Home » » உத்தப்புரம் - உடைக்க முடியாத ஜாதி-II

உத்தப்புரம் - உடைக்க முடியாத ஜாதி-II

Written By DevendraKural on Thursday, 16 October 2008 | 23:06

தீண்டாமையின் எல்லா வடிவங்களும் உத்தப்புரத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றன. முழுக்க முழுக்க தேவேந்திர மக்களை மிரட்டி எழுதி வாங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை காட்டித்தான் சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் பிள்ளைமார்கள்.அரசும் பயந்து தயங்கி சில கற்களை நோகாமல் உருவியெடுத்து ஒரு பாதையை திறந்து விட்டிருக்கிறது. முதலமைச்சரும் ‘பாகுபாடும் வேண்டாம், பாதுகாப்பும் வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். ஓர் அநீதி நடக்கும் போது நீங்கள் நடுநிலை வகிக்க முற்பட்டால், அது அநீதிக்கு ஆதரவளிப்பதற்கு சமம். இங்கு பெரும்பாலான அறிவுஜீவிகளும், சமூகப் போராளிகளும், பகுத்தறிவாளர்களும் அப்படித்தான் சாதிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக வலுவான ஓர் அறிக்கையைக் கூட நம்மால் பார்க்க முடியவில்லை. அப்புறம் எங்கிருந்து போராட்டம் வெடிப்பது?"யார்கிட்டயிருந்து யாருக்குப் பாதுகாப்பு வேண்டுமாம்?! அந்த கலவரம் நடந்தப்போ என் மகனுக்கு 18 வயது. ஆடு மேய்க்கப் போனவன புடுச்சுட்டுப் போயி ஸ்டேசன்ல போட்டு அடிச்சே கைவிரலை உடைச்சானுங்க. கோயிலுக்குள்ள இழுத்துட்டுப் போயி அடிக்கிறது... தெருவுல நடந்து போனா ‘பள்ளக் கழுத வருதுனு' காறி எச்சி துப்புறதுனு எங்கள கொஞ்ச அவமானமா பண்ணியிருக்காங்க? ஊருக்குள்ள எங்கள வரவிடாம பண்ணதோட கொஞ்ச நஞ்ச அடியா வாங்கியிருப்போம். போலிசும் அரசாங்கமும் அவுங்களுக்கு ஆதரவாதான் நடந்துகிட்டாங்க. எங்க பக்கம் தான் உசுரு போச்சு, நாங்கதான் அஞ்சி ஊரவிட்டு ஓடுனோம். ஊர்வழி போக பாதை இல்லாம நாங்கதான் கஷ்டப்படுறோம். இதுல அவங்களுக்கு என்ன பாதுகாப்பு வேணுமாம்?'' - கோபமும் வேதனையுமாக கேட்கிறார் வீரம்மா.கீழ்வெண்மணி முதல் மேலவளவு வரை... முதுகுளத்தூர் முதல் மாஞ்சோலை வரை... சங்கனாங்குளம் முதல் கொடியங்குளம் வரை..... உஞ்சனை முதல் திண்ணியம் வரை... சென்னகரம்பட்டி முதல் பாப்பாப்பட்டி வரை, காளப்பட்டி முதல் கீரிப்பட்டி வரை, எங்கும் விரவி வேரூன்றியிருப்பதுதான் உத்தப்புரத்தில் சுவராக எழுந்து நிற்கிறது. செங்கல்லும் சிமெண்டும் சேர்த்துக் கட்டப்பட்ட வெறும் சுவராக இருந்திருந்தால், இந்த 19 ஆண்டுகளில் அது தானாகவேனும் இடிந்து விழுந்திருக்கக்கூடும். ஆனால் பதினெட்டுப்பட்டி சாதி இந்துக்களும் சேர்ந்து நட்ட ‘ஜாதி’ என்னும் அடிக்கல்லை அடித்தளமாகக் கொண்டிருப்பதால், இன்று வரை அது நிற்கிறது சிறு பிளவுமின்றி. சுவற்றிலிருந்து ஒரு கல் அகற்றப்பட்டாலும் ஜாதியும் ஆதிக்கமும் அகற்றப்படுவதாகவே சாதி இந்துக்கள் பதறுகின்றனர்.எடுக்கப்பட்ட 16 உடைகற்களும் இந்தியா என்னும் சாதி ஆதிக்க தேசத்தில் யாரை எங்கெல்லாம் காயப்படுத்தி இருக்கும், அடங்கா கொந்தளிப்புகளை எவர் எவரின் அடிமனதில் தூண்டிவிட்டிருக்கும் என்பது நம் புரிதலுக்கு உட்பட்டதுதான். பத்து மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம், பல்வேறு கிராமங்களில் நடத்திய ஆய்வில் 47 விதமான தீண்டாமையின் வடிவங்களைக் கண்டறிந்தது. உத்தப்புரம் சுவரும் வெளிச்சத்துக்கு வந்தது அதன் தொடர்ச்சியாகவே...
