Home » » தாமிரபரணிபடுகொலை -கருணாநிதி அரசு சாதனை

தாமிரபரணிபடுகொலை -கருணாநிதி அரசு சாதனை

Written By DevendraKural on Sunday, 9 November 2008 | 09:42


ஆதிக்க சாதிச் சமூகம் எல்லோர் கண் முன்னிலையிலும் நிகழ்த்திய படுகொலை கூடுதல் கூலியையும் மனித உரிமைகளையும் கேட்டுப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி தாமிரபரணி நதிக்கரையில் நடந்த பல கட்சி, பல சமூக மக்களின் போராட்டம் படுகொலைக் களமாக மாறி பத்து ஆண்டுகளாகின்றன. 1999 ஜூலை 23ந் தேதி நண்பகலில் போராட்டக்காரர்கள் மீது ஜாலியன்வாலாபாக்கிற்கு நிகரான படு கொலை நிகழ்த்தப்பட்டது.
திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் பிரிக்கும் ஆற்றுப் பாலத்திற்கு அருகே கொக்கிர குளம் கலெக்டர் அலுவலகம். சுமார் 15 அடி பள்ளத்தில் இருக்கும் அகன்று விரிந்த தாமிரபரணி ஆற்றின் நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 1,000பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் தாக்கத் தொடங்கியபோது போராட்டக்காரர்கள் தப்பிக்க செங்குத்தான ஆற்றுப் பள்ளத்தில் குதிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆற்றுக்குள்ளும் தாக்குதல் தொடர்கிறது. தப்பிக்க தண்ணிக்குள் குதித்தவர்களும் தப்பவில்லை. உயரமான ஆற்றின் கரைப் பகுதியிலிருந்த காவல் துறையினர் விட்ட கற்கள் அவர்கள் தலைகளைப் பதம் பார்த்தன. சற்று நேரத்திற்குள் கொலைவெறி ஆவேசத்துடன் காவல் படைகள் ஆற்றுக்குள் இறங்குகின்றன. படையின் ஒரு பிரிவு ஆற்றின் மறுகரைக்குச் சென்று தப்பித்தலை அசாத்தியமாக்குகிறது. ஒரு புகைப்படம் அன்று என் நெஞ்சை உறைய வைத்தது. ஒரு பெண் ஆற்றுத் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார். ஒரு போலீஸின் லத்தி அவர் தலையைப் பதம் பார்க்கிறது.


17 பேர் அந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்தார்கள். அவர்கள் நீச்சல் தெரியாததால்தான் இறந்தார்கள் என்று சொன்னால் அதை ஒரு குழந்தைகூட நம்பாது. போலீஸின் அடியிலிருந்து தப்ப, தண்ணீரில் குதித்தவர்களின் தலை நீர்மட்டத்திற்கு மேலே எழுந்த போதெல்லாம் ஒரு லத்தி அவர்களின் தலையைப் பதம் பார்த்தது. அல்லது காவல் துறையினர் வீசிய கல் அவர்களை சுய நினைவிழக்கச் செய்தது. தப்பிக்க வழியற்று சுவரில் ஏறிய, கிணற்றுக்குள் குதித்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடந்த ஜாலியன்வாலாபாக் சம்பவம் தேவேந்திரர்களின் எழுச்சியை விரும்பாத உயர் சாதி மனோபாவம் கொண்டவர்களுக்கும் இன்று நினைவுக்கு வராததில் ஆச்சரியமில்லை. தேவேந்திரர்களின் எழுச்சி பரம்பரை உயர் சாதிகளான பிள்ளைகளுக்கும் புதிய உயர் ஜாதியினரான நாடார்களுக்கும் பிறருக்கும் கண்ணை உறுத்தியது. அதே ஜாதிவெறியில் ஊறிய தங்கள் ரத்தத்தின் ரத்தங்களான காக்கிகள் தாங்கள் செய்ய நினைத்ததைச் செய்த பிறகு முதலில் அதற்கான பாராட்டு குவிந்தது. அதனால் தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக்கை நிகழ்த்தியவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் காரியங்களும் முழு வீச்சில் நடத்தப்பட்டன.


