''மரியாதை கொடுத்தால் கூட்டணி!'' எட்டாண்டு சிறை வாசத்திற்குப் பிறகு மீண்டும் தேவேந்திர இன மக்களை ஒன்று திரட்டப் புறப்பட்டிருக்கிறார் ஜான்பாண்டியன். அவருடைய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரையில் பிப்ரவரி 27&ம் தேதி விழிப்புணர்வு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:- தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஜனார்த்தனன் தலைமையிலான கமிசன் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர்கள் என்று கூறாமல் பட்டியலின மக்கள் என்று அழைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு தேவேந்திர குல மக்கள்தான் அதிக அளவில் நிலத்தினை வழங்கியுள்ளனர். எனவே விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை சூட்டுவதுடன், அவரது நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு அனைத்து நிலை பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் தனியார் துறையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐந்தாண்டு திட்டத்தில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இதனை இந்த மாநாடு கண்டிக்கிறது. இந்தியா-இலங்கை இடையிலான சர்வதேச எல்லைக்கோடு பிரச்சினை காரணமாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும் கச்சத்தீவினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மாத வருமானத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆய்வு கமிசனை அமைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 ஓய்வூதியம் வழங்குவதுடன், விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். பட்டியல் இன மக்களின் 18 சதவீத இடஒதுக்கீட்டினை இன்றைய மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். இயற்கை வளங்களை பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். விவசாயிகளின் துன்பத்தை போக்கும் வகையில் நதிநீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தொண்டர்களின் பேரணி நடந்தது. பேரணியை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பார்வையிட்டார். |
Home »
» ‘‘தேவேந்திர இன மக்களுக்கு மரியாதை கொடுத்தால் கூட்டணி!’’-ஜான்பாண்டியன்