Home » » காங்கிரசைவிட்டு தன்மானத் தமிழர்களே வெளியேறுங்கள்!

காங்கிரசைவிட்டு தன்மானத் தமிழர்களே வெளியேறுங்கள்!

Written By DevendraKural on Monday, 9 February 2009 | 21:01


காந்தியும் காமராசரும் பெரியாரும் பங்கெடுத்த ஒரு மாபெரும் இயக்கம் பேராயக்கட்சி (காங்கிரசுக் கட்சி)! வெள்ளையருக்கு எதிரான இந்திய தேசிய இயக்கத்தில் பேராயக் கட்சியின் பங்களிப்பு, ஈகம் அளப்பரியது! ஆனால் இந்தியத் துணைக்கண்டம் விடுதலை பெற்று வெள்ளையர் வெளியேறியபோது, இந்தப் பேராயப் பேரியக்கதின் போக்கு கண்டு வெகுண்டெழுந்தவர்களும் வெளியேறியவர்களும் சகித்துக் கொண்டு காலம் தள்ளுபவர்களும் ஏராளம், ஏராளம்! காந்தியடிகளே வெந்து நொந்து சொன்னார், “காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும்” என்று!
இன்றைக்கு மணிசங்கர ஐயர்வாளுக்கு செருப்படியும் கல்வீச்சும், தங்கபாலுவின் ஓராயிரம் உருவப்பொம்மைகளை மக்கள் ஆங்காங்கே எரிப்பதும், காங்கிரசுக் கொடிக் கம்பங்களை வீழ்த்துவதும் அன்றாட நடைமுறையாகி விட்டது. காங்கிரஸ் தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. மொத்தத் தமிழர்களின் எதிர்ப்பை வகை தொகையில்லாமல் சம்பாதித்துவிட்டது.

காங்கிரசுத் தொண்டரான தியாகி இரவிச்சந்திரன் தீக்குளித்து, உயிரை ஈகம் செய்து காங்கிரசுக் கட்சி செய்யும் துரோகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்.

தனிநபர்களின் தன்நலத்திற்காகவும் ஒரு சிலரின் பதவிப் பற்றிற்காகவும் ஈகிகள் சிந்திய ரத்தமும் வியர்வையும் அன்றிலிருந்து இன்றுவரை மதிப்பிழந்து போனதுதான் உண்மை.

வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் இந்தியா ஒரு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை மறுத்து தேசிய இனங்களின் கொட்டடியாகவே இதை மாற்றிவிட்டனர்.

காசுமீரத்தின் வரலாற்றை நாம் ஒரு முறை வாசித்துப் பார்தாலேயே இது புரியும். அவர்கள் பாக்கிசுத்தானுடனோ இந்தியாவுடனோ இணைய விரும்பாது தனியொரு நாடாகவே இருக்க விரும்பினார்கள்.

ஆனால், நேருவோ காசுமீரத்துக்காரர்! காசுமீர் போய்விட்டால் நேரு எப்படி தலைமையமைச்சராக இயலும்? நேருவிற்குப் பின் நேருவின் குடும்பத்தாரின் கொற்றமே கோலோச்சியது.. இன்றைக்கு பேராயப் பேரியக்கத்தையே எப்படி மாற்றிவிட்டார்கள் என்றால், பிரியங்காவிற்குக் குழந்தை பிறந்துவிட்டதா? என்று ஏங்கித் தவிக்கும் ஒரு மட்டமான கொத்தடிமைக் கூட்டமாகவே அதை மாற்றிவிட்டார்கள். காசுமீர விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க இன்று கோடிக்கணக்கான பணத்தை நாள்தோறும் கொட்டி நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பெரியதொரு முட்டுக்கட்டையை நாம் போட்டு வைத்துள்ளோம்!
இந்திராகாந்தி!

