Home » » ஏழை வாக்காளன்- தி.மு.க வுக்கு மகுடம்!!

ஏழை வாக்காளன்- தி.மு.க வுக்கு மகுடம்!!

Written By DevendraKural on Wednesday, 12 January 2011 | 07:27

எலெக்சன் வந்துகொண்டே இருக்கிறது. தினசரிகளும், வாராந்தரிகளும் எல்லாம் தெரிந்த கடவுள்களாக கதைவிட்டு காசு பார்க்கின்றனர். நிரம்பப் படித்தவர்கள் செய்திகளுக்குள் தலையைவிட்டுக்கொண்டு கருத்து சொல்லவும் காசு கேட்கிறார்கள். கொஞ்சம் நஞ்சம் படித்தவர்கள் தெரியாததையும் தெரிந்தது போல கெட்டுகெதரில் பேசிக்கொண்டோ, இணையத்தில் அரட்டிக்கொண்டோ இருக்கிறார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் வீரதீர இளைஞர்களோ சுட்டும் சுடாமலும் மேதாவித்தனமாக தனிராஜ்யமாக கருத்துகளை அள்ளித்தெளிக்கிறார்கள். விசயம் தெரிந்த சில வேகமான இளைஞர்களோ அவனும் கொள்ளையன், இவனும் கொள்ளையன், அதோ அவளும் கொள்ளைக்கார்யென அனைவரையும் முச்சந்தியில் நிறுத்த முனையச் செய்து, எந்த ஒரு யோக்கியவானையும் காட்ட மறுக்கிறார்கள்.

மேலே சொன்ன இவர்களுக்கும் எலக்சனுக்கும் என்ன சம்மந்தம். ஒரு மண்ணும் இல்லை. மண் சாலையில் வாகனம் போகும்பொழுது புறப்படும் தூசு போன்றவர்கள். வாகனம் சென்றதும் அடங்கிவிடும். அதாவது, இவர்கள் மாடு ஒன்னுக்குப்போவது போல் பேசிக்கொண்டு இருப்பார்களேயொழிய ஓட்டுப்போட போகமாட்டார்கள்.

ஆனால் இந்த ஏழை வாக்காளன் இருக்கானே அதாங்க, எங்கும் நிறைந்து இருக்கும் தினக்கூலிகள், அவர்களுக்கு ஸ்பெக்ட்ரமும் தெரியாது ஃபோர்பர்சும் தெரியாது.

ஆனாக் கண்டிப்பா ஓட்டு மட்டும் போட்றுவாங்க. யாருக்கு? அதான் இப்போதைய முக்கியக் கேள்வி. பதிரிக்கைகள் ஆயிரம் கணித்தாலும், அதையெல்லாம் மண்ணாக்கிவிட்டு மகுடம் ஏற்ற வைக்கப்போவது இந்த ஏழை வாக்காளந்தான். விழும் ஓட்டில் 90 சதவீதம் படிக்காத, இல்லை படித்த ஆனால் பத்திரிக்கை படிக்காத ஏழை வாக்காளனுடையது.

அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்? ஒரு மண்ணும் இல்லை. இன்று வேலைக்கு சென்றால் மூன்று வேலை சாப்பாடு. அது மட்டும்ந்தான். அதுவும் அந்த ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாயில் வாங்கி, ஓசி ஸ்டவ்வில், ஈசி கேசில் சமைத்துவிட்டு, ஆறமர்ந்து 14 இஞ்ச் கலர் டிவியில் மானாட மயிலாட பாக்கும்போது கடவுளே கருணாநிதின்னு சொல்லாம இருப்பாங்களான்னு தெரியல. கண்டிப்பா சொல்லுவாங்க. ஆமாம், பசி அவ்வளவு வலிமையானது. அந்த வலி பெரியளவுக்கு குறைஞ்சு இருக்கிறத, கிராமங்களப் பாக்கும்போது தெளிவாத் தெரியுது.

நான் சிறுவனாக இருந்தபோது இருந்த ஏழைத்தோற்றம் இப்பொழுது இல்லை. கோவனத்துடன் ஒரு ஏழையப் பார்ப்பது அருகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லோரும் நல்லுடை உடுத்தி, மூவேளை உண்டு, மொபைலோடு வலம் வருவது கண்ணுக்கு குளிர்ச்சி. தானா உருவான வளர்ச்சின்னு சொன்னாலும், கடவுள் கருணாநிதி கொடுத்தார்ன்னு ஒருவேள சொல்லிக்கொள்ளலாம்.அது ஓட்டாவும் மாறலாம்.

