
சமூகத்தில் சமுதாயம், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய மக்களுக்கும் காலங்காலமாக தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆங்கிலேயர் காலத்திலேயே இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக ஜோதிபா பூலே, அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோர் அடித்தளம் அமைத்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியா குடியரசான பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் அரசியல் இட ஒதுக்கீட்டிற்கான வழிவகைகள் செய்யப்பட்டன. அனைத்துத் துறைகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சட்டத்தின் மூலமாக மட்டுமே வாய்ப்பளிக்க முடியும் என்ற காரணத்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும், சட்டமன்ற, நாடாளுமன்றங்களிலும் அதற்கு பின்பு அமலாக்கப்பட்ட பஞ்சாயத்துராஜ் சட்டத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டான பங்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இடஒதுக்கீடு அமலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுறும் இந்த வேளையில் இந்த இடஒதுக்கீடுகளினால் தாழ்த்தப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார வாழ்க்கையில் எந்தவிதமான அடிப்படை மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சிகள் மாறின. அடிப்படை மாறவில்லை. எண்ணற்ற துறைகளில் இன்றுவரை ஏட்டளவில் மட்டுமே இடஒதுக்கீடுகள் இருக்கின்றன.
இந்தியா முழுமைக்கும் மத்திய, மாநில அரசினுடைய துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்காக அளிக்கப்பட்ட பின்னடைவு பணியிடங்களாகவே நீடித்து வருகின்றன. 10 லட்சம் பணியிடங்கள் என்பது சாதாரணமானது அல்ல. இந்த 10 லட்சம் பணியிடங்களும் முறையாக நிரப்பப்பட்டு அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்விடங்களிலே பணி அமர்த்தப்பட்டிருந்தால் ஒருவேளை எந்த அடிப்படை நோக்கத்திற்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதோ அது நிறைவேறியிருக்கும்.
2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், முடிந்த பிறகும் உருவான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கோஷங்களில் ஒன்று 10 லட்சம் பின்னடைவு பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கப்படும் என்பதாகும்.
ஆனால் கடந்த 5 நிதிநிலை அறிக்கைகளில் நிதி அமைச்சர் சிதம்பரம் மத்திய பட்ஜெட்டில் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரு பைசாக்கூட ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்தில் மொத்தம் 15 லட்சம் பேர் நிரந்தர அரசு ஊழியர்களாக உள்ளனர். ஏறக்குறைய 5 லட்சம் பேர் தாற்காலிக பதவி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். ஆக 20 லட்சம் ஊழியர்களில் 19 சதவிகித இடஒதுக்கீட்டின்படி குறைந்தது 4 லட்சம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் தமிழக அரசு ஊழியர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவான தாழ்த்தப்பட்டவர்களே அரசு ஊழியர்களாக உள்ள உண்மை நிலையை அறிந்த பிறகே 1996-ம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு பற்றிய வெள்ளை அறிக்கையை வலியுறுத்தினோம். இன்று வரையிலும் உண்மையான வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. அதற்குண்டான நேர்மையும், துணிவும் இல்லை.
2000-வது ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒப்புக்காக ஒரு வெள்ளை அடிக்கப்பட்ட வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அன்றைய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் உண்மை விவரங்களை எடுத்துச் சொல்வதற்கு அன்று இருந்த 14 பல்கலைக்கழகங்களில் திருச்சி பாரதிதாசன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தவிர எவரும் முன் வரவில்லை. கடைசிவரையிலும் தகவல்களைத் தர மறுத்துவிட்டார்கள். 110 அரசுத் துறைகளில் 65 துறைகள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன. அதில் மட்டுமே ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பின்னடைவு பணியிடங்கள் என்று கண்டறியப்பட்டன. 65 துறைகளில் சுமார் 40 துறைகளில் ""ஏ, பி, சி'' என்று அழைக்கப்படக்கூடிய உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் ஒருவர்கூட இல்லாத அவல நிலையைக் காண முடிந்தது.