பின்னர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் நாட்டின் தலைமையமைச்சர் ஆனார். அவருக்கு முன்பாக திரு. இலால் பகதூர் சாஸ்த்திரி அவர்கள் சில மாதங்கள் தலைமையமைச்சராக இருந்தார். மிக எளிமையானவர். அவருடைய மரணம் குறித்து இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இருக்கின்றன. தாஷ்கண்ட் சென்ற அவர் எப்படி மரணத்தைச் சந்தித்தார்? என்பது குறித்து இன்னும் குழப்பம் நிலவுகிறது. பின்னர் நடந்த நகர்வாலாப் படுகொலை! தேர்தல் செலவுகளுக்காக பணம் சேர்க்கும் இழிபோக்கிற்கு போட்ட பிள்ளையார் சுழி அது. திருமதி இந்திரா காந்தி அவர்களின் மரணத்தையொட்டி தில்லியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடந்த சீக்கியர் படுகொலை, கொள்ளை, கற்பழிப்புகள் இந்தப் பேரியக்கம் எப்படி ஓர் உதிரி நிலைக்கு உருமாறியிருக்கிறது என்பதை மெய்ப்பித்தது! மத்திய அமைச்சராகயிருந்த செகதீசு டைட்லர் போன்ற காங்கிரசுத் தலைவர்கள் நடுத்தெருவில் நின்றுகொண்டு அப்பாவிச் சீக்கியர்களை கொன்றொழித்த கொடுமைகளுக்கு வழிநடத்தினார்கள் என்ற உண்மை உள்ளத்தை உலுக்குகிறது. குசராத் படுகொலைகள், ஒரிசாப் படுகொலைகள் என்று சங்கப்பரிவார அமைப்புகளின் படுபாதகச் செயல்களைக் குறித்து நாம் ஒப்பாரி வைக்கிறோம். பேராயப் பேரியக்கம் எந்த வகையிலாவது இதிலிருந்து மாறுபட்டதா? என்று சிந்தியுங்களேன்.

இந்திராகாந்தி அவர்கள் இருக்கும்போதே அவருடைய சின்ன மகன் சஞ்சய் காந்தி அவர் விருப்பம்போல நடந்துகொண்டார். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு போன்ற குதர்க்கமான செயற்பாடுகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு காட்டுத் தர்பாரே நடத்தினார். அவரும் ஐயத்திற்கிடமான விதத்தில்தான் ஒரு வானூர்தி நேர்ச்சியில் காலமானார். அதிலும் சந்திராசாமியின் தொடர்பு என்ன? என்பது அவிழ்க்க முடியாத முடிச்சாகவே இன்னும் இருக்கிறது.

இராசீவ் காந்தி
பின்னர் இராசீவ் காந்தி வந்தார். “இழுத்து வரப்பட்டார்!” என்றே வைத்துக் கொள்ளுங்கள். இத்தாலியப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டவர். நாட்டின் பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட பீரங்கிப் பேர ஊழலில் கோடிக்கணக்கான இந்தியர்களின் வரிப்பணம் குவத்ரோச்சி என்கிற இத்தாலியரின் கைகளில் விழுந்துவிட்டதற்கும் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று ஒரு நடுநலைமைவாதியாக நின்று சிந்தியுங்களேன்.

தமிழர்களும் பேராயக்கட்சியும்
அந்தக் காலத்திலிருந்து இந்தக்காலம் வரை வடவர்களுக்குக் குற்றேவல் செய்யும் ஓர் அமைப்பாகவே தமிழகப் பேராயக்கட்சி இருந்திருக்கிறது. காமராசரைக் கிங்மேக்கர் என்று சொன்னார்களே தவிர கிங் ஆக்கவில்லை. மூப்பனாருக்கும் வாய்ப்பு வந்தது. அதுவும் தேவகவுடாவிற்கு தாரை வார்க்கப்பட்டதே தவிர தமிழர் ஒருவரை வரவிடக்கூடாது என்பதில் (கருணாநிதி உட்பட) தமிழரல்லாதவர்கள் அனைவரும் கவனமாகவே இருந்தார்கள்.

திரு. இராசீவ் காந்தி அவர்கள் இலங்கைக்கு இந்திப் படைகளை அனுப்பி அங்கு ஏறத்தாழ பத்தாயிரம் தமிழர்களைப் படுகொலை செய்ததை நாம் எந்த வகையிலாவது ஞாயப்படுத்துகிறோமா? அந்த அமைதிப் படைகள் 31 மாதங்கள் அங்கு அட்டகாசம் செய்துவிட்டுத் தலை குனிந்து இந்தியா திரும்பியபோது இன்றைய முதல்வரான கருணாநிதி அன்றைக்கும் முதல்வராக இருந்தார். படைகள் சென்னை வந்திறங்கியபோது அவர்களை வரவேற்க மறுத்துவிட்டார்! எவ்வளவுதான் நாம் மூடி மறைத்தாலும், அடக்கி அமுக்கினாலும் உண்மைகள் சாகாது என்பதற்குத் தமிழீழமும் தமிழகமும் இன்று கிளர்ந்தெழுவதிலிருந்தே தெரிகிறது.