தாமிரபரணிப் படுகொலையை விசாரித்த நீதிபதி மோகன் ரொம்ப அழகாகச் சொன்னார்: போராட்டக்காரர்கள் பெண் போலீசாரிடம் தவறாக நடந்துகொண்டதால், வன் முறையில் இறங்கியதால் காவல்துறை தடியடி நடத்த வேண்டியதானது. அதற்காக தேனியைச் சேர்ந்த ஒரு பெண் காவலரின் புகாரும் பெறப்பட்டது. அவர் அரசின் ஒரு பகுதிதானே? அவர் பொய் சொல்ல வைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? அந்தக் கேள்விக்கு மோகன் இவ்வாறு பதில் அளித்தாராம்: அவங்க டீசண்ட்டானவங்க, பொய் சொல்ல மாட்டாங்க. அப்படின்னா போராட்டம் நடத்திய பெண்கள் டீசண்ட் கிடையாதா என்று எழுப்பும் கேள்வி முக்கியமானது. ஏனெனில் தாமிரபரணிப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் உண்டு. இறந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும்கூட அடக்கம். பரிசல் பயண சாதி மோதல்களால் ரத்தம் சிந்தப்படுவதைத் தடுக்க உருவான சுலோச்சனா முதலியார் பாலம் சாதிய அரசியலால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு மோதலுக்கான மௌன சாட்சியானது. தாமிரத் தண்ணீரில் மற்றுமொரு முறை ரத்தம் கலக்கக் கண்ட பொருநை நதி அதன் நினைவுகள் இன்றளவிலும் சுமந்து வருகிறது.

தாமிரபரணி சம்பவத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் மோகன் சொல்லாததை எல்லாம் சொல்கின்றன. ஆற்றின் மீதிருந்து போலீசார் கல்லெறிவது, தண்ணீரில் தத்தளிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற ஆவணங்கள் அச்சுறுத்தியதால்தான் காஞ்சனை சீனிவாசனின் ஒரு நதியின் மரணம் திரையிடல் தடுக்கப்பட்டது. ஆனால் சாதி ஆதிக்க மனோபாவமும் தேவேந்திர விரோத அல்லது அவர்களின் எழுச்சியை சகிக்க முடியாத மனோபாவமும் நமது சமூகத்தின் அத்தனை தளங்களிலும் வேரூன்றியிருந்ததால் இவ்வளவு பெரிய படுகொலையை மிகவும் எளிதாகப் பூசி மெழுகிவிட்டார்கள். இத்தனைக்கும் அந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரர்கள் மட்டும் அல்லர். அந்தப் போராட்டமே புதிய தமிழகம், அன்று புதிய தமிழகத்துடன் கூட்டணி வைத்திருந்த த.மா.கா, கம்யூனிஸ்டுகளின் கூட்டணியில் நடந்ததுதான். சோ.பாலகிருஷ்ணன், வேல்துரை, ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட த.மா.காவின் நான்கு எம்.எல்.ஏக்கள் அந்தப் போராட்டத்தில் முன்னின்றார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றி தேவேந்திரர்கள் எழுச்சிக்கு வித்திடும் அல்லது கிருஷ்ணசாமியின் எழுச்சிக்கு வித்திடும் என்பதால் அவர்களின் கோரிக்கை மனுவைப் பெறக்கூட கலெக்டருக்கு மேலிடதிலிருந்து அனுமதி வரவில்லை என்று கூறப்பட்டது.


மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட விவகாரத்தில் முந்தைய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 652 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான கோரிக்கை. தாமிரபரணி சம்பவம் நடக்கும் வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களை விடுவிக்குமாறு தரப்பட்ட மனுவைக்கூடப் பெற முயற்சிக்கவில்லை. ஆனால் தாமிரபரணி சம்பவம் நடந்த மறு நாளே அத்தனை பேரையும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ஆட்டம் போட்டா அடிக்கத்தானே செய்வாங்க என்பது பொதுப் புத்தியில் அதை நியாயம் செய்வதற்காகக் கட்டமைக்கப்படும் வாதம். ஆனால் தமிழ்ச்செல்வன் கேள்விக்குட்படுத்துவது போல் ஆடம்பரக் கூட்டங்களும் தொண்டர்களின் ஆட்டம் பாட்டமும் ரகளைகளும் அத்தனை திராவிடக் கட்சிகளின் போராட்டங்களிலும் பார்க்கக்கூடியதுதானே. அங்கெல்லாம் இதுபோன்ற படுகொலைகள் நடக்கின்றனவா?தாமிரபரணிப் படுகொலை விவகாரத்தில் இன்றளவிலும் வெகுஜன ஊடகங்களில் வந்த காட்டமான எதிர்வினை என்று பார்த்தால் பிரண்ட்லைனில் Tirunelveli Massacre என்ற பெயரில் வெளியான கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது. ஆனால் எந்த வெகுஜன ஊடகத்திலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்கான எந்தப் பதிவும் கண்ணில் படவில்லை.

