Home » » கன்னநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேவேந்திர மக்களுக்கு வழிபடும் உரிமை இல்லை

கன்னநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேவேந்திர மக்களுக்கு வழிபடும் உரிமை இல்லை

Written By DevendraKural on Sunday, 9 November 2008 | 09:23


திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் தாலுகாவில் கரிவலம்வந்தநல்லூருக்கு அருகில் இருக்கும் பந்தப்புளி கிராம தேவேந்திர மக்கள் வழிபாட்டு உரிமைக்காகப் போராடுகிறார்கள்.

ஊரிலிருக்கும் கன்னநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேவேந்திர மக்களுக்கு வழிபடும் உரிமை இல்லை. ஆதிக்க சாதியின் குறிப்பாக தேவர் சாதியின் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து இக்கிராம தேவேந்திர மக்கள் பத்தாண்டுகளாக போராடி வருகிறார்கள். பசும்பொன்னுக்கு வரும் எந்த தலைவரும் கட்சியும் இம்மக்களின் பிரச்சினைக்கு முகம் காட்டியதில்லை. அந்த மக்கள் சொந்த முயற்சியில் சங்கரன் கோவில் துணை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு கோவிலில் வழிபடும் உரிமையை தீர்ப்பாகப் பெற்றார்கள்.

நீதிமன்றம் அனுமதித்தால் மட்டும் இந்தப் பிரச்சினை முடிந்து விடுமா என்ன? எந்தச் சட்டம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மேல்சாதியினர் அதை மறுத்தார்கள். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய அதிகார வர்க்கமோ பல தேதிகளைக் குறித்து தள்ளிப் போட்டு வந்தது. இறுதியில் செப்டம்பர் 23ஆம் தேதி நுழையலாம் என்று அதிகாரவர்க்கமும், மேல்சாதியினர் மற்றும் தேவேந்திர மக்கள அடங்கிய சமாதானக் கமிட்டியும் முடிவு செய்தது.

அன்று தேவேந்திர மக்கள் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது கோவில் பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறி விட்டார். அன்றும் தேவேந்திர மக்களுக்கு மாரியம்மன் அருள்பாலிக்கவில்லை. இதன் பிறகு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி அரசு நிர்வாகம் கோவிலைப் பூட்டி சீல் வைத்தது. அப்போதும் கூட தீண்டாமைக் கொடுமை அகற்றப்பட்டு சட்டமும், ஒழுங்கும் நிலைநாட்டப்படவில்லை. மாறாக கோவிலை பூட்டினாலும் பூட்டுவோமே ஒழிய தேவேந்திர மக்களை நுழைய விட மாட்டோமென திமிர் பேசும் சாதி ஆதிக்கம்தான் அரசு நிர்வாகத்தைத் தாண்டி ஆட்சி செய்கிறது.

கேவலம் ஒரு மாரியம்மனைக்கூட கும்பிடுவதற்கு பத்தாண்டு போராடி, நீதிமன்ற உத்தரவு பெற்றும் கூட ஒன்றும் நடக்கவில்லையே என சலித்துப்போன மக்களை இரவு நேரங்களில் ஆதிக்க சாதி வெறியர்கள் கும்பலாக வந்து தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்பதோடு, வழிபடும் உரிமை இன்னமும் கிடைக்கவில்லை என்பதாலும் தேவேந்திர மக்களின் எழுபது குடும்பங்களும் கால்நடைகளோடு அருகாமை மலைக்கு சென்று விட்டது. அங்கு வந்த அதிகாரிகளிடம் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து என்றைக்கு எங்களுக்கு வழிபடும் உரிமை கிடைக்கிறதோ அன்று கிராமத்திற்கு வருகிறோம் என்று அறிவித்து விட்டு போராட்டத்தைத் தொடர்கிறார்கள் தேவேந்திர மக்கள்.

உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் பிரச்சினையில் தங்களது நோக்கம் நிறைவேறவில்லை என்பதற்காக மேல்சாதி மக்கள் மலைப்பகுதிக்கு சென்று தங்கியதும் சுற்று வட்டாரத்து மேல்சாதியினரிடமிருந்து பொருளாதார உதவி வந்தோடு, எல்லா அரசியக் கட்சிகளும், அதிகாரிகளும் அந்த மக்களிடம் வந்து ஊருக்குத் திரும்புமாறு மன்றாடினார்கள். இதே போராட்ட வடிவத்தை மேற்கொண்டிருக்கும் தேவேந்திர மக்களுக்கு இத்தகைய வரவேற்பு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை.

இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றும் வண்ணம் சந்திராயன் விண்கோள் நிலவுக்கு செல்வதாகப் பீற்றித் திரியும் பாரதாமாதா பக்தர்கள், ஒரு அம்மன் கோவிலுக்குள் நுழைய முடியாத இந்தக் கொடுமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்தியாவின் அளவு கோல் சந்திராயனிலா, பந்தப்புளியிலா?
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்