Home » » "தாலியறுத்த போலீஸ்! வேடிக்கை பார்த்த நீதிமன்றம்!"

"தாலியறுத்த போலீஸ்! வேடிக்கை பார்த்த நீதிமன்றம்!"

Written By DevendraKural on Monday, 8 December 2008 | 04:20


வனிதா அப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘‘புருஷனே இல்ல! அவரு கட்ன தாலி மட்டும் எதுக்கு?’’ -ஆவேசமாய் கேட்டபடி ‘படக்’கென்று தாலியை அறுத்து நீதிமன்றத்தில் எறிந்தார். நீதிபதிகள் வாயடைத்துப் போயினர். வழிந்த கண்ணீருடன் அங்கிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து, ‘‘நீங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. எம் பொண்ணுங்க பாவம் உங்களைச் சும்மா விடாது. நாசமாப் போய்டுவீங்க’’ கையை விரித்து மண்னை வாரி இறைப்பதுபோல் வனிதா விட்ட சாபத்தால் கோர்ட்டே நிலை குலைந்தது.

கோர்ட் கலைந்ததும் அங்கேயிருந்த மனுநீதிச் சோழன் சிலையருகே செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தார் வனிதா. கையில் மூன்று குழந்தைகள். பட்டினிக் கொடுமை, மூன்று குழந்தைகளின் முகத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்தது. மூத்தவள் வர்ஷாவுக்கு ‘வயது ஐந்து’ என்றாலும் அதற்கான வளர்ச்சி இல்லை. மொட்டை அடிக்கப்பட்டிருந்த லாவன்யாவுக்கும் ஹேமாவதிக்கும் முறையே மூன்று, இரண்டு வயதுகள். ஊட்டச்சத்து இல்லாமல் அக்குழந்தைகளின் தலை, கொஞ்சம் பெரிசாக இருந்தது. இன்று அவர்கள் யாருமற்ற அநாதைகள்.

ஏன்?

‘‘அத்தனைக்கும் காரணம் ரெண்டு போலீஸ்காரங்கதான்’’ என்கிறார் வனிதா. அழுது வற்றிய கண்களுடன் தன் சோகத்தை இங்கே விவரிக்கிறார்.

‘‘எங்க ஊட்டுக்காரர் பேரு சத்தியசீலன். நாங்க ஏழுமகளூர்ல குடியிருந்தோம். அது நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவுல இருக்கு. போன வருஷம் ஜூன் மாசம். வேலைக்கு போய்ட்டு சாயங்காலம் டீக்கடைல உக்காந்திருந்தவரை, கூட வேலை பாத்தவங்க சாராய பாக்கெட் வாங்கியாரச் சொல்லியிருக்காங்க. அவரு கிளம்பிப் போனதும், ஆல்பா டீம்(சாராய தடுப்புப் பிரிவு) எஸ்.ஐ நாகராஜூம், பெரம்பூர்(நாகை) ஏட்டு உத்திராபதியும் மஃப்டில டீக்கடை பக்கமா வந்திருக்காங்க. இவரு சாராயம் வாங்கிட்டு திரும்பி வரும்போது போலீஸ்காரங்க பிடிச்சிருக்காங்க.

டீக்கடை வாசல்ல எஸ்.ஐயும் ஏட்டும், எங்க ஊட்டுக்காரர் வேட்டியை உருவிட்டு வெறும் ஜட்டியோட, நடு... ரோட்ல மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சிருக்காங்க. கீழே விழுந்தவரை நெஞ்சிலயும், மாருலயும் எட்டி உதைச்சிருக்காங்க. அவர் மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. அதைப்பாத்துட்டு, ‘என்னமா நடிக்கிறாம் பாரு?’ன்னு சொல்லிக்கிட்டே தண்ணியை மொண்டு அவர் மேல ஊத்தியிருக்காங்க. கண் முழிச்சுப் பாத்தவரை முடியைப் பிடிச்சுத் தூக்கி, ‘வேலங்குடியில சாராயம் விக்கிறவன் யாரு? வந்து ஆளைக்காட்டு’ன்னு சொல்லி டூவீலர்ல கூட்டிட்டுப் போயிருக்காங்க. இதையெல்லாம் வேடிக்கைப் பாத்த ஜனங்க எங்கிட்டச் சொன்னதும், நான் பெரம்பூர் ஸ்டேஷனுக்கு ஓடினேன்.