இராசீவ் காந்தி அவர்களின் கொலையை நாம் ஞாயப்படுத்தவில்லை! ஆனால், ஓர் உண்மைக் காங்கிரசுத் தொண்டனாகச் சிந்தியுங்கள். அவரது படுகொலை குறித்து இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கின்றன. பல ஊடகங்களும், தலைவர்களும் நாயாய் பேயாய் கத்தினாலும் அந்த உண்மைகள் குறித்து ஆய்ந்தறிய யாரும் முன்வராதது ஏன்?

அவிழாத முடிச்சுகள்!
1. கொலையில் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி, நரசிம்மராவு போன்றவர்களின் தொடர்பு என்ன?
2. ஒற்றைக்கண் சிவராசனின் தாயார் ஒரு சிங்களவர் என்பதும் கொலையில் ஈடுபட்டவர்கள் புலிகள் இயக்கத்திலிருந்து விலகியவர்கள் என்பதும் உண்மையில்லையா? ஏற்கெனவே ஒரு சிங்கள படைவீரன் துப்பாக்கியால் அடித்து இராசீவைக் கொலை செய்ய முயன்றது உங்களுக்குத் தெரியாதா? அவன் இன்று சிங்கள இனவெறிக் கட்சி ஒன்று நடத்திக் கொண்டிருக்கிறான் என்பது உண்மையில்லையா?
3. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் தவறான புரிதலின் அடிப்படையில், தான் தவறான முடிவு எடுத்துவிட்டதாகவும் அதை தான் பதவியேற்றதும் சரி செய்வதாகவும் மறைந்த புலிகளின் தலைவர் கிட்டு வழியாக பிரபாகரனுக்குச் செய்தி அனுப்பிய திரு. இராசீவை புலிகள் கொலை செய்து மாபெரும் எதிர்ப்பைச் சந்தித்திருப்பார்களா?
4. சிரிபெரும்பத்தூர் நிகழ்ச்சி நிரல் மாற்றி அமைக்கப்பட்டது முதல் சம்பவம் நடந்த இடத்திலிருந்து காங்கிரசுத் தலைவர்கள் விலகிக் கொண்டதும், எந்த ஒரு காங்கிரசுத் தலைவரும் அதில் சாகவில்லை போன்ற செய்திகளெல்லாம் நமக்குச் சொல்வது என்ன?
அதே வேளையில் இராசீவ் கொலையாளிகள் காங்கிரசுத் தலைவர் மரகதம் சந்திரசேகர் வீட்டில் தங்கியிருந்ததும் உண்மையில்லையா?
5. இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகள் விடை காணமுடியாமல் தத்தளிக்கும் நேரத்தில் ஓர் அவசியமான வினாவையும் நாம் எழுப்புவது நல்லது. கொலையின் மூலம் ஆதாயம் அடைந்தது யார்? இழப்புகளை சந்தித்தது யார்? பதவியும் ஆட்சியும் யாருக்குக் கிடைத்தது? தடையும் பின்னடைவும் யாருக்கு ஏற்பட்டது? இதையெல்லாம் கணக்குப் போடாமலா காய்கள் நகர்த்தப்பட்டன?
இன்றைக்கு ஒட்டு மொத்தத் தமிழினமும் ஈழத்தில் நடக்கும் போராட்டத்திற்குப் பின்னணியில் திரண்டு நிற்கிறது. ஆனால், காங்கிரசுக் கட்சி, தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமை ஆகியனவே இன்று எதிர்ப்பாகவும் இரண்டகம் செய்து கொண்டும் குறுக்குச்சால் ஓட்டிக்கொண்டும் நிற்கின்றன. இந்த எதிர்ப்பிற்கும் இரண்டகத்திற்கும் புலிகளைக் காரணம் காட்டுகின்றனர். தன்னுடைய போராளிகளில் 25000 பேரின் உயிரை ஈகம் செய்தவர்களை வன்முறையாளர்கள் என்று அறிவித்துக் கொண்டு ஒரு இலக்கம் அப்பாவித் தமிழர்களைக் காவு கொண்ட சிங்களப்படைகளோடு இந்தியா கொஞ்சிக் குலவி நம் வரிப்பணத்தில் ஆயுதங்கள் கொடுக்கிறது. எந்த ஊர் ஞாயம் இது?