வளமான துறைகள் என்று அழைக்கப்படும் கனிமவளம், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் உயர் பதவிகள் துணைவேந்தர்கள், மருந்தாளுநர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், நியமன ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் போன்ற உயர் பதவிகளில் ஒரு சதம் கூட தாழ்த்தப்பட்டோர் இல்லை. பொதுவாக தமிழக அரசுத்துறைகளில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள், எழுத்தர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என்ற நிலையில் மட்டுமே ஏதோ இட ஒதுக்கீடு உரிய சதவிகிதம் இருந்தது. ஆங்கிலேயர் காலம் முதல் வருவாய்த்துறையில் தண்டல்காரர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்தார்கள். இப்போது அந்த தண்டல் பதவியிலும்கூட அதிகாரம் ஒளிந்திருக்கிறது என்று தெரிந்தபின் அந்தப் பணியிலிருந்தும் தாழ்த்தப்பட்டவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஒட்டு மொத்தத்தில் இடஒதுக்கீடுகள் கொடுக்கப்பட்டதை போல சொல்லிவிட்டு மறுக்கப்பட்டதே உண்மை நிலவரம் ஆகும்.
தமிழகத்தைப் பொருத்தமட்டிலும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் 77 சாதிகள் உள்ளன. அதில் தெற்கு மாவட்டங்களை மையமாக வைத்து பள்ளர், குடும்பர், தேவேந்திரர், காலாடி என்று அழைக்கப்படும் தேவேந்திர குல வேளாளர்கள், மேற்கு மாவட்டங்களை மையமாக வைத்து சக்கிலி, பகடை, மாதிரி என்று அழைக்கப்படும் அருந்தியர்கள், பறையர், சாம்பவர், வள்ளுவர் என்று அழைக்கக்கூடிய ஆதிதிராவிடர்கள் ஆகிய மூன்று சமூதாய மக்களும் பெரும்பாலான எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
கடந்த 60 ஆண்டுகால இடஒதுக்கீட்டின் பயனால் இந்த மூன்று ஜாதிகளும் எந்தவித குறிப்பிடத்தக்க பதவியும் பெற்று பலனடைந்ததாகத் தெரியவில்லை. யதார்த்தத்தில் சென்னை மாநகரத்தை ஒட்டி வாழ்கின்ற காரணத்தினாலும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்ததாலும் இடஒதுக்கீட்டின் பயனை தொடக்கத்திலேயே அறிந்திருந்ததாலும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் பறையர் என்று அழைக்கப்படிகின்ற ஆதி திராவிடர்கள் கொஞ்சம் கூடுதலாக வாய்ப்பைப் பெற்றிருக்கலாம்.
தென் மாவட்டத்தை மையமாகக்கொண்ட பள்ளர் என்று அழைக்கப்படுகின்ற தேவேந்திர குல வேளாளர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலை அடிப்படையாகக்கொண்ட காரணத்தினால் கல்வி வாசம் இல்லாமலே நீண்டகாலம் இருந்துவிட்டார்கள். சமீப காலமாகவே அவர்களுடைய பங்கு சிறிது கூடிவருகிறது. மேற்கு மாவட்டத்தை மையமாகக் கொண்ட அருந்ததியர் மக்களின் வாழ்க்கை நிலையே அவர்களின் வேலைவாய்ப்புக்கான அடிப்படைக் கல்வியை பெறமுடியாமல் ஆக்கிவிட்டது. எனவே தமிழகத்தைப் பொருத்த மட்டிலும் தாழ்த்தப்பட்டோரில் ஒருவருக்குண்டான பங்கை இன்னொருவர் அபகரித்துக் கொண்டார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
சுதந்திரம் பெற்று 60 ஆண்டு காலம் நிரம்பியும் 14 வயதுக்குள்பட்ட தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படைக் கல்விகூட கொடுக்கப்படவில்லை. அடிப்படைக் கல்வி பயின்றவர்களுக்கு உயர்கல்வி கொடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு வழியில்லை. அதன் காரணமாக வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட 18 சத இடஒதுக்கீட்டை நிரப்புவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை இல்லை. இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது உள்ஒதுக்கீடு பேசப்படுகிறது. அதற்காக தனி ஆணையம், தனிச் சட்டமாம்! அமலில் உள்ள இடஒதுக்கீடே அமலாகாதபோது உள் இடஒதுக்கீட்டை எப்படி அமலாக்கப்போகிறார்கள். உள் இடஒதுக்கீடு பேசுவதன் மூலமாக ஒரு மிகப்பெரிய உண்மை மறைக்கப்படப் போகிறது என்பதை நான் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன். 77 சாதிகளில் ஒரு சாதியை மட்டும் தாழ்த்தப்பட்டோரிலும் தாழ்த்தப்பட்டோர் என்று சொல்வதன் மூலமாக இட ஒதுக்கீட்டின் ஒரு பிரிவுக்கான பயனை மற்ற இரு பிரிவினர்கள் அபகரித்துக்கொண்டனர் என்கிற தோற்றத்தை உருவாக்கும். அதன் மூலமாக அம் மக்களிடையே தேவையற்ற பனிப்போரை உருவாக்காதா?
