Home » » யார் இந்த ஜெகத் கஸ்பர்?

யார் இந்த ஜெகத் கஸ்பர்?

Written By DevendraKural on Saturday, 18 December 2010 | 04:53

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி அறிமுகப் படுத்தப்பட்ட முதல் வருடம், அந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள்

குறித்து ஜூ.வி. வெளியிட்ட விமர்சனங்கள் என்ன மாகக் கோபம் கொள்ளவைத்தது ஜெகத் கஸ்பரை! துளிகூட அப்பழுக்கு இல்லாத, எந்த விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட தூய உடை மனிதராக தன்னை நிலை நாட்டிக்கொள்ள படாத பாடுபட்ட ஜெகத் சீறினார் அப்போது. ஆனால், அந்த சங்கம நிகழ்ச்சிக்குப் பிறகு பொது வாழ்க்கை மேடைகளில் அவர் தோன்றிய விதமும், அவர் வலுப்படுத்திக்கொண்ட புதுப் புது தொடர்புகளும் திரும்பத் திரும்ப சர்ச்சைப் புள்ளியாகவே அவரை அடையாளம் காட்டியது. இதோ, முதல்வர் மகள் கனிமொழியின் அரசியல் எதிர்காலத்தையே ஆட்டம் காணவைக்கிற லெவலுக்குக் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் ஜெகத் கஸ்பர்!

 

ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாதிரியார் ஜெகத் கஸ்பரின் சொத்து மதிப்பு, இப்போது கோடிகளில் கொழிப்பதாக சொல்லப்படுகிறது! சில பல தன்னார்வக் குழுக்கள் என  நிறுவனமயமாகி, தமிழகத்தின் புதிய அரசியல் அதிகாரத் தரகர்களில் ஒருவராக உருமாறி நிற்கும்  கஸ்பரின் கடந்த கால வரலாறு என்ன?

குமரி மாவட்டத்தின் கேரள எல்லையை ஒட்டிய காஞ்சாம்புரம் என்னும் கிராமத்தில் பிறந்த ஜெகத் கஸ்பர் ராஜை, அவரது தாயார் ஒரு நேர்த்திக் கடனுக்காக பாதிரியார் படிப்புக்கு அனுப்பினாராம். அதற்கான படிப்பை முடித்ததும், முளகுமூடு என்னும் ஊரில் உதவிப் பங்குத் தந்தை பணி கிடைத்தது. மணலிக்குலுவிளை என்னும் ஊரில் வழிபாடு தொடர்பாககிறிஸ்துவர்களுக்கும் இந்துக்களுக்கும் சிறு பிரச்னை ஏற்பட்டபோது, இவர் தலையிட்ட விதத்தால், பிரச்னை இன்னும் பெரிதாகி... ஊரே இரண்டுபட்டதாகச் சொல்வார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த  கோட்டாறு மறை மாவட்ட ஆயர், உடனடியாக ஜெகத் கஸ்பரை பங்கில் இருந்து தூக்கினார். பிறகு, ஜெகத் சென்னைக்கு வந்தார்.

சென்னை மயிலை மறை மாவட்டத்துக்குச் சொந்த மான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தில் இவர் சேர்வதற்கு உதவியவர் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை. அதன் பின்னர்,  பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கிற வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராகவும் இவரை அனுப்பிவைத்தார் அதே வின்சென்ட் சின்னத்துரை.

உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டங்களை மனித உரிமை ரீதியாக ஆதரிக்கும் வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப் பிரிவு, ஈழப் போராட்டத்தையும் ஆதரித்தது. ஏராளமான ஈழ மக்கள், வெரித்தாஸ் வானொலிக்கு கடிதம் எழுதுவார்கள். அதை வைத்து 'உறவுப் பாலம்' என்ற ஒரு நிகழ்ச்சியை கஸ்பர் நடத்தினார். இதனால் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் அறிமுகம் ஆனார்.

1995-ம் ஆண்டு வன்னிக்கு சென்று பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. ''பிரான்ஸுக்குப் போன கஸ்பர், 'அகதிகளுக்கு உதவுவோம்' என்னும் பெயரில் ப்ராஜெக்டுகளைத் தயாரித்தார். மக்களுக்கு உதவினால் சரி என்று புலிகளும் கண்டுகொள்ளவில்லை. உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழ் அனுதாபிகளிடம் இருந்து பணம் ஏராளமாக வந்தது. இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு மணிலாவுக்குத் திரும்பும் வழியில், 'நான் கொண்டுவந்த பணத்தை, பிரான்ஸ் விமான நிலையத்தில் தொலைத்து விட்டேன்!' என்று ஜெகத் சொன்னபோது பெரும் அதிர்ச்சி அலைகிளம்பியது.

