Home » » மாஞ்சோலை அடிமை வாழ்வுக்கெதிரான நூற்றாண்டுப்போர்

மாஞ்சோலை அடிமை வாழ்வுக்கெதிரான நூற்றாண்டுப்போர்

Written By DevendraKural on Thursday, 2 October 2008 | 22:43

மாஞ்சோலை மக்களின் வாழ்க்கையிலிருந்து அமைதி வெகு வேகமாக விலகத் தொடங்கிய காலகட்டம் அது. இத்தனை ஆண்டு கால அடிமை வாழ்வில் ஏதோ அற்புதம் நிகழப்போவதாக அவர்கள் உறுதியாக நம்பினர். நுனிவரை வெளிவந்துவிட்ட பாறையை முழுமையாகப் பெயர்த்தெடுக்க, கடைசி சொட்டு ஆற்றலையும் ஒன்று திரட்டி உந்தித் தள்ளுவது போல, மாஞ்சோலை மக்கள் எல்லாவற்றையும் பணயம் வைத்துப் போராட்டத்தை நடத்தத் தயாரானார்கள். நிர்வாகம் மட்டுமல்ல, இந்த சமூகம் மொத்தமுமே தொழிலாளர்களிடம் இத்தனை வேகத்தையும் மன உறுதியையும் முன்னெப்போதும் கண்டிருக்குமா என்று தெரியவில்லை. பேரணியாகப் போய் ஆட்சியரைப் பார்த்து மனுகொடுப்பது, கூட்டம் போடுவது, முழக்கங்களை எழுப்புவது என அடுத்தடுத்து மாஞ்சோலை மக்கள் எல்லாவற்றுக்கும் துணிந்தனர்.உரிமைப் போரில் வெற்றி பெறும் வெறி அவர்களை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அதற்கு ஒரே காரணம், டாக்டர் கிருஷ்ணசாமி. எந்தக் கேள்விகளுமின்றி மாஞ்சோலை மக்கள் டாக்டர் கிருஷ்ணசாமியை தங்களின் ஒரே தலைவராக ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால் வலுவான உளவியல் காரணங்கள் இருந்தன. தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர், டாக்டர் படிப்பு படித்தவர், நிச்சயம் தங்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வார், சுயநலமின்றிப் போராடுவார், மிக முக்கியமாக இறுதிவரை கூட நிற்பார் என்று மக்கள் கணித்திருக்கிறார்கள். இந்த உணர்வுகளை அந்த மக்களேதான் இப்போது வேதனையோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
1998 சூலை மாதத்தின் இறுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை மக்களை சந்தித்தார். 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அவை உடனே நிறைவேற்றப்படவில்லையெனில் மக்களோடு சேர்ந்து போராடப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்து அது தோல்வியடைந்தது. அடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்ற பேச்சுவார்த்தையிலும் தீர்வு காணப்படவில்லை. எனவே, தொழிலாளர்கள் 20.8.1998 அன்று தங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். போராட்டத்தின் போக்கு வேலை நிறுத்தத்திற்குப் பிறகு மெல்ல திசை மாறத் தொடங்கியது. அதன் பிறகு நடந்த பேச்சு வார்த்தைகளில் மக்கள் பணிக்கு திரும்புவது குறித்து தான் விவாதிக்கப்பட்டதே ஒழிய, அவர்கள் எதற்காக இந்தப் போராட்டத்தைத் தொடங்கினார்களோ, அது குறித்த விஷயங்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. பத்து நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாததால், நிர்வாகம் நிறுவனத்தை ‘லாக் அவுட்' செய்தது. அதோடு வெளித் தொழிலாளர்களைக் கொண்டு வேலையைத் தொடங்கவும் மாஞ்சோலை தொழிலாளர்கள் கொதித்தெழுந்தனர்.