Home » » சார்லஸ் டார்வின்- 200

சார்லஸ் டார்வின்- 200

Written By DevendraKural on Monday, 16 March 2009 | 09:56

சார்லஸ் டார்வின் - அந்த அசாத்தியமான மனிதர் பிறந்து 200 ஆண்டுகள் முடிந்துவிட்டதையொட்டி உலக அளவில் அவருக்கு புகழ்மாலை சூட்டும் நிகழ்ச்சிகள் பிப்ரவரி 12ம் நாள் நடைபெற இருக்கின்றன.

அவரை நியூட்டனுக்கு, ஐன்ஸ்டினுக்கு, கலிலியோவுக்கு ஈடாக புகழ்பாடி உலக விஞ்ஞானிகள் விழா எடுக்க இருக்கிறார்கள்.

டார்வின் கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மனித சிந்தனைக்கு ஒரு பெரும் ஒளியை வீசியது, மதகுருக்களுக்கு மருட்சியை, கோபத்தை உருவாக்கியது. பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பற்றி சனாதனவாதிகள் இரு நூற்றாண்டுகள் ஆன பின்னும் கூட சம்வாதம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆண்டவன் ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் முதன் முதலாகப் படைத்து அவர்கள் மூலம் மனித இனத்தைப் பெருகச் செய்தான் என கிட்டத்தட்ட எல்லா மதங்களும் மூவாயிரம் ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்த, மக்களை நம்ப வைத்துக் கொண்டிருந்த கோட்பாட்டை சார்லஸ் டார்வின் பரிணாம கோட்பாட்டின் மூலம் சுக்கு நூறாக உடைத்துவிட்டார். மனிதனும் மிருக இனத்தைச் சேர்ந்தவன் தான், அவனின் முன்னோர்கள் குரங்குகள்தான், பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து உதித்தவன்தான் மனிதன் என்பதை அரிய விஞ்ஞான ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டியவர். ஆகவே அவரை மத ஸ்தாபனம் ‘நாத்திகர்’ எனப் பட்டம் சூட்டியது. அவர் மீது கடுமையான தூஷணைகள் வீசப்பட்டன. எதற்கும் அவர் அஞ்சவில்லை. ஓயாது ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருந்தார். அவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்தத்தில் பதினெட்டு நூல்களை எழுதித்தள்ளினார். அவர் கடைசியாக 1872 ஆம் ஆண்டு எழுதிய நூல் “மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சி களை வெளியிடும் விதம்“ என்பதாகும். ஆனால் அவர் எழுதிய “ஜீவராசிகளின் மூலம்’’ எனும் நூல் அவருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்த நூல், மிகப் பிரபல்யமாகிவிட்ட நூல். அந்த நூல் ஹிப்ரு, ஸ்பானிஷ், போலிஷ், ஜப்பான், பொஹிமியன் போன்ற பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாயின. அந்த நூல் இங்கிலாந்தில் மட்டும் 5 ஆண்டு காலத்தில் பதினாயிரம் பிரதிகள் வரை விற்பனையாயிற்று என்றால் அதன் மகத்துவத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். 150 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறு இது.

அந்தப் புத்தகம் 1859ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி வெளிவந்தது. அந்த நூலில் டார்வின் பரிணாம வளர்ச்சி இயற்கைத் தேர்வின் மூலம் நடைபெறுவதை பல ஆதாரங்கள் கொடுத்து விளக்குகிறார். எந்த ஒரு ஜீவராசியும் இயற்கைச் சூழலுக்கு ஏற்றாற்போல் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவில்லையென்றால் அவை அழிந்து போகும், அப்படி அழிந்து விட்ட ஜீவராசி கோடானு கோடி! அவையெல்லாம் அப்படி அழியாமல் போயிருந்தால் இந்த பூமியில் அவைகளைக் கொண்டிருக்க இடமே இருந்திருக்காது! குளிர், பனி, மழை, கொடிய வெயில், நீர், நிலம் எங்கெங்கே எந்த ஜீவராசி எந்த புற சூழ்நிலையில் இருக்கிறதோ, அந்தச் சூழலை ஏற்று அவை வாழ தங்களைத் தயாரித்துக் கொள்ள பலம் தேவை, மாற்றிக் கொள்ள முயற்சி தேவை! இல்லாது போனால் அழிவுதான் மிச்சம்.