சாதி ஒழிப்புக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் உள்ள வேறுபாட்டை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தீண்டாமையை ஒழித்தாலும் சாதி இருக்கும். காரணம் சாதியின் ஒரு கூறுதான் தீண்டாமை. தேசத் தந்தையாக இருந்தும் காந்தி மக்களின் எதிரியாக ஆனதற்குக் காரணம், அவர் சாதிக்கு எதிராக எப்பொழுதுமே குரல் கொடுக்காதது தான். அவரும் வசதியாக தீண்டாமையை மட்டுமே எதிர்த்தார். இப்போதும் அந்தத் தவறுதான் நடக்கிறது. பாகுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்க சாதியை வலுவாக நாம் எதிர்த்தாக வேண்டியிருக்கிறது. அந்த விடுதலைப் போராட்டத்தின் முக்கியக் கூறுகளாக பகுத்தறிவுப் பரவலாக்கமும், இந்து மத எதிர்ப்பும் இருக்க வேண்டும்.தலித் மக்கள் பொதுவாக எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொள்கிறார்கள்தான். காரணம், இதுதான் வழக்கம் விதி என்பதை அவர்களும் நம்புகின்றனர். நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர். சுவர் கட்டப்பட்ட இந்த 19 ஆண்டுகளில் ஒரு நாள் கூட இது நம்மை தனிமைப்படுத்தியிருக்கும் அவமானச் சின்னம் என்பதை உத்தப்புரம் தேவேந்திரர்கள் உணராததே இதற்கு சான்று. எதுக்குப் பிரச்சனை என்று காலப்போக்கில் அவர்களும் ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் வாழ்வின் உரிமைகளையும் உணர்வுகளையும் நசுக்கும் எல்லா ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொள்ளும் தேவேந்திரர்கள் கிளர்ந்தெழுவது ஒரேயொரு விஷயத்துக்காகத் தான். அது தங்களது வழிபாட்டு உரிமை. சமூக அங்கீகாரம், கல்வி, பொருளாதாரம் இப்படி எதை விடவும் மிக மேன்மையானதாக வழிபாட்டு உரிமையை அவர்கள் மதிக்கிறார்கள்.மற்றபடி.... இடிக்கப்பட்ட 15 அடி சுவரைப் பற்றிப் பேச நமக்கு எதுவுமில்லை. ஏனென்றால் ‘எங்கே சாதி இந்துக்களுக்கு வலித்துவிடப் போகிறதோ' எனப் பார்த்து பதமாக உடைக்கப்பட்ட சுவர் அது. உடைக்காத சுவர் பற்றியும் பேச நமக்கு எதுவுமில்லை. ஏனெனில் அது இருந்தாலும் இல்லையென்றாலும் தேவேந்திரர்கள் நிலைமை ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. சாதிப் பெயரால் சாடியபடி எச்சில் துப்புவதும், கல்லெறிவதும், பொதுவென்று ஏதுமில்லாமல் தனித்துவிடப்படுவதும், வன்மமும் கொலைவெறியும் இருக்கத்தான் போகிறது.உத்தப்புரத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கும் எல்லோரிடமும் நாம் கேட்கும் கேள்வி.... நீங்கள் சுவர் உடைக்கப்படுவதை விரும்புகிறீர்களா? சாதி தகர்த்தெறியப்படுவதை விரும்புகிறீர்களா? ஏனென்றால் சுவரை இடிப்பதில் உங்கள் கவனமும் முயற்சியும் உழைப்பும் இருந்தால் சுவர் உடைந்துவிடும். ஆனால் சாதி அப்படியே இருக்கும். அதே கவனமும் முயற்சியும் உழைப்பும் சாதியை தகர்ப்பதில் இருந்தால் இந்த சுவரென்ன? நாடு முழுக்க ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் ஊராகவும் சேரியாகவும் பிரித்து வைத்திருக்கும் - கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சுவர்கள் தாமாகவே உடையும். அவரவரின் மனசாட்சி இந்த கேள்விக்கான பதிலை கண்டறியட்டும்...
1989 கலவரம் குறித்த தகவல்கள் உதவி : செல்வராஜ் ; படங்கள் : மீனாமயில்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்