இதைத் தொடர்ந்து கஸ்பரை புலிகள் ஒதுக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் வெரித்தாஸ் வானொலி யிலும் இவருக்கு தடங்கல். இதற்கு அரசல் புரசலாகப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.பெட்டிகளுடன் சென்னை வந்து இறங்கினார் கஸ்பர்.

அதிரடியாக குட்வில் கம்யூனிகேஷன்ஸ், நாம், தமிழ் மையம், கிவ் லைஃப் என்று நான்கு அமைப்புகளைத் தொடங்கினார். புலிகள் ஆதரவு என்பதை வைத்து வைகோவுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட இவர், இளையராஜாவின் திருவாசகம் வெளியிட்டு தன்னை தமிழகத்தில் ஒரு முக்கியப் பிரமுகராகக் காட்டிக் கொண்டார். தி.மு.க-வின் ஆதரவைப் பெற்றால் தான் நல்லது என்று திட்டமிட்ட இவர், குட்வில் அமைப்பின் மூலம் ஆளும் கட்சிக்கு ஆதரவான தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கனிமொழியின் நட்பு கிடைத்தது. தமிழ் மையம் அமைப்பின் மூலம், சென்னை சங்கமம், சென்னை மாரத்தான் போன்ற பிரமாண்ட ஸ்பான்சர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

ஏழைகளுக்கு உதவுவது, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்று சொல்லி 'சென்னை மாரத்தான்' என்னும் பிரமாண்ட ஓட்டத்தை2008-ல் இருந்து நடத்துகிறார் கஸ்பர். இது கிவ் லைஃப் என்னும் தன்னார்வக் குழுவின் நிதிக்காக, தமிழ் மையத்தால் நடத்தப்படும் ஓட்டம். இதில் வேடிக்கை என்னவென்றால், மாரத்தான் போட்டியை நடத்தும் தமிழ் மையம், அதில் வசூலாகிற கோடிக்கணக்கான ரூபாயை 'பொதுப் பணி'களுக்காக எடுத்துக்கொள்ளும் கிவ் லைஃப் அமைப்பு ஆகிய இரண்டுமே ஜெகத்துக்குச் சொந்தமானவையே!

புலிகளை ஆதரிப்பது போல் பாவனை காட்டுவது... புலி ஆதரவாளர் களாக இருக்கும் வைகோ, நெடுமாறன் போன்றவர்களை எதிர்ப்பது என கஸ்பரின் 'காரியக்கார' அரசியல் குழப்பங்களுக்கு அளவே இல்லை. ஆளும் கட்சி, அதிகாரிகள், போலீஸ் ஆகியோருடன் நெருக்கமான தொடர்புகொண்டு, பலவிதமான சர்ச்சைகளில் தொடர்ந்து அடிபட்ட  இவரைப் பார்த்து திருச்சபையே மிரண்டுதான் கிடந்தது.

'இவரை திருச்சபைக்குச் சொந்தமான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையக் கட்டடத்தில் இருந்து வெளி யேறச் சொல்லுங்கள்!' என்றுகூட சிலர் கோரிக்கை வைத்தார்கள். சென்னை மயிலை பேரா யரும்ஜெகத்தை இடத்தைக் காலி பண்ணும்படி சொல்ல...  'நான் யார் தெரியுமா?'' என்று பிஷப்புக்கே 'ரூபம்' காட்டிய ஜெகத், இன்று வரை தனது அலுவலகங்களைக்  காலி செய்ய வில்லை!  இந்த நிலையில்தான் கஸ்பர் அலுவலகத்தில் சி.பி.ஐ. புகுந்தது. கடந்த செவ்வாய் காலை 8 மணிக்கு ஜெகத்தின் வீட்டுக்குச் சென்ற சி.பி.ஐ. முக்கியமாக இன்னொரு கிறிஸ்துவப் பெண்ணின் வீட்டையும் சுற்றி வளைத்திருக்கிறது அவர் பெயர் ஜோசஃபின்.

அதிகம் வெளிவராத ரகசியங்களை அறியும் விசா ரணைகள் தொடங்கி உள்ளன - ஜெகத்துக்கும் இன்றைய இலங்கை அரசாங்கத்துக்கும் உள்ள உறவுகள் உட்பட!

- எம்.தமிழ்ச்செழியன்

படம்: என்.விவேக்


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்