Home » » "ஐ.ஐ.டி-யில் சேர எந்த வயதில் பயிற்சி எடுப்பது நல்லது?"

"ஐ.ஐ.டி-யில் சேர எந்த வயதில் பயிற்சி எடுப்பது நல்லது?"

Written By DevendraKural on Tuesday, 21 December 2010 | 02:45

கொஸ்டீன் ஹவர்

''மகள் 'ப்ளஸ் ஒன்'னிலும், மகன் ஒன்பதாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளான ஐ.ஐ.டி., என்.ஐ.டி-க்களில் சேர வேண்டும் என்பது அவர்களின் கனவு. அதற்கான நுழைவுத் தேர்வுகள், சிறப்புப் பயிற்சிகள் பற்றி விளக்க முடியுமா..?'' என்று கேட்டிருக்கும் வேதாரண்யம், ஆர்.சுந்தர்ராஜுவுக்கு... நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்கும் தனியார் நிறுவன (T.I.M.E) தஞ்சாவூர் கிளை இயக்குநர் ஆர்.ரஞ்சித்பிரபு பதில் தருகிறார்.

 

''ஐ.ஐ.டி. (IIT-Indian Institute of Technology)மற்றும் என்.ஐ.டி. (NIT- National Institute of Technology)ஆகிய நிறுவனங்களில் சேர்வதற்கு, கடும் போட்டி இருக்கிறது. காரணம், அவற்றின் கல்வித் தரம்தான்! ஐ.ஐ.டி-க்கான நுழைவுத்தேர்வு, ஐ.ஐ.டி-ஜே.இ.இ. (IITJEE-IIT Joint Entrance Examination) என்ற பெயரிலும், என்.ஐ.டி-க்கான நுழைவுத்தேர்வு, ஏ.ஐ.இ.இ.இ. ((AIEEE-All India Engineering Entrance Examination)என்ற பெயரிலும் நடத்தப்படுகின்றன.

முதலில் ஐ.ஐ.டி-யைப் பார்ப்போம்...  இந்தியாவிலுள்ள ஐ.ஐ.டி-க்களின் எண்ணிக்கை 15.  வழக்கமான தேர்வு முறைகள் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கின்றன. ஆனால், இதற்கான நுழைவுத் தேர்வுகள் பாடக் கருத்துகளை உள்வாங்கும் திறன், மற்றும் நடைமுறையை ஒட்டி அவற்றை வெளிப்படுத்தும் திறனோடு தொடர்புடையவை. எனவே, இதற்கான பயிற்சியைப் பள்ளிப் படிப்போடு இணையாகத் தருவது நல்லது. ஏழாம் வகுப்பிலிருந்தே இதற்கான பயிற்சி தரப்படுகிறது. அதிகபட்சம் ஒன்பதாம் வகுப்புக்குள்  துவங்கிவிடுவது நல்லது. வாரத்தில் எட்டு மணி நேரத்துக்குக் குறையாது எடுத்துக் கொள்வது அவசியம். பள்ளிப் பாடத்திட்டத்தை ஒட்டியே  இப்பயிற்சிக்கான பாடங்களும் இருக்கும். எனவே, வழக்கமான பள்ளிப் பாடச் செயல்களுக்கு இப்பயிற்சி இடைஞ்சல் தராது.

இந்த நுழைவுத்தேர்வு இரண்டு பேப்பர்களைக் கொண்டது. இரண்டுமே தலா மூன்று மணி நேரத் தேர்வு. இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களில் இருந்து  கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அப்ஜெக்டிவ் டைப்பில் அமைந்திருக்கும். தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண்கள் உண்டு.

இத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களை  பனாரஸ் ஹிண்டு யுனிவர்சிட்டி (வாரணாசி),  இண்டியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் (ஜார்கண்ட்), மெரைன் இன்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (மும்பை) என நாட்டின் வேறு சில பிரபல பொறியியல் கல்வி நிறுவனங்களும் அட்மிஷனுக்கு கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.

அடுத்து, ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத்தேர்வு.... மாநிலத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருக்கும் என்.ஐ.டி. நிறுவனங்களின் அட்மிஷனுக்கு இந்த நுழைவுத்தேர்வுகள் வழி செய்யும். பொதுவாக, ஐ.ஐ.டி. ஃபவுண்டேஷன் கோர்ஸ் மேற்கொள்பவர்கள், இரண்டாவது சாய்ஸாக ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிகளையும் எடுத்துக் கொள்வது வழக்கம்.

மூன்று மணி நேரத் தேர்வாக இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, அப்ஜெக்டிவ் டைப் வினாக்கள் பாடத்துக்கு 30 என்ற எண்ணிக்கையில் அமைந் திருக்கும். நான்கு தவறான விடைகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் மைனஸ் மார்க்குகள் அமையும்.

இந்தத் தேர்வு மதிப்பெண்கள், என்.ஐ.டி. தவிர்த்து வேறுபல முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்களின் அட்மிஷனுக்கும் உதவும். ஐ.ஐ.டி. மற்றும் ஏ.ஐ.இ.இ.இ. ஆகிய இந்த இரண்டு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிகளைப் பெறுபவர்கள், திருவனந்தபுரத்திலிருக்கும் ஐ.ஐ.எஸ்.டி. (IIST -Indian Institute of Space science Technology), பிர்லா பொறியியல் பயிற்சி நிறுவனங்களுக்கான தனி நுழைவுத்தேர்வாக நடத்தப்படும் பி.ஐ.டி.எஸ்.ஏ.டி. (BITSAT) என எந்த டாப் பொறியியல் நிறுவனங்களின் நுழைவுத் தேர்விலும் எளிதில் ஜெயிக்க முடியும்.

பொதுவாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பள்ளிப் படிப்பை மேற்கொள்பவர்கள்தான் இந்த நுழைவுத் தேர்வுகள் எழுத முடியும் என்பார்கள். உண்மையில், முறையான பயிற்சி இருந்தால் எவரும் இந்த தேர்வுகளை எளிதில் கடக்க முடியும். இந்த தேர்வுகளில் கலந்துகொள்ள பள்ளித்தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும்.

பொதுவாக ஒன்பதாம் வகுப்புக்குள் இப்பயிற்சிகளை எடுப்பது நல்லது என்றாலும், பத்தாவது, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிப்பவர்களும்கூட பயிற்சி எடுக்கலாம்.''


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்