Home » » ஈழத்தமிழரின் வல்லமை மீது கொண்ட காழ்ப்புணர்வுடன் கூடிய இந்தியாவின் சூழ்ச்சித்தனமான அறிவிப்பு

ஈழத்தமிழரின் வல்லமை மீது கொண்ட காழ்ப்புணர்வுடன் கூடிய இந்தியாவின் சூழ்ச்சித்தனமான அறிவிப்பு

Written By DevendraKural on Friday, 17 December 2010 | 00:17

16.12.2010 அன்று இணையத்தளமொன்று, ரைம்ஸ் ஒவ் இந்தியா என்ற புதினப் பத்திரிகையை மேற்கோள் காட்டி "மன்மோகன் சிங் உட்பட முக்கிய தலைவர்களை கொல்ல புலிகள் திட்டம்" என்ற செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது,

அந்தச் செய்தி பற்றி அறிய ரைம்ஸ் ஒவ் இந்தியா  இணையத்தளத்தை பார்வையிட்ட போது வீடியோ கிளிப்பாக வெளியிட்ட அந்தச் செய்தியில் தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளையும் அதில் காட்டியிருந்தார்கள்.

தமிழ் இணையத்தள செய்தி எமக்கு சில உண்மைகளை உணர்த்தி இந்தியாவின் நடத்தை மீது சில வினாக்களையும் எழ வைத்துள்ளன.

இலங்கைத் தீவை தனது கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக ஈழத்தமிழர்களின் சுதந்தரப் போரை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் இந்தியா தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்து சமுத்திரத்தில் பூகோள முக்கியத்தவம் வாய்ந்த கேந்திர மையத்தில் இலங்கை அமைந்திருப்பதும் இலங்கை தனது பொருளாதார வளங்களின் மேம்பாட்டை விருத்தி செய்வதற்கான அனுகூலங்களும் சூழ்நிலைகளும் நிறையவே காணப்பட்டிருப்பதும் காரணங்களாகின்றன.

இலங்கை மீதான இந்தியாவின் தலையீடு ஏதோ தமிழரின் சுதந்திரப் போரின் ஆரம்ப காலகட்டத்தை அண்மித்ததாக கருத முடியாது. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர் மீது ஒடுக்குமுறை ஆரம்பிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்தியா தனது பார்வையை இலங்கை மீது ஆழமாக வைக்கத் தொடங்கியது.

ஜனநாயக வழிமுறையிலான தமிழர்களின் சுதந்திரப் போரின் நடவடிக்கைகளில் தமிழர்களின் பிரதிநிதிகள் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தியே வந்திருக்கின்றனர். இக்காலகட்டங்களில் தமிழர்கள் எதிர்நோக்கிய இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை வழிமுறைகளை தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு இந்தியா கூறிய அதே நேரத்தில் அதிலிருந்தே இலங்கை மீதான அழுத்தத்தை பிரயோகிக்கும் தந்திரத்தையும் கையாண்டது.

ஒரே நேரத்தில் பாம்பிற்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுகின்ற இராஜதந்திரத்தை தமிழர்களுக்கும் இலங்கையரசிற்கும் காட்டியது இந்தியா. இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை மட்டுமல்ல முழு இந்தியாவையுமே தமது உறவாக ஈழத்தமிழர்கள் நேசித்தார்கள்,அந்நிலை இன்றுவரை தொடர்கின்றது.

ஈழத்தமிழரின் இத்தாராள பண்பு அவர்களின் நடவடிக்கையை சாண் ஏற முழம் சறுக்குவது போல் பின்னோக்கி கொண்டு சென்றது.

ஈழத்தமிழர்கள் சார்பாக பேசுகிறோம், கண்டிக்கிறோம், அதிகபட்ச உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்ற இந்திய இராஜதந்திரிகளின் ஒப்புதல்களை தமிழர்கள் நம்ப வேண்டிய சூழ்நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டது.