அதுமட்டுமல்ல, இத்தனை ஆண்டுகாலம் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 19 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படாமலேயே போய்விடும் அபாயம் ஏற்படும். அதுமட்டுமல்ல கொடுக்கப்படவில்லை என்பதும் மறைக்கப்படும். மேலும் 77 சாதிகள் ஒன்றாக இருந்தபோது அந்த மக்களுக்கு உரிய பங்கை கொடுப்பதற்கான என்ன வழிமுறை வகுக்கப்பட்டிருந்தது? இதுவரையிலும் 9 சதவிதிகம் கூட பல துறைகளில் இல்லையே. ஆக, அருந்ததியருக்கு 3 சதவிகிதம் தனித்துக் கொடுப்பதை அமலாக்குவதற்கு உத்தரவாதம் என்ன? என்னென்ன வழிமுறைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன? அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகிதம் கொடுக்கப்பட வழிமுறைகள் இருக்குமேயானால், அதே வழிமுறைகளை ஏன் 18 சதவிகிதத்திற்கும் கடைப்பிடிக்கப்படவில்லை? இன்றும் தமிழ் நாடெங்கும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் இல்லாத அளவிற்கு பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். பொது வீதிகள், கிராமக் கோயில்களைப் பயன்படுத்துவதில் இன்னும் பல இன்னல்களை எதிர் நோக்கி இருக்கிறார்கள். அருந்ததிய மக்களுக்கு காளப்பட்டியும், சாரளப்பட்டிகளும் தேவேந்திரர்களுக்கு உத்தபுரமும், கண்டதேவிகளும், ஆதிதிராவிட மக்களுக்கு திரெüபதி அம்மன் கோயிலும் இன்னும் தொடரும் பிரச்னைகளாகும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய சமூகக் கடமைகளை எதிர்கொள்ள ஒன்று திரளப்பட வேண்டிய நேரத்தில் உடைக்கப்படுகிறார்கள். உள் இடஒதுக்கீட்டை பொருத்தமட்டிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அந்த பட்டியலில் இடம்பெறக்கூடிய அனைவரும் அவரவர்களின் திறமைக்கேற்ப பங்கை பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எமக்கில்லை.
அண்ணல் அம்பேத்கர் இந்தியா முழுமைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் ஒரு பட்டியலாக்கி அனைவருக்கும் சேர்த்து அகில இந்திய அளவில் 22.5 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்தார். காலம் மாறுகிறது.
ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட வேண்டுமென்ற குரல் ஓங்குமேயானால் இதில் மாற்றுக்கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் பிரித்துக் கொடுப்பவர்களுக்கு மட்டும் நான் ஒரு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். மூன்று சதவிகிதம் பேருக்கு விருந்து கொடுங்கள்; ஆனால் அதோடு 18 சதம் பேருக்கு உண்டான உரிமைகளையும் முறையாக அளியுங்கள்; அவர்களுக்கும் விருந்து படையுங்கள்; இல்லையேல் மூன்று சதம் பேருக்கு விருந்தானது 18 சதம் பேருக்கு விஷமாக மாறும்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி
நிறுவனர், தலைவர்-புதிய தமிழகம்)
+ comments + 1 comments
i appreciate