Home » » பிரதமாவாரா மாயாவதி?

பிரதமாவாரா மாயாவதி?

Written By DevendraKural on Thursday, 16 October 2008 | 23:39

பிரதமராவாரா மாயாவதி? இதுதான் இன்றைய தேசிய அரசியலின் ஹாட் டாபிக்.
மாயாவதியின் தீர்க்கசிந்தனையும் உறுதியும் மட்டும் போதுமா, சூழ்நிலைகளும் சாதகமாக இருக்குமா என்பதை அலசிப்பார்ப்பது சிறந்தது.
அரசியல் களம் காலங்காலமாக உயர்சாதிகளால் கைக்கொள்ளப்பட்டு தலைமுறைதோறும் புதுப்பித்துக் கொள்ளப்படுவது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அரசியல் கட்சியில் கீழ்ச்சாதி என்று வரையறுக்கப் பட்டவனுக்கு உள்ள இடம்_தொண்டனாகக் கொடி பிடித்து, கோஷம் எழுப்பி, கட்சிப்பணிகளைச் செய்து, தலைமைக்கு ஏற்ற பண்புகளோடு இருந்தால், ஏதோவொரு இணை, துணை பதவியை பெற்றுவிடுவதோடு அவனது கட்சி அரசியலும் அரசியல்பணியும் முடிவடைந்துவிடுகிறது.
இந்நிலையில், கீழ்ச்சாதி என்று குறிப்பிடப்படும் சாமர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அனைத்துக் கட்டுக்களையும் தகர்த்து மேலெழுந்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பெரும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நான்காவது முறையாக ஏகோபித்த மக்களின் ஆதரவோடு ஆட்சியதிகாரத்தில் முடிசூடா ராணியாக அமர்ந்திருக்கிறார் என்பது பலகாலமாக நடக்காத ஒன்று. அரசியலும் ஆட்சியும் அனைவருக்கும் சமமான ஜனநாயகமே என்பதை நிரூபித்திருக்கிறது மாயாவதியின் அரசியல் வெற்றி.
நம் நாட்டின் குடும்ப அமைப்புகளில் பெண்ணுக்கு வகுத்துள்ள பண்புகளும், அவளின் உரிமைகளின் நீட்சிகளும், அவளுக்குள்ள சுதந்திரத்தின் எல்லைகளும் எந்த அளவுக்கு வரைமுறைக்குட்படுத்தப்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. குடும்ப அமைப்பைத் தாண்டி, மற்றெல்லா துறைகளையும்விட அரசியலில் கோலோச்சும் நிலைமைக்கு வந்துள்ளது, அவரது போராட்ட குணத்தின் இன்னொரு வடிவமாகத்தான் இருக்கிறது.
அரசியலில் _ கட்சியில் ஒரு பெண் முதலிடத்திற்கு வருவதென்பதும் இத்தகையதே. குடும்பப் பாரம்பரியம் உள்ளவளாகவோ, உயர்சாதியைச் சேர்ந்தவளாகவோ, பணபலம் கைகூடி வரப்பெற்றவளாகவோ இருந்தால்தான் ஒரு பெண் அரசியல் அதிகாரத்தில் பதவியையும், தலைமைப் பொறுப்பையும் வகிக்கும் சாத்தியமிருக்கிறது. இது பெண் அரசியலாளர்களான ஸ்ரீமதி பண்டார நாயகா, மார்கரெட் தாட்சர், இந்திராகாந்தி, ஜெயலலிதா என இன்றுவரை நீடித்துள்ளது.
இந்நிலையில் ஒரு பெண், அதிலும் 'கீழ்ச்சாதி'யைச் சேர்ந்தவர், கட்சியின் மேலிடத்திற்கு வந்ததோடு ஆட்சியதிகாரத்திலும் குறைந்த வயதிலேயே நான்காவது முறையாக அமர்ந்திருப்பது சாதாரண வெற்றியல்ல. இதற்கு அவருடைய போராட்ட குணமும், நெஞ்சு நிறைந்த உறுதியும், ஓயாத சமூகப்பணியும், அயராத உழைப்புமே காரணம் என்பதை அவரது அரசியல் எதிரிகளும் ஒப்புக்கொண்டேயாக வேண்டிய உண்மை.
இதையெல்லாம் விட, பாபு ஜெகஜீவன்ராமுக்கு கைக்கெட்டாமல் போன பிரதமர் பதவி, கைக்கெட்டும் தூரத்தில். முதல் தலித் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு ஆர்.கே. நாராயணனுக்கு வாய்த்தது. இன்றுவரை ஒரு தலித், பிரதமராக வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால் இன்று, தலித் என்ற அடையாளத்துடன் மட்டுமல்ல, ஒரு பெண் அரசியல்வாதி என்கிற கூடுதல் தகுதியுடனும் பிரதமராகும் வாய்ப்புள்ள மாயாவதிக்கு பல கட்சிகளின் ஆதரவுக் கரமும் நீண்டிருக்கிறது ஜெயலலிதா உட்பட.
செல்வி மாயாவதியைப் பிரதமராக்கும் நோக்குடன் மூன்றாவது அணி அமைக்கப்பட்டு, தேசிய அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர இடதுசாரிகளுடன், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தீவிர முயற்சியெடுத்து செயல்படுகிறார்கள். இதில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைப்பாட்டோடு பலர் மாயாவதியை ஆதரித்தாலும் அரசியல் லாபமென்னவோ மாயாவதிக்குத்தான்.
நாட்டின் தற்போதைய நிலை இதற்கு உகந்த சூழலையே ஏற்படுத்துகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பக்கம் விலைவாசி உயர்வு மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மின்சாரப் பற்றாக்குறை; பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு. இவற்றைக் காரணமாக்கி, அமெரிக் காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு அடிகோலி, நாட்டை மீண்டும் அந்நியரிடம் ஒப்படைக்கத் துணிந்துள்ளது காங்கிரஸ் அரசு.இவையெல்லாம் சேர்ந்து மக்களை அலைக்கழிப்புக்கும் நம்பிக்கையின்மைக்கும் இட்டுச் செல்கிறது.
மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில் மக்களின் தேவைகள் முடக்கப்படுவதைக் கண்டிக்கும் விதமாக இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்து, நம்பிக்கை ஓட்டெடுப்புவரை கொண்டு சென்றார்கள் எதிர்க்கட்சியினர். இதில் மாயாவதி, காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்கும் முயற்சியில் தீவிரமாக முனைந்துள்ளார். இதற்குப் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய வர்த்தகத்துறை இணைஅமைச்சர் அகிலேஷ்தாஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்திருப்பது காங்கிரசாருக்கும் மற்ற எதிர்க்கட்சி களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
இது மட்டுமல்லாமல் வாரணாசி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான ராஜேஷ் மிஸ்ரா (பார்ப்பனர்), அலிகார் லோக்சபா தொகுதி எம்.பி.யான பிஜயேந்திர சிங் (ஜாட் இனத்தவர்), மானுவேந்திர சிங், காசியாபாத் லோக்சபா எம்.பி. சுரேந்திர கோயல் என பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவோரின் யூகப்பட்டியல் தொடர்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியும், ராகுல் காந்தியின் மீதான விமர்சனமும் இவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நோக்கி இழுத்துள்ளன.
"பகுஜன் சமாஜ் தலித்துகளுக்கு மட்டுமான கட்சி அல்ல; எல்லாச் சாதியினரும் கலந்து செயல்படும் ஓர் அரசியல் கட்சி'' என்று மாயாவதி அறிவித்ததைத் தொடர்ந்து பார்ப்பனர், ஆதிதிராவிடர், இஸ்லாமியர் என்று அனைவரும் இவருக்கு ஏகோபித்த ஆதரவு தந்து மே, 2007இல் நான்காவது முறையாக ஆட்சியில் அமர வைத்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் பிரதமராகும் வாய்ப்பு மாயாவதிக்கு இருப்பது தெரிகிறது.
இவர் யானையைத் தன் சின்னமாக மட்டுமல்லாமல் அதனுடைய பலத்தைத் தன் உறுதிக்குத் துணையாகக் கொண்டுள்ளார். 'உலகின் சக்திவாய்ந்த சிறந்த பெண்மணிகளில் நூற்றுவரில் ஒருவராக' அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் உறுதியாகிறது.
இப்படித் தொடரும் அரசியல் வாழ்வில் பல்வேறு சீரிய அம்சங்கள் பொருந்தி வந்துகொண்டிருந்தாலும் அவர் மீதுள்ள விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் பலத்திற்குத் தடையாகவே உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.
தலைவர் கன்ஷிராம் போட்டுத் தந்த பாதையில் இதுவரை பயணித்து வந்திருக்கும் இவர், கன்ஷிராம் வகுத்துத் தந்த வியூகங்களோடு, தாமாக சில தந்திரோபாயங்களையும் கைக் கொண்டுள்ளார். கட்சியை, தலித்துகளுக்கு மட்டுமானதல்ல, அனைவருக்கும் பொதுவானது என்று கூறி, உயர்சாதியினரின் ஆதரவைப் பெற்றதோடு அதே மனோபாவத்தோடு செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தவண்ணம் உள்ளது.
எதிர்க்கட்சியின் மீது வழக்குகளையும் சோதனைகளையும் நடத்தும் நாலாந்திர அரசியல்வாதியின் போக்கும் இவரிடம் காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமர்சிங் கைது விஷயத்தில் இதை எதிர்த்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், "அமர் சிங்கைக் கைது செய்யச் சொல்லி மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான சி.டி. எங்களுக்குக் கிடைத்துள்ளது. மாயாவதி, தனது அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார்'' என்று பகிரங்கமாக அம்பலத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். இதுவும் எதிராளியைக் கட்டுக்குள் வைத்திருக்க உபயோகித்த தந்திரமாகத் தெரிந்தாலும் மாயாவதி யின் அரசியல் பயணத்திற்கு ஒரு தடைக்கல்லாகவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இந்தியாவில் அதிக வருமான வரி கட்டும் அரசியல்வாதியாக _ சொத்துக் குவிப்பு, வாரிசு அரசியல் என்று நீளும் குற்றச்சாட்டுப் பட்டியலிலும் முதல் இடம் பிடித்துள்ளார். இவையும் மக்களின் மனதில் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இவையெல்லாம் தான் அடையவேண்டிய லட்சியத்தின் மைல்கற்களில் இடர்படும் சிறு சிறு தடைக்கற்களாகவே எண்ணி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
'ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு வீடே வெளிச்சம் பெறும்' என்பதைப்போல் ஒரு பெண் ஆட்சியையும் அதிகாரங்களையும் கைக்கொண்டால் அந்நாடு ஒளியுறுவதோடு மட்டுமல்லாமல் மக்களின் மீதான கவனக்குவிப்பும் சிறந்தோங்கும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் செல்வி மாயாவதி பிரதமராவதை அடித்தட்டு மக்கள் ஒவ்வொருவரும் வரவேற்பர் என்றே தோன்றுகிறது.