ஈழப் போராட்டம் வெறும் ஈழத் தமிழரின் போராட்டம் என்றோ அல்லது விடுதலைப் புலிகளின் போராட்டம் என்றோ குறுக்கிப் பார்த்த மடமை என்றோ ஒழிந்து விட்டது. தமிழர் என்கிற மூத்த இனத்திற்கு உலகெங்கும் அடி, உதை, புறக்கணிப்பு என்று பன்னெடுங்காலமாகவே நடந்து வருகிறது.

பர்மாவிலிருந்து விரட்டப்பட்டோம். மலேசியாவில் இன்றும் அடி உதை படுகிறோம். சிங்கப்பூரில் அடக்குமுறைகளைச் சந்திக்கிறோம், கர்நாடகத்தில் கொல்லப்பட்டோம், விரட்டப்பட்டோம், மணிப்பூரிலிருந்து விரட்டப்பட்டோம், மும்பையிலிருந்து விரட்டப்பட்டோம், தமிழகத்திற்குள்ளும் ஆட்சியிழந்து அடிமையினமாக இருக்கிறோம், ஈழத்திலும் இலங்கையிலும் கடுமையான சிகல்களை 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சந்தித்து வருகிறோம்.

சிங்களர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திய கொடுமைகளையும் கொலைகளையும் யாரும் அறயாதிருக்கமாட்டீர்கள். ஒரு லட்சம் தமிழர்களை படுபயங்கரமாக அவர்கள் கொன்றொழித்திருக்கிறார்கள், கற்பழித்திருக்கிறார்கள், கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி நாடு நகரங்களைத் தரை மட்டமாக்கியிருக்கிறார்கள். நோயாளிகளைக் கொல்கிறார்கள், குழந்தைகளைக் கொல்கிறார்கள்! மறுபுறத்தில் இராணுவத்தோடும் துரோகக் கும்பல்களோடும் மட்டுமே விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள். யார் வன்முறையாளர்கள்? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தந்தை செல்வா போன்றவர்கள் அறவழியில்தான் போராடினார்கள். ஆனாலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நசுக்குதலும் கொலைகளும் இன அழிப்பும்தான் தமிழர்களுக்குப் பரிசாகக் கிடைத்தது. உலகிலுள்ள மற்ற தமிழர்கள் அடக்குமுறையைச் சந்தித்தபோது அடங்கிப் போனார்கள். ஈழத் தமிழர் மட்டும் 25 ஆண்டுகள் பொறுமை காத்த பிறகு திருப்பி அடிக்கத் தொடங்கினார்கள், தனி நாடு கேட்டார்கள். அவர்கள் பிழைக்கப் போனவர்கள் இல்லையே! வந்தாரை வாழ வைத்தார்கள். சிங்களர்களை வரவேற்று வாழ விட்டதும், ஆள விட்டதும் தமிழர்கள்தானே! அவர்களுக்கென்று நாடு இருந்ததே! அதை இழந்த பின்னரும் குடியாட்சியை மதித்து அமைதியாத்தானே வாழ்ந்தார்கள்! காட்டாட்சி கட்டவிழ்த்துவிடப்பட்ட பிறகே அவர்கள் போரிடத் தள்ளப்பட்டார்கள். இழந்த அவர்களுடைய சொந்த நாட்டை அவர்கள் மீட்டு எடுக்க முயல்வது தவறா? யூதர்களும் பாலத்தீனியரும் வங்காளிகளும் தத்தமது நாட்டை மீட்டெடுத்தது சரி என்றால் ஈழத் தமிழரின் தனி நாட்டுப் போராட்டம் மட்டும் எப்படித் தவறாகும்? ஏன் தில்லிக்குக் கசக்கிறது?

