Home » » என் மனைவி - உமாசங்கர், ஐ.ஏ.எஸ்

என் மனைவி - உமாசங்கர், ஐ.ஏ.எஸ்

Written By DevendraKural on Friday, 4 March 2011 | 03:31

அதிகார அரசியலுக்கு வளைந்து கொடுக்காமல், நிமிர்ந்து நின்று கொண்டிருக்கும் மனிதர் உமாசங்கர், ஐ.ஏ.எஸ்! அத்தகைய இரும்பு மனிதன், தன் இனிய இதயத்தில் குடியிருக்கும் ராணி பற்றி பேசும்போது, தன்னை ராஜாவாக உணர்கிறார். அழகாக இருக்கிறது அன்பினால் எழுந்த அவர்களின் அரண்மனை!

''மிகவும் அன்பால் ஆழ்ந்த சிறுபிராயம் என்னுடையது. எட்டு பேர்களோடு பிறந்தவன் நான். சகிப்புத் தன்மையும், அன்பும், பொறுமையும், கல்வியும் இயல்பாக அமைந்த குடும்பச் சூழல். பாளையங்கோட்டையில் எப்போதுமே தூக்கலாக அமைந்திருக்கும் கல்வி மேம்பாடு, என்னையும் தூண்டியது. மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ்.. வங்கி வேலை... இவற்றைத் தொடர்ந்து ஐ.ஏஸ்.எஸ். பரீட்சை எழுதி தேர்வும் ஆனேன். இரு வீட்டுப் பெரியவர்களின் விருப்பத்தின்படி சென்னை, சட்டக்கல்லூரி மாணவியான சூர்யகலாவுக்கு 1992-ல் இந்த உமாசங்கர் கணவனானேன்!

மாமனார் காசிபாண்டியன், ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். பணி ஓய்வு பெற்ற பிறகும் வீட்டின் தவணைத் தொகையை வங்கியில் செலுத்திக் கொண்டிருந்த நேர்மையாளர், என் மானசீக குரு. இன்றைக்கு நான் இப்படி இருப்பதற்கும், சுய மதிப்பீடு செய்வதற்கும் காரணமானவர். அறிவுரை சொல்லாமல், சிந்திக்கத் தூண்டியவர். அத்தகைய சூழலில் வளர்ந்து வந்ததால் சூர்யகலாவும் அப்படியே இருந்தார்.

நேர்மையற்ற அதிகாரிகளின் பிரதிநிதிகளாக நின்று, பணத்தைப் பெற்றுக் கொள்வது அவர்களுடைய மனைவிகள்தான். 'அம்மாவை பார்த்துச் சரிசெய்தால் போதும்' என்ற அவலத்துக்கு இதுதான் அடிப்படை. என் மனைவி சூர்யகலா அதுமாதிரி எந்தக் கணமும் என்னைத் தூண்டியதில்லை. பணத்துக்கு ஆசைப் படாத மனைவி கிடைத்திருப்பது கூடுதல் வரம்.

மயிலாடுதுறை, திருச்சி, மதுரை என ஒவ்வொரு தடவையும் ஆள்பவர்களால் பதவியிலிருந்து அநியாயமாக பணிமாறுதல் செய்யப்பட்டபோது... 'இனியும் பொறுப்பதில்லை' என என்னை முடிவு எடுக்கத் தூண்டியது... சூர்யாதான். நேர்மையும், உண்மையும் எனது போர்வாளாக ஆனபோது, அதை ஆமோதித்ததும் அவர்தான். அநீதிக்கு எதிராக நான் போர் தொடுக்க ஆரம்பித்ததும் அவரது ஆவேசத்தைப் பார்த்துதான். சுப்ரீம் கோர்ட் வரை நீதி கேட்க வைத்ததும் என் மனைவியின் விடாப்பிடியான முயற்சிதான். பொய் வழக்கில் சிக்க வைத்த ஆளும் வர்க்கத் துக்கு சிம்ம சொப்பனமாக என்னை மாற்றியதும் அவர்தான்.

எங்களின் இல்லறம் இனிமையானது. வெளிப்படையானது. ஒவ்வொரு வாரமும் எவ்வளவு வேலையிருந்தாலும் அந்த வாரத்தின் நல்லது கெட்டதுகளை உட்கார்ந்து பேசித் தீர்க்கிற மனசு எங்களுடையது. எவ்வளவு வேலை இருந்தாலும் அது தவறுவதேயில்லை. பெரும்பாலான குடும்பங்களில் அமைதியற்ற சூழலும், பிள்ளைகள் பாதை தவறிப்போவதும் குடும்ப அமைதியின்மை யினால்தான். ஆனால், நிச்சயமாக வாரம் ஒரு முறையாவது குடும்பத்துடன் இப்படி 'குவாலிட்டி'யாக செலவழிப்பது வாழ்க்கையைச் சுலபமாக நடத்திச் செல்ல உதவுகிறது. 'நேரமில்லை' என்பது சும்மா வெற்றுப்பேச்சு. நேரம் ஒதுக்கி, பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதால் ஏற்படும் சௌகரியத்தை, அதைச் செய்து பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

