Home » » உங்கள் ஜாதி ஓட்டு எந்தக் கட்சிக்கு அதிகம்?

உங்கள் ஜாதி ஓட்டு எந்தக் கட்சிக்கு அதிகம்?

Written By DevendraKural on Wednesday, 28 July 2010 | 03:43
பெரியார் இயக்கமும் அவர் வழிவந்த கட்சிகளும் இன்றுவரை செல்வாக்காக விளங்கும் மாநிலம். சமூக நீதியின் தாய்மடி. பகுத்தறிவும் முற்போக்கு எண்ணங்களும் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய மண் என்றெல்லாம் சொல்லப்படும் தமிழகத்தில் ஜாதி வாக்குகள் என்பது தேர்தல் களத்தில் மிகப் பெரும் சக்தியாக திகழ்கின்றன. ஒரு தொகுதியில் பெரும்பான்மை யாக இருக்கும் ஜாதியின் தயவை இழந்து விடக்கூடாது என்ற கவனத்துடனேயே பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை தேர்தல் களத்தை எதிர்கொள்கின்றன. தமிழகத்தின் மிக முக்கிய ஜாதிகளின் வாக்குவங்கி எந்தெந்த கட்சிகளுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை நமது களஆய்வு புலப்படுத்துகிறது. வன்னியர் வாக்குகளை மனதிற்கொண்டு உருவாக் கப்பட்ட பா.ம.கவிற்கு அச்சமுதாயத்திடம் லேசான இறங்குமுகம் இருப்பதையும், தி.மு.க கூடுதல் செல்வாக்கையும், பா.ம.கவுக்கு நெருக்கமாக அ.தி.மு.க இருப்பதையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. தே.மு.தி.க 10% வாக்குகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கவுண்டர் சமுதாயத்தினரிடம் அ.தி.மு.கவே அதிக செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறது. தி.மு.க பெரிய இடைவெளியுடன் அடுத்த இடத்தைப் பிடிக்கிறது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்கும் கவுண்டர்கள் தங்கள் ஜாதி அடையாளத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. முடிவை வெளிப்படுத்த விரும்பாதவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.

தேவர் கட்சி என்ற பெயர் பெற்ற அ.தி.மு.கவே இச்சமுதாயத் தினரிடம் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. தி.மு.க தனது இடைவெளியைக் குறைத்துள்ளது. காங்கிரசின் பாரம்பரியமான வாக்குகள் நீடிக்கிறது. சாதி அமைப்புகள் பெரியளவில் செல்வாக்கு பெறவில்லை.

தலித் மக்களின் வாக்குகள் பெரிய கட்சிகளிடமிருந்து சமுதாய அமைப்புகளின் தலைவர்களின் பக்கம் திரும்பிக்கொண்டிருப்பதை கள ஆய்வில் அறிய முடிந்தது. எனினும், தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை வலிமையாக உள்ள தலித் அமைப்பான புதிய தமிழகத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடும் தொகுதியில்தான் பெரிய கட்சிகளுக்கு இணையாக புதியதமிழகம் வாக்குகளைப் பெறுகிறது. அவர் போட்டியிடும் தொகுதிக்குப் பக்கத்து தொகுதியில் போட்டியிடும் அதே கட்சியின் வேட்பாளர் சில ஆயிரம் வாக்குகளையே பெறுகிறார். அதுபோலவே வடமாவட்டங்களில் செல்வாக்குள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் தொகுதிகளில் வி.சிக்கள் பெறும் வாக்குகளை அடுத்துள்ள தொகுதிகளில் போட்டியிடும் அதே கட்சிகளின் வேட்பாளர்கள் பெறுவதில்லை.

எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.கவுக்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கிய தேவேந்திர குல மக்கள், ஜெ ஆட்சியில் நடந்த கொடியங்குளம் சம்பவத்திற்குப்பின், அ.தி.மு.க ஆதரவு நிலையிலிருந்து மாறினர். இந்த கால கட்டத்தில்தான் புதியதமிழகம் வளர்ந்தது. டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடும் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் தி.மு.க ஆதரவு நிலையை தேவேந்திர குலவேளாளர்கள் மேற்கொள்கின்றனர். வடமாவட்ட ஆதிதிராவிடர்களும் திருமா போட்டியிடாத தொகுதிகளில் தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆதரவு நிலையை எடுக்கின்றனர். இது பா.ம.கவின் தேர்தல் நிலைப்பாட்டைப் பொறுத்து அமைகிறது. அருந்ததியர் சமுதாயத்தினரின் பாரம்பரியமான அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாடு, தி.மு.க அரசு வழங்கியுள்ள உள்இட ஒதுக்கீட்டிற்குப் பிறகு மாறியுள்ளது.