அதோடு ஜீவராசிகள் ஒன்றுக்கொன்று போராடி எவை வெற்றி பெறுகிறதோ அது நிலைக்கும், பலவீனமானவை அழியும். அதாவது இயற்கை தேர்வில் பால் உறவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கே இன விருத்தி செய்வதற்கான ஒரு தேர்வு முறை நடக்கிறது! தேவையான துணைகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் ஆண்களுக்கிடையே பெரும்பாலும் போட்டியும், போராட்டமும் நடக்கிறது. அதில் வெற்றி பெறும் ஆண் தன் துணையை - பெண்ணை தேடிக் கொள்கிறது, தன்னைப் போன்ற வலுவான வாரிசை உருவாக்க முடிகிறது, தோல்வியுறும் ஆண் தன் இனத்தை விருத்தி செய்யாமல் பின் தங்கி விடுகிறது.

ஆக டார்வின் பரிணாம கோட்பாடு கீழ்வரும் மூன்று அம்சங்களைக் கொண்டது.

1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)

2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல்)

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை ‘நவீன டார்வினியம்’ என்கிறார்கள். இதன் விளக்கம் என்பது, ஜீவ போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் (குணம், உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது தான்.

“வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது“ என்கிற இவரின் தத்துவத்தை சில அறிவு ஜீவிகள் அவர் காலத்திலேயே கிண்டல் செய்தார்கள்.

வர்க்க சமுதாயத்தில், திறமை உள்ளவன் வளமாக மூலதனத்துக்குச் சொந்தக் காரனாக வாழ்கிறான், வக்கற்றவன் வறுமையில் வீழ்கிறான் - இதுவும் இயற்கை தேர்வுக்கு உட்பட்டது தானே என்று கேட்டார்கள்?. மனிதனின் செயற்கை ஏற்பட்டால் ஏற்றப்பட்ட இந்த ஏற்றத் தாழ்வை இப்படி வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் பாவப்பட்ட மக்களுக்காக எப்போதும் பரிதாபப்படும் குணம் கொண்டவர் டார்வின். அவரின் கப்பல் பயணத்தில் தென்அமெரிக்கா சென்ற போது, அக் காலக்கட்டத்தில் அங்கு நடைபெற்ற ஏழை மக்கள் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு மனம் நொந்து போனார், தன் மனக் கசப்பை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அதேபோல் அவரின் இரண்டாவது புத்தகமான ‘மனித பரம்பரை’ நூல் 1871ம் ஆண்டு வெளியானது. மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக எழுதுகிறார். நம் மூதாதையர் குரங்குகள் தான் என்று சொல்லுவதில் பெருமை அடைகிறார். கீழ் ஜீவராசியிலிருந்து மனிதன் எனும் உயர்ந்த ஜீவராசியை எட்டியதற்கு அடிப்படை பரிணாம வளர்ச்சியே என்கிறார். 25 ஆண்டுகளாக சதா நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டா லும் இதற்கான ஆய்வில் அவர் வெற்றி கண்டார்.

நாம் பார்க்கும் ஒவ்வொரு உயிரினமும் அந்த காலத்தில் ஏதோ ஒரு தோற்றத்திலிருந்து மாறி இப்போதுள்ள தோற்றத்தை அடைந்துள்ளன என்ற முடிவுக்கு வருகிறார். அதே போலத்தான் மனிதனும் கூட இன்றைய நிலையை அடைந்துள்ளான்.

உராங்குட்டன், சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும், ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து, சீர் பெற்று, திருத்த முற்றுத் தோன்றியவனே மனிதன் எனத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.

மனிதன் வலதுகால் அடியெடுத்து வைக்கும் போது அவனுடைய இடதுகை முன்னே செல்லுகிறது. வலது கை முன்னே வீசும் போது இடதுகால் அடி யெடுக்கிறது. குரங்கும் இதே ஸ்டைலில் தான் நடக்கிறது.

