Home » » வெடிக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி

வெடிக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி

Written By DevendraKural on Wednesday, 22 September 2010 | 06:03

தலைவர்கள் சமரசம் ஆனதால் சங்கடப்படும் தலித் மக்கள்!
மீண்டும் பரபரப்பு அரசியலுக்குள் ஐக்கியமாகி இருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அவரை சந்தித்தோம்..
 

''சில ஆண்டுகள் சத்தமே இல்லையே..?''

''நான் எம்.எல்.ஏ-வாக இருந்ததைக் காட்டிலும் இல்லாதபோது குறிப்பிடத்தக்க சாதனைகளைச் சத்தம் இல்லாமல் செய்திருக்கிறேன். தமிழகத்தில் 65 அரசு கலைக் கல்லூரிகளில் தலித் மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி, 1,000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதை நிரப்ப தொடர் போராட்டம் நடத்தினோம். விளைவாக, 99--ல் 100 இடங்களை உடனடியாக நிரப்பிய தி.மு.க. அரசு, மற்ற இடங்களைப் படிப்படியாக நிரப்புவதாகக் கூறியது. எங்கள் கட்சியின் சார்பில் வழக்கு தொடுத்து, தலித்களுக்கான 632 பேராசிரியர் பணியிடங்கள் பெறப்பட்டன.

மீண்டும் எம்.எல்.ஏ. ஆகாததால் மட்டுமே நான் இடையில் ஒதுங்கி என் மருத்துவப் பணியில் மூழ்கிவிடவில்லை. மருத்துவமும் ஒரு சேவைதான். தெற்கு, மேற்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவ முகாம்களை நடத்தினேன். குறிப்பாக, சிக்குன்குன்யா பாதிப்பு கடுமையாக இருந்த ஓர் ஆண்டு காலத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு என் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளித்தேன்!''

''அ.தி.மு.க. அணியில் திடீரென ஐக்கியமானது ஏன்?''

''திடீரென்று ஐக்கியமானதாகச் சொல்ல முடியாது! 2006-ம் ஆண்டிலேயே, சமூக நல்லி ணக்கம் கருதி, தென் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நேசக் கரம் நீட்டும் கட்சியுடன் கூட்டணி எனத் தீர்மானம் போட்டோம். உள்ளடக்கத்தில் அ.தி.மு.க-வைக் குறிப்பிடும் இந்தக் கருத்து, அந்தக் கட்சியின் தலைமையை அப்போது சென்றடையவில்லை. இப்போது கூட்டணி சேர்ந்திருக்கிறோம்.

இங்கு நடந்த எல்லா இடைத்தேர்தல்களிலும், ஆளும் கட்சியின் மிக மோசமான பணநாயகம் வலுத்து வருகிறது. இதை இப்படியேவிட்டால், மக்கள் பிரதிநிதியாக சாதாரண மக்கள் வரவே முடியாது. இதை, அ.தி.மு.க. அணியால் மட்டுமே தடுக்க முடியும். மேலும், தி.மு.க. ஆட்சியில் தலித் மக்களுக்கு எதிரான பல காரியங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தலித் மக்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல் ஆரம்ப நிலை அரசுப் பணியாளர் வரை பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க. அரசோ இதற்காக மனம் வருந்துவதாகத் தெரியவில்லை. மாறாக, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட தலித் மக்களை மேலும் அவமானப்படுத்திக் குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது!''

''அ.தி.மு.க. ஆட்சியின் போதுதானே கொடியங் குளத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றன. அதை மறந்துவிட்டீர்களா?''