பிள்ளையை கிள்ளிவிடுவது போல் சிங்களவாதிகளுக்கு பெரும்பான்மை நிலவரத்தை சுட்டிக்காட்டியும் உரிமையை வாங்கித் தருகின்றோம் என்ற தொட்டிலை ஆட்டுவது போல் தமிழரிடத்தில் நடந்து கொண்டது இந்தியா.

உடனடியாக இறப்பு ஏற்படுத்தாது மெதுவாக இறக்க கொடுக்கும் மருந்து போல் தமிழர்களை மெதுவாக அழிக்கும் இனவாதப் போக்கை கண்டிப்பது போல் நடித்து கண்டிக்காமல் விட்டது இந்தியா.

இந்தியா மீதான தமிழர்களின் விசுவாசம் இந்தியாவிற்கு பலமான அத்திவாரமாகவிருந்து. இலங்கை ஒரு சிறு தீவாகவிருப்பது இந்தியாவின் மெலிதான நிர்வாகத்திற்குட்பட்டும் இருந்தமையும் உலக நாடுகள் தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்த்தது.

இந்தியாவின் கைகளை விலக்கிக் கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மற்றைய நாடுகளை அணுக முடியாத பூகோளச் சூழ்நிலை தொடர்ந்தும் தமிழருக்கு தடையாகவே இருந்தது.

தமிழர்களின் பிரச்சினை எக்காலத்திலுமே தீர்வை எட்டக்கூடாதென்பதில் இந்தியா மிகக் கவனமாகவே இருந்து வருகின்றது. இந்தியாவின் தென்பகுதியில் தமிழ்நாடும் இலங்கையின் வடகிழக்கு தமிழர்கள் பிரதேசமாகவிருக்கின்ற பூகோள சரித்திர இனக்குழுமச் சான்றுகள் தமிழகத் தமிழரையும் ஈழத்தமிழரையும் ஒருமித்த போக்குக்கு கொண்டுவராமலிருப்பதிலும் இந்தியா கவனம் செலுத்தியது.

இலங்கையரசின் இனவாத நோக்கம் கொண்ட ஒடுக்குமுறை,ஒரே நேரத்தில் தமிழரையும் இலங்கையரசையும் தனது நலனுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்திய இந்திய அரசு, இலங்கையரசுடன் தமிழர்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கபட எண்ணத்தில் „நாளை"என்ற ஆறுதல் வார்த்தையில் தீர்விற்கு வர முடியாத திட்டங்கள் ஊடாக இழுத்தடித்து வந்தது.

இலங்கையரசு திட்டமிட்டு தமிழரை அழிக்கும் நடைமுறையை இனக்கலவரங்கள் போன்றவற்றின் மூலம் அரங்கேற்றியது. தமிழ் இனத்திலிருந்து ஒரு ஆணோ பெண்ணோ அழிக்கப்பட்டால் அவர்களிருவரிடமிருந்து தோன்றும் தலைமுறைகள் இல்லாது போய் தமிழனத்தின் எண்ணிக்கை குறைவடைவதை திட்டமிட்டு இலங்கையரசு நடத்தியது.

இன அழிப்பு, இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் அகப்பட்ட ஈழத்தமிழினம் விடுதலைக்கான தீர்வாக ஆயுதத்தை முன்னெடுத்த போதும் அவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி போராளிகளை அழிப்பதாக சொல்லிக் கொண்டு தமிழரை அழிக்கத் தொடங்கியது.

போராளிகளான தமிழர், பொதுமக்களான தமிழர் என இருவகையினரையும் அழித்தல் சிறுபான்மையாக இருந்த தமிழினத்தை மேலும் உதிரிகளாக்கும் திட்டத்திற்கமைய இன அழிப்பு இடம்பெற்றது. எண்ணிறந்த தொகையிலான உயிர்கள் அழிக்கப்பட்டு தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்ட போதும் சாம்பலிலிருந்து உயிர்பெற்றெழும் பீனிக்ஸ் பறவை போல் தமிழர்கள் மீண்டும் மீண்டும் சிலிர்த்தெழுந்தது இலங்கையரசிற்கு அதிர்ச்சி கொள்ள வைத்ததுடன் ஆத்திரம் கொள்ளவும் வைத்தது.