தேயிலை கொண்டு போகும் லாரியை மறித்து விடிய விடிய போராட்டம் செய்தனர். உடனே பட்டாலியன் போலிஸ் களமிறங்குகிறது. கண்ணுக்குப் பட்ட, கைக்கு சிக்கிய மக்களையெல்லாம் அடித்து நொறுக்க வீடுகளை விட்டு தேயிலைக் காடுகளில், பாறைகளுக்குப் பின்னால் பதுங்கினர் மக்கள். நூற்றுக்கணக்கான போலிஸ் குவிந்திருந்ததால், பதுங்கியவர்களால் வீடு திரும்ப முடியவில்லை. மலை வழியும் அடர் காட்டு வழியும் இறங்கி தப்பித்துப் போனவர்களும் உண்டு. பாறைகளுக்குப் பின்னால் பசியும் பட்டினியுமாக பதுங்கி இருந்து வீடு திரும்பியவர்களும் உண்டு.“போர் நடக்குற மாதிரி இருந்துச்சு. ஆம்பள, பொம்பள, குழந்தைகள்னு யாரும் வீடு தங்க முடியல. 250 போலிஸ் இருக்கும்; 16 போலிஸ் வண்டி. ஒரு வாரம் எஸ்டேட்ட சுத்தி வந்தாங்க. கண்ணுல பட்ட, கைக்கு சிக்குன 127 பேர கைது பண்ணி இழுத்துட்டுப் போயிட்டாங்க. 98 ஆகஸ்ட் மாசம் ஆரம்பிச்ச போராட்டம் மாசக் கணக்குல இழுத்துட்டே போகுது. வேலைக்குப் போக முடியல. கீழே காலவாசல், கல்லுடைக்கிறதுனு வேற வேற வேலைக்குப் போக ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல அரிசியும் பணமும் புதிய தமிழகம் குடுத்ததால முழுசா போராட்டத்துல இறங்குனோம். ஆனா நிர்வாகம் பிடி குடுக்கவே இல்ல. ஆளாளுக்கு பேச்சு வார்த்தை நடத்தினாங்க. மதுரையில, மெட்ராசுல கூட்டம் போட்டாங்க. எங்களுக்கு நல்ல சேதி கிடைக்கல. மலையில் பெரும்பாலும் தலித்துங்கதான். அதுவரைக்கும் நடந்த எல்லா போராட்டத்தையும் ஒற்றுமையா போராடி ஒரு சில உரிமைகளையாவது வாங்குனோம். ஆனா புதிய தமிழகம் வந்ததுக்கு அப்புறம் ஊரே ரெண்டாகிப் போச்சு'' என்கிறார் இருதய மேரி.150 ரூபாய் கூலி உயர்வு என்ற கனவுக் கொடியைப் பிடித்துக் கொண்டு அதை ஏற்றிவிட பிடிவாதமாக முயன்றார் டாக்டர் கிருஷ்ணசாமி. இன்னொரு பக்கம் நிர்வாகம் சிறிது கூட இறங்கி வரவில்லை. எந்த கோரிக்கைக்கும் செவிமடுக்காமல் செப்டம்பர் இறுதியில் நிறுவனத்தைத் திறந்தது. பிள்ளைகளின் படிப்பையும் பசியையும் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்கள் சிலர் வேறு வழியின்றி பணிக்குத் திரும்பினர். இப்படி வேலைக்கு முன்கூட்டியே போனவர்களை புதிய தமிழகத்துக்கு எதிரானவர்களாகப் பார்க்கும் நிலை உருவானது. அதன் பிறகு புதிய தமிழகத்திடமிருந்தே அச்சுறுத்தல்களை சந்திக்கவேண்டியிருந்ததாக சொல்கின்றனர் மக்கள். நிலைமையை சமாளிப்பதற்காக, மக்களே அமைதிக்குழு ஒன்றைத் தொடங்கினர். எனினும் நிர்வாகத்திடமும் படிய முடியாமல், புதிய தமிழகத்தோடும் இணைய முடியாமல் மக்கள் தவிக்கத் தொடங்கினர்.இதற்கிடையில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட 127 பேரை பற்றி கவலைப்பட ஆளில்லாத நிலையில், வழக்கறிஞர் அமல்ராஜ் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் குழு ஒன்றை உருவாக்கி, கைதானவர்களை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார். “127 பேர் கைதானதுமே போராட்டத்தின் வீரியம் குறைந்துவிட்டது. இவ்வளவு பேருக்கு யார் ஜாமின் கொடுப்பார்கள்? சொந்த பெயிலில் எல்லோரையும் கொண்டுவர படாத பாடுபட்டோம். 40 நாட்கள் கழித்து வெளியில் வந்த மக்கள், இனி போராட்டத்துக்குப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தனர். இதற்கிடையில் தேயிலைத் தோட்ட மேற்பார்வையாளரான அந்தோணி முத்து என்பவர் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக, கொலை செய்யப்படுகிறார். டாக்டர் மீது வழக்குப் பதிவாகிறது.