நாம் இந்திய நாட்டுக்குள் இருந்தாலும் பல தேசிய இனங்களாக இருக்கிறோம். காவிரிப் பிரச்சனை என்று வந்துவிட்டால் நாடு, கட்சி, சாதி என்று எதையும் பாராமல் கன்னடர்கள் கன்னடர்களாத்தானே நிற்கிறார்கள். தமிழகத்திற்குக் காவிரியின் மீது என்ன உரிமை இருந்தாலும் அவர்கள் கிஞ்சித்தும் அவைகளை நினைப்பதில்லை, மதிப்பதில்லை என்பதைப் பார்க்கிறீர்களா?

மலையாளிகளைப் பாருங்கள். தமிழ்நாட்டோடு ஒரு பிரச்சினை என்றால் கட்சித் திரைகளைக் கழற்றிவிட்டு மலையாளியாக ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

மராத்தியத்தில் அவர்களின் தேசிய உணர்வைப் பாருங்கள்! தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்கு. 1956ல் தேவிகுளம் பீர்மேட்டை நாம் கேரளாவிடம் இழந்தபோது, காமராசர்கூட, “மேடு போனால் என்ன? பள்ளம் வந்தால் என்ன? எல்லாம் இந்தியாவிற்குள்தானே இருக்கிறது” என்று விரிந்த மனதோடு பேசினார். இன்றும் காங்கிரசாரில் பலர் அப்படியே இருக்கிறார்கள். வடவர்களும் வங்காளிகளும் இதை நல்ல இளிச்சவாய்த்தனம் என்றே நினைக்கிறார்கள். தில்லியை ஆளும் பிராமணர்களுக்கு இந்தியா என்கிற கொட்டடி வேண்டும். மக்களுக்குத் தேசிய ஓர்மை வந்துவிடக்கூடாது என்று கருதுகிறார்கள். காரணம், அது நேர்ந்தால் அவர்கள் தலையில் அது இடியாய் இறங்கிவிடும். தேசியங்கள் முதன்மைப்பட்டுவிட்டால் பிராமணனைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இத் துணைக்கண்டத்தில் மண்ணுரிமை இருக்கும். அவர்களுக்கு இருக்காது. இதுதான் அவர்களை வாட்டும் நெருப்பு. இதை அறியாது இன்று பலிக்கடா ஆக்கப்பட்டிருப்பவர்கள் அப்பாவித் தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தொண்டர்கள்.

காவிரி பாயும் டெல்டா பகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு மணிசங்கர ஐயர்வாள்! 1999ல் சென்னையில் ஒரு கூட்டத்தில் காவிரி பற்றி தமிழ்நாட்டு ஞாயங்களை அழுத்தமாகப் பேசினார். உடனே, இதையே நாடாளுமன்றத்தில் பேசுங்கள் என்று சொன்னபோது, “நான் காங்கிரசுக்காரன், கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி நடக்கிறது. நான் எப்படி பேச முடியும்? அ.தி.மு.க.வினரைப் பேசச் சொல்லுங்கள்!” என்று சொல்லிக் கைகழுவி விட்டார். ஆக, இவர்களைப் போன்ற தலைவர்களுக்கு பதவிக்காக வாக்கு தேடும்போதுமட்டும் தமிழ்நாடு வேண்டும், தமிழர்கள் வேண்டும்! பின்னர் இந்தி தேசியப் பிறங்கடைகளாக மாறிவிடுவார்கள். ஆனால், கர்நாடகக் காங்கிரசோ, கேரளக் காங்கிரசோ, ஆந்திரக் காங்கிரசோ இப்படியா நடக்கிறது? தமிழ்நாடு காங்கிரசு மட்டும் அடிமைக் காங்கிரசாக ஆக்கப்பட்டு கிடக்கிறது! அடக்கித்தான் வாசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது! தமிழர்களாக இருந்தாலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவியாலா நிலைக்கு அவர்கள் குரல் நெரிக்கப்படுகிறது! வேறு வழியின்றி ஈகி இரவிச்சந்திரன் போன்றவர்கள் உயிரை மாய்க்கும் அளவிற்குப் போயிருக்கிறது!

