Home » » உமாசங்கர் ஐ.ஏ.எஸ்-வேலை திரும்பக் கிடைத்திருக்கலாம்...வேலை பறிக்கப்பட்ட காரணம் அப்படியே இருக்கிறது.

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்-வேலை திரும்பக் கிடைத்திருக்கலாம்...வேலை பறிக்கப்பட்ட காரணம் அப்படியே இருக்கிறது.

Written By DevendraKural on Friday, 3 September 2010 | 01:07

உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கத்தை திரும்பப் பெற்று அவரை டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமித்திருக்கிறது தமிழக அரசு. பேச்சுவார்த்தைக்கோ பேரத்துக்கோ சமரசத்துக்கோ பணிய மறுத்த்தால் வேறு வழியின்றி ஒரு அடி பின்வாங்கியிருக்கிறது கருணாநிதி அரசு.

உமாசங்கரின் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், அவர் எழுப்பியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை கோரியும் கடந்த வாரம் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் 12 மாவட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த்து. கோட்டைக்கு முன் மறியல் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தது.பசுபதி பாண்டியன், மக்கள் சக்தி கட்சி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி, ஆகியோரும் இப்பிரச்சினை தொடர்பாகப் போராடி வருகின்றனர்.

இத்தகைய பின்புலத்தில்தான் திமுக அரசின் இந்த முடிவு வந்திருக்கிறது. இம்முடிவில் நேர்மையோ நாணயமோ கடுகளவும் கிடையாது. தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்று மறுப்பதுடன் உமாசங்கர் நிறுத்திக் கொள்ளவில்லை. ராசாத்தி அம்மாள், அழகிரி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தையும், கருணாநிதியையும், தற்போதைய தலைமைச் செயலர் மாலதி உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் அவர் சந்திக்கு இழுத்திருக்கிறார். தொடர்ந்து அவர் தற்காலிகப் பணி நீக்கத்தில் வைக்கப்பட்டிருந்தால், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பார், பேசுவார். அவருக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரிக்குமே தவிரக் குறையாது. இவை அனைத்தையும் நிறுத்துவதற்கு தற்போது திமுக அரசு செய்யக்கூடிய ஒரே காரியம் இதுதான்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்காக இருபது ஆண்டுகளுக்கு முன் பொய்யான சாதிச்சான்றிதழ் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகை இறுதியாக்கப்பட்டு, அவருக்கு எதிரான இலாகா பூர்வமான விசாரணை தொடங்க இருப்பதனால் உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கம் திரும்ப பெறப்படுவதாக கூறுயிருக்கிறது அரசின் உத்தரவு. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், செப்,3) அதாவது, இது வழமையான நடவடிக்கைதானாம். மீசையில் மண் ஒட்டவில்லையாம்!

அவருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுவிட்டதா, அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது, அதற்கு உமாசங்கர் அளிக்கும் பதில் என்ன என்பன போன்ற விவரங்கள் இனி பொதுமக்கள் பார்வைக்கு வராது. பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற முறையில், சட்டப்படி அவர் இனி பொதுவெளியில் பேசவும் கூடாது. அந்த அளவில் கருணாநிதி அரசுக்கு நிம்மதி.

யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக, ஒரு குறிப்பிட்ட போர்க்களத்திலிருந்து பின்வாங்குவது என்ற உத்தியைத்தான் கையாண்டிருக்கிறது கருணாநிதி அரசு. இந்த வெற்றியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்க கூடாது. உமா சங்கருக்கு வேலை திரும்பக் கிடைத்திருக்கலாம். என்ன காரணத்துக்காக அவரது வேலை பறிக்கப்பட்டதோ அந்தக் காரணம் அப்படியே இருக்கிறது.

எல்காட் ஊழல், சன் குழுமத்தின் கிரிமினல் நடவடிக்கைகள், குவாரி ஊழல், வீட்டு வசதிவாரிய ஊழல.. என பல்லாயிரம் கோடி ஊழலில் சம்மந்தப்பட்டிருக்கும் கருணாநிதி குடும்பத்தினர், அவர்களது கூட்டாளிகளான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள்.

ஊழல் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காகவும் அவர்களது ஒத்துழைப்புடன் ஆளும் வர்க்கமும் ஆளும் கட்சியினரும் பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதற்காகவும் உருவாக்கப் பட்டிருக்கும் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககம் (Directorate of Vigilance and Anti Corruption) அப்படியே இருக்கிறது.

ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பதைத் தடுத்து, திருடர்களைப் பாதுகாப்பதற்கு முதல்வர் தலைமையிலான குழு பெற்றிருக்கும் முறைகேடான (ஆனால் சட்டபூர்வமான) அதிகாரம் அப்படியே இருக்கிறது.இவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வந்த உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கம் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கழுதையின் முதுகில் ஏற்றப்பட்ட சுமையை அப்படியே வைத்துகொண்டு, ஒரே ஒரு துணியை மட்டும் எடுத்து அதன் முகத்துக்கு எதிரே ஆட்டிவிட்டால், சுமை குறைந்து விட்டதாக நம்பி, சந்தோசமாகப் பொதியைச் சுமந்து செல்லுமாம் கழுதை.

இது கழுதைகளின் வரலாறு. கழுதையினத்துக்குக் கூட வரலாறு உண்டா என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்விதான். தனக்கு வரலாறு இருப்பதாக சொல்லிக் கொள்ளும் இனம் கழுதையினமாக இருக்கமுடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
 
...........வினவு
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்