Home » » தமிழக சட்டமன்றத் தேர்தல்! அனல் பறக்கும் பிரச்சாரப் போர்

தமிழக சட்டமன்றத் தேர்தல்! அனல் பறக்கும் பிரச்சாரப் போர்

Written By DevendraKural on Sunday, 10 April 2011 | 09:18

மறைந்த முன்னாள் முதல்வரும், பிரபல்யமான நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கென்றே பிரத்தியேகமாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் திமுகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பட்டி தொட்டியெல்லாம் சென்று திமுகவுக்கு ஆதரவு தேடினார்.

கலைஞரின் நடவடிக்கைகளினால் விரக்தியடைந்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற கட்சியை 1972-ஆம் ஆண்டு தொடங்கினார். 1977-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர், 1987-ஆம் ஆண்டில் மரணமடையும் வரையில் முதல்வராக இருந்தார். எம்.ஜி.ஆரின் பாணியையே பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் பின்னர் பேணத்தொடங்கினர்.

எம்.ஜி.ஆர் மரணமடைந்த பிறகு நடிகையாக இருந்த ஜெயலலிதா அதிமுகவை தனது கட்சியாக்கிக் கொண்டார். இவரைத் தொடர்ந்து பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் அரசியலுக்குள் புகுந்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனல் பறக்கும் பிரச்சாரம் மூலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பலத்தை தமிழகத்தில் இல்லாமல் செய்துவிட முடியாது என்கிற நிலையை உருவாக்கியுள்ளது.

மறைந்த எஸ்.எஸ்.சந்திரன், நெப்போலியன், சரத்குமார், சந்திரசேகர், எஸ்.வி.சேகர், பாக்கியராஜ், குஷ்பு, ரோஜா, விஜயகாந்த், கார்த்திக், விஜய், வடிவேலு, மன்சூர் அலிகான், பொன்னம்பலம், சிங்கமுத்து என பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பிரச்சாரங்கள் தமிழக மக்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

விஜயகாந்த், விஜய், கார்த்திக், குஷ்பு போன்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளை வாழ்நாளில் எப்போதாவதொரு நாள் தரிசனம் செய்துவிட வேண்டுமென தவம் கிடக்கும் பாவப்பட்ட தமிழ்ச் சாதிக்கு நிச்சயம் இவர்களின் அரசியல் பிரச்சாரங்கள் அவர்களின் வாழ்நாளில் கிடைத்த பெறுபேறாகவே எண்ணுவார்கள்.

இரு பிரதான கட்சிகளும் தாராளமாகவே நடிகர்கள் மற்றும் நடிகைகளை பிரச்சாரத்திற்கு பாவிக்கிறார்கள். தமிழ்ச் சினிமாவில் சண்டை சச்சரவில்லாமல் ஒன்றாக நடித்தவர்களெல்லாம் எதிரும் புதிருமாக நின்றுகொண்டு பிரச்சாரங்களைச் செய்கிறார்கள். நாகரிகமற்ற முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். இவர்களை தட்டிக் கேட்க துப்பில்லாமல் அங்கலாய்க்கிறார்கள்.

இரு பிரதான கட்சிகளின் தலைவர்களும். தட்டிக்கேட்டால் தமக்கெதிராகவே பிரச்சாரத்தைச் செய்துவிடுவார்களென்றோ என்னவோ எதைச் சொன்னாலும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் குறித்த மானசீக அரசியல் தலைவர்கள்.

விஜயகாந்தை விளாசித்தள்ளும் வடிவேலு

நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். வடிவேலுவின் இந்த விமர்சனத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஒரு இடத்தில் வடிவேலு பேசுகையில், "நேற்று ஒருவர் கட்சியை ஆரம்பித்துவிட்டு, நாளைக்கு முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். என்னவென்றால் அவர் கல்யாண மண்டபத்தின் இடையில் இரண்டு தூண் வந்துவிட்டதாம். அதற்கு ஒரு கட்சியை ஆரம்பித்து, நான் அடுத்த முதல் அமைச்சர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. அந்த பதவி என்ன சாதாரண பதவியா?"

