Home » » ஐ.ஏ.எஸ். கனவுகள்... இங்கே நனவாகும்!

ஐ.ஏ.எஸ். கனவுகள்... இங்கே நனவாகும்!

Written By DevendraKural on Tuesday, 12 October 2010 | 06:59

"கல்லூரிப் படிப்பு மட்டுமே மாணவர்களை வேலைக்குத் தயாராக்கிவிடாது. ஸ்போக்கன் இங்கிலீஷ், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், அரசாங்கம் நடத்தற போட்டித் தேர்வுகள் பத்தின வழிகாட்டல், ஒரு இன்டர்வியூவை சந்திக்கத் தேவை யான தன்னம்பிக்கைனு அவங்கள எதிர்காலத்துக்கு செதுக்கற விஷயங்கள், வகுப்பறையில கிடைக்கறது இல்ல. அதுக்காக உருவாக்கப்பட்டதுதான் 'சென்டர் ஃபார் யூத் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்' " என்று உற்சாக அறிமுகம் தருகிறார் அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் எஸ். அய்யம் பிள்ளை.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், மரங்கள் சூழ்ந்த அந்த 'சென்டர் ஃபார் யூத் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்' கட்டடத்தில், குரூப் டிஸ்கஷனில் இருக்கிறார்கள் மாணவர்கள்.

"உயர்படிப்பு, நல்ல பதவினு ஒரு முன்னுதாரணமா இருக்கற எங்க கல்லூரியோட சீனியர் மாணவர்கள், எங்களுக்கு இங்க வகுப்பெடுப்பாங்க, வழி காட்டுவாங்க. எக்ஸ்பெர்ட்சும் அழைக்கப்படுவாங்க. அவங்க எல்லாம் எங்களுக்கு பாடம் தவிரவும், ஒவ்வொரு துறையிலயும் வேலை கிடைக்கத் தேவையான விஷயங்கள விளக்கறதோட, அதுல எங்களை பட்டை தீட்டவும் செய்வாங்க. மொத்தத்துல, 'படிச்சு முடிச்சுட்டு என்ன பண்ணப் போறோம்'ங்கற கேள்வி, தயக்கம், பயமெல்லாம் இப்போ எங்ககிட்ட இருந்து போயிடுச்சு" என்று உற்சாகமாகச் சொன்னார் மாணவி பிரியதர்ஷினி.

"நாங்க எல்லாம் கிராமப்புற மாணவிகள். தமிழ் மீடியம் ஸ்டூடன்ட்ஸ். ஃபர்ஸ்ட் இயர்ல சேர்ந்தப்போ, கம்ப்யூட்டர் தெரியாது. இங்கிலீஷ் தெரியாது. கூடவே, தாழ்வு மனப்பான்மை வேற கொல்லும். அப்போதான் எங்க யுனிவர்சிட்டியில இருக்கற இந்த சென்டர்ல சேர்ந்தோம். 'இங்க நடக்கற வகுப்புகள் மதிப்பெண்ணுக்காக இல்ல... இந்தத் திட்டம் முழுக்க முழுக்க உங்க சுய முன்னேற்றத்துக்காக'னு கம்ப்யூட்டர் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. இப்போ எங்ககிட்ட எல்லாம் நல்ல முன்னேற்றம்..." என்று நம்பிக்கையோடு சொன்னார்கள் ஜெயந்தியும் சின்னத்தாயும்.

அடுத்து நம் முன்னே வந்த சத்யா, சுகன்யா இருவரும், " 'எல்லாரும் மெடிக்கல், இன்ஜினீயரிங்னு போயிட்டு இருக்காங்க. கலை, அறிவியல் படிக்கற நமக்கு என்ன வேலை கிடைக்கப் போகுது?'னு ஒரு நெகட்டிவ் மனப்பான்மையோடவே இருந்த நாங்க, இங்க வகுப்பெடுக்க வர்ற அரசு, தனியார் நிறுவனங்கள்ல டாப் ரேங்க்ல இருக்கற எங்க சீனியர்களை எல்லாம் பார்த்த பிறகு, 'நமக்கும் வாய்ப்புஇருக்கு'னு நம்பிக்கையோட நடமாட ஆரம்பிச்சுட்டோம்" என்று சொன்னபோது, அவர்களின் கண்களின் சந்தோஷ மின்னல்.

"இந்தத் திட்டத்தோட பெரிய ப்ளஸ்... குரூப் ஏ, குரூப் பி, நெட், ஸ்லெட்னு அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான கோச்சிங்தான். எங்களுக்கு 'போட்டித் தேர்வுகள்' பத்தின ஆசை இருக்கும். ஆனா, அதுக்கான வழிகாட்டல்கள் இருந்ததில்ல. தனியார் கோச்சிங் சென்டர்ல பணத்தைக் கொட்டி படிக்கற அளவுக்கு, பொருளாதாரமும் இல்ல. இப்போ... ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே இங்க வந்து எங்களுக்கு அந்தத் தேர்வுகளோட எல்லா பாடங்களையும், படிநிலைகளையும், நெளிவு, சுளிவுகளையும் சொல்லித் தர்றாங்க.

'நாங்களும் இந்த சென்டர்ல படிச்சவங்கதான்'னு சொல்லி இங்க வந்து எங்களுக்கு சிறப்புப் பாடம் எடுத்த ஜெசிந்தா ஐ.ஏ.எஸ்., நிஷாந்தினி ஐ.ஏ.எஸ்., ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ்., இப்போ ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணின லலிதா, விமலா... இவங்க எல்லாம் 'உங்க கனவும் கைக்கு எட்டற தூரம்தான்'னு சொன்னதை, நாங்க நூறு சதவிகிதம் நம்பி, அதை நோக்கி உழைச்சுட்டு இருக்கோம்!"

- கோரஸாகச் சொன்னார்கள் எதிர்கால ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ்-கள்!

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்