மாஞ்சோலை மக்கள் இயல்பிலேயே ரொம்ப சாதுவானவர்கள். அதிகபட்சம் ஓரிடத்தில் நின்று கோஷம் போட்டுத்தான் அவர்களுக்குப் பழக்கம். கலவரம், வன்முறை என எதுவுமே பழக்கமில்லை என்பதால், இந்த கொலை ஒரு பயத்தை உண்டு பண்ணியது. புதிய தமிழகத்துக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதை மெதுவாக நிறுத்தத் தொடங்கினார்கள். பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர். அவர்களுக்கு வேறு வழியில்லை. கூலி உயர்வுக்கு நிர்வாகம் இறங்கி வரவில்லை. அதைத் தவிர்த்துப் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு புதிய தமிழகம் ஒத்துழைக்கவில்லை. இந்த இருவருக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறுவது போல ஆனது தொழிலாளர்களின் நிலை'' என்கிறார் அமல்ராஜ். தொழிலாளர்கள் தங்களளவிலேயே ஒரு முடிவெடுத்துப் பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், நிர்வாகம் 700 தற்காலிகப் பணியாளர்களுக்கு, ஏன் அவர்களைப் பணி நீக்கம் செய்யக்கூடாது என காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதனால் தொழிலாளர்கள் மீண்டும் கொதித்தெழுந்தனர். பணிக்குத் திரும்பிய நிரந்தரப் பணியாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 30.4.99 அன்று போடப்பட்ட ஒப்பந்தத்தை ஒட்டி புதிய தமிழகம் சார்பாக மாஞ்சோலை பிரச்சனையில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சிவராஜேந்திரன் உட்பட சிலர் கட்சியை விட்டு வெளியேறினார்கள்.“நிலைமை ரொம்ப மோசமாகப் போய்க் கொண்டிருந்தது. மக்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்பும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் புலி வாலைப் பிடித்த கதையாக, விடவும் முடியாமல் ஓடவும் முடியாமல் திணறினார்கள். இந்த சூழ்நிலையில் தான் மிக முக்கியமான அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல விஷயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிர்வாகம் கையெழுத்துப் போட்டது. வேலை நேரம் எட்டு மணி நேரம் என்றும், பணி மறுக்கப்பட்ட தற்காலிகத் தொழிலாளர்கள் 3.5.99 அன்று பணிக்கு அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலைக்கு விடவும், தொழிலாளர்கள் யாரும் சகஜ நிலையில் பணிபுரியவில்லையென்றால், அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் உரிமை திருநெல்வேலி துணை ஆணையருக்கே உண்டு என்றும் ஒப்பந்தம் முழுக்க முழுக்க தொழிலாளர்களுக்கு ஆதரவாக கையெழுத்தானது. இதில் மக்களும் முழு திருப்தியடைந்தார்கள். கூலி உயர்வுக்காகத்தான் இந்தப் போராட்டம் தொடங்கியது என்றாலும் அது சாத்தியமில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டு, மற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு பணிக்கு திரும்பிவிட முனைப்பு கொண்டனர். இதனால் இந்த ஒப்பந்தம் அவர்களின் மன பாரத்தைக் குறைத்தது.“ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்கு முன் ஒவ்வொரு வார்த்தையையும் சென்னையில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தொலைபேசி மூலம் வாசித்து அவர் சம்மதத்தைப் பெற்றோம். மக்கள் பணிக்குத் திரும்பினார்கள். ஆனால் நிர்வாகத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை. தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை தொழிலாளர் ஆணையத்திடம் விடுவதை அதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படியொரு ஒப்பந்தத்திற்கு சம்மதித்து கையெழுத்திட்டதற்காக, குரூப் மேனேஜர் சி.கே. ஜெயராமனை உடனே சஸ்பெண்ட் செய்தது நிர்வாகம். மக்கள் மே 1 அன்று கொடியேற்றி, 3 ஆம் தேதி வேலைக்குப் போய்விட்டார்கள். நான்கைந்து நாட்களில் கிருஷ்ணசாமி மாஞ்சோலைக்கு வரும்போது, மக்கள் அவரை சுற்றி நின்று பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள். அதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்கள், ‘மாஞ்சோலையை வெச்சுத்தான் அரசியல் பண்ணீங்க. பிரச்சனை முடிஞ்சு போச்சு. இப்போ என்ன பண்ணப் போறீங்க?' என்று கேட்கவும், கிருஷ்ணசாமி, ‘யாரு சொன்னா பிரச்சனை முடிஞ்சு போச்சுன்னு. எங்க ஆட்களை மிரட்டி ஒப்பந்தத்துல கையெழுத்து வாங்கிட்டாங்க. ஒப்பந்தத்தை ஏத்துக்க முடியாது. அதனால நான் ரத்து பண்றேன்'ன்னு சொல்லிட்டார்.“இதைத்தான் நிர்வாகம் எதிர்பார்த்தது. ஒப்பந்தம் ரத்தானவுடன் இதுதான் சாக்கு என்று உடனே கம்பெனியை லாக் அவுட் செய்தது. மக்களுக்கு மீண்டும் சோதனை காலம் தொடங்கியது. மாஞ்சோலை பிரச்சனையில் டாக்டர் மக்களுக்காகப் போராடுகிறார் என்று தெரிந்து, தலித் பண்பாட்டு இயக்கம் என்ற எனது அமைப்பைக் கலைத்துவிட்டு, கட்சியில் இணைந்து பணியாற்றினேன். ஆனால் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாகச் சொல்லவும் அவமானத்திலும் கோபத்திலும் அப்போதே கட்சியைவிட்டு வெளியேறிவிட்டேன். டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மாஞ்சோலை பிரச்சனையை சட்டென முடிக்க விருப்பமில்லை. அவர் அரசியல் நடத்துவதற்காக அப்பாவி மக்களின் நம்பிக்கையையும் வாழ்வையும் பணயம் வைத்தார். அன்று அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், தாமிரபரணி படுகொலைகள் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. படுகொலை செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு அரசு கொடுத்த இழப்பீட்டுத் தொகையை வாங்கவில்லை; பிணங்களை பெற்றுக்கொள்ளவில்லை. அரசேதான் அவர்களை கொண்டுபோய் எங்கெங்கோ புதைத்தது. உயிரைக் கொடுத்தும் கடைசிவரை மக்கள் அவரோடு இருந்தார்கள். ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமி அடுத்த ஆறு மாதங்களிலேயே தி.மு.க.வோடு கூட்டு வைத்து, பத்து எம்.எல்.ஏ. சீட் வாங்கி மக்களின் நம்பிக்கையை முழுமையாக சிதைத்தார்'' என்கிறார் வழக்கறிஞர் சிவராஜேந்திரன்.இதற்கிடையில் சூன் மாதம் பாளையங்கோட்டை அய்கிரவுண்டில் புதிய தமிழகம் ஒரு கூட்டம் கூட்டியது. இதில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நிறுவனத்தை திறக்கச் சொல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க விரைந்தபோது, சுமார் எண்ணூறு பேரை கைது செய்கிறது காவல் துறை. பெண்களும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டு, 451 ஆண்கள் திருச்சி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் அடுத்த நாளே சுமார் 300 பேர் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துகிறார்கள். இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பெண்கள். இம்முறை 198 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் தள்ளப்படுகின்றனர்.