எல்லா ஜீவராசிகளும் உருவாவதற்கு முன்பாக நீரும், நிலமும் தழுவிக் கொள் ளும் கரைகளில் முதல் முதலாக உருவெடுத்த மூதாதையின் பெயர், அந்த உருவத்தின் பெயர் “நீர்பாசி“தான். ஜீவராசிக் கெல்லாம் மூலாதாரமாய் விளங்கியதும் அந்த நீர்பாசி தான். அது இன்றைய கொடி, செடி, மரங்களாகவும், மிருகமாகவும், மனித இனமாகவும் பரிணாமம் கொண்டது.

டார்வின் ஐந்தாண்டு காலம் அதாவது 1831ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி எச்.எம்.எஸ். பீகில் என்ற கப்பலில் பயணம் செய்து தென் அமெரிக்கா மற்றும் தென்கடல் பகுதிகளில் ஆராய்ச்சி செய்தார். உயிரியல், நிலஇயல் பற்றி ஆராய்ச்சி செய்தார். தாவரங்கள், பிராணிகள், பறவைகள், பாறைகள் - என அவற்றைப் பற்றி பல விவரங்களைச் சேகரித்தது, அவரின் உச்சகட்ட பரிணாம தத்துவக் கோட்பாட்டுக்கு உதவி புரிந்தது.

அவரின் இந்த வினோதக் கண்டு பிடிப்பு பொருண்மைவாதிகளுக்கு, கடவுள் மறுப்பாளர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு தத்துவ ஆயுதமாகக் கிடைத்தது. ஆனால் டார்வின் நாஸ்திகர் அல்லர். ஆனால் ஆஸ்திகர்கள் அவரை அதிகமாக வெறுத்தார்கள். இது ஒரு வினோதம் தான். கிறிஸ்தவ மதத்தைத் துறந்து விட்டார். அவர் தன்னை அறியொணாமைக் கொள்கையாளர் என்றார். அப்படியானால் அவரின் மதக் கொள்கை தான் என்ன? அவர் மதகுருவாக ஆக மதக் கல்வி படிக்கச் சென்றவர்! ஆனால் மதக் கல்வி பிடிக்காது திரும்பி வந்து விட்டார். கடைசியாக எடின்பரோ பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டமும், கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் பட்டமும் பெற்றார்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சனையில் அவர் ஈடுபட்டதே இல்லை. அப்படி ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றார். மனிதன் பிறப்பது வாழ்வதற்காக, அது தேவை! அவரின் கண்டு பிடிப்பான பரிணாமத் தத்துவத்துக்கும், மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், ஏன் மதம் இதில் மூர்க்கமாகத் தலையிடுகிறது என்பதும் தான் அவரின் உரத்தக் கேள்வி.

கடவுள் நம்பிக்கை மனிதனின் மனதில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. அது மனிதனின் அறிவு வளர வளர உண்டானது, இதை வேறுவகையில் சொல்வதென்றால் மனிதனின் வியப்பும், இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டானது என்றார்.

மனித இன மூதாதையரின் முகவரியை உலகத்துக்குக் காட்டிய முன்னோடி, அறிவு ஒளி 1882 ஏப்ரல் 19ம் தேதி அடங்கிப் போனார்.

லண்டனில் விஞ்ஞானிகளின் கார்னர் என்று சொல்லப்படும் இடத்தில் உள்ள இடுகாட்டில் விஞ்ஞானிகள் புதைக்கப்படும் வெஸ்ட் மினிஸ்டர் அப்பீ எனும் இடத்தில் நியூட்டனின் கல்லறைக்கு சில அடிகள் தள்ளியும், வானஇயல் விஞ்ஞானி சர்ஜான் எர்ச்செட் கல்லறையின் அருகிலும் டார்வின் புதைக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலான செய்தியே. அதற்காக அவருடைய நெருங்கிய விஞ்ஞான நண்பர்கள் இதற்காகப் போராடித்தான் அந்த சலுகை பெற்றார்கள் என்ற தகவலும் உண்டு!
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்