Home » » வ.புதுப்பட்டியில் சமாதானம் ????

வ.புதுப்பட்டியில் சமாதானம் ????

Written By DevendraKural on Saturday, 5 February 2011 | 09:27

'பசுவின் மடி... மூதாட்டியின் மார்பை அறுத்தெறியும் மனித

மிருகங்கள் உலாவிய ரத்த பூமி; குழந்தைகள் முதல் கிழவிகள் வரை அனைவர் மீதும் குறைந்தது மூன்று வழக்குகள் கட்டாயம்; தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற எந்தவொரு விசேஷமானாலும் 500 போலீஸாரின் பாதுகாப்பு; கலவரத்துக்கு இதுவரை 22 பேர் பலி...' என திக் திக் கிராமமாக இருக்கிறது விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தை ஒட்டியுள்ள வ.புதுப்பட்டி! இந்த கிராமத்தின் திகிலுக்குக் காரணம் காதல் சமாசாரம் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?!

 வ.புதுப்பட்டியில் நாயக்கர், சாலியர், பிள்ளைமார், இந்து தேவேந்திர குலவேளாளர் மற்றும் கிறிஸ்துவ அருந்ததியினர் கணிசமாக வசிக்கின்றனர். இவர்களின் வாழ்​வாதாரமே... விவசாயக் கூலி வேலை​தான்! 55 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு காதல் திருமணம்தான், இந்த சாதித் 'தீ' பரவுவதற்கு ஒரு பொறியாக இருந்திருக்கிறது. இன்று வரை மாவட்ட கலெக்டர், மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, எஸ்.பி. மற்றும் வக்கீல்கள் பல முறை முகாமிட்டும், களேபரத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது வ.புதுப்பட்டி!

'தண்ணீர் பிடிப்பதில் தொடங்கி சாமி ஊர்வலம் வரை இந்த மோதலுக்குப் பின்னணியில் அற்பமான விஷயங்கள் ஏராளம் உண்டு. இவற்றால் ஏற்பட்ட மோதல்கள் உருமாறி, கடந்த 1988-ம் ஆண்டு நடந்த கொலை வரை நீண்டிருக்கிறது...' என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதுவும் ஒரு காதல் திருமணம்தான்... வ.புதுப்பட்டி அருந்ததியினர் பிரிவைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா. ராமசாமிபுரத்தின் தேவேந்திர குலவேளாளர் பரஞ்ஜோதி. இருவருக்கும் காதல் திருமணம் செய்ய.... மீண்டும் பிரச்னை வேதாளம் உச்சத்தில் ஏற... காதல் தம்பதியைச் சுற்றி வளைத்த கலவரக் கும்பல், 'எங்கள் சாதிப் பையனை எப்படி காதலிக்கலாம்?' என்று கூறி, ஸ்டெல்லாவை கண்டந்துண்டமாக வெட்டி தோட்டத்தில் புதைத்தது. அருந்ததியர் தரப்பினர் பதிலுக்கு அரிவாளைத் தூக்க... எதிர் தரப்பில் சிலர் கொலை செய்யப்பட்டனர். இதில் மிகவும் கொடுமையான விஷயம், வயலில் நின்ற பசுவின் பால்மடியை ஒரு கும்பல் வெட்டிச் சாய்க்க... பயந்து ஓடிய 60 வயது மூதாட்டியின் மார்பைக்கூட வெட்டி எறிந்தனர். 25 பெண்கள் உள்பட 165 பேர் மீது கொலை முயற்சி, கலவர வழக்குகள் பதிவானதும், இந்தக் கலவரத்தின் தொடர் நிகழ்வுகளால்தான். 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்!

இந்த நிலையில், வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், 'வ.புதுப்பட்டியில் தொடரும் சாதி மோதல் மறைந்து... அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று  பொதுநல வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து ஆகியோர், 'மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதனையடுத்து ஜனவரி 26-ம் தேதி சமாதானக் கூட்டம் நடந்தது. மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, கலெக்டர் சண்முகம், எஸ்.பி-யான பிரபாகரன் ஆகியோர் இரு தரப்பையும் அழைத்துப் பேசினர். இரு தரப்பும் சாதி மோதலைக் கைவிடுவதாக உறுதி அளித்தனர்.

ஊர் தேவேந்திர குலவேளாளர் பிரிவின் நாட்டாண்மை மாரிமுத்து, ''வழக்கமாக தாசில்தார், இன்ஸ்பெக்டர் அளவில் சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கும். இப்போது முதன் முதலாக மாவட்ட நீதிபதி, கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் தலைமையில் சமாதான மீட்டிங் எங்க கிராமத்தில் நடந்திருக்கு. இது எங்களுக்கு ரொம்பவே திருப்தியாக இருக்கு. மேலும் பஸ் வசதி, பள்ளிக்கூட வசதி அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறோம். இதுவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்...'' என்றார்.

''எங்களுக்குள் ஏற்பட்ட சின்னச் சின்னப் பிரச்னைகளே கொலைகள் வரை போனது. இப்போது நீதிபதி தலைமையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிக்கிறது. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் பிரிவினருடன் திருமண பந்தங்களை செய்துகொண்டால், அது எங்களுக்குள் இருக்கும் கசப்பை குறைக்கும்...'' என்றார் அருந்ததியினர் பிரிவின் நாட்டாண்மை அருள்பாண்டியன்.

மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ''சமாதானப் பேச்சுவார்த்தையில் அவர்கள் கேட்ட கூடுதல் பஸ் வசதி, பள்ளி வசதி போன்றவற்றை நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இரு தரப்பும் மோதலைக் கைவிட்டு, சமாதானமாக வாழ வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதுபோல், வ.புதுப்பட்டியில் இரு தரப்பினரின் பிரச்னையைத் தீர்க்க அங்கு 'இலவச சட்ட உதவி மையம்' விரைவில் ஏற்படுத்தப்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை அங்கு நீதிபதி மற்றும் வக்கீல்கள் சென்று அவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பார்கள். இதற்குப் பிறகும் இரு தரப்பினரும் மோதினால், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்...'' என்றார்.

1955-ல் ஆரம்பித்த சாதித் 'தீ' இந்த 2011-லாவது அணையட்டுமே!

- எம்.கார்த்தி

படங்கள்: எம்.ஜி.மணிகண்டன்


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்