அப்போ, ‘இது நம்ம போலீஸ் இல்லை. ஆல்பா எஸ்.ஐ’ன்னு போலீஸ்காரங்க ரகசியமா பேசிக்கிட்டாங்க. பிறகு என்னைக் கூப்பிட்டு, ‘இந்தாம்மா எல்லா எடத்துலயும் பாத்துக்க. உன் புருஷன் எங்க ஸ்டேஷன்ல இல்லை’ன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே ஸ்டேஷன்ல எங்க வீட்டுக்காரர் இல்லை.
‘போலீஸ் அடிச்சதால, அசிங்கப்பட்டுகிட்டு எங்கயாவது ஓடிப்போயிருப்பான். நீ வீட்டுக்குப் போ’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

ரெண்டு நாளாகியும் புருஷன் வீட்டுக்குத் திரும்பலை. உடனே ‘அவரைக் கண்டுபிடிச்சிக் குடுங்க’ன்னு போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்தேன். ‘எடுத்துக்க மாட்டோம்’னு சொல்லிட்டாங்க.

அப்பதான் ஆர்.டி.ஓ.கிட்ட கம்ளென்ட் கொடுத்தோம். அவங்க, ‘சத்தியசீலன் உயிரோடதான் இருக்கார். பணம் புடுங்கறதுக்காக இந்தம்மா டிராமா போடுறாங்க’ன்னு எம்மேலயே புகார் சொன்னாங்க. பிறகு ‘போலீஸ் உண்மையை மறைக்குது’ன்னு சி.பி.ஐ விசாரனை கேட்டோம். விஷயம் பெரிசானதும் எஸ்.ஐ., ஏட்டு ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.

யாரை சஸ்பென்ட் பண்ணி என்ன ஆவப்போகுது? என் புருஷன் உயிரோட வரணுமே! ‘இனி போலீஸை நம்பி பிரயோஜனமில்லை’ன்னு இதே ஐகோர்ட்ல போன செப்டம்பர் மாசம் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டோம். நீதிபதி அதை படிச்சிப் பாத்துட்டு, ‘இந்தக் கேஸை டி.எஸ்.பி. விசாரிக்கணும்’னு சொல்லி உத்தரவு போட்டார். ஆனா, டி.எஸ்.பி. விசாரிக்கவே இல்லை.

‘எம்புருஷன் இன்னைக்கு வருவார், நாளைக்கு வருவார்’ணு எத்தனை நாளைக்கு காத்திருப்பது? அவரைக் கண்டு பிடிச்சிக் கொடுக்கலைன்னா இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்னு எஸ்.பி. ஆஃபீஸ்லயே தர்ணா பண்ணி உக்காந்துட்டேன். எம் புருஷனை கண்டுபுடிச்சிக் குடுக்காத போலீஸ்காரங்க, ‘நான் ரகளை பண்றேன்’னு சொல்லி என்னை ஜெயில்ல போட்டுட்டாங்க. குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசில்லாத நான், ஜாமீன்ல வர்றதுக்கு பட்டக் கஷ்டம் இருக்கே...’’ அதற்கு மேல் பேச முடியாமல் ‘ஓ...’ வென்று சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டார் வனிதா.

