Home » » ‘‘தேவேந்திர இன மக்களுக்கு மரியாதை கொடுத்தால் கூட்டணி!’’-ஜான்பாண்டியன்

‘‘தேவேந்திர இன மக்களுக்கு மரியாதை கொடுத்தால் கூட்டணி!’’-ஜான்பாண்டியன்

Written By DevendraKural on Friday, 4 March 2011 | 03:04

 

''மரியாதை கொடுத்தால் கூட்டணி!''
எட்டாண்டு சிறை வாசத்திற்குப் பிறகு மீண்டும் தேவேந்திர இன மக்களை ஒன்று திரட்டப் புறப்பட்டிருக்கிறார் ஜான்பாண்டியன். அவருடைய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரையில் பிப்ரவரி 27&ம் தேதி விழிப்புணர்வு மாநாடு நடந்தது.

அ.தி.மு.க.வை ஆதரிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியை தனிமைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவோடு அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம், தியாகி இமானுவேல் பேரவை, மள்ளர் இலக்கிய கழகம், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என பல்வேறு அமைப்புகளும் ஜான்பாண்டியனின் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் பேரணியை ஜான்பாண்டியனின் மனைவியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளருமான பிரிசில்லா பாண்டியன் துவக்கி வைத்தார். மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு மேடை ஏறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் ஜான்பாண்டியன்.

'அவர் போகும் இடமெல்லாம் கலவரம் வெடிக்கும்' என்று உளவுத்துறை எச்சரித்தபடியே லாடனேந்தல், மதுரை கோமதிபுரம் ஆகிய இடங்களில் பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் என அரசு ஆணை வெளியிட வேண்டும், தியாகி இமானுவேல் சேகரனுக்கு மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை வெளியீட்டை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜான்பாண்டியனின் அண்ணன் வன்னிய குடும்பன் பேசும்போது, ''மதுரை இதற்கு முன்பு 'மள்ளர் மாநகர்' என்றுதான் இருந்தது. மதுரை மீனாட்சியும் மள்ளி(?)தான்...'' என்று தன் பங்குக்கு சூட்டை கிளப்பினார்.

தியாகி இமானுவேல் பேரவை தலைவர் சந்திரபோஸ் பேசும்போது, ''கோபாலபுரமும் போயஸ் கார்டனும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இங்கே அரசியல் அங்கீகாரத்திற்காக ஒன்றுகூடி இருக்கிறோம். திராவிடக் கட்சிகள் நம் வாக்குகளை திருடுகிறார்கள். தென்தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி தேவேந்திர குல மக்கள் தான். ஆகையால், ஒரு சீட்டு ரெண்டு சீட்டுக்காக நாம் போகாமல் மந்திரிசபையில் ஆதி திராவிட நலத்துறை என்றுதான் இல்லாமல் பொதுப்பணித் துறை வீட்டு வசதித் துறை போன்ற துறைகளையும் நம்முடைய சமூக எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்க வேண்டும்'' என்றார்.

இறுதியாக இரவு 11.30 மணிக்கு மைக் பிடித்த ஜான்பாண்டியன், ''உங்கள் எண்ணப்படியே கூட்டணி அமையும். ஒரு சில அரசியல் சூழ்ச்சிகளால் செய்யாத குற்றத்திற்காக எட்டு வருடம் சிறை தண்டனை அனுபவித்தேன். நம் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இங்கே இருக்கிற தமிழன் தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கான். இதைப் பத்தி கவலைப்படாம ஈழத் தமிழனைப் பத்தி சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று திருமாவை ஒரு பிடிபிடித்தபோது, ''நம்மளும் இதே மாநாட்டில் ஈழத் தமிழின ஒழிப்பைக் கண்டிச்சு தீர்மானம் நிறைவேத்திருக்கோம்ணே' என்று ஓரத்தில் ஓர் முனகல் சத்தம் கேட்டது.

தொடர்ந்து பேசிய ஜான்பாண்டியன், ''நமக்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்தால் கூட்டணி உண்டு'' என தி.மு.க.வை ஒரு அழுத்து அழுத்தி முடித்தார்.

Share this article :

+ comments + 1 comments

15 March 2011 at 23:42

dont worry be happy, nanpenda . ungal veeram ulagirku therium naal vanthu vitathu. by gideon

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்