வடிவேலு மேலும் பேசுகையில், "ஒருத்தர் என்னிடம் கேட்டார். ஏங்க அவர (விஜயகாந்த்) எதிர்த்து நிற்க போறேன் என்று சொன்னீர்களே, நிற்க போறீங்களா என்றார். அவரை எதிர்த்து நின்றால் எனக்குத்தான் கேவலம். மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட் வாங்க போனீர்களே. அங்க என்ன முதல் அமைச்சர் பதவி கொடுப்பார்களா. மிகப்பெரிய வீராப்பா பேசினீங்க. அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. நாக்கு மூக்காவா, மூக்கு முக்காவா, தேக்கு மூக்கா ஏதோ சொல்றாங்க. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கறுப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கறுப்பு எம்ஜிஆர் என்றால் நான் கறுப்பு நேரு." இப்படியாக விளாசித்தள்ளுகிறார் வடிவேலு.

இன்னொரு இடத்தில் விஜயகாந்தை தாக்கிப் பேசும்போது வடிவேலு கூறுகையில், "கட்சி ஆரம்பிச்சு அஞ்சு வருஷம்தான் ஆகுது. ஆனால் அஞ்சுமுறை முதல் அமைச்சரா இருந்த கலைஞரை ஒழிப்பேன் என்கிறார். வயது வித்தியாசம்தான் பார்க்க வேண்டாமாய்யா? கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம். கடமை இருந்தால் வீரன் ஆகலாம். பொறுமை இருந்தால் தலைவர் ஆகலாம். இந்த மூன்றும் அவரிடம் இல்லையே!"

அதிமுக கூட்டணியிலுள்ள விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவை ஆதரித்து இன்னொரு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேசுகையில்,

"விலைவாசியை குறைக்கத்தான் ஜெயலலிதா தலைமையில் விஜயகாந்த் கூட்டணி அமைத்துள்ளார். அம்மா சொன்னாங்க தொலை நோக்கு பார்வையோடு வருமானம் வருகிறமாதிரி திட்டம் தீட்ட வேண்டுமென. அதனால்தான் மக்களின் வருவாயை பெருக்கக்கூடிய ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். விஜயகாந்த்தை திட்ட உனக்கு எந்தத் தகுதியும் கிடையாது. திருமாவளவனும், ராமதாசும் குஷ்புவை தமிழகத்த விட்டே விரட்டணுமென்று சொன்னாங்க. இப்ப அவங்களே ஓட்டு கேட்க சொல்றாங்க. சின்ன கவுண்டர்ல கேப்டனுக்கு கால் அமுக்கி விட்டவர் வடிவேலு. நாங்க செஞ்ச பாவம், ஒண்ணும் தெரியாத வடிவேலுவுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது தான்."

அரசியல் நாகரிகத்தை பேணுவது முக்கியம்

கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களோ அல்லது தமக்கு ஆதரவாக தரக்குறைவான வார்த்தைகளில் பேசுபவர்களை கண்டிக்காமல் இருக்கிறார்கள் இரு பிரதான கட்சித் தலைவர்களும். வேதனையிலும் வேதனை என்னவென்றால் தனி நபர்களை தரக்குறைவான வார்த்தைகளினால் பேசுவதை இவ் நாகரிக உலகில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொது வாழ்க்கையில் ஈடுபடும் எவரையும் அவர்கள் பொது வாழ்வில் எதையாவது தவறாக செய்திருந்தால் அதனை சுட்டிக்காட்டலாம். அதனூடாக குறித்த நபர் தான் செய்த பிழைகளை மறுபடியும் செய்யாமல் தடுக்க உதவும். அதைவிடுத்து தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளரை அடித்த சம்பவம் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது. தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விஜயகாந்த் திறந்த ஊர்தியில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர் தனது பெயரை பாஸ்கர் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே சரமாரியாக அடித்தார். பெயரை மாற்றி சொன்னதை சுட்டிக்காட்டிய வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சொந்தக் கட்சி வேட்பாளரையே விஜயகாந்த் அடித்தது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்படியான அநாகரிகமான செயல்களை ஆதரிப்பது மடத்தனமானது. கூட்டணியின் தலைவியான ஜெயலலிதா இதுபற்றி வாயே திறக்கவில்லை.