தேவர் சமுதாயம் நிறைந்துள்ள தென்மாவட்டங் களிலும், வன்னியர்கள் நிறைந்துள்ள வடமாவட்டங்களிலும் பெரும்பான்மை சமுதாயத்தினரின் ஆதிக்கத்திற்கு எதிராக அரசியல் நிலைப்பாட்டை தலித்துகள் எடுக்கின்றனர். தலித் சமுதாயக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக ஜாதி இந்துக் கள் ஒருங்கிணையும் போக்கையும் காணமுடிகிறது. தலித் வாக்குவங்கியில் அ.தி.மு.க சற்று கூடுதல் பங்கினைப் பெற்றாலும், அதன் பழைய வாக்கு வங்கி யியல் பெருமளவு சரிவு ஏற்பட்டுள் ளதையும் தி.மு.கவின் செல்வாக்கு கூடியுள் ளதையும் காணமுடிகிறது. காங்கிரஸ் கட்சி தனது பாரம்பரியமான வாக்குகளை தக்கவைத்துள்ளது. தலித் இளைஞர்களிடம் தே.மு.தி.க ஆதரவு நிலைப்பாடு வளர்கிறது. நாடார் சமுதாயத்தினரின் வாக்குகள் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி பக்கம் பலமாக இருப்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமுதாய அமைப்புகள் செயல்பாட்டள வில் பலமாக இருந்தாலும் வாக்குவங்கியை அவை உரு வாக்கவில்லை. பா.ஜ.கவுக்கு இச்சமுதாயத்தில் ஓரளவு ஆதரவு உள்ளது.

பிராமணரல்லாத உயர்ஜாதியினரான முதலியார் சமுதாயத்தில் தி.மு.க கூடுதல் பலத்துடன் இருக்க, அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் செல்வாக்கைப் பெற்றுள்ளன. இங்கும் சமுதாய அமைப்புகளுக்கு பலமில்லை. பிற கட்சிகளை ஆதரிப்பவர்களும் யாருக்கு வாக்கு என வெளிப்படையாகத் தெரிவிக்க மறுப்பவர்களும் இச்சமுதாயத்தில் 12% அளவுக்கு உள்ளனர்.

உயர்வகுப்பான சைவபிள்ளையில் தொடங்கி பிற் படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள மற்ற வெள்ளாளர் சமுதாயத்தினர் வரையிலான இந்த சமுதாயத்தில் அ.தி.மு.க கூடுதல் செல்வாக்கைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், தி.மு.க- காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி பலம் வலுவாக உள்ளது.

எண்ணிக்கையில் குறைவாக உள்ள பிராமண சமுதாயத்தினரில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க ஆதரவாளர்களாக இருப்பதற்கு காரணம், அக்கட்சியின் தலைமை தங்களின் நம்பகத் தன்மைக்குரியது என இச்சமுதாயத்தினர் நினைப்பதுதான். அடுத்ததாக, பா.ஜ.கவுக்கான ஆதரவு உள்ளது. இரு கழகங்களும் வேண்டாம் என நினைப்பவர்களின் சாய்ஸாக தே.மு.தி.க இருக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து காங்கிரஸை ஆதரிப்போரின் குடும்பத்தினர் பலர் அதே நிலையில் உள்ளனர். பிராமணர் அமைப்பில் உள்ள பலரும் தாங்கள் வாக்களிக்கும் கட்சியை முடிவு செய்திருப்பதால் அமைப்பு சார்ந்த வாக்குகள் குறைவாகவே உள்ளன.

நாயுடு சமுதாயத்தினரின் ஆதரவில் அ.தி.மு.க முதலிடத்திலும் தி.மு.க அடுத்த இடத்திலும் உள்ள நிலையில், சமுதாய அடிப்படையில் தே.மு.தி.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் நிலையான வாக்குவங்கி உள்ளது. ம.தி.மு.க வசம் மிகுதியாக இருந்த இந்த வாக்குகள், தே.மு.தி.க உருவான பிறகு இடம்மாறியுள்ளன.

-தமிழகத்தில் உள்ள மற்ற சமுதாயத்தினரான செட்டியார், யாதவர், ரெட்டியார், உடையார் போன்ற சமுதாயத்தினர் நிறைந்துள்ள பகுதிகளில் அவர்களுடைய வாக்குபலத்தையும் அரசியல் கட்சிகள் கணக்கில் எடுக்கத் தவறுவதில்லை. ஜாதி ரீதியாக சிறுபான்மையினராக இருப்பவர்களின் பெரும்பகுதி ஆதரவு தி.மு.க வுக்கு சாதகமாகவே அமைகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் தங்கள் ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்த விரும்புவதில்லை. மேலும் சிலர், தாங்கள் வாக்களிக்கும் கட்சி எது என்பதை வெளிப் படுத்த மறுப்பதையும் நேரில் காண முடிந்தது.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்