இவ்வளவு நடந்தும், இழந்தும் தங்கள் வாழ்நிலையில் சின்ன மாற்றம் கூட நிகழாததால், எஞ்சிய மாஞ்சோலை மக்கள் விரக்தியில் அமைதியானார்கள். இதற்கிடையில் அந்தோணிமுத்து கொலை வழக்கும் நடந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு நிர்பந்தங்களையும் புதிய தமிழகம் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் மிகப் பெரிய பேரணி திட்டமிடப்பட்டது. மக்களை மீண்டும் கிளர்ந்தெழச்செய்யும் உத்தியாக இந்தப் பேரணி அமையும் என டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்பார்த்திருக்கக்கூடும். மக்கள் நம்பிக்கையற்றுப் போனதால், அவரது கணிப்பு பொய்த்தது. தொழிலாளர்களில் பெரும்பாலானோர் சிறையில் கிடந்ததும் ஒரு காரணம். அதோடு பேரணி நடந்தது சூலை மாதம் என்பதால் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கவும், பள்ளிக் கட்டணத்துக்கு பணம் சேர்க்கவும் அவர்கள் அப்போது அல்லாடிக் கொண்டிருந்தனர். ஆனால் கொடியங்குளம் கலவரம், தென்மாவட்டக் கலவரங்களைத் தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமியை தலித் மக்கள் பெரிதும் நம்பத் தொடங்கியிருந்தனர். இதனால் கிராமங்களிலிருந்து இந்தப் பேரணிக்கு ஆயிரக்கணக்கான தலித் மக்கள் திரண்டு வந்தனர்.புதிய தமிழகத்தின் பின்னால் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டதும், மக்களால் புதிய தமிழகத்துக்கு கிடைத்த அங்கீகாரமும் அந்த நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற முக்கிய கட்சிகளுக்கு எரிச்சலையும் ஒருவித அச்சத்தையும் உண்டாக்கி இருக்க வேண்டும். தலித் வாக்குகளைப் பிரிக்கும் எதிரியாக டாக்டர் கிருஷ்ணசாமியை கருத வேண்டிய கட்டாயம் நிச்சயமாக அவற்றுக்கு இருந்தது. மூவாயிரம் பேரைத் திரட்டிக் கொண்டுவரும் ஒரு தலைவரை முடக்க அதிகாரம் கைவசம் இருக்கும் அரசு வேறென்ன செய்துவிட முடியும், கலவரத்தைத் தூண்டுவதைத் தவிர. அதுதான் நடந்தது.மனுவை கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இவ்வளவு மக்கள் தேடி வந்தும் அவர்களை சந்திக்க ஆட்சியர் வெளியே வரவில்லை. தலைவர்கள் வந்த ஜீப்பை மட்டும் உள்ளே அனுமதிக்குமாறு கூட்டத்தினர் கேட்டுக்கொண்டனர். அனுமதி மறுக்கப்பட பதற்றம் மெதுவாகப் பரவுகிறது. எந்தவித காரணமோ, அறிவிப்போ இல்லாமல் காவல் துறை பாய்ந்து மக்கள் மேல் தடியடி நடத்தியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொக்கிரகுளம் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் இருப்பதால், கூட்டத்தினர் பெரும்பாலும் ஆற்றுப்பாலத்தின் மீதும் ஆற்றை ஒட்டியுமே நின்று கொண்டிருந்தனர். சுற்றிலும் நெருக்கமாக காவலுக்கு நின்றிருந்த மக்களை போலிஸ்காரர்கள் திடீரென அடிக்கத் தொடங்கியதும் அவர்கள் செய்வதறியாது சிதறி ஓடத் தொடங்கினர்.