இன்னுமொரு சம்பவத்தை சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. சென்னை தாம்பரத்தில் பிரச்சாரம் செய்த நடிகர் வடிவேலு பேசுகையில், "கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு லூசு வந்திருக்கு. அது என்ன சொல்லுது. நாடு சரியில்ல… ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு, நான் நாட்டு மக்களுக்கு விடுதலை வாங்கித் தரப்போறேன்னு சொல்லுது. என்ன இப்ப வெள்ளைக்காரன் பிரிட்டிஷ் ஆட்சியா நடந்துக்கிட்டிருக்கு. நீ விடுதலை வாங்கித் தர்றதுக்கு.

அந்த லூசு முதல்ல என்ன சொல்லுச்சு. நான் மக்களோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. தெய்வத்தோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. இப்ப நீ எங்க போய் கூட்டணி சேர்ந்திருக்க. சீட்டுக்காக போய் சேர்ந்திருக்க. அது சீட்டுக்காக சேர்ந்த அணி அல்ல. சீட்டிங் அணி. காசு வாங்கிட்டு போய் சேர்ந்திருக்க நீ, பிளடி ஃபூல். யார ஏமாத்துற நீ, மொதல்ல என்ன சொன்ன நீ. 30,40க்கு போறதெல்லாம் எலும்பு பொறுக்குற நாய். அது நான் இல்லன்னு சொன்னீல்ல. இப்ப 41 எலும்பு துண்டு வாங்கியிருக்க. அதுக்கு பேரு என்ன?, நீதானே சொன்ன. 30,40 வாங்குறதுக்கு நான் நாயில்லன்னு. கூட்டணி ஏன் சேர்ந்தீங்கன்னு பத்திரிக்கைகாரங்க கேட்குறாங்க. அதுக்கு நீ என்ன சொல்லுற. இப்ப கூட்டணி சேரனுங்குறது அவசரம்னு சொல்லுற. என்ன கக்கூஸ் போற அவசரமா?"

வடிவேலுவின் இதுபோன்ற நாகரிகமற்ற பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசுவது அருவருக்கத்தக்கதொன்று. திமுகவின் தலைவர் கலைஞரின் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும் வடிவேலு போன்றவர்களின் அநாகரிக வார்த்தைகளை தமிழின் காவலன் என்று தம்பட்டம் அடிக்கும் கலைஞருக்கு தமிழ் மொழியையே கேவலப்படுத்துமளவு பேசும் வடிவேலு போன்றவர்களை தண்டிக்காமல் இருப்பது கலைஞரின் சிந்தனை என்ன என்பதைக் காட்டுகிறது.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கொக்கரிக்கும் தலைவர்கள் குற்றவாளிகளுக்கே துணையா நிற்பது தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடே.

எம்.ஜி.ஆர் போன்று தாமும் ஏதாவதொரு கட்சியுடன் இணைந்து பிரச்சாரம் செய்வதனாலையோ அல்லது கூட்டணிக் கட்சிகளாக இணைவதனாலையோ என்றோ ஒரு நாள் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிடலாமென்று மனப்பால் குடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நாகரிகமான முறையில் அரசியல் நடத்துவதே நல்லது.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்கிற நிலை பல நாடுகளில் நிலவுகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சினிமா மோகம் என்பது இன்று நேற்றல்ல பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. நடிகர்கள் மற்றும் நடிகைகள் இல்லை என்றால் தமிழக அரசியல் சக்கரம் இயங்காது என்கிற நிலை வந்துவிட்டது. யார் வந்தாலென்ன, தமிழக மக்களுக்கு விருந்தளிக்க தினம் ஒரு படத்தை வெளிக்கொண்டுவந்தால் தமிழக மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் எல்லாம் பறந்தோடி விடும் என்று கருதும் மக்கள் இருக்கும்வரை யாராலும் இவர்களைத் திருத்த முடியாது.

-இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் வளரும்

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்