Home » » வழிகாட்டும் பாதை

வழிகாட்டும் பாதை

Written By DevendraKural on Sunday, 10 October 2010 | 11:27

சீன வரலாற்றில் நீண்ட நெடுங் காலத்திற்கு முன்பு இளந்துறவி ஒருவர் ஒருமலைக் கோயிலில் வசித்து வந்தார். காலையில் கண் விழித்ததும் கோயில் முற்றத்தைப் பெருக்கி, சுத்தம் செய்து, தண்ணீர் பிடித்து வைத்து, புத்தமறைகளை ஓதிமனப்பாடம் செய்ய வேண்டும். பின்னர் மலையடிவாரத்திற்கு இறங்கிச் சென்று, வெகுதொலைவில் உள்ள நகரத்தில் இருந்து, தினசரி உபயோகத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு சுமந்து வர வேண்டும். இது தான் அந்தச் சிறுவனின் அன்றாட வேலை.
ஆனால் அவன் தினமும் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள கரடுமுரடான காட்டுப்பாதை வழியாக இறங்கி ஏற வேண்டியிருந்தது. அதன் பிறகு மற்ற இளந்துறவிகளுடன் சேர்ந்து நள்ளிரவு வரை மறைகளை ஓத வேண்டியிருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுவனுக்கு ஓர் உண்மை புலப்பட்டது. அதாவது, கோயிலில் தன்னைப் போல் துறவிகளாக உள்ள மற்றச் சிறுவர்களும் பொருட்களை வாங்க நகரத்திற்குப் போய் வருகிறார்கள். ஆனால் அவர்கள் செல்லும் பாதையோ, கோயிலுக்கு முன்புறமாக உள்ள வழவழப்பான சாலை, மேலும் அவர்கள் செல்லும் நகரமும் மிக அருகில் இருந்தது. ஒரு நாள் பெரிய சாமியாரிடம் கேட்டான். "ஐயா, நான் நீண்ட நாட்களாக இங்கே கோயிலில் தங்கியிருக்கிறேன். மற்றவர்களோ புதிதாக வந்தவர்கள். அவர்களுக்கு மட்டும் ஏன் சுலபமான வேலை?" இந்தக் கேள்வியைக் கேட்ட பெரிய சாமியார் மெல்லியதாகப் புன்முறுவல் பூத்தார். ஆனால் பதில் சொல்லவில்லை.

ஒரு நாள் மற்ற இளந்துறவிகள் கோயிலுக்கு முன்புறமுள்ள நகரத்திற்கு பொருட்கள் வாங்க காலையிலேயே புறப்பட்டுச் சென்றனர். அதே வேளையில், இந்தச் சிறுவன் கோயிலுக்கு பின்னால் வெகு தொலைவில் உள்ள நகரத்திற்கு காட்டுப் பாதை வழியாகப் புறப்பட்டுச் சென்றான். அன்று மத்தியானத்திற்குள் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து கொண்டு, கரடுமுரடான மலைப்பாதை வழியே திரும்பி வந்து விட்டான். முன்புறமாகச் சென்ற சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. பெரிய சாமியாரும், சிறுவனும் கோயில் வாசலிலேயே காத்திருந்தனர். பொழுது சாயும் வேலையில் மற்ற சிறுவர்கள் சின்னச்சின்ன மூட்டைகளைச் சுமந்தபடி ஆடி அசைந்து வந்தனர்.

"காலையிலேயே புறப்பட்டுப் போனீர்களே! ஏன் இவ்வளவு தாமதம்?" என்று பெரிய சாமியார் கேட்டார்.

"ஐயா, நாங்கள் பேசிக் கொண்டே வந்தோம். வழியில் இயற்கைக் காட்சி ரொம்ப அழகாக இருந்தது. எப்போதும் போல நின்று ரசித்தோம் என்று ஒரே குரலில் பதில் தந்தனர்."

பிறகு பெரிய சாமியார் தன்பக்கத்தில் இருந்த சிறுவனைத் திரும்பிப் பார்த்து, "கோயிலுக்குப் பின்னால் உள்ள பாதை கரடுமுரடான மலைப் பாதை. நகரமோ வெகு தொலைவில். நீ எப்படி பெரிய அரிசி மூட்டையைச் சுமந்து கொண்டு மத்தியானமே திரும்பி விட்டாய்?" என்று வினவினார்.

"ஐயா, ஒவ்வொரு தடவை மலைச் சரிவில் இறங்கும் போதும் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்கிற உறுதியோடு போகிறேன். ஆனால், கனமான சுமையோடு ஏறும் போது, தடுமாறி விழாமல் இருக்க ஒவ்வொருபடியாக பார்த்து ஏற வேண்டியிருந்தது. பிறகு, மெல்ல மெல்ல காலடி பழகி விட்டது. நான் பாதையைப் பற்றிக் கவலைப்படாமல் எனது இலக்கு பற்றி மட்டுமே சிந்திக்கத் தொடங்கினேன். இப்போது பாதை பற்றிக் கவலை இல்லை," என்று பணிவாகப் பதில் சொன்னான். அவன் சொல்லி முடித்ததும் பெரிய சாமியார் சிரித்தபடியே,

"மென்மையான பாதை ஒருவனை இலக்கில் இருந்து திசை திரும்புகிறது. கரடுமுரடான பாதையோ ஒருவனுடைய மன உறுதியை வலுப்படுத்துகிறது," என்றார்.

கடக்கும் பாதையைப் பற்றிக் கவலைப்படாமல், இலட்சியமே குறியாகக் கொண்டு முன்னேறிய அந்த இளந்துறவிதான் பிற்காலத்தில் தமிழகத்தின் காஞ்சிபுரம் வரை வந்து புத்தமதக்கல்வி கற்ற சீனத்து யாத்ரீகர் யுவான் சுவாங். நாம் நமது வரலாற்றுப் புத்தகங்களில் யுவான் சுவாங் என்றே அறிந்திருக்கிறோம். ஆனால், சீன மொழியில் ச்சுவான் சாங் என்று உச்சரிக்கின்றனர். ஹெனான் மாநிலத்தின் யான்ஷி என்ற ஊரில் கி. மு. 600ஆம் ஆண்டு ஓர் அரசு அதிகாரியின் குடும்பத்தில் பிறந்த ச்சுவான் சாங்கின் இயற்பெயர் சென் ஹுயி. 13 வயதில் துறவறம் பூண்டதும், லுவோ யாங் என்ற ஊரில் உள்ள ஜிந்து மடாலயத்தில் சேர்ந்த போது, அவருக்கு ச்சுவான் சாங் என்று பெயரிடப்பட்டது. அவர் துறவியாவதற்கு முன்பே தமது குடும்பப் பின்னணி காரணமாக கல்வி கேள்விகளில் வல்லவராகத் திகழ்ந்தார். மடத்தில் புத்தமத மறைகளை மனனம் செய்து, பல்வேறு வழிகளில் விளக்கம் சொல்லும் திறன் பெற்றார்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்