கொஞ்சம் நஞ்சம் ஏழை விவசாயிகள் இன்னும் கடனவுடன வாங்கி, இன்னும் விவசாயம் செய்யுறான்னா, கண்டிப்பா போனமுறை போல இம்முறையும் கலைஞர் தள்ளுபடி செய்வாருன்னு நம்பிக்கையா இருக்கலாம்.அதுபோக பயிர் இன்ஸ்சூரன்ஸ் கொடுத்து விளையாமப் போனாலும் காசுடான்னு சொல்ல வெச்ச கலஞருன்னு நினைக்கலாம். ஆக, விவசாயும் கலைஞருக்கு ஓட்டு போடலாம்.

இதுவரைக்கும் செருப்பு தச்சுகிட்டு எம்ஜியார் பின்னாடி ஓடிகிட்டு இருந்த அருந்ததியருக்கு உள் ஒதுக்கீட்ல ஒளியேத்தி, செருப்பு பிஞ்சா தூக்கிதான் போடனுமுன்னு நிலமைக்கு கொண்டுவந்த கலைஞருக்கு அவங்களும் ஓட்ட ஓங்கிப்போடலாம்.

காய்ச்சல் வந்தாலும், ஹார்ட் அட்டாக் வந்தாலும் கிராமத்து அனுபவ வைத்தியர்கிட்ட போனது நின்னு, தூக்குடா அப்பல்லோவுக்கு, கலைஞர் காப்பீடு இருக்குன்னு சொல்லவெச்ச கலைஞருக்கு ஏழைபாளைகள் ஓட்டுப்போடலாம்.

கூப்பிட்ட உடனே ஓடோடிவர்ற 108, மத்ய சர்க்காரு தந்ததாதா, இல்ல மாநில சர்க்கார் தந்ததான்னு யோசிக்க எல்லாம் நேரமில்லாம, கடவுள் கருணாநிதிதான் அனுப்பிச்சாருன்னு ஓட்டப்போடலாம்.

ரெண்டு ஏக்கர் நெலம் எல்லாருக்கும் கெடச்சதாங்றது முக்கியமில்ல, அதில இருக்கிற ஊழலும் முக்கியமில்ல. கெடச்சதா? ஆமா கெடச்சது. அப்ப கலைஞருக்கு ஓங்கிக் குத்துன்னு சொல்லலாம்.

கூரைவீடெல்லாம் காரை வீடாச்சு. இன்னும் ஆகும். கெடச்சவங்க கலைஞருக்கு ஓட்டப்போடலாம். அதுல கவுன்சிலருக்கு கொடுத்த முவ்வாயிரத்தப்பத்திக் கவலையில்லை.

வீட்ல சும்மா இருந்த பெண்களுக்கு குழுமம் அமைச்சு, உதவித் தொகை கொடுத்து பாக்குற கிராமங்களெல்லாம் பெண்கள் சுய உதவிக்குழுன்னு சொல்ல வெச்சதுக்கு தாய்க்குலங்களும் ஓட்டுகள அள்ளி வீசலாம்.

இந்த ஏழை வாக்காளனத் தவிர, அரசாங்க ஊழியர் கதையை சொல்லவும் செய்யனுமா? அவங்களுக்கு எப்பவுமே கலைஞர்தான் தோஸ்த். போக்குவரத்து சங்கத் தேர்தல பார்த்தது ஞாபகம் இல்லன்னா, கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.

இப்படி இண்டு இடுக்கு இல்லாம கலைஞர் நுழைஞ்சுட்டார்ன்னுதான் தோனுது.

இந்த கண்டிப்பா ஓட்டுப்போடும் ஏழைகளுக்கு, ஸ்பெக்ட்ரமும் தேவையில்ல. ஈழமும் தேவையில்ல. ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தின் வரலாறும் தேவையில்லை.

ஆனா ஓட்டு மட்டும் போட நிச்சயமா வரிசையில நிப்பான்.

ஆனால் அதுல ஊழல், இதுல ஊழல்ன்னு மாஞ்சு மாஞ்சு பேசியும் எழுதியும் திரியும் மேதாவிகளுக்கு, தேர்தல் தினம் ஒரு அரசாங்க விடுமுறை,அவ்வளவே.

கூட்டணி இப்படியென்றால்...

தி.மு.க + காங் + பா.ம.க = 174 இடங்கள்

அ.தி.மு.க + தே.மு.தி.க + ம.தி.மு.க + கம்யூனிஸ்ட் = 60

ஒருவேளை காங்கிரஸ் இடம் மாறினால், தி.மு.க வுக்கு 10 இடங்கள் மட்டுமே இழப்பு. பா.மா.கா வும் தடமாறினால் இன்னொரு 10 இடங்கள் இழப்பு. நிச்சயமாக கலைஞருக்கு இன்னொரு முறையும் மகுடம் தவறப்போவதில்லை இந்த ஏழை வாக்காளனால். இல்லை இல்லை இந்த படித்த ஓட்டுப் போடாத வாக்காளனால்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்