வேறு வழியேயில்லை. மக்கள் ஆற்றில்தான் இறங்கியாக வேண்டும். ஆற்றின் போக்கையும் ஆழத்தையும் அறியாதவர்கள் காவல் துறையின் தடியடிக்கு பயந்து ஆற்றுக்குள் இறங்கி ஓட, விழுந்தவர்களையும் விடாமல் அடித்தது காவல் துறை. காவல் துறை திட்டமிட்டு நடத்திய இந்தக் கலவரத்தில் பதினேழு பேர் பலியானார்கள். இந்தப் படுகொலை நாட்டையே உலுக்கியது. காவல் துறையின் அத்துமீறலுக்கான ஆதாரமாக புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வாக்குமூலங்களும் இருந்தபோதும் உண்மை திசை திருப்பப்பட்டது. அரசு அமைக்கும் கமிஷனின் அறிக்கைகள் எப்பொழுதும் அரசின் நியாயங்களையே தீர்வுகளாக முன்மொழியும். இந்த பிரச்சனைக்கு நீதிபதி மோகனின் பரிந்துரைகள், இந்திய ஜனநாயகத்தை ஆட்டங்காணச் செய்வதாக அமைந்தது. அடித்தட்டு மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறும் ஜனநாயக வழிகளான ஊர்வலத்தையும், பேரணியையும் தடை செய்ய பரிந்துரை செய்தது.கிடைத்த வீடியோ காட்சிகளைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களை வைத்தும் ‘ஒரு நதியின் மரணம்' என்ற ஆவணப்படத்தை எடுத்தார் ‘காஞ்சனை' சீனிவாசன். இதற்காக அவர் தேடப்படும் குற்றவாளியானார். ஜெயா தொலைக்காட்சி கலவரக் காட்சிகளை திரும்பத் திரும்ப காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த பரபரப்புகள் அனைத்தும் நடந்தது மாஞ்சோலைக்கு வெளியே. தேயிலைத் தொழிலாளர்கள் இது எதிலும் கலந்து கொள்ளாமல், தங்கள் அடிமை வாழ்வுக்கு திரும்பி அமைதியாகத் தேயிலை கொழுந்துகளை பறிக்கத் தொடங்கியதை யாருமே கண்டு கொள்ளவில்லை. இதன் பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையில் தங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் பகுதி பகுதியாக மீண்டும் பணிக்கு திரும்ப நேர்ந்ததும் நிர்வாகத்திற்கு தெம்பு உண்டானது.முதலாளியிடம் வேலை பார்க்கலாம். எதிரியிடம் வேலை செய்வது எத்தனை கொடுமை. ஆம், நிர்வாகம் அதன் தொழிலாளர்களை எதிரிகளாகவே நடத்தத் தொடங்கியது. ஆர்ப்பாட்டங்கள் அடங்கிய இந்த பத்தாண்டுகளில் தொழிலாளர்கள் நுணுக்கமான கெடுபிடிகளையும் அவமானங்களையும் சந்தித்து விதியை நொந்தபடி காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்கான சின்னச்சின்ன உரிமைகளைக் கூட இனி பெற முடியாது என்ற அவநம்பிக்கையில் அவ்வளவுநாள் வாழ்ந்த இடத்தைவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். “இப்படி பாதி வழியில் திரும்பி நடக்க வேண்டுமானால் எதற்காக இவ்வளவு தூரத்திற்கு கொண்டு வரவேண்டும். மக்கள் புதிய தமிழகத்தை நம்பினர். ஆனால், அது மக்களோடு கடைசி வரை நிற்கவில்லை. எந்த கோரிக்கைகளும் நிறைவேறாமல் திரும்பி வேலைக்குப் போகிற முடிவு உருவானது. முன்பு இருந்ததைவிட எஸ்டேட்டில் இப்போது ஏகப்பட்ட கெடுபிடிகள். ஆடு மாடு வளர்க்கக் கூடாது. டிஷ் ஆண்டனா கூடாது என, எதற்கெடுத்தாலும் மெமோ.நிர்வாகம் எங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. 150 மாடுகள் இருந்தது. இப்போது எஸ்டேட்டுக்கு ஒரு மாடு தான். 