இதுவரை மாயாவதி

செல்வி மாயாவதி ஜனவரி 15, 1956ஆம் நாள் டெல்லியில் பிறந்தவர். எளியவர்களான பிரபுதாஸ்_ராம்ரதி இவரின் பெற்றோர்.
ஆசிரியர் பயிற்சி பெற்று, டெல்லி நகர நிர்வாகத்தில் தன்னுடைய பணியை 1977இல் தொடங்கி, 1984 வரை செம்மையாக ஆற்றியவர். தம் ஆசிரியப் பணிகளுக்கிடையில், தனக்கு விருப்பமான சமூகப் பணிகளை இடையிடையே செய்து வந்தார். அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்குமான சமூகப் பணிகளில் அதீத அக்கறை கொண்டு அம்மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்குத் தன்னாலியன்ற பணிகளை மேற்கொண்டிருந்தார்.
தம் செயல்பாடுகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்ற ஒரு கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சியையும், தலைவராக கன்ஷிராமை யும் ஏற்றுக்கொண்டு, நலிந்தோருக்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தார். கட்சித்தலைமையின் நன்மதிப்புகளைப் பெற்று கன்ஷிராமின் மறைவிற்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்றார்.
அரசியலில் அடிவைத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளேயே மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1989). தொடர்ந்து நான்காவது முறையாக அப்பதவியை வகித்து வருகிறார். அதற்கு முன் மாநிலங்களவை உறுப்பினராக 1994, 2004 என இருமுறை பதவி வகித்துள்ளார்.
இவற்றுக்கெல்லாம் சிகரமாக 2003 தொடங்கி இன்றுவரை நான்கு முறை முதலமைச்சர் பதவியையும் அவர் அலங்கரித்துள்ளார்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்