Home » » தன் மீதான பொய் குற்றச்சாட்டிற்கு, தமிழர் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர் ரெஜியின் பதிலடி

தன் மீதான பொய் குற்றச்சாட்டிற்கு, தமிழர் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர் ரெஜியின் பதிலடி

Written By DevendraKural on Thursday, 16 September 2010 | 09:41


அன்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே

 

வணக்கம்

 

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் போராட்டத்துடன் சேர்ந்து வேலை செய்தவர்கள், போராட்ட கட்டமைப்புக்கள், இன்னும் பல்வேறு தமிழர் அமைப்புக்கள், தனி நபர்கள் தம் பாட்டில் தமக்குத் தெரிந்த வகையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க ஜன நாயகம், கருத்து சுதந்திரம் என்ற பேரில் பிரச்சினைகளை ஆராயாமல் சில அமைப்புக்கள், ஊடகங்கள்,தனி நபர்கள் தம்பாட்டில் விளக்கம் கொடுத்து, அதனை சமூகத்தில் திணித்தும் வருகின்றனர்.

 

கூடுதலாக பக்கச்சார்புகள், தன் நிலை வாதப் பிரதிவாதங்கள், குற்றச் சாட்டுக்கள்,முறைப்பாடுகள் முகம் தெரியாதவர்களினால், அனாமதேயமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் என் சார்ந்த விடயங்களும் அப்படியே.

 

நான் எந்தவொரு கட்டத்திலும் சிங்கள அரசின் அல்லது அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படவில்லை அவ்வாறான தேவை எனக்கு இல்லை. அதே நேரம் பொது மக்களின் தேவை கருதி பல நாடுகளுடன் பல உதவி அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டிய சூழல் என்னைப்பொறுத்தவரை உள்ளது.

 

எமது போராட்டம், மாவீரர்களின் தியாகங்கள் எமக்கான பாதையினை ,கடமையினை தெளிவாகக் காட்டியுள்ளன. வரலாறு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்து வருகின்றது.

 

அந்த வகையில் நான் தமிழர் தலைமைக்குப் பதில் கூறும் வகையிலும், தமிழ் பேசும் பொது மக்களினால் தேர்வு செய்யப்பட்ட பிரதி நிதிகளுக்கும் ஏன் பொதுமக்களுக்கும் கூட பதில் கூறும் வகையிலேயே என் செயற்பாடுகள் இருக்கும்.

 

என் சார்ந்த கருத்துக்களை ஒரு தலைப்பட்சமாக எழுதுவோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நான் கூறுவது என்னவெனில்

 

இணையத் தளங்களில் என் சார்ந்த செய்திகளை வெளியிட்டும் பின்னர் அதற்கு நான் பதில் அளிப்பதும் போதுமானதல்ல. பிரச்சினகளை நியாயபூர்வமாகவும் வெளிப்படையாகவும் அணுகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

ஆகவே

 

பொதுமக்களால் அல்லது தற்போது புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற மக்கள் கட்டமைப்புக்களான மக்கள் பேரவை, நாடுகடந்த அரசாங்கம், புத்திஜீவிகள்,உலகத் தமிழர் பேரவை ,அமைப்பு செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள், ஊடக அமைப்புக்கள் மற்றும் மாற்றுக் கருத்துக்கள், கொள்கைகள் கொண்ட அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் விசாரணைக்குழுவை அமையுங்கள்.

 

இவ்வாறு அமைக்கப்படும் குழு என்னை வெளிப்படையாக கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் விசாரிக்கட்டும். நான் முழு அளவில் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். விசாரணைகளின் முடிவில் தவறுகள் இருந்தால் நான் பகிரங்கமாகப் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்பேன். அல்லது அதற்கான தண்டனைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அது எத்தகைய தண்டனையாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன்.

 

நான் எந்தவொரு கட்டத்திலும் ஓடி ஒழியப்போவதும் இல்லை. அல்லது தவறுகளை மறைப்பதற்காகவோ என்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவோ எம் இலட்சியத்திற்கு எதிராக செயற்படும் சக்திகளிடம் ஓடிவிடப்போவதும் இல்லை.

 

இந்த விசாரணைக்குழு எம் சமுதாயத்தில் பொது வேலைகளில் ஈடுபடுவோர்க்கு ஓர் முன்னுதாரணமாகவும் இருக்கும். தயவு செய்து இதனை செய்யுங்கள். நான் எம் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கும், எம் மக்கள் சமூகத்திற்கும் சொந்தமானவனே தவிர என் குடும்பத்தாருக்கு சொந்தமானவன் அல்ல. ஆகவே எம் சமூகத்திற்கு என்னை விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் உரிமையும் கடமையும் உண்டு. இது என் வாக்கு மூலம். இதனைச் சட்ட ரீதியாக எனது சட்டவாளர் ஊடாகவும் மெய்ப்பித்து நான் விரைவில் பொதுமக்களிடம் ஒப்புவிப்பேன்.

 

நன்றி வணக்கம்

 

ஒப்பம்கா. பிரேம்ரெஜி (ரெஜி)

regi.itro@gmail.com

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்