நீதிபதி மோகன் கமிஷன்
அரசுக்குப் பரிந்துரைத்த அறிக்கையிலிருந்து...
-------------------------------------------------------------------------------
நீதியரசர் எஸ். மோகன்.
சென்னை,
நாள்: 27-6-2000

அரசாணைப்படியான ஆய்வு வரம்புக்கு பதில்.

முடிவாக, ஆய்வு வரம்பிலுள்ள கருத்துக்களுக்கு நான் பின்வருமாறு பதிலளிக்கிறேன்:-

(i) 23-7-1999 அன்று திருநெல்வேலி மாநகரில் ஊர்வலத்தினர் மீது, காவல் துறையினர் பலப்பிரயோகம் செய்ததற்கு வழிகோலிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள்.

(a) ஊர்வலத்தினரின் ஒழுங்கு முறையற்ற நடத்தை. அவற்றுடன், ஊர்வலத்தினர் கண்ணியக்குறைவான முழக்கங்களை எழுப்பியது, காவலர் மீதும் நிருவாகத்தின் மீதும் தரக்குறைவான சொற்களை உதிர்த்தது.

(b) எம்.ஜி.ஆர். சிலை முன்பாக, ஆர்ப்பாட்டம் மட்டுமே செய்வதான, முந்தைய பந்தோபஸ்து திட்டத்தில் உள்ளபடி நடக்காமல், ஊர்வலத்தினரின் எதிர்க்கும் தன்மை.

(c) எம்.ஜி.ஆர். சிலையைக் கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்று ஊர்வலத்தினர் நியாயமற்ற முறையில் பிடிவாதம் செய்து வலியுறுத்தியது.

(d) மொத்தம் 10 பேர் அடங்கிய குழு மட்டுமே மாவட்ட ஆட்சியரைச் சென்று பார்க்கலாம் என்று காவல் துறை அதிகாரிகள் கூறியதை ஊர்வலத்தினர் செவிமடுக்காதது.

(e) கும்பலைக் கட்டுக்குள் கொண்டு வந்து அமைதி காக்க, அரசியல் தலைவர்கள் முற்றிலும் தவறியது, உண்மையில் தலைவர்களின் தூண்டுதலால் இக் கும்பல் உற்சாகமடைந்தது.

(f) ஊர்வலத்தினர் சுமார் 3,000 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டபோது, அவர்கள் கல்வீச்சில் −றங்கியது.

இவையனைத்தும், கி.பு.கோ. 129 ஆம் பிரிவின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டவாறு, பலப்பிரயோகம் செய்ததற்குக் காரணமாக அமைந்தன. காவலர்கள் அவ்வாறு பலப்பிரயோகம் செய்யாமலிருந்திருந்தால், நபர்களுக்குக் காயங்கள் ஏற்படுவது உட்பட, கொக்கிரகுளம் சாலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள கட்டிடங்களில் அமைந்துள்ள நிறுவனங்களில் உள்ள சாதனங்களுக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று எவராலும் முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க இயலாது.

(ii) 23-7-1999 அன்று ஊர்வலத்தினரைக் கலைக்கக் காவல்துறையினர் பலப்பிரயோகம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டதா? காவல் துறையினரின் அத்துமீறல் ஏதேனும் இருந்ததா? அவ்வாறெனில் தவறிழைத்த காவலர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தெரிவித்தல்.