7.30 மணிக்கு சரியாக பீல்டில் நிற்க வேண்டும். ஒரு நாளைக்கு 30 கிலோ தேயிலை பறித்து வந்தார்கள். அதுவே முடியாமல் இருந்தது. தற்போது 45 கிலோ பறித்தாக வேண்டும். ஏக்கர் கணக்கில் சொல்ல வேண்டுமானால் ஒரு ஆளுக்கு இரண்டு ஏக்கர். இல்லையென்றால் சம்பளத்தில் பிடித்தம் விழும். மூவாயிரம் பேர் வேலை பார்த்த இடம் இது. இப்போது ஆட்களே இல்ல. என்னோடு படித்து விளையாடின என் வயது பையன்கள் எஸ்டேட்டில் இல்லை. எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.'' என்று வேதனையோடு சொல்கிறார் வழக்கறிஞர் ராபர்ட்.மதுரை தலித் ஆதார மய்யத்தைச் சேர்ந்த அன்புசெல்வம், “மாஞ்சோலை துயரத்தில் புதிய தமிழகத்தை குறை சொல்ல முடியாது. இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் தவறு’ என்கிறார். “ஓர் அரசியல் கட்சியால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் புதிய தமிழகம் செய்தது. 97-98 கொடியங்குளம் கலவரத்துக்குப் பின் டாக்டர் கிருஷ்ணசாமி முழுக்க முழுக்க தென் மாவட்டங்களில் கவனம் செலுத்துகிறார். 2002 இல் நடந்த புதிய தமிழகம் மாநில மாநாட்டில், எந்தவிதமான நில உச்சவரம்பு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் நிலத்தை முதலாளிகளுக்கு கொடுக்கக் கூடாது எனவும் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கூடாதெனவும் டாக்டர் கோரிக்கை வைத்தார். ஆங்கிலேயர் ஆட்சியின் போது போடப்பட்ட ஒப்பந்தமாக இருந்தால், 45 ஆண்டுகளில் ஒப்பந்தத்தை முறித்து வெளியே போக வேண்டும். ஆனால் எஸ்டேட் ஆட்களுக்கு இது பொருந்தவில்லை. முதலாளித்துவத்தை எதிர்க்கப் போராடும் கம்யூனிஸ்டுகள் எப்போதும் பெருந்தோட்டப் பண்ணைகளை எதிர்ப்பதில்லை. மாஞ்சோலை மட்டுமல்ல, தெற்காசியா முழுக்க இருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை சொல்ல முடியாத துயரங்களில்தான் கழிகிறது. அரசு எப்போதும் வருமானம் வருகிற துறைகள், நிலங்கள், ஆறுகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு வருமானம் வராத தரிசு நிலம், உப்பளம், கருவேலம், காட்டாமணக்கு போன்றவற்றை கட்டிக்கொண்டு மாரடிக்கிறது. இதுதான் முதலாளித்துவத்தின் பிடி இறுகுவதற்கான முக்கியக் காரணம். இதற்கு மாற்று என்னவெனில் நிலங்களைப் பங்கிட்டுக் கொடுப்பதுதான். வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாண்டியன் கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிலை அவர்களே நிர்வகிக்கிறார்கள். அதே போல மாஞ்சோலையிலும் மக்களுக்கு ஆளுக்கு அய்ந்து ஏக்கர் நிலங்களைப் பங்கிட்டுக் கொடுத்து கூட்டுறவு சொசைட்டி அமைத்துக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளையும் கொடுக்க வேண்டும்.மாஞ்சோலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேயிலை தோட்டத் தொழிலையும் தேசியமயப்படுத்தி, தெற்காசிய நாடுகளுக்கான கூட்டு சட்டம் கொண்டு வரணும். மாஞ்சோலையில் இவ்வளவு நடந்திருக்கு. கம்பெனி வரிகட்டவில்லை, இரண்டு மூன்று கொலைகள் வேறு நடந்துவிட்டது. மக்கள் இவ்வளவு துயரங்களை எதிர்கொண்டுவிட்டார்கள். இந்த காரணங்களுக்காகவே அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்து நிர்வாகத்தை கையிலெடுக்கலாம். ஆனால், இதையெல்லாம் செய்தால் அது மக்கள் நல அரசாகிவிடுமே. மாஞ்சோலை மக்கள் தற்போது சிதறுண்டு கிடக்கிறார்கள். நிறைய குழந்தைகள் கல்வி வாய்ப்பை இழந்து மீண்டும் ஏதோவொரு அடிமை வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்'' என்கிறார்.