Home » » யார் இந்த அண்ணா ஹசாரே ?

யார் இந்த அண்ணா ஹசாரே ?

Written By DevendraKural on Wednesday, 6 April 2011 | 22:09


முனைவர் கிசான் பாபுராவ் ஹசாரே ஜூன் 15, 1938-யில் மராத்திய மாநிலத்தில் பிறந்தவர். இன்று அனைவராலும் அண்ணா ஹசாரே என அழைக்கப்படும் இவரின் ஆரம்பக் கால வாழ்க்கை சுவையாக இருக்கவில்லை என்பதே உண்மை. நான் ஏன் வாழ வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என வெறுப்பின் உச்சத்தில் ஒருமுறை தற்கொலை செய்யும் முடிவில் இரண்டுப் பக்கத்துக்கு தான் ஏன் தற்கொலை செய்யப் போகின்றேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அம்முயற்சி கைக்கூடவில்லை.

அவரது வாழ்வின் மாற்றம் எப்போது ஏற்பட்டது என்றுப் பார்த்தால் ஒரு முறை புதுதில்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தப் போது சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றினை அவர் படிக்க நேர்ந்தது. அந்தப் புத்தகம் அவரை மிகவும் ஈர்த்துவிட்டதாம், அந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட ஒரு வாசகம் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றிவிட்டது. வாழ்வின் நோக்கமே பிறருக்கு உதவுவதே என்பதே அவ்வாசகம் ஆகும்.

இன்று அண்ணா ஹசாரே இந்தியாவின் ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் மாபெரும் நபர் ஆவார். அவர் சமூகத்தின் அனைத்து முட்டுகளில் முட்டி மோதியவர். உயர்பதவிகளில் இருக்கும் பலரை எதிர்த்து முழங்கியவர். வெகுசன மக்கள் பலர் ஆயிரக்கணக்கானோர் அவருக்காக ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றார்கள்.

இப்படி போராடுவது அவருக்குப் புதிதல்ல. இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் தான் அண்ணா ஹசாரே. 1962யில் இந்தோ – சீன யுத்தத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் படி அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி தம்மை இராணுவத்தில் இணைத்துக் கொண்டவர் அண்ணா ஹசாரே.

ஆனால் இராணுவத்தில் அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. தமது வாழ்வின் நோக்கம் என்ன் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், தானாகவே தமது இராணுவப் பணிக்கு விடை சொல்லிவிட்டு மராத்தியத்தில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகாவன் சித்திக்கு 1978-ம் ஆண்டு தனது 39-ஆவது வயதில் திரும்பினார்.

அப்போது தான் தமது கிராம மக்கள் தமது வாழ்க்கையை வாழவே துன்பப் படுகின்றார்கள் என்பதைக் கண்டு துடி துடித்தார். அவர்களின் வாழ்வை மாற்ற, துன்பத்தைத் துடைக்க உலகிலேயே முன்மாதிரியான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி பெரும் சாதனை புரிந்தார்.
 

இன்றளவும் அக்கிராம மக்கள் அண்ணா ஹசாரேவின் சாதனையை நினைவுக் கூர்ந்து வருகின்றார்கள். அத்தோடு மட்டும் நிற்காமல் தமது கிராமத்து மக்களுக்காக அனைத்து வசதிகளையும் அரசிடம் பெற்றுத்தர முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அது அவ்வளாவு எளிதாக இருக்கவில்லை. லஞ்சமும், ஊழலும் ஏழை எளியவர்களை துரத்தியது. அரசுக் கொடுக்கும் குறைந்தப் பட்ச உதவிகள் கூட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது கண்டு வெகுண்டு எழுந்தார் ஹசாரே.

இப்போது தான் முதன் முறையாக லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை ஹசாரே தொடங்கினார். இந்த லஞ்சம் தான் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதை உணர்ந்த அவர் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்ற அமைப்பை நிறுவி போராட ஆரம்பித்தார். காந்திய வழிகளிலான அவரதுப் போராட்டம் உண்ணாவிரதம் இருப்பதும், அரசியல் வாதிகளை குறிவைப்பதுமாகவே இருந்தது.

குறிப்பாக அவரதுப் போராட்டத்தைக் கண்டு மிரண்ட மராத்திய சிவசேனை- பிஜேபி அரசு அவருக்கு சொல்ல முடியாத துன்பங்களைக் கொடுத்தன. ஆனால் அவரது போராட்டத்தின் உக்கிரம் தாங்க முடியாமல் 1995-1996 களில் ஊழல் செய்த சிவசேனை – பிஜேபி மந்திரிகளை பதவி இறங்க வைத்தார். அத்தோடு நிற்காமல் 2003-யில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசின் நான்கு மந்திரிகள் செய்த ஊழலுக்கு எதிராக மாநில அரசை வைத்தே விசாரணைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வைத்தார். ஒரு தனி மனிதனாக இவரதுப் போராட்டம் வலிமையானது ஒரு வேளை காந்தியடிகள் உயிரோடு இருப்பாராயின் இதனைத் தான் செய்திருப்பார் என்பது நிச்சயம்.

மராத்த மாநிலத்தின் அரசியல் வாதிகளான பால் தாக்கரே, சரத் பவார் போன்றோரை கதி கலங்க வைத்தவர் ஹசாரே. அவர்கள் ஹசாரேவின் செயல்களை மிரட்டல் தனம் என கடிந்துரைத்து இருப்பதே ஹசாரேவைக் கண்டு அவர்கள் எப்படி அஞ்சுகிறார்கள் என்பதனை உணர்த்துகின்றது.

இன்று தகவல் அறியும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஹசாரவின் மாபெரும் போராடமும் ஒரு முதன்மையான காரணம். ஓய்வு என்பதை சிறிதும் அறியாத ஹசாரே இப்போது எடுத்துள்ள மாபெரும் ஆயுதம் நாற்பது ஆண்டுகளாக அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்டு வரும் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றும் போராட்டம் ஆகும். சிலர் இந்த மசோதாவால் ஒன்றையும் சாதிக்கமுடியாது எனக் கூறினாலும், பல மனித உரிமை, மக்கள் இயக்கங்கள் இதனை நிறைவேற்ற நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த மசோதா இந்திய தேசத்தின் மாபெரும் ஊழல் மலைகளை தகர்த்து எறிய முதல் அடியாக இருந்தாலும் நமக்கு அது மாபெரும் வெற்றியே ஆகும்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் 72 வயது அண்ணா ஹசாரே தில்லியில் நேற்று முதல் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். நமது நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை ஒழிக்க ஒரு உன்னத வாழும் காந்தியின் உயிர் நமக்கு மிகவும் முக்கியம். நாம் ஒவ்வொருவரும் பேடிகளாய் இருந்து வாழும் காந்தியின் உயிரைக் குடித்து விடாமல் அவரது இம்மாபெரும் போராட்டம் வெற்றியடைய நமது முழு சக்தியையும், உழைப்பையும் கொடுக்க முன் வர வேண்டும். வெகு விரைவில் நானும் தில்லி திரும்ப இருப்பதால் இப்படியான போராட்டங்களில் நேரிடையாக கலந்துக் கொள்ளும் பாக்கியம் பெறுவேன் என நினைக்கின்றேன். அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு முன் நாம் இது வரை வாழ்வில் சாதித்து விட்டவைகள் எல்லாம் ஒரு தலைமுடிக்கு சமானம்.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்