Home » » நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!

நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!

Written By DevendraKural on Wednesday, 13 August 2008 | 03:00

அண்மைக் காலமாக தமிழகத்தில் மது ஒழிப்பு பற்றி கருத்தாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் ஒரு தீவிரமான கருத்துப் பரிமாற்றம் நடந்து வருகிறது.மதுவை அரசு முனைந்து ஒழிக்க வேண்டும், மதுப் பழக்கத்திலிருந்து தமிழக இளைஞர்களையும், ஏழைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர், காந்தியச் சிந்தனையாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் கூறி வருகின்றனர்.குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இதை ஓர் இயக்கமாகவே நடத்த ஆரம்பித்துவிட்டார். மது என்பதை ஒழிக்க முடியாது. பல மகான்கள் முயன்றும் தோற்றுப் போனார்கள், பல இயக்கங்களும் தோற்றுப் போயின. மதுபானக் கடைகளை அரசு மூடுவதால் மட்டுமே குடிக்கிறவர்களை குடியிலிருந்து காப்பாற்ற முடியாது, அவர்கள் எரிசாராயம் குடிக்கச் சென்று தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ள நேரிடும்.அரசு மதுபானக் கடைகளுக்குப் பதிலாக கள்ளச் சாராயத்தை காவல்துறையால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. அது மட்டுமல்லாமல், அரசுக்கு நல்ல வருமானம் தரும் ஒரு கற்பகத்தருவை ஒழிக்கச் சொல்கிறீர்கள். இதனால் கள்ளச் சாராயம் பெருகும். கள்ளச் சாராயத்தை ஒழிப்பது அவ்வளவு எளிதானதல்ல.
எனவே மது ஒழிப்பு என்பது ஒரு மாயை, எத்தனையோ பேர் முயன்று முடியாததை இன்று ஒழித்துவிட முடியுமா என்ற கேள்விகளைக் கேட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார் தமிழக முதல்வர்.இந்த நிலையில் எரிசாராயம் அருந்தி சமீபத்தில் பலர் இறந்ததை பத்திரிகை மூலம் நாம் அனைவரும் அறிவோம். அந்தப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களைச் சந்திக்க இடதுசாரி இயக்கத் தலைவர்கள் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறும்போது, ஒட்டுமொத்தமாக அந்தக் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாகப் பெண்கள், இந்தத் தலைவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். மது விற்பனையை அரசின் மூலம் தடைசெய்யத் தாங்கள் உதவ வேண்டும். இல்லையென்றால் எங்கள் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்பதுதான் அது.இந்த நிலையில் இன்னொரு விவாதம் வைக்கப்பட்டது. அதாவது எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் மக்கள் குடிப்பது தவறு, குடி எங்கள் குடியைக் கெடுக்கும், எங்கள் குடும்பங்களைக் கெடுக்கும், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கெடுக்கும் என்று தீர்மானித்து மது எங்கள் பகுதிகளில் வேண்டாம் என முடிவு எடுக்கிறார்களோ அந்தப் பகுதிகளில் மது ஒழிக்கப்படல் வேண்டும்.இதற்கு மகாராஷ்டிர மாநிலம் உள்ளாட்சிக்கு அதிகாரம் வழங்கிவிட்டது. எனவே இதேபோல் இங்கும் மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற வாய்ப்பளியுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அது மட்டுமல்ல, கள்ளச் சாராயம் காய்ச்சுவதைத் தடுத்த காரணத்திற்காக பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் கொலையுண்டதையும், ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்.மேற்கூறிய விவாதத்தின் அடிப்படை என்னவென்றால், மதுவை ஒழிப்பதற்குப் பதிலாக, மது மக்கள் மேல் திணிக்கப்படுகிறது என்பதுதான். ஆண்டுதோறும் வணிகம் நடத்துகிறவர்கள் தங்கள் வணிகத்துக்கு இலக்கு நிர்ணயித்து, அதை எவ்வாறு எட்ட முனைவார்களோ அதேபோல், தமிழக அரசும் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்துச் செயல்பட ஆரம்பிப்பது மக்களின் மேல் மதுவைத் திணிப்பதற்குச் சமமாகும். எனவே இந்த மதுத் திணிப்பை மக்கள் புறக்கணிக்கும்போது அதைத் திணிக்க முயலக் கூடாது. அரசு மக்களை மறைமுகமாக குடிக்க வற்புறுத்தக்கூடாது என்ற நிபந்தனையை அடிப்படையாக வைத்தனர்.இதற்குப் பதிலளிக்கும்போது அரசுத் தரப்பில் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அதாவது, அரசு மதுபானக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் அந்த இடத்துக்கு வந்துவிடும். அதை ஒழிப்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம் என்ற வாதத்தை வைக்கிறது.இதனால் ஊழல் பெருகலாமே தவிர குடிப்பது நிற்கப்போவது கிடையாது. அதுமட்டுமல்ல, தரம்கெட்ட மதுவைக் குடிப்பதால், மக்கள் உடல்நலம் பாதிக்கப்படும். அத்துடன் அரசு தனக்கு வரவேண்டிய வருமானத்தையும் இழக்க நேரிடும் என்ற வாதத்தை அரசு முன்வைக்கக் கூடாது.