தமிழ்நாட்டுக் காங்கிரசாரை தில்லிக் காங்கிரசார் முற்றாகக் கைகழுவி விட்டார்கள். இதை இப்போதாவது தமிழக காங்கிரசார் உணர்ந்து கொண்டு தங்கள் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுகிறோம். காமராசர், மூப்பனார் போன்றவர்களின் காலத்தில் தமிழக காங்கிரசாரை தில்லி புறக்கணித்தது என்பது ஒரு விதம். காரணம், அப்போதும்கூட தில்லி நினைத்தது, “தமிழகத்தில் காங்கிரசு உயிர்த்தெழ ஒரு வாய்ப்பிருக்கலாம்” என்று! ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க., ச.ம.க., போன்ற கட்சிகள் வந்திருக்கின்றனவே தவிர காங்கிரசு துளிர்த்தெழுவதற்கான வாய்ப்பே இல்லை என்பது புலனாகிவிட்டது. அடுத்து தமிழ்நாடு காங்கிரசுக்குள் இருக்கும் பூசல்களும் பிரிவுகளும் எண்ணற்றவை. அவைகளைச் சரிக்கட்டிக் கொண்டுவருவது என்பது குதிரைக்குக் கொம்பு முளைப்பது போல என்றாகிவிட்டது. இவ்விரு காரணங்களும் தில்லி காங்கிரசுக்குத் தெரியாமல் இருக்குமா?

தமிழ்நாடு காங்கிரசில் இருக்கும் தமிழர்களின் உணர்வைக் குப்பையென நினைத்து தில்லிக் காங்கிரசு அதிலும் குறிப்பாக சோனியா அவர்கள் எடுத்த ஈழ நிலைப்பாட்டின் பின்னணி இதுதான். கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆட்சியேறும் வாய்ப்பு இருப்பதால் கன்னடர்களுக்கு எதிராக தில்லி ஒருக்காலமும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்காது. காவிரிப் பிரச்சனையில் எடுத்திருக்கிறதா? காவிரிக் கலவரம் பற்றி எடுத்திருக்கிறதா? ஆனால், தமிழகத்தில் நம்பிக்கையே இல்லாத நிலையில் முற்றாகக் கை கழுவி விட்டது தில்லிக் காங்கிரசு!

உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழ் மக்களும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த தமிழர்கள் மட்டும் ஏன் விலகி நிற்க வேண்டும்? உள்ளத்தில் கொதிப்பையும் குமுறலையும் அடக்கிக் கொண்டு ஏன் தமிழர்களிடமிருந்து இவர்கள் விலகி நிற்க வேண்டும்? தமிழ்நாட்டு காங்கிரசுத் தலைமைகூட தமிழர்களிடமா இருக்கிறது? ஈ.வி.கே.எசு. இளங்கோவன், தங்கபாலு, சுதர்சனம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஞான தேசிகன், மணிசங்கரஐயர் போன்ற தமிழரல்லாதவர்கள் வைத்ததுதானே அங்கு சட்டமாகயிருக்கிறது! வாசன் எங்கே? குமரி அனந்தன் எங்கே? சிதம்பரம் எங்கே? பீட்டர் அல்போன்சு எங்கே? பதவிகள் சில கொடுத்து வாயடைத்து வைத்திருக்கிறார்கள். கிருஷ்ணசாமியை மொத்தமாக ஓரம் கட்டிவிட்டார்கள்.

தில்லிக் காங்கிரசு தமிழ்நாடு காங்கிரசை குப்பை என்று கருதிவிட்டால் அந்தக் குப்பைக்குள்ளும் வந்தேறிகளின் கொட்டம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.

மானமுள்ள தமிழர்கள் காங்கிரசை விட்டு இன்றே துணிவுடன் விலகுவது தமிழினத்திற்கு நீங்கள் செய்யும் மாபெரும் தொண்டாகும். தமிழர் கட்சிகள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளில் சேருங்கள். மூழ்கும் கப்பலைச் சுற்றி முன்னூறு கப்பல்கள் உங்களை வரவேற்க அணிவகுத்து நிற்க ஏனப்பா நீயும் மூழ்கித்தான் சாக வேண்டுமோ? ஏன், தெலுங்கர்கள் விலகினால்கூட விஜயகாந்து கட்சியில் சேரலாமே!
நாம், நம் இனம், நம் நாடு என்று இணைவோம்!

அப்படித்தானே கன்னடரும், தெலுங்கரும், மலையாளியும் நிற்கிறார்கள்!

ஈனம் அழிப்போம்!
மானம் காப்போம்!
தமிழர்களம்
தமிழர்நாடு
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்