மேலேயுள்ள ஆய்வு வரம்புக்கு (i) அளித்த பதிலில், கூறப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருதிப் பார்க்கையில், கொக்கிரகுளம் சாலையில் கும்பலைக் கலைக்க 23-7-1999 அன்று காவலர் பயன்படுத்திய பலப் பிரயோகம் அவசியமானதுதான். இருப்பினும், ஊர்வலத்தில் வந்தவர்களை ஆற்றுப்படுகையில் துரத்திச் சென்ற செயல், அத்து மீறி பலப்பிரயோகம் செய்ததாகிறது. பின்வருபவர்கள் அச்செயலுக்குப் பொறுப்பானவர்கள்:-

(a) திரு. ஆர். குழந்தைசாமி,
காவல் துறை உதவி ஆணையாளர்,
பாளையங்கோட்டை.

(b) திரு.வி. செல்வராஜ்,
காவல்துறை உதவி ஆணையாளர்,
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு,
பாளையங்கோட்டை.

இவர்கள், சம்பவ இடத்தில் இருந்த உயரதிகாரியான பாளையங்கோட்டை காவல் துறை துணை ஆணையாளர் திரு. சைலேஷ் குமார் யாதவிடம் கலந்தாலோசனை செய்யாமலேயே ஓடுகின்ற ஊர்வலத்தினரைத் துரத்திப் பிடிக்க உத்தரவிட்டனர்.

(c) திரு.ஏ. தாசுதீன்,
பாளையங்கோட்டை வட்டாட்சியர்.

சட்டப்படியான கடமையை நிறைவேற்ற முற்றிலும் தவறி விட்டார். இம் மூவரும், அவர்கள் வகித்த பதவிப் பொறுப்புகளில் செயல்படத் தவறிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து அரசுப் பணியில் வைத்திருப்பது ஒழுக்கக் கட்டுப்பாட்டை நிலை குலையச் செய்வதுடன், பொதுமக்களின் நலனையும் பாதிக்கும்.

ஆகவே, அவர்களுடைய பணியிலிருந்து அவர்களுக்குக் கட்டாயப் பணி ஓய்வு அளிக்க வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன்.

(iii) 23-7-1999 அன்று திருநெல்வேலி மாநகரில் ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட வழிகோலிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள்.

நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட 17 இறப்புகளில்:

(a) நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட பதினொரு −றப்புகள், சந்தேகத்திற்கிடமின்றி 'விபத்து' என்கிற வகையின் கீழ் வரும்.

(b) ஏனைய 6 பேர் கொக்கிரகுளம் சாலையில் முதற்கண் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே இறந்துவிட்டனர். நீந்துவதற்கு முயற்சி செய்தபோது ஆற்றுப்படுகையில் காவல் துறையினர் அடிக்கவில்லை.

(c) அத்தகைய காயங்கள் ஏற்பட்ட பின்னர், அவர்கள் ஆற்றுப்படுகையில் −றங்கினர். அவர்களைக் காவல் துறையினர் துரத்தினர். ஆற்றைக் கடப்பதிலும் பாதுகாப்பான −டமான மேற்குக் கரையைச் சென்றடைவதிலுமே அனைவரும் மும்முரமாக −ருந்தனர். பலர், ஆற்றைக் கடக்க முயற்சி செய்தனர். அது, நெரிசலை ஏற்படுத்தியது, அதன் பயனாக, ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு, ஆற்றில் விழுந்து விட்டனர்.

(d) இந்தக் குழப்பமான சூழ்நிலையில், தாமிரபரணி ஆற்றின் உண்மையான ஆழத்தை அறிந்து கொள்ளாமலும், அப்போதிருந்த நீரோட்டத்தின் சக்தியை அறிந்து கொள்ளாமலும் அவர்கள், நீந்த முயற்சி செய்தனர். கெய்சர், பூபால இராஜன், ரெத்னமேரி ஆகியோர் போன்ற நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் முழ்கினர்.

இருப்பினும், இந்த நபர்களுக்கு இறப்பு ஏற்படுவதைத்தான் காவல்துறையினர் தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது.

