணி கொல்லப்பட்டதும் குடிமனையில் உள்ளே இருக்கும் சோவியத் படையினர் வெளியே ஓடி அங்கு குவிந்து கிடந்து கனரகப் படைக்கலங்கள், ராங்கி எதிர்ப்புப் படைக் கலங்கள் ஆகியவற்றிற்கான தெளிவான சூட்டுப்பார்வையை மறைக்கும் யேர்மனியரின் உடல்களை உதைத்துக் கீழே வீழ்த்த வேண்டியிருந்தது. சார்யன்ட் பவலோவுக்கு ~சோவியத் ஒன்றியத்தின் வீர நாயகன் விருது வழங்கப்பட்டது.
யேர்மனி 22.06.1941 அன்று ~நடவடிக்கை பார்பரோசா எனும் பெயரில் சோவியத் ஒன்றியத்தின் மீதான வன்கவர்வைத் தொடங்கியது. விரைந்து முன்னேறிய யேர்மன் படை 1942 இளவேனிற் காலத்தில் வடக்கே லெனின் கிராடிலிருந்து தெற்கே இரொசுரொவு வரை காப்பான கோட்டை அமைத்திருந்தது.

மொசுக் கோவை யேர்மனியர் கைப்பற்ற எடுத்த முயற்சியை சோவியத் படைகள் முறியடித்தன. தெற்கே உக்ரேனையும் கிறிமியனின் பெரும் பகுதியையும் யேர்மனி அதன் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்திருந்தது.
இந்த நடவடிக்கை தொடர்கையில் கிட்லர் அதில் தனிப்பட தலையீடு செய்து சோவியத்தின் முக்கிய தொழிற்சாலைகளையும் கோகசசுவில் இருக்கும் அதன் நிலநெய் வயல்களையும் கைப்பற்றி சோவியத்தை முடக்கும்படி கட்டளைப் பணியகத்திற்கு ஆணையிட்டார். இசுராலின்கிராடு ஒரு முக்கிய தொழில் நகரமாகும்.

மேலும் வோல்கா ஆற்றைக் கைப்பற்றுவதன் மூலம் கசுபியன் கடலுக்கும் வட உருசியாவுக்குமான முக்கிய போக்குவரத்து வழி துண்டாடப்படும். ~நடவடிக்கை நீலம் ('Case Blue') எனப் பெயரிடப்பட்ட இசுராலின்கிராட் மீதான வன்கவர்வில் யேர்மனியின் ஆறாவது, 17 ஆவது படை, 04 ஆவது, 01 ஆவது பன்சர் படை என்பன பங்கெடுத்தன. இவற்றைத் தவிர உருமேனிய, கங்கேரிய, இத்தாலியப் படைகளும் பங்கெடுத்தன.

இசுராலின் இந்த முன்னேற்றத்தைத் தடுக்க வட கிழக்கு முனையின் தளபதியாக மார்சல் அன்டிரீ யெரீ மென்கோவை நியமித்தார். அவரும் குருசோவும் இசுராலின்கிராட் நகரின் காப்புக்கான திட்டமிடலை மேற்கொண்டனர்.

இசுராலின்கிராட்டுக்குக் கிழக்கே வோல்கா ஆறு ஓடியது. ஆற்றுக்கு அப்பால் சோவியத்தின் 62 ஆவது படை நிறுத்தப்பட்டது. அதன் தளபதியாக லெப். ஜெனரல் வசிலி சுக்கோவு நியமிக்கப்பட்டார். எவ்வளவு உயிரிழப்புக்கள் வரினும் இசுராலின்கிராட்டைக் காக்கும் பணி இந்தப் படைக்குத் தரப்பட்டது. ஒரு கட்டடத்தில் மேற்குக்கரையில் ஆற்றிலிருந்து யேர்மனியர் 1370 மீற்றரில் நின்றனர்.

