Home » » தொழில்நுட்ப மாற்றம்...நாம் எங்கே இருக்கிறோம் ?

தொழில்நுட்ப மாற்றம்...நாம் எங்கே இருக்கிறோம் ?

Written By DevendraKural on Saturday, 13 March 2010 | 08:36

நம் கல்வித்தரம் எப்படி உள்ளது?
உலகளவில் நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நம் கல்விமுறை வடிவமைக்கப்பட்டுள்ளதா?
இவ்வாறு கல்வித்துறையில் சீர்திருத்தம் பற்றி விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
ஒரு பக்கம் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை அமலாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்னொரு பக்கம் பத்தாம் வகுப்பு பரிட்சையை அகற்றுவது பற்றிய பரிசீலனை உட்பட இன்னபிற சீர்திருத்தங்களை மத்திய அரசும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ - இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் சி.பி.எஸ்.இ. முறை என்று தேசிய அளவிலான கல்வித் திட்டம் போதிக்கும் தனியார் பள்ளிகள் வேறு. பள்ளிக் கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே சமச்சீர் கல்விமுறை.

பத்தாம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதும், பள்ளிப் படிப்பைத் துண்டிப்பதும் நடந்து வருகிறது. இந்தப் போக்கைத் தவிர்க்கவும் அதிகமானோர் கல்லூரிக் கல்வியைப் பெற, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து, அதற்கு மாற்றாக 'கிரேடு' முறை போன்ற சீர்திருத்தங்கள் தேவை எனவும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

தற்போது நமது நாட்டில் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையான 11 சதவிகிதத்தை 20 முதல் 25 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்பதும் சீர்திருத்தத்தின் நோக்கம்.

சமச்சீர் கல்விமுறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தம் பற்றியும் கல்வியாளர்கள் விவாதித்து வரும் வேளையில் நமக்கு எழும் கேள்வி, நம் கல்வித்தரத்தை உயர்த்த இந்த நடவடிக்கைகள் மட்டும் போதுமா?
* ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் இரட்டிப்பாகிக் கொண்டே இருக்கிறது. அதாவது ஒருவர் கல்லூரியின் முதல் வருடத்தில் படித்தது நாலாவது வருடத்தில் காலாவதியாகிவிடும்.* இன்னும் ஓரிரு வருடத்தில், சீனா அதிகமான ஆங்கில அறிவுள்ளோர் வாழும் நாடாகி விடும். பிறகு, நமக்கு தகவல் தொழில்நுட்பத்துறையிலும் கடும் போட்டி ஆரம்பித்துவிடும்.

* கூகுள் தளத்தில் செய்யப்படும் ஒரு மாதத்தேடல்கள் 300 கோடிக்கும் அதிகம். இதற்கு முன்பு என்ன செய்தோம்?

* தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியினால் ஒரு நொடிக்கு 12 கோடி தொலைப்பேசி அழைப்புகளைச் செய்ய முடியும்.

அப்பொழுது எத்தனை தகவல் பரிமாற்றங்களைச் செய்ய முடியும்? இதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?

மேலே குறிப்பிட்டவை அனைத்தும் உலகளவில் நிகழ்ந்து வரும் மாற்றங்களில் சில.

நேனோ தொழில்நுட்பம், சமூக ஊடகம், இணைய வர்த்தகம் போன்றவை பத்து வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்டுள்ளோமா? இன்னும் 10 வருடங்கள் கழித்து நாம் பார்க்கப் போகும் தொழில்களில் பெரும்பான்மையானவை இன்னமும் கண்டுபிடிக்கப்படாதவையாகவே இருக்கும். இது போன்ற மாறுதல்களைச் சந்திக்கவும், உலகளவில் சிறக்கவும் நமக்குப் புதிய திறமைகள் தேவைதானே?

தொழில்நுட்பத்தைக் கல்வியில் புகுத்துவது இன்றியமையாததாகிறது. மாணவர்களுக்கு எண்ணற்ற தகவல்களைக் கையாள்வதற்குக் கற்றுத் தருவதுடன், தகவல்களைப் புரிந்துகொள்ளவும், பயன்படுத்தவும் கற்றுத் தரவேண்டும். சுயமாக முடிவெடுக்கவும், தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கும் பாங்கையும் சிறு வயதிலிருந்தே வளர்க்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்.

இன்னமும் பள்ளிக்கூடக் கட்டமைப்பே இல்லாத போது இது போன்ற மாற்றங்கள் எப்படி சாத்தியம் என்ற கேள்வி நமக்குள் வருகிறது தான். ஆனாலும், இது போன்ற மாற்றங்களையும் கொண்டு வந்தால் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிக்கல்வி பெறும் அனைவரையும் உலகளவில் சவால்களை எதிர்கொள்ளவும், திறமையானவர்களாகவும் உருவாக்க முடியும்.

இந்தக் காணொளியைப் பாருங்கள்.. உலகம் எந்தளவிற்கு மாறிவருகிறதென்று உணர முடியும்.


இந்தக் காணொளி அமெரிக்கர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும், இந்தக் காணொளியைப் பார்க்கும் பொழுது நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும் உணர முடியும்.

---DYWA
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்