பரிந்துரைகள்

கொக்கிரகுளம் சாலையில் காயமடைந்து நீரில் மூழ்கி இறந்துபோன ஆறு நபர்களைப் பொறுத்தவரையில், கருணை அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக ரூ.1 இலட்சம் (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)−ழப்பீட்டுத் தொகை வழங்கப்படலாம் என்று நான் கருதுகிறேன். அவர்கள் ஒரு நோக்கத்தை ஆதரித்து வீர மரணத்தைத் தழுவவில்லை என்பது உண்மையே. ஆனால், அவர்கள் எல்லோரும் தவறான வழியில் அனுப்பப்பட்டு விட்டனர்.

ஹேரேஸ் (Horace) என்னும் கவிஞர் பாடிய கருத்துக் கூர்மை மிக்க வைர வரிகள் இவை:-

'நடுவு நிலை பிறழாத, வேறுபாடு அறியாத
மரணத்தின் கோரக் கால்கள் இந்த ஏழை
மகனின் குடிசைக் கதவில் எட்டி உதைத்தன.'

(ஓட்ஸ் 1.4.)

எனினும், இந்தக் கவிதை வரிகள், சுட்டிக் காட்டியது போல இங்கு குறிப்பிட்ட 17 நபர்களும் மரணத்தைத் தழுவினார்கள். இறந்துபோன ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக அவர்களுடைய சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.2,00,000 (ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்) வழங்கப்பட்டுள்ளது. (முதற்கண் அரசு வழங்கிய ரூ.1 இலட்சம் மற்றும் பின்னர் ஆணையத்தின் பரிந்துரையையொட்டி வழங்கப்பட்ட ரூ.1 இலட்சம்).

இறந்தவர்கள் இறந்தவர்களே. அவர்கள் ஒருபோதும் எழுந்து வரப் போவதில்லை. எனினும், உயிரோடு இருப்பவர்கள் இறந்தவர்களின் இழப்பைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்காமல் இருக்க வேண்டும். எனவே, மனிதநேயத்தின் பேரில் உதவி செய்யும் ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு அவர்களது கல்வித் தகுதிகளுக்குப் பொருந்துகின்ற பொருத்தமான அரசு வேலை அளிக்கப்படலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

காவலர்கள் சிலருக்குக் காயம் ஏற்பட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால், ஒருவர் பொதுக் கடமைகளை ஆற்றும்போது தொழில் முறையில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடையே காயமடைந்த மற்றவர்களுக்கு நிவாரணம் எதுவும் அளிப்பதற்கான அடிப்படை ஏதுமில்லை என்று நான் கருதுகிறேன்.

இந்த அறிக்கையை முடிப்பதற்கு முன்னர், அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்படவேண்டும் என்ற வலிமையான வாதம் ஒன்றை முன் வைக்க நான் விரும்புகிறேன். இது, எந்தவொரு ஜனநாயக நடைமுறையிலும் எதிர்ப்பைக் காட்டக்கூடிய ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முறை என்று ஒருவர் உடனடியாகக் கூக்குரலிடலாம். ஆனால், கடந்த காலங்களில் நமது நாட்டில் ஏற்பட்டது என்ன? இத்தகைய ஊர்வலங்களின்போது, பொது மக்களுக்கு சொல்லவொண்ணாத் துயரமும் பெரும் வசதிக் குறைவுமே ஏற்பட்டது. அரசியல் கட்சிகளின் இந்த ஊர்வலங்களைப் பொறுத்தவரையில் புதியதொரு கோணத்தில் சிந்திக்க வேண்டிய காலம் தற்போது வந்துள்ளது. இத்தகைய ஊர்வலங்கள் ஓர் அரசியல் கட்சி பின்பற்றுகின்ற கொள்கையினை விளக்கிக் காட்டும் ஒரு காட்சியாக அமைந்திருக்கக்கூடும். கடந்த காலங்களில் நடைபெற்ற இத்தகைய ஊர்வலங்கள் மனித உரிமைகளின் அளவை அதிகரிப்பதாக அமையவில்லை.

