Home » » எமது உயிரினும் மேலான மள்ளர் பெருங்குடி உறவுகளே!

எமது உயிரினும் மேலான மள்ளர் பெருங்குடி உறவுகளே!

Written By DevendraKural on Monday, 14 March 2011 | 02:32

வணக்கம்!

"வீழ்த்தப்பட்டது நமது மணி முடிதான்! வீறு கொண்டெழும் மள்ளர் பெரும்படையோ இதோ எதிரியை நோக்கி இன்னும் பலமாய் அதிவேகமாய் எரிக்கப்பட்ட சாம்பலிலிருந்து மீண்டெழுந்து கொண்டிருக்கிறது! மள்ளர் பெரும்படையின் போர் முரசுகளின் ஆரவாரங்களில் துரோகிகளின் செவிப்பறைகள் கிழிந்து போகின்றன. அலைகடலென ஆர்ப்பரித்தெழுந்த மள்ளர் படைகளினால் அடி கலங்கி தொடை நடுங்கி அடங்கிப் போகிறது தமிழினப் பகையெல்லாம்! ஆகா…! இச்செய்தி கேட்டு தேனாய் பாய்கிறது; செந்தமிழாய் இனிக்கிறது இதயம்! பட்டுப் போனத் தமிழினத் தலைக்குடிகளின் வாழ்வு தளிர்விடுதல் கண்டு தமிழ்த்தாயும் தன்னுயிர் மீள்கிறாள்!" சட்டென விழித்ததும் கனவு கலைந்து விட்டது. அறிவுக்கண் திறந்து பார்த்தால் ஆர்ப்பரித்தெழுந்த மள்ளர் பெரும்படையெல்லாம் அரசியல்வாதிகளின் அடிமைப் படைகளாய் ஆக்கப்பட்டிருந்தன. வெகுண்டெழுந்த மள்ளர் கூட்டமெல்லாம் பங்கிடப்பட்டிருந்தன பங்காளிச் சண்டைகளினால்!

தலைவனெனத் தனைக்கூறிக் கொண்டவனெல்லாம் தனக்கெனத் தகுதியேதும் கொண்டிருந்தானில்லை. வீழ்த்தப்பட்ட மக்களை மீட்க வீரஞ்செறிந்த பேரறிவு படைத்த பாடுபடும் போராளிதான் தேவையே ஒழிய பசியறியாப் பகட்டுத் தலைவனில்லை. இவர்கள் தம்மண்ணைப் படித்தார்கள் இல்லை. தம்மக்களை அறிந்தார்களும் இல்லை. தம் குல வரலாறு தெரிந்தார்களும் இல்லை. நம் மொழி பற்றி அறிந்தார்களும் இல்லை. ஆனால் தன்னைத் தலைவனாய் மட்டும் நிலைநிறுத்திக் கொள்வதையே தலையாயக் கடமையாய்க் கொண்டிருக்கிறார்கள். தலைவனெனப்படுபவன் வாள் பிடித்து நின்றால் பகை நடுங்க வேண்டும். எழுகோல் பிடித்து வந்தால் சபை நடுங்க வேண்டும்!

ஏய்….! வீழ்த்தப்பட்ட இந்திரகுலமே!