வனிதா அழுவதைக் கேட்டு குழந்தைகளும் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டனர். கோர்ட்டுக்கு வந்திருந்த சில பெண்கள்தான் வனிதாவைத் தேற்றி ஆறுதல்படுத்தினர். இந்த களேபரத்துக்கிடையில், நான்கு தயிர் சாதப் பொட்டலங்களைக் கையில் ஏந்தியபடி அங்கே வந்தார் வழக்கறிஞர் ரஜினிகாந்த். சாதத்தை வனிதா மற்றும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தவரைக் கூப்பிட்டுப் பேசினேன்.

‘‘சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அப்பாவிகளைக் கொடுமைப்படுத்துவதே சில போலீஸ்காரர்களுக்கு கடமையாய் இருக்கிறது. சாராயம் விற்றவனை விட்டுவிட்டு, வாங்கிவந்தவனை பிடித்துச் சென்றுள்ளனர். சரி, பிடித்தார்களே வழக்குப் பதிவு செய்தார்களா? என்றால், அதுவும் இல்லை. கணவனை கண்டுபிடித்துத் தரச்சொல்லி வனிதா கொடுத்த புகாரை பதிவு செய்யாத காவல்துறை, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எஸ்.ஐ. நாகராஜிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு ‘சத்தியசீலன், டூவீலரில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டதாக’ எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் வனிதாவின் ஆட்கொணர்வு மனு விசாரனைக்கு வந்தபோது, ‘சத்தியசீலன் தப்பியோடிவிட்டதாக’ வாய்வழி வாக்குமூலம் அளித்த நாகராஜும் உத்திராபதியும், எழுத்து மூலம் அளித்த பதில் மனுவில், ‘சத்தியசீலனை ஊர் முக்கியஸ்தர்களிடம் ஒப்படைத்ததாக’ முன்னுக்குப் பின்னாய் உளரிச் சென்றுள்ளனர். விசாரனை அதிகாரியான டி.எஸ்.பி.யும் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. மாறாக கணவனை இழந்து தவிக்கும் அபலைப் பெண்ணை சிறையில் அடைத்திருக்கிறார்.

இப்போது சத்தியசீலன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? அநாதையாக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு யார் பொறுப்பு? என்பதுதான் கேள்வி. ‘போலீஸார் அடித்ததில் படக்கூடாத இடங்களில் பட்டு சத்தியசீலன் இறந்திருக்கக்கூடும். அவரை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட்டு, ஓடிப்போய்விட்டதாக நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே வனிதாவுக்கும் அவரது மூன்று குழந்தைகளுக்கும் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம்’’ என்றார் எரிச்சலுடன்.

செப்டம்பர் 29&ம் தேதி நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பெரியகருப்பையா ஆகியோர் முன்பு விசாரனைக்கு வந்த இவ்வழக்கின்போது, டி.எஸ்.பி.யின் அறிக்கை திருப்தியளிக்கவில்லை என்று கூறியவர்கள், சத்தியசீலன் குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 15&ம் தேதி நீதிபதிகள் எலிட் தர்மாராவ், தமிழ்வாணன் ஆகியோர் முன்பு மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே உத்தரவிட்டபடி சத்தியசீலனை போலீஸார் ஒப்படைக்காததால் இப்போது டி.ஜி.பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

‘‘மனித உரிமைகளை மீறக்கூடாது’’ என்று நீதிமன்றங்கள் காது கிழிய கத்தினாலும், போலீஸார் அதைக் கேட்பதில்லை. அப்பாவிகளை அவர்கள் அடிக்கிறார்கள், அடிக்கிறார்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
விடைபெறும் வேளையில் வனிதா நம்மிடம் கேட்கிறார். ‘‘அண்ணே... எங்க வீட்டுக்காரர் உயிரோட வந்துடுவாரா? குழந்தைங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்னே! ‘பசிக்குதுமா...!’ன்னு வயித்தைப் புடிச்சிக்கிட்டு புள்ளைங்க துடிக்கிறப்போ, ‘மூணுத்தையும் கொண்ணுட்டு தற்கொலை பண்ணிக்கலாமா!’ன்னு தோணுது.’’

- காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் தெரியணுமே!
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்