Home » » யாருக்காக ஒரு ரூபாய் அரிசி?

யாருக்காக ஒரு ரூபாய் அரிசி?

Written By DevendraKural on Thursday, 25 September 2008 | 06:34

கிலோ அரிசி ஒரு ரூபாய் என்பதைக் கேட்டவுடன் மனதுக்கு இனிமை தந்தாலும், அதன் முழுப் பயன் யாருக்குப் போய் சேரும் என்பதை ஆராய்ந்து பார்த்தால், முடிவு கசப்பாகவே அமையும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.1967ல் ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்க வேண்டும் என்று அண்ணாவால் தொடங்கப்பட்ட திட்டம்தான் ""படிஅரிசித் திட்டம்''. 41 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கண்ட கனவுத் திட்டமான இதனை, அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, செப்.15 முதல் ரேஷன் கடைகளில் செயல்படுத்த உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.29 ஆயிரத்து 760 கடைகள் மூலம் 1 கோடியே 86 லட்சம் பேருக்கு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வீதம் 20 கிலோ அரிசி வழங்குவதன் மூலம், அரசுக்கு 400 கோடிக்கு மேல் கூடுதல் செலவாகும் என்றும் அறிவித்துள்ளார்.எத்தனையோ பிரச்னைகளைத் தீர்க்க பல்வேறு கோரிக்கைகள் பல்வேறு அமைப்புகள் வைத்தும் கண்டுகொள்ளாத அரசு, திடீரென ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குவதாக அறிவித்துள்ளது வியப்பைத் தந்துள்ளது.இப்போது அதற்கு ஏன் இவ்வளவு அவசரம். நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் திசை திருப்பும் முயற்சியோ என்றே தோன்றுகிறது.நாட்டில் எந்த ஒரு பிரச்னையும் பெரிய அளவில் தலைவிரித்தாடும்போது, அந்த பிரச்னையைத் தீர்க்க முடியாத அரசு, மாறாக அதை விட்டு விட்டு, வேறு ஒரு புறம் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கும்.தற்போது தமிழகத்தில் மிக முக்கிய பிரச்னை மின்வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு. விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு. அண்டை மாநிலங்களுக்கு மணல்கடத்தல்.அதோடு, நெருங்கி வரும் மக்களவைத் தேர்தல், விலகிச் செல்லும் கூட்டணி கட்சிகள் என பல பிரச்னைகள்.ஏற்கெனவே ரேஷன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பினால் அரிசி கடத்தல் மேலும் அதிகமாகுமே தவிர, அடித்தட்டு மக்களுக்கு எந்தப் பயனும் தராது.மீனை தானமாக தருவதைவிட, மீன் பிடிக்க கற்றுத் தருவதே மேல் என்பது முதுமொழி.அதுதான் உண்மை. உழைப்பில் சிறந்து விளங்குவோர் உள்ள தமிழகத்தில், குறிப்பாக விவசாயத்தில் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து வாங்கி உற்பத்தி செலவை விட குறைவாக ரேஷன் கடையிலே தரும்போது, அதனைப் பயன் படுத்தும் பயனாளிக்கு அதன் அருமை தெரியாமல் போய்விடும்.அதோடு அடுத்தாற்போல் யார் இதை விட குறைவான விலை அறிவிப்பார் என்ற எண்ணமும் தோன்றும். இதனால் அரசிடம் இருந்து ஓர் எதிர்பார்ப்பில் இருப்போர் எண்ணிக்கை கூடும். உழைக்க வேண்டிய அவர்களை சோம்பேறியாக்கிவிடும்.மாறாக அரசு தொழில் வளத்தைப் பெருக்கி தந்தால், ஒரு ரூபாய்க்கு அரிசி தரவேண்டியதில்லை. அவர்களே கிலோ அரிசி ரூ.25 க்கு என்றாலும் கூட வாங்கும் சக்தியைப் பெற்றுக் கொள்வார்கள்.இது ஒருபுறம் இருக்கட்டும், ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் நபர்களிடம் 2 ரூபாய்க்கு வாங்கி, 5 ரூபாய்க்கு விற்கின்றார். அதை மற்றொருவர் 8 ரூபாய்க்கு விற்கிறார். அங்கிருந்து கேரளத்திற்கு கடத்தப்பட்டு அங்கு 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.தமிழ்நாட்டின் பொருளாதாரம் இவ்வாறு சுரண்டப்பட்டு, ரயில், பஸ்கள், லாரிகள் மூலம் கேரளத்திற்கு கடத்தப்படுகிறது.ரயில்களின் கழிவறையில் கூட அரிசிப் பைகள் கிடப்பதுண்டு. இது அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. பெயரளவுக்கு எங்கோ சில பைகளை பறிமுதல் செய்து, பத்திரிகைகளில் விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக அரிசி கைப்பற்றப்படும்போது கடத்தியவர் கண்டுபிடிக்கப்படமாட்டார். இதுவே தொன்று தொட்டு நடந்து வருகிறது.தற்போது அரசு அறிவித்துள்ள ஒரு ரூபாய் அரிசித் திட்டம் மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறதோ இல்லையோ, இந்த அரிசி கடத்தல் காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.இதற்குத் தீர்வு என்ன. அரசு என்பது, ஏற்கனவே கூறியது போல, மீன் பிடிக்க கற்றுத்தரத்தான் வேண்டுமே யொழிய மீனை கொடுப்பது அழகல்ல. இந்த ஒரு ரூபாய் திட்டம் என்பது, இலவசத் திட்டம் போன்றதுதான். ஏனென்றால் கிராமங்களில் கூட டீ, காபி 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.அரசு இவ்வாறு மக்களைத் திசைத் திருப்பும் நடவடிக்கையை விட்டுவிட்டு, மின்தடையை நீக்க வழி என்ன, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வழி என்ன, வேலைவாய்ப்பைப் பெருக்க வழி என்ன, தனிமனித வருமான உயர்வுக்கு வழி என்ன என்பதை ஆராய்ந்து செயல்பட்டாலே, பொதுமக்களின் பொருளாதாரம் பெருகும்.அதைச் செய்ய அரசு முன் வரவேண்டும். அதைச் செய்தால் கூட்டணி கட்சிகள் பிரிந்தாலும், மக்களின் கூட்டணி உங்களுக்கு வலு சேர்க்கும்.
நன்றி : தினமணி
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்