இந்தப் பிரச்னையின் இன்னொரு கோணமும் இருக்கிறது. இன்றைக்கு நாம் விற்கும் மது முழுக்க முழுக்க ரசாயனக் கலவையால் உருவாக்கப்பட்டது. எனவே இதற்குப் பதிலாக கள்ளுக் கடைகளைத் திறப்பதன் மூலம் இந்த ரசாயனக் கலவையிலிருந்து தயாரிக்கும் மதுவுக்குப் பதிலாக இயற்கை வளத்தின் மூலம் கிடைக்கும் மது உடலைக் கெடுக்காது. அரசுக்கும் வருமானம் வரும் என்ற வாதத்தையும் வைக்கின்றனர்.அரசு எப்படி இலக்கு நிர்ணயம் செய்தது என்றால், அரசு மதுபானக் கடை வருவதற்கு முன் கள்ளச் சாராயம் எவ்வளவு புழக்கத்தில் இருந்தது என்று காவல்துறையில் ஒரு தோராயக் கணக்கீடு இருந்த காரணத்தால் எப்படியும் குடிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளோர் எண்ணிக்கை தெளிவாகத் தெரிந்து விடுகிறது. எனவே அந்த அளவுக்கு அரசு மதுபானக் கடைகளில் மது விற்கவில்லை என்றால், குடிப்போர் எங்கெங்கோ சென்று கள்ளச் சாராயத்தைக் குடிக்கின்றனர் என்று பொருள். இதன் மூலம் காவல்துறையினர் மாமூல் பெறுவர். எனவே அரசுக்கு வரும் வருமானம் குறையும். எனவே தான் தோராயமாக இலக்கு நிர்ணயித்து மதுபானம் விற்கப்படுகிறது. இதன்மூலம் காவல்துறைக்கு வரும் மாமூல் ஒழிக்கப்பட்டு, குடிப்போருக்கு நல்ல மது வழங்கப்பட்டு, அரசுக்கு வரும் நிதியைப் பெற்று மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடுவது என்ற வாதம் அரசுத் தரப்பில் வைக்கப்படுகிறது.இதற்கு மது ஒழிப்பு பிரதானமாக்கப்பட வேண்டும் என்பவர்கள் வைக்கின்ற வாதம், மக்கள் கெட்டுப்போவோம் என்று பந்தயம் கட்டினால், அரசு அதை அனுமதிப்பதா, மக்களுக்கு நல்வழி காட்டுவதல்லவா அரசின் வேலை. குடியில் மயங்குவோரை மாற்றுவது அரசின் கடமையல்லவா, மக்கள் கெட்டுப்போவோம் என்று சொல்லும்போது நன்றாகக் கெட்டுப்போங்கள். ஆனால், அரசுக்குத் தரவேண்டிய வருமானத்தைத் தாருங்கள் என எண்ணி மக்கள் வீழ்ச்சியில் ஆதாயம் பார்ப்பதா அரசின் வேலை. அரசு மதுபானக் கடைகளை மூடிவிட்டால் எரிசாராயம் வீதிகளில் பவனிவரும். காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாது. அது மட்டுமல்ல, அரசுக்கு வரும் வருமானம் காவல்துறைக்கும், கள்ளச் சாராயம் காய்ச்சுவோருக்கும் செல்லும் என்று சொல்லுவது பொறுப்புள்ள அரசாங்கத்தின் பதில் அல்ல.அரசாங்கத்தில் ஒரு துறையே அமலாக்கத்துக்காக இருக்கிறபோது, அந்தத் துறையில் உள்ள காவல்துறை அதிகாரிகளால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது என்றால் அப்படிப்பட்ட துறை நமக்கு எதற்கு? இப்படிப்பட்ட வாதமே அரசின் இயலாத் தன்மையை வெளிப்படுத்துவதாகும். இந்த வாதம் ஒரு கண்துடைப்பு என்று ஏற்க மறுக்கின்றனர் கருத்துகளை உருவாக்கும் அறிவுஜீவிகள்.இந்தச் சூழலில் இன்னொரு சக்தி இந்த மதுவுக்குள் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவை மதுப் பொருளாதாரம் மற்றும் மது தயாரிக்கும் தொழிற்சாலை. இந்தப் பொருளாதாரத்தை கையில் வைத்திருப்போர் அரசைத் தொடர்ந்து நிர்பந்தப்படுத்துவார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எப்படி புதிய பொருளாதாரத் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் எதிர் துருவங்களாக இருந்தபோதும் பற்றிப் பிடித்துச் செயல்படுகின்றனவோ, அதேபோல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இந்த மதுப் பிரச்னையில் ஒரே அணுகுமுறையைக் கொண்டுள்ளன.இந்தப் பிரச்னையில் இந்த இரண்டு கட்சிகளுமே சூழ்நிலைக் கைதிகள்தான். அரசு மது விற்பனையை நிறுத்தியவுடன் கள்ளச் சாராயத்தை காய்ச்சப்போவது சாதாரண மனிதர்கள் அல்ல. கட்சிக்காரர்கள் தான், இதைச் செய்ய முனைவார்கள். அப்படி அவர்கள் முனையும் போது அரசும், காவல்துறையும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிக்கும்போது, கட்சிக்காரர்கள் கட்சிகளை விட்டு வெளியேற ஆரம்பிப்பார்கள். இந்தச் சூழல் ஆளும் கட்சியையும், பிரதான எதிர்க்கட்சியையும் பெருமளவில் பாதிக்கும்.இன்று இதற்குப் பிரதானமான தீர்வு, அனைத்துக் கட்சிகளையும் கூட்டவேண்டும், விவாதிக்க வேண்டும், மதுவுக்கு எதிராக இந்தக் கட்சிகள் அனைத்தும் மிகப்பெரிய இயக்கத்தை நடத்த வேண்டும், அந்த நேரத்தில் மதுவுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போது மது ஒழிக்கப்பட்டு விடும்; பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் நலம் காக்கப்படும்; எதிர்காலச் சந்ததியினர் வாழ்க்கை பாதுகாக்கப்படும்.
க.பழனித்துரை
(கட்டுரையாளர்: தலைவர், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக நிர்வாகவியல் துறை).
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்