நவீன காலம் சாதாரண மனிதர்களுக்குச் சொந்தமானது. அவர்களது மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இத்தகைய மனித உரிமைகளை மதிக்கத் தவறுவது, அரசியல் குழப்பத்திற்கும் நாகரிகமற்ற நடத்தைக்கும் வழி வகுக்கும்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1) (a) பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ள கருத்துச் சுதந்திரம், இத்தகைய ஊர்வலங்களை அனுமதிக்கிறது என்று கோருவதில் எவ்விதப் பயனும் இல்லை. 'காலத்தின் தேவைகளை உணர்ந்து கொள்ளுதல்' (நீதிபதி ஹோஸின் கூற்றுக்களைப் பயன்படுத்தி) காரணமாக 19 (2) பிரிவின் கீழ்க் காவல் துறைக்கு உள்ள அதிகாரத்தை மாநில அரசு கண்டிப்பாகப் பயன்படுத்தலாம்.

ஒரு காலத்தில் கட்சித் தொண்டர்கள் கட்சியில் மிகுந்த ஈடுபாடும் பிணைப்பும் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது நாம் காணும் சோகக் காட்சி யாதெனில், அரசியல் கட்சிக்குப் பெருமளவில் மக்கள் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டும் வகையில் ஊர்வலங்கள் நடத்தும் நோக்கத்திற்காக மக்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றனர் என்பதாகும். ஆனால், ஒரு அரசியல் கட்சி வாடகைக்கு அமர்த்துகின்ற மக்களை மற்ற அரசியல் கட்சிகளும் வாடகைக்கு அமர்த்துகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய ஊர்வலங்களுக்குச் செலவிட அரசியல் கட்சிகளிடம் நிதி இருப்பதுதான் இவையனைத்திற்கும் காரணமாக அமைகின்றது. இத்தகைய ஊர்வலங்களில், கட்டுப்பாட்டைப் பின்பற்ற எந்தவொரு அரசியல் கட்சியும் ஒருபோதும் அக்கறை காட்டுவதில்லை. ஊர்வலத்தில் கலந்துகொள்ளுகின்ற ஒருவர் பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தும்போது அந்தச் சொத்து, குறிப்பாக, வரி செலுத்தும் ஏழை மக்களுக்குச் சொந்தமானது என்று உணர்ந்து கொள்வதே இல்லை.

நாம் 21ஆம் நூற்றாண்டில் நுழைந்துள்ளதால், வலிமையைக் காட்டும் இந்த அரசியல் குழப்ப நிலை கைவிடப்படவேண்டும். எல்லோருடைய விடிவுக்காகவும், ஒரு புதிய உயரிய நாகரிக அமைப்பு உருவாக வேண்டும். எந்தவொரு மக்கள் நல அரசும் இத்தகைய ஊர்வலங்களைத் தடை செய்யப் பொருத்தமான சட்டங்களை இயற்ற விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆழ்ந்து கருதிப் பார்க்க வேண்டும். இதற்கான காரணத்தைத் தேடிக் கண்டறிய வேண்டியதில்லை. அமைதியே உருவான பொது மக்களும், அவர்களின் மனித உரிமைகளும் முற்றிலுமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பொது மக்கள் எப்போதும் அமைதியாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்க இயலாது.

* உங்கள் (கருணாநிதி) ஆட்சி குறித்து உங்கள் மனதை உற்று பாருங்கள் அதுவே உங்களை சுட்டு விடும்.

தேவேந்திரர்களே நேற்று 17 பேர் மூழ்கடிக்கப்பட்ட தாமிரபரணி படுகொலை இன்று இ.கோட்டைப்பட்டி துப்பாக்கிச் சூடு ..நாளை ????????


எங்கள் இனம்...! எங்கள் சனம்...!
'மானம்' இழக்கவில்லை...!!!
'ஈரம்' இழக்கவில்லை...!!!
'வீரமும்' இழக்கவில்லை...!!!
"நம்பிக்கை முனை"
நமக்கும் தெரிகிறது...
Share this article :

+ comments + 2 comments

24 July 2009 at 01:07

That (Nathiyin Marana kaalaththil) time we have a lot of leaders(JP,KK,Pasupathi...) to guide our society. Now....?
What about today status? If any one of the Incident against us whom will lead to Unite us?

Think and form a good relationship among us....
Karpi.... Ontru saer... Puratchi sei.

24 July 2009 at 19:56

கற்பி!!!
ஒன்றுசேர்!!!
புரட்சிசெய்!!!

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்