Home » » கனிமொழியும் திமுகவும்

கனிமொழியும் திமுகவும்

Written By DevendraKural on Monday, 10 January 2011 | 22:15

கழுதையைப் பற்றித் தெரிந்த அளவிற்கு எனக்கு கவிதையைப் பற்றித் தெரியாது. எனவே கனிமொழியின் கவிதையைப் பற்றியும் அவர் உண்மையிலேயே கவிஞர் தானா என்பது பற்றியும் ஆராய்வதை விட்டுவிட்டு, தேர்தல் ஸ்பெஷல் தொடரில் கனிமொழியின் அரசியலைப் பற்றி இன்று பார்ப்போம்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் ஜெயித்து ஆட்சியில் அமர்ந்தபோது, எதனாலோ 'இதுதான் அவரது கடைசித் தேர்தல் & ஆட்சி' என்ற எண்ணம் திமுகவினரிடம் வந்திருந்தது. கலைஞரின் துணைவியான ராஜாத்தியம்மாளுக்கும் அவரது மகளான கனிமொழிக்கும் அந்த எண்ணம் சற்று வலுவாகவே இருந்திருக்க வேண்டும். எனவே கலைஞரின் காலத்திலேயே பொருளாதார ரீதியிலும் அரசியல்ரீதியாகவும் செட்டில் ஆவது என கனிமொழி & கோ முடிவு செய்தது.மேலும், இந்த முறை கலைஞரின் பிடியும் தளர்ந்திருந்தது கட்சியிலும், குடும்பத்திலும், உடலிலும்.

எனவே அவர் ஆட்சியில் அமர்ந்ததுமே 'கனிமொழியின் எதிர்காலப் பாதுகாப்பிற்கு ஏதாவது செய்யவேண்டும். குறைந்தபட்சம் ஒரு எம்.பி. சீட்டாவது' என்ற வேண்டுகோள் ராஜாத்தியம்மாளிடம் இருந்து எழுந்தது. இந்தியத் திருநாட்டில் எம்.பி.யாக இருப்பது தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு என்ற நிலை வந்துவிட்டது துரதிர்ஷ்டம்தான். என்ன செய்வது.. கனிமொழிஎம்.பி.ஆனார்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தல் முடிந்து மந்திரி சீட் பேரம் தொடங்கியது. கலைஞரின் அனைத்து வாரிசுகளுக்கும் பதவி கொடுப்பதென்றால் மன்மோகன்சிங்குக்கே பாராளுமன்றத்தில் இடமிருக்காது என்பதால் கனிமொழிக்கு மந்திரிப் பதவி இல்லை என்று ஆனது. எனவே ஜெயலலிதாவிற்கு ஓ.பன்னீர்செல்வம்போல் தனக்கு ஒரு பொம்மை வேண்டுமெனத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவர் தான் ஆ.ராசா. ஆனால் அவர்களுக்குத் தெரியாது 'ஒரே ஒரு சூரியன் தான் ஊருக்கெல்லாம்..ஒரே ஒரு பன்னீர்செல்வம் தான் தமிழ்நாட்டுக்கெல்லாம்'என்று.

ஆரம்பத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக கட்சியால் செய்யப்பட்டதாகவும் மொத்தப் பணமும் கட்சிக்கு வந்து சேர்ந்ததாகவுமே உடன்பிறப்புகள் கூட நினைத்தனர். ஆனால் நீரா ராடியா உபயத்தில் தெரியவந்திருக்கும் உண்மைகள் உடன்பிறப்புகளுக்கே கசப்பானவை. முதலில் தெரியவரும் உண்மை மந்திரி பதவிக்கு ஆசைப்பட்ட கனிமொழி & கோ அரசியலில் பழம் தின்று கொட்டையையும் முழுங்கிய கலைஞரை நம்பவில்லை என. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடிக்கப்பட்ட பணம் கனிமொழி&கோவினால் முழுதும் அமுக்கப்பட்டுவிட்டன. சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு ராசாவிடமிருந்து வந்த சொற்ப நிதி தவிர பெரிதாக ஏதும் கட்சிக்கு வரவில்லை. இன்று ஸ்டாலின், அழகிரி போன்றோரின் ஆத்திரத்திற்கு அடிப்படைக் காரணமும் அதுவே.

கனிமொழி கவிதை எழுதியபோது 'ஆஹா..கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவி பாடும் ' என்பதுபோல கலைஞர் மகளுக்கு கவிதை வருவதில் என்ன ஆச்சரியம் என கொண்டாடப்பட்டார். கலைஞருக்கு மற்றொரு பெருமையும் உண்டு. அது 'விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிபவர்'. ஆனால் கனிமொழிக்கு அந்தத் திறமை இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்தான். சரி..அதென்ன விஞ்ஞான ரீதியில்?