ஏற்கனவே காலத்திற்கு காலம் அழிக்கப்பட்ட போதும் சிறுபான்மையினம் மேலும் மேலும் சிறுபான்மையினமான போதும் போராட்ட வீச்சுக் குறையாததால் புலிகளை அழித்தால் தமிழர்கள் உருக்குலைந்து சிதைவார்கள் என தப்புக் கணக்கு போட்டு இந்தியா சீனா இன்னும் வேறு சில நாடுகளின் உதவியுடன் முள்ளிவாய்க்கால் போரில் இலட்சம் இலட்சமாக பிறப்பெடுக்கவிருந்த தமிழர் பரம்பரை அழிக்கப்பட்டு மிகுதியானோர் முள்வேலிக்குள் முடக்கப்பட்டார்கள்.

கலாச்சார ரீதியாக பெண்கள் வதை முனனெடுக்கப்பட்டால் தமிழரின் சுதந்திர முனைப்பு தவிடு பொடியாகிவிடும் என நினைத்து போராளிப் பெண்கள் மற்றைய பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் தமிழர்கள் தமது போராட்ட ஆயுதமாக ஜனநாயக மரபை எடுத்த போது இந்தியாவும் இலங்கையும் மட்டுமல்ல முழு உலகமும் விழிகளை அகலத் திறந்தன.

விடுதலைக்காக நீங்கள் அயுதத்தை எடுத்தது தவறு மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது தவறு ஜனநாயக வழிமுறையில் போராடுங்கள் என இலங்கை இந்தியா உட்பட முழு உலகமுமே சொன்னது.ஈழதத்தமிழர்கள் அந்த வழிமுறையைக் கையாண்ட பொது பதில் சொல்ல முடியாத நிலைக்கு தலை கவிழ்ந்த இந்தியா இப்பொழுது புலி வருகுது இந்தியத் தலைவர்களைக் கொல்லப் போகின்றது என்ற சூழ்ச்சித்தனமான துரோகத்தனமான அறிக்கையை விடுகின்றது.

முள்ளிவாய்க்காலுடன் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொன்ன இந்தியா தனது நாட்டில் புலிகளுக்கு போடப்பட்ட தடை ஏன்? இத்தடை புலிகளுக்காக அல்லது தமிழர்களுக்காக அல்லது தமிழரின் விடுதலை உணர்விற்கா?.தமிழகத்தில் புலிகள் பரவிவிட்டார்கள் என்றும் கேரளத்தில் புலி உறுப்பினர்கள் கூடியிருக்கிறார்கள் என்றும் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் கட்டியம் கூறப்பட்டு புலிகள் இந்தியத்தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டியுள்ளது என்ற வதந்தியை பரவவிட்டிருக்கிறது இந்திய அரசு ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை மூலமாக.

இந்த அறிக்கையில் அமரர் ராஜீவ் காந்தியின் கொலையையும் சேர்த்து பின்னி விட்டிருக்கின்றது இந்திய அரசு. அமரர் ராஜீவ் காந்தியின் கொலைக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பது போல் பாசாங்கு செய்கிறார்கள் சில சூத்திரதாரிகள். உண்மையான இரகசியங்கள் யாவும் ஆழமாக புதைக்கப்பட்டு அதன் மேல் ஈழத்தமிழரை நட்டு வைத்திருக்கின்றது இந்திய அரசு.

ஈழத்தமிழரின் ஜனநாயகப் போரை தட்டிக்கழிக்க முடியாத நிலையில்,தமிழருக்கான தீர்வை வரையறுக்க முடியாத கால எல்லைக்கு கொண்டு செல்வதற்காக இப்படி ஒரு புரளியை கிளப்பி இந்திய மக்கள் ஈழத்தமிழர் மீது தொடர்ச்சியான வெறுப்பை புதுப்பித்துக் கொள்ளவே இத்திட்டம்.

இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்து சென்றவுடன் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை சூது நிரம்பியதே. புலிகள்தான் அழிந்துவிட்டார்களே அப்படியானால் இவரகள் எவரைச் சொல்கிறார்கள்.

அங்கயற்பிரியன்
eelaija@hotmail.de

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்