Home » » ஊழலுக்கு எதிரான மசோதா: ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரதம் நீடிப்பு

ஊழலுக்கு எதிரான மசோதா: ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரதம் நீடிப்பு

Written By DevendraKural on Wednesday, 6 April 2011 | 22:00

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவின் வரைவுப் பணியில் சாமானியர்களுக்கான பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரி, பழம்பெரும் சமூகப் போராளியும், காந்தியவாதியுமான் அண்ணா ஹசாரே டெல்லியில் இரண்டாவது நாளாக புதன்கிழமை தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார்.

72 வயதான அண்ணா ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதா வரைவு பணியில் முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள் மட்டும் இடம் பெறாமல், சாமானிய மக்கள் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் 50 சதவீத இடம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

தனது கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ், ஹசாரேவின் இந்த உண்ணாவிரதம் தேவையற்றது என்று விமர்சித்திருந்தது.

இந்நிலையில், உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாளில், மக்களை திசைத் திருப்பும் நோக்கத்துடன் தன்னை காங்கிரஸ் கட்சி விமர்சிப்பதாக சாடினார்.

மேலும், தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று அவர் உறுதிபட கூறினார்.

முன்னதாக, பிஜேபி தலைவர்கள் மேனகா காந்தியும், பிரகாஷ் ஜவதேகரும் ஹசாரேவை செவ்வாய்க்கிழமை சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அதேபோல், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவும் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.

தனக்கு பிஜேபி ஆதரித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஹசாரே, 'பிஜேபி தொடங்கியுள்ள ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆதாய நோக்கு கொண்டது. நான் தேசிய அளவில் போராட்டத்தைத் தொடங்கிய பிறகு, அதில் பிஜேபி ஆதாயம் அடையப் பார்க்கிறது. எனினும், எந்த அரசியல் கட்சிக்கும் அவர்கள் விருப்பப்படி செயல்பட சுதந்திரம் உள்ளது,' என்றார்.

மேலும், பிஜேபி அரசில் ஊழலுக்கு எதிராக நான் போராடியபோது, என்னை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது," என்று அவர் குறிப்பிட்டார்.

மொய்லி கருத்து...

ஹசாரேவின் இந்தப் போராட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, ஊழலுக்கு எதிரான மசோதா குறித்த கருத்துகளை பெறுவதில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்