ஒரு வீட்டில் புகுந்து திருடுவது என முடிவு செய்தபின், உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக்கொண்டு ஜட்டி அல்லது லங்கோடு மட்டும் அணிந்து, வீட்டுக்குள் புகுந்து, கொண்டுபோன சாக்கு நிறைய திருடுவது. மாட்டினாலும் வழுக்க முடியும்..குறைந்தது சாக்குப் பையைத் தூரப்போட்டாவது நிற்க முடியும். கேட்டால் 'இன்னைக்கு தீபாவளின்னு நினைச்சு எண்ணெய் தேச்சேன்' எனலாம். இதுவே கலைஞர் ஸ்டைல் விஞ்ஞான ரீதியிலான ஊழல்!

ஒரு வீட்டிற்கு எண்ணெய் கூட தேய்க்காமல் திருடப்போய், கொஞ்சம் ஆசை அதிகமாகி சாக்கு நிரப்பியது மட்டுமல்லாது பீரோவையும் தூக்கி மாட்டிக்கொள்வது ஜெயலலிதா& சசிகலா க்ரூப்பின் ஸ்டைல்.

'அடடா வீட்டிலுள்ள பொருள் மட்டுமல்லாது வீடே நல்லாயிருக்கே ' என பேராசைப்பட்டு வீட்டையே நகர்த்தி தப்பமுடியாமல் மாட்டிக்கொண்டது கனிமொழி & கோ-வின் ஸ்டைல்.

இப்போது கட்சியின் இரு துருவங்களான ஸ்டாலினும் அழகிரியும் ஒருமித்து கேட்பது கனிமொழி & கோ கட்சியிலிருந்து ஒதுக்கப்படவேண்டும் என்பதே. கலைஞர் அதைச் செய்யலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் உண்டு.

கனிமொழி & கோ-வின் வீடு இந்த ஆட்சியின் ஆரம்பித்திலிருந்தே நாடார் ஜாதித் தலைவர்களுக்க்காக அகலத் திறந்துகொண்டது. தாங்கள் நாடார் இனத்தவர் என்பதையும் வலியக் காட்டிக்கொண்டனர். சமீபத்தில் நாடாரின மாநாட்டிலும் கலந்துகொண்டு 'திமுக உங்களுக்கு துணை நிற்கும்'எனக் கனிமொழி பேசியிருக்கிறார். இது நாடாரின நலத்திற்காக என்றால் பரவாயில்லை. ஆனால் உண்மை வேறு.

கனிமொழி அங்கு கலந்து கொண்டது ஜெயலலிதாவை விட ஸ்டாலினையும் அழகிரியையும் தான் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். ஆம், இப்போது கனிமொழி அவர்களுக்கு ஒரு செக் வைக்கிறார். 'என் மேல் கை வைத்தால் வரும் தேர்தலில் நாடாரின ஓட்டுக்கள் கலையும்' என்ற செய்தியை ஸ்டாலின் - அழகிரிக்கு பொட்டில் அடித்தாற்போன்று காட்டவே இந்த ஜாதிப் பாசம். உழைத்து முன்னேறிய ஒரு ஜாதியை இவர்கள் ஊழலுக்குக் கேடயமாகப் பயன்படுத்த நினைக்கின்றனர்.

108 அவசர உதவித் திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம் போன்றவை கலைஞர் ஆட்சி பற்றி நல்லதொரு எண்ணத்தையே ஏற்படுத்தியிருந்தன. கலைஞரும் கொஞ்ச நாள் முன்புவரை காங்கிரஸ் இல்லாமல் தனியாக நிற்கவேண்டி வந்தால் தயாராகவே இருந்தார். அப்போதுதான் இடி மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழல் டேப் வடிவில் இறங்கியது. கட்சியின் இமேஜ் பணால் ஆனது.

காங்கிரஸ் இதுவரை இல்லாத வீரத்துடன் நிமிர்ந்ததுக்கு முக்கியக் காரணம் ஸ்பெக்ட்ரம் ஊழல் தான். ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி வருவாய் இழப்பு என்பதை சாமானியர்கள், அத்தனை பணத்தையும் கனிமொழி & கோ ஆட்டையைப் போட்டதாகவே புரிந்துகொண்டுள்ளனர்.அதிமுக சரியான முறையில் இந்த ஊழலை மக்களிடம் கொண்டுசென்றால் வருகின்ற தேர்தலில் திமுக சந்திக்கப்போகும் இரண்டாவது பெரிய எதிரி 'ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி' என்ற வார்த்தைகள் தான். (முதல் எதிரி விலைவாசி!)

1991 ஜெ.ஆட்சியில் சசிகலா குரூப் அதிமுகவிற்கு செய்த அதே காரியத்தை கனிமொழி இப்போது திமுகவிற்குச் செய்திருக்கிறார். அரசியல் அடைக்கலம் கொடுத்த தன் வயோதிகத் தந்தைக்கு கனிமொழி செய்த கைமாறு அது.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்