சேர சோழ பாண்டிய மூவேந்தர் மரபினராம் மள்ளர்களை பள்ளர் என ஏசினான். அவன் பகைவன்; வந்தேறி வடுகன். ஆனால் அரசகுடிகளை தேவேந்திரகுல மக்களை தாழ்த்தப்பட்டவனென்றும் தலித்தென்றும் பிற சாதிகளுக்கான இழிவான பெயர்களைக் கொண்டு அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்கள். இவர்கள் நம்குலத் தலைவனெனத் தனைக்கூறிக் கொள்கிறார்கள் – இவர்கள் துரோகிகள்! வீழ்த்தப்பட்ட நம் மக்களின் வீர வரலாறு கூறி எழுச்சி கொள்ளச் செய்து நல் வளர்ச்சி காணச் செய்யும் அறிவு படைத்த தலைவன் வந்தானில்லை! பகைவர்களாலும் துரோகிகளாலும் பலவாறாக ஏசப்பட்டும் பேசப்பட்டும் கிடக்கும் மக்களுக்கு அவர்களின் வீரம் செறிந்த பண்பாடுமிக்க பண்டைய வரலாறுகளைக் கூறி அவர்களின் தாழ்வு மனப்பான்மையை உடைத்தெரிய வேண்டிய தலைவர்களுக்கே வரலாறு தெரியவில்லை. இப்படிப்பட்ட தலைவர்களைக் கொண்டு எவ்வாறு மீண்டெழும் சேர சோழ பாண்டிய பெருங்குடிகள்? வருகின்ற தலைவன் எல்லாம் சோரம் போகிறான்.! சமுதாயத்தை அடகுவைத்து வயிறு வளர்க்கிறான்..! அதனால் தோல்வியையே நிலையாகக் கொண்டிருக்கிறது தேவேந்திரகுலம்.!!!

நெஞ்சிலே பாயும் கேள்விக் கணைகள்

இதற்கு என்னதான் தீர்வு? எப்படி மீட்பது மக்களை? எங்ஙனம் காப்பது நம் மண்ணை? இழந்ததை மீட்க யாது செய்வது? இருப்பதைக் காக்க ஏது செய்வது? எப்படிப் பெறுவது அதிகாரத்தை? எங்ஙனம் மீட்பது நமது பொருளாதாரத்தை? எது நமது வரலாறு? யாது நமது பண்பாடு? எப்படி நிகழ்த்துவது சமுதாய மாற்றத்தை? இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் இந்த அரசியல்வாதிகளையும் தன்னலத் தலைவர்களையும் நம்பி மோசம் போவது?

தீர்வொன்று கண்டோம்…! நாங்கள் யார்?

இக்கேள்விக்கணைகளை நெஞ்சிலே தாங்கி நாளொரு போர் புரிந்து நித்தமொரு சாவு கொண்டிருந்த மள்ளர் குல இளைஞர் கூட்டமொன்று "வெல்க தமிழர் முழக்கம்" எனும் அறிவுத் தளமொன்று கண்டு மள்ளர் பகை நோக்கி போர் முரசு கொட்டத் தொடங்கியிருக்கிறது.

அரசியல் சார்பு அற்று இயங்கும் தமிழர் முழக்கமானது, மள்ளர்குல மக்களிடையே அரசியல் தெளிவு பெறச் செய்வதும் நமது வரலாறுகளைக் கூறி நம் மக்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி தன்னம்பிக்கையை ஊட்டி அவர்களை எழுச்சி கொள்ளச் செய்வதையுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. நம் மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றை ஒவ்வொரு அடித்தட்டு மக்களுக்கும் அளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பாடுபடுவதும், அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதையும் கோட்பாடாகக் கொண்டுள்ளது.

"வெல்க தமிழர் முழக்கம்" எனும் இக்காலாண்டிதழ் படித்த வேலையில் உள்ள மள்ளர்குல பட்டதாரி இளைஞர்களால் வெளியிடப்படுகிறது. இதற்காக மள்ளர்குல பட்டதாரி இளைஞர்களால் "தமிழர் கல்வி அறக்கட்டளை" எனும் அறக்கட்டளை ஒன்றை நிறுவி உள்ளோம். அதில் உள்ள இளைஞர்கள் மாதந்தோறும் ரூ. 200ஐ அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தி அப்பணத்தைக் கொண்டே இவ்விதழை வெளியிடுகிறோம். அது போக மீதத்தில் ஏழை மள்ளர்குல மாணவர்கட்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறோம். அறக்கட்டளை மற்றும் இதழ் இரண்டுமே எந்தவொரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது குடும்பத்திற்கோ சொந்தமுடையது அல்ல. அது அனைத்து மள்ளர்குல உறவுகளுக்கும் உரிமையுள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வறக்கட்டளையானது அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கைமாறிச் செல்லும்படியாக சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு தனி நபரோ அல்லது குடும்பமோ எக்காலமும் இவ்வறக்கட்டளையை மள்ளர் குலத்தவரின் பொதுவான சொத்திலிருந்து பிடுங்கிக் கொள்ள இயலாது.