''95-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அந்தக் கொடிய சம்பவம் தவறுதலாக நடை பெற்றுவிட்டது என்பதை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றவுடன், உணர்வாலும் உடைமைகளாலும் பாதிப்புக்கு உள்ளான தேவேந்திர குல வேளாள மக்களின் காயத்துக்கு மருந்து போடக்கூடிய வகையில் பல திட்டங்களை அவர் அறிவித்தார். தென் தமிழகத்தில், பள்ளர்,- உடும்பர்,- காலாடி எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்ட மக்களை, சட்டமன்றத்தில் தேவேந்திரகுல வேளாளர் என அடையாளப்படுத்திப் பெருமை சேர்த்தார். கொடியங்குளம் சுற்றுவட்டாரத்தில் பாதிக்கப்பட்ட தேவேந்திர குல மக்கள் வசிக்கும் 13 கிராமங்களுக்குப் பயன்படக் கூடிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.67லட்சம் ஒதுக்கினார். எட்டு தென் மாவட்டங்களில் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர் பதவியில் தலித் மக்களை அமரவைத்தார். கட்டபொம்மனின் தளபதியும் சுதந்திரப் போராட்டத்தின் முதல் தற்கொலைப் போராளியுமான வீரன் சுந்தரலிங்கத்தின் பெயரால் தனி போக்குவரத்துக் கழகம் தொடங்கினார். ராமநாத புரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளராக இருந்த நிறைகுளத்தானை எம்.பி. ஆக்கினார். அசாதாரணமாக நடந்து விட்ட ஒரு தவறை ஈடுகட்டுவதற்காக, நிறையக் காரியங்களை ஜெயலலிதா செய்துள்ளார்.

ஒப்பிட்டுப் பார்த்தால், அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு சம்பவம்தான் இப்படி நடந்தது. ஆனால், இன்றைய தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் சம்பவங்களைச் சொல்ல முடியும்.

மாஞ்சோலைத் தேயிலைத் தொழிலாளர் போராட்டத்தின்போது நடந்த தடியடியில் 17 பேரின் உயிர் பறிக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான்! 99--ல் புதிய தமிழகம் கட்சியினர் வாழும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வஜ்ரா வாகனங்கள், அதிரடிப் படையைக்கொண்டு தாக்கி சித்ரவதை செய்தனர். அப்போது போலீஸார் நடத்திய கொடுமை, உலகத்தில் எங்குமே நடந்திருக்க முடியாது. ராஜபாளையம் தேசிகாபுரம் முதுகுடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்களைக் கைதுசெய்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை கிளைச் சிறைக்கு லாரியில் கொண்டுசென்றார்கள். அப்போது, ஒவ்வொரு பெண்ணின் தலைமுடியையும் பக்கவாட்டில் தனித்தனியாக இரண்டு பெண்களுடன் சேர்த்துக் கட்டியபடி கொண்டுபோனார்கள். இதுபோல, தி.மு.க. ஆட்சியில் தேவேந்திர குல மக்களுக்கு நடந்த பாதிப்புகளை நிறையச் சொல்ல முடியும்.''

''தி.மு.க-வை விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உறுதியாக ஆதரிக்கின்றனவே?''

''சென்னையில் குடியிருந்த இரண்டரை லட்சம் தலித் மக்கள் தங்களது வாழும் இடங்களை இழந்து அப்புறப்படுத்தப்பட்டு இருப்பது தி.மு.க. ஆட்சியில்தான்... சென்னையில் எங்களுக்கு உள்ள பலத்தை வைத்து நாங்கள் குரல் கொடுத்தும், அவர்கள் துரத்தி அடிக்கப்பட்டார்கள். சென்னை வட்டாரத்தில் தீவிரமாக அரசியல் செய்யும் தலித் அரசியல் சக்திகளோ, இதற்காக வீதியில் வந்து போராடவில்லை. அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றபோதிலும் தலித் மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலத்தைப்பற்றி குரல் கொடுக்கவில்லை. காரணம், ஆட்சியாளர்களுடன் அவர்கள் சில காரணங்களுக்காக சமரசமாகப் போய்விட்டார்கள், இதைக் காலம் ஒரு ஆறாத காயமாகப் பதிவு செய்து இருக்கிறது!''

 

- இரா.தமிழ்க்கனல்
படம்: கே.கார்த்திகேயன்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்