சொந்த பூமியில் வாழ அனுமதிக்காத இடப்பெயர்ச்சிதான் மக்களை அகதியாக்குகிறது எனில், மாஞ்சோலை மக்களும் அகதிகள்தான். ஒரு நூற்றாண்டாக இங்குதான் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், ஒரு துண்டு நிலத்தைக் கூட இவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. நிறுவனத்தின் குத்தகை ஒப்பந்தம் 2029இல் முடிவடைகிறது. இந்த மலையை வாழ்விடமாகவும் விவசாய பூமியாகவும் வியாபாரத் தளமாகவும் மாற்றிய வாரிசுகள் அதுவரை இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.அரசியல் அதிகாரம் என்னும் மந்திரத்தால் மாங்காயைப் பறித்துவிட முயலும் யாருக்கும் மாஞ்சோலை ஒரு வேதனையான எடுத்துக்காட்டு. தேவேந்திர மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்று முழங்கி, சமூக விடுதலைக்கான, சாதி ஒழிப்புக்கானப் போராட்டங்களைப் புறக்கணித்து தேர்தல் அரசியலுக்கு வரும் தலைவர்கள், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் சமரசப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். மாஞ்சோலை மக்களுக்கு இழைத்த துரோகத்தின் மூலம் புதிய தமிழகம் ஏற்படுத்தியிருக்கும் கறையை அழிக்கவே முடியாது. மாஞ்சோலையின் அடுத்த தலைமுறை இனி எந்த தலித் கட்சிகள் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத அளவுக்கு அச்சத்தை உண்டாக்கிவிட்டது புதிய தமிழகம்.தலித் அரசியலின் புதிய எழுச்சியாக கிருஷ்ணசாமியையும் அந்த கால கட்டத்தையும் கொண்டாடியவர்கள், அதன் பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். துரோகத்தையும் மெத்தனத்தையும் ஊழலையும், சமரசங்களையுமே தேர்தல் அரசியல் மய்யக் கருவாகக் கொண்டிருக்கிறது என்பதற்கு இங்குள்ள எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. சட்டப் பேரவைகளையும் நாடாளுமன்றத்தையும் வெறுமனே தலித் மக்களை கொண்டு நிரப்புவதால் மட்டும் அடிமைத்தனம் அழிந்து விடாது. இந்த சமூகத்தை நேர்படுத்த விரும்புவோர் பணியாற்ற வேண்டிய இடம் அது மட்டும் அல்ல; மதங்களின் வேர்களும், ஜாதியின் கிளைகளும் இந்த சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. வெறும் வசனங்கள் பேசி அவற்றை அழித்துவிட முடியாது.அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும், கூட்டணியை மாற்றுவதிலுமே இன்றைய அரசியல் தலைவர்களின் ஆற்றல் விரயமாகிறது. இதற்கு மக்களின் நம்பிக்கையையும், உணர்வையும், வாழ்வையும், உயிரையும் விலை பேசுகிறார்கள். சமத்துவத்தை மலரச் செய்வதே சமூக விடுதலையின் அடித்தளம் என்பதை வசதியாக மறந்து போகிறார்கள். அரசியல் அதிகாரத்தை நோக்கிய டாக்டர் கிருஷ்ணசாமியின் தொடக்கமும், புதிய தமிழகத்தின் முடிவும் தேவேந்திர இயக்கங்களுக்கும், கட்சிகளுக்கும் ஒரு வரலாற்றுப் பாடம்.
Share this article :

+ comments + 1 comments

4 October 2008 at 10:34

sontha saathikkaranai kurai sollum pothu unmaiyana ethiri marainthuvidukiran. ithu thaan aathikka sakthikalin result. very good keep it up. but nee onnu seravum mudiyaathu, uruppadavum mudiyathu.

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்