சமரின் கடுமையாலும் யேர்மன் படைக்கான வான்வழி ஆதரவு குறைந்தமையாலும் மீள்வலுவூட்டற் படைகள் வேறு பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளுக்குத் தேவைப்பட்டதாலும் இசுராலின் கிராட்டின் யேர்மன் படையின் வல, இடது பகுதிகள் நொய்தான நிலையிலிருந்தன.
எடுத்துக்காட்டாக இசுராலின்கிராட்டின் வட பகுதியில் இத்தாலியப் படைக்கும் வொரொனெக் கிற்கும் இடையே நின்ற கங்கேரியாவின் இரண்டாவது படை நின்ற பகுதியில் சில இடங்களில் 1-2 கி.மீ. நீளக்கோட்டில் ஒரு பிளாட்டூனே நின்றது.
சோவியத் படை இசுராலின்கிராட்டில் இழப்புக்களைச் சந்தித்தவேளை அது 27 காலாட் டிவிசன், 19 கவசப் பிரிகேட், வான்படை என ஒரு சேமப்படையை உருவாக்கியது. நவம், 1942 இல் யேர்மனியின் ஆறாவது படையின் இடது, வலது பகுதிகளினூடாக சோவியத் படை ஊடுருவி யேர்மனியின் ஆறாவது படையின் பெரும்பகுதியைச் சுற்றிவளைத்தது.

யேர்மன் படையினர் 91000 பேரோடு ஏறத்தாழ 230000 படையினர் சுற்றிவளைக்கப்பட்டனர். ஏனையோர் உருமேனிய, குரேசியப் படையினராவர்.
சோவியத்தின் முற்றுகையின்போது உடை, உணவு பற்றாக்குறையால் உணவின்றியும் குளிரால் உடல் விறைத்தும் பல யேர்மன் படையினர் இறந்த போதும் இறுதிவரை அதன் கட்டொழுங்கு குலையவில்லை.
சுற்றிவளைப்பை உடைத்து வெளிவரும்படி பல யேர்மன் தளபதிகள் ஆலோசனை கூறியபோதும் கிட்லரின் பணிப்பை ஏற்று யேர்மன் படைத்தளபதி போலசு பின்வாங்காது நின்றார்.

இறுதியில் உணவு, வெடிபொருள் பற்றாமையால் சரணடைந்தார். யேர்மன் பீல்ட் மார்சல்களும் ஒருவரும் சரணடைந்ததில்லை எனக்கூறிய கிட்லர் போலசை பீல்ட் மார்சலாக்கினார். ஆனால், அவர் சரணடைந்தார். பீல்ட் மார்சல் போலசை யேர்மனியிடம் ஒப்படைத்தால் யேர்மன் சிறையிலிருக்கும் லெப் நிலையுடைய இசுராலின் மகனை சோவியத்திடம் தருவதாகக் கிட்லர் கூறினார்.

ஒரு பீல்ட்மார்சலுக்கு மாற்றாக லெப்டினன்டைப் பெறத் தயாராக இல்லை என இசுராலின் பதிலளித்தார்.
இசுராலின்கிராடு 1925 வரை சாரிற்சின் (Tsarits yn) என்றும் பின்பு இசுராலின்கிராட் என்றும் 1961 இல் இருந்து வோல்கோகிராட் என்றும் அழைக்கப்படுகின்றது.

இசுராலின்கிராட்டில் இடம்பெற்ற சமரானது வரலாற்றில் மிகவும் குருதி தோய்ந்த சமராகும். இங்கு யேர்மன் அடைந்த தோல்வி இரண்டாம் உலகப் போரில் ஒரு படை எதிர்கொண்ட மிகப்பெரிய தோல்விகளில் இரண்டாவதாகும்.


உசாத்துணை நூல்கள் கட்டுரை:-
1. Sun Tzu and the Art of Modern Warfare, Mark mcNeilly2. World Atlas of Warfare, Richard Holmes3. Battle of Stalingrad, Wikipedia


நன்றி: வெள்ளிநாதம் 18.07.2008

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்