எமது உறவுகளிடம் வேண்டுவதென்ன?

நெல்லின் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, நிர்வாக மாற்றத்திற்கான இவ்விதழை, ஏதோ நான்கு பேர் சென்னையில் இதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள் என்று தவறாக எண்ணி விடாதீர்கள் உறவுகளே! எங்களின் உள்ளக்குமுறலையும் இன வேட்கையையும் புல்லென மதித்து விடாதீர்கள் சொந்தங்களே! இந்திர குலத்தின் இன்றைய நிலைகண்டு தீக்குச்சியாய் எரிந்து கொண்டிருக்கிறோம்! இப்பொறியை பெரும் நெருப்பாய் மாற்றி தேவேந்திரகுலம் முழுமையையும் இனவேட்கை பற்றி எரியச் செய்வது அனைத்து சிற்றூர்களிலும் உள்ள ஒவ்வொரு இளைஞனின், ஒவ்வொரு மாணவனின் கடமையாகும். தமிழர் நாட்டின் அனைத்து சிற்றூர்களிலும் உள்ள மள்ளர்குல அடித்தட்டு மக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாடே நம் சமூகத்தின் ஒட்டுமொத்த நிலையான மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவும் என்பதை நாங்கள் மிகத் தெளிவாகவே அறிவோம்.

சற்று வசதி படைத்த மக்கள் குறைந்தது 5 ஆண்டுச் சந்தா (ரூ. 500)ம், சாதாரண மக்கள் குறைந்தது 2 ஆண்டுச் சந்தாவும் (ரூ. 200) வழங்கிடின் பேருவுவகை அடைவோம். தங்கள் பங்களிப்பின் ஒவ்வொரு பைசாவும் ஒட்டுமொத்த மள்ளர் குலத்தில் எதிர்கால வளமைக்கே செல்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். எங்களின் கணக்கு வழக்குகள் அத்தனையும் வெளிப்படையானவையே. இன உணர்வு கொண்ட இளைஞர்களும் மாணவர்களும் தங்களின் பகுதிகளில் இருந்து கொண்டே பகுதி நேரச் சமுதாயப் பணியாற்ற வீறு கொண்டு எழுந்திடுக என அறைகூவல் விடுக்கிறது "வெல்க தமிழர் முழக்கம்". தங்களின் இப்பங்களிப்பைக் கொண்ட அடுத்தடுத்த இதழ்களை மிகச் சிறப்பாக மேம்படுத்திட இயலும். நமது அறக்கட்டளையில் உறுப்பினர், துணை அறங்காவலர், இணை அறங்காவலர், அறங்காவலர் பொறுப்புகளில் உங்கள் பகுதிகளில் இருந்து கொண்டே பணி செய்வதற்கு ஆர்வமுள்ள இளைஞர்களை வரவேற்கிறோம்.

மள்ளர் பெருங்குடி இளைஞர்களே! மாணவர்களே! வீழ்த்தப்பட்ட இந்திரகுலம் மீட்க வீறுகொண்டு எழுந்து வா! சமூகக் கடமையாற்ற உங்களால் இயன்ற பணிகளைச் செய்ய ஒற்றுமையாய் தோளோடு தோள் கொடுத்து நிற்போம்! அறிவுச்சுடர் ஏந்தி வா! அறியாமை இருள் போக்கவா! எழு எழுகவே மள்ளர் படை! நடுநடுங்கவே தமிழர்பகை!!

நன்றி! வணக்கம்! 

செல்லப்பாண்டி கா

சிறப்பாசிரியர்,

 வெல்க தமிழர் முழக்கம்.

DYWA


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்