என் மகன் சுகீஸ்வரன் பதினோராவது படிக்கிறான். மகள் தருணீகா எட்டாவது படிக்கிறாள். அவர்களின் கவனமான வளர்ப்புக்கு நாங்கள் இரண்டு பேரும்தான் பொறுப்பு. நான் வேலைக்குச் செல்வதால், குழந்தைகளின் வளர்ப்பு முழுவதும் அவர் தோளில் என்று நான் விட்டுவிடுவதில்லை. சூர்யாவும் அதை அனுமதிப்பதில்லை. எல்லாவற்றிலும் இருவருக்குமே சரிசம பங்கு இருக்கிறது என்பதில் எங்கள் இருவருக்குமே மாற்றுக்கருத்து இல்லை.

வாரத்துக்கு ஒரு தடவையாவது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியில் போய் விடுவோம். கடற்கரையின் ஈரப்பரப்பில் கால் நனைத்து, பேசித் திரிந்துவிட்டு வருவோம். வெறும் சந்தோஷமான பேச்சுக்கள்தான். அதில் என் வேலைப் பளுவும், குழந்தைகளின் பாடங்களும் இடம் பெறாது.

குழந்தைகளுக்கு நாங்கள் எந்த ஆடம்பரத்தையும் காட்டித் தருவது கிடையாது. எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் காரிடாரிலும் எங்கள் கார் நின்றது கிடையாது. எந்த கிளப்பிலும் நாங்கள் உறுப்பினராக இல்லை. குழந்தைகளை ஆடம்பரத்தின் எந்த இழைகளையும் ருசி பார்க்க விட்டது கிடையாது. அவர்களுக்கு செல்போன் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. ஃபேஸ்புக்கில் இடம்பெற அவர்களை அனுமதிப்பதும் இல்லை. இவையெல்லாம் சூர்யாவும் நானும் சேர்ந்தே எடுத்த முடிவுகள்தான். தனியாக இ-மெயில் வைத்துக்கொள்ளக் கேட்கிறார்கள், யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளுக்கு பாக்கெட் மணி வைத்துக் கொள்கிற பழக்கத்தை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. அதேமாதிரி பைக் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கவில்லை. பஸ்ஸில் பயணம் செய்து பள்ளிக்குச் சென்றாலே போதுமானது. இந்த மாதிரியான கட்டுப்பாடுகளினால் அவர்கள் உயர்ந்து வருவதை நாங்கள் உணர்கிறோம். பிள்ளைகள் மேல் நம்பிக்கை இல்லை என்பதாக இதற்கு அர்த்தம் காண வேண்டியதில்லை. குழந்தைகள் பயில்வதற்கான நல்ல சூழல் இதுதான். நம்மைப் பார்த்துதான் நம் குழந்தைகள் வளர்கிறார்கள். அதற்கான சூழலை நாங்கள் இருவரும் இணைந்து தருகிறோம். கண்டிப்பு இருக்கிற சூழலில் அன்பையும் தந்து முன்னதை மறக்க வைக்கிறோம்.

தொலைக்காட்சியில் தொடர்களைப் பார்க்க நாங்களோ, குழந்தைகளோ விரும்புவதில்லை. செய்திகளைப் பார்ப்பதற்கு மட்டுமே எங்கள் வீட்டில் டி.வி. இருக்கிறது. சீரியல்களிலும், அருவருப்பான ஆட்டம் பாட்டத்திலும் குழந்தைகள் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்பதில் நானும் சூர்யாவும் மட்டுமல்ல... குழந்தைகளும்கூட தெளிவாகவே இருக்கிறார்கள்.

பெரும்பாலும் சினிமாவுக்கான காரணமாக பெண்களைத்தான் கை நீட்டுவார்கள். ஆனால், அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. காரணம்... சினிமாவுக்குச் செல்லவேண்டும் என்று ஒருநாளும் சூர்யா கேட்டதில்லை. ஆண்டில் 2 தமிழ் சினிமா பார்த்தாலே எங்களுக்கு அதிகம்.

இப்படி அழகான, அமைதியான, அர்த்தமுள்ளதான குடும்பமாக எங்கள் குடும்பம் மிளிர்வது, சூர்யகலா இல்லாமல் சாத்தியமே இல்லை. 'எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கி' எனச் சொல்வார்கள். நானும் என் குழந்தைகளும் சூர்யகலாவின் நிழலில்தான் இருக்கிறோம்.  எங்கள் எல்லோருக்குமான இனியவள்தான்... என் மனைவி!

சந்திப்பு: நா.கதிர்வேலன்
படம்: என்.விவேக்


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்