Home » » ஊழலைக் கண்டுபிடித்தவர் வாயில் விஷம் ஊற்றினார்களா?

ஊழலைக் கண்டுபிடித்தவர் வாயில் விஷம் ஊற்றினார்களா?

Written By DevendraKural on Wednesday, 22 September 2010 | 06:46

தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் தர ஆய்வாளரான (உதவி) முருகன்,

வழக்கம்போல் செப்டம்பர் 7-ம் தேதி வேலைக்குச் சென்றார். திடீரென அவரை, 'விஷ மருந்தைக் குடிச்சுட்டார்' என சக ஊழியர்கள், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூன்று நாட்கள் உயிர் போராட்டத்துக்குப் பிறகு, 11-ம் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார் முருகன்!

அடுத்துக் கிளம்பியது அதிர்ச்சி. முருகனின் மனைவி செல்வியும் உறவினர் களும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து நின்று, ''அதிகாரிகள் தங்களது முறைகேடுகளை மறைப்பதற்காக, முருகனை விஷம் ஊத்திக் கொன்னுட்டாங்க...'' என்று குற்றம் சாட்டுகின்றனர்.

துக்கத்துடன் இருந்த செல்வியிடம் பேசினோம். ''என் புருஷன் 25 வருஷமா வேலை பார்த்தாங்க. நேர்மையானவர். கடைசி நாட்களில், 'குடோன்ல ரொம்ப ஊழல் நடக்குது. பருப்பையும் உளுந் தையும் எடுத்துட்டு அரிசி மூட்டையை வெச்சுடறாங்க. பொறுப்பாளரா இருக்கிற எனக்குத்தான் கஷ்டமா இருக்கு'ன்னு அடிக்கடி புலம்புவார். 'மேல் அதிகாரிங்ககிட்ட புகார் பண் ணுங்க'ன்னு நான் சொல்லித்தான், மண்டல மேலாளரிடம் புகார் கொடுத்தார். அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ஆனா, இவருக்கு டார்ச்சர் கூடுச்சு. கணக்குகளை சரிக்கட்டச் சொல்லி இவரை மிரட்டி இருக்காங்க. 'என் உயிருக்கே ஆபத்து வந்துடும்போல இருக்கு'ன்னுகூட சொன் னார். அவர் பயந்தபடியே நடந்துருச்சே...'' என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.

''இந்தத் துறையில் ஏகப்பட்ட ஊழல் நடக்குது. அதில் மேல் அதிகாரி முதல் மேஸ்திரி வரை எல்லோருக்கும் பங்கு இருக்கு. அதனால்தான், நேர்மையா இருந்த என் புருஷனை எல்லாருமா சேர்ந்து விஷ மருந்தை ஊத்திக் கொன்னுருக்காங்க. அரை லிட்டருக்கு மேல் மருந்து வயித்தில் இருந்துச்சாம். அவ்வளவு மருந்தை யாராவது குடிக்க முடியுமா? பிடிச்சுவெச்சு ஊத்தினதால்தான் அவ்வளவும் உள்ளே போயிருக்கு. அதுபோக, அவரு உடம்பில் அங்கங்கே காயம் வேற இருக்குது. இத்தனை சந்தேகத்தையும் சொல்லி புகார் கொடுத்தும், போலீஸார் நாங்க குறிப்பிட்டுச் சொல்ற நாலு நபர்களைக்கூட விசாரிச்சுக் கைது செய்யலை. நியாயம் கிடைக்கும் வரை கலெக்டர் ஆபீஸைவிட்டு நகர மாட்டோம், உடலையும் வாங்க மாட்டோம்...'' என்றார் செல்வி கொந்தளிப்புடன்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் சிதம்பரத்திடம் பேசினோம். ''நான் இங்கே வந்து 15 நாட்கள்தான் ஆகுது. ஆனால், முருகனின் குடும்பத்தினர் சொல்வதுமாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை'' என்றார் சுருக்கமாக.சிப்காட் இன்ஸ்பெக்டர் தனபால், ''விஷம் குடித்துத் தற்கொலைன்னுதான் வழக்கு இருக்கு. போஸ்ட்மார்ட்டம், கெமிக்கல் ரிப்போர்ட்டில் என்ன ரிசல்ட்னு பார்த்துட்டு, வழக்கை மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தா... மாற்றுவோம்'' என்றார். ''வரவேண்டிய ரிப்போர்ட்ஸ் வந்ததும், சட்டப்படி என்ன செய்யணுமோ, அதை செய்வோம்'' என்கிறார் கலெக்டர் பிரகாஷ§ம்!

 

- எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள்: ஏ.சிதம்பரம்

 

தூத்துக்குடி சிவில் சப்ளை அதிகாரி சாவு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி :

தூத்துக்குடி நுகர்பொருள் வாணிப கழக உதவி தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்த முருகன் கடந்த 11-ந் தேதி இறந்தார். இந்த நிலையில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு விஷத்தை ஊற்றி கொன்று இருக்கலாம் என்றும் முருகனின் மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

கடந்த 13-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த செல்வி மற்றும் உறவினர்கள் தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடி அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்தார். பின்னர் அங்கு போராட்டம் நடத்தி வரும் உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலர் முருகனின் மனைவியை சந்தித்து பேசி, அவருக்கு ஆறுதல் கூறினார். போராட்டத்தை கைவிடுமாறு கூறினார். ஆனால் செல்வி போராட்டத்தை கைவிட மறுத்து நியாயம் கிடைக்கும்வரை போராடப் போவதாக டாக்டர் கிருஷ்ணசாமியிடம் கூறினார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து பேசினார். அப்போது கலெக்டர் கோ.பிரகாசுக்கும், டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் தரக்கட்டுப்பாடு ஆய்வாளராக பணியாற்றிய முருகன் கடந்த 7-ந் தேதி விஷம் குடித்ததாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை விஷம் கொடுத்து கொலை செய்து இருக்கலாம் என்றும் முருகனின் மனைவி செல்வி புகார் அளித்து, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

கடந்த மாதம் 16-ந் தேதி உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலர் முருகனை உடன் வேலைபார்த்த அலுவலர்கள் மிரட்டி உள்ளனர். இந்த நிலையில் முருகன் இறந்துள்ளார். எனவே முருகன் சாவில் சந்தேகம் உள்ளது. போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் முருகனின் சாவை மூடி மறைக்க பார்க்கிறது.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தும், இறந்த முருகன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து தமிழக அரசு நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் புதிய தமிழகம் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்