Home » » ''ரிசர்வ் தொகுதிகளுக்கு தனித் தேர்தல்..''

''ரிசர்வ் தொகுதிகளுக்கு தனித் தேர்தல்..''

Written By DevendraKural on Friday, 15 April 2011 | 04:19

தேர்தலில் எந்தக் கூட்டணி ஆட்சி​யைப் பிடிக்குமோ?ஆனால், யார்

ஜெயித்தாலும் தோற்றாலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கோட்டாவில் 46 எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றம் செல்வது உறுதி! இந்த நிலையில், ''ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சட்டமன்றம் செல்லும் ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ-க்கள், தங்கள் இனத்துக்காக இதுவரை செய்த சாதனை என்ன? இன்னும் எத்தனை காலம்தான் இவர்கள் செயல்களிலும் 'ரிசர்வ்' ஆகவே இருக்கப் போகிறார்கள்?'' என்று கோபமாகக் கேட்கிறார், தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 'எவிடென்ஸ்' அமைப்பின் செயல் இயக்குநர் கதிர். 

''தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏ-க்களில் 19.6 சதவிகிதம் பேர் ரிசர்வேஷன் கோட்டாவில் வருபவர்கள். 44 பேர் ஆதி திரா​விடர்கள், இருவர் பழங்குடியினர். கோட்டா சிஸ்டத்தில் வந்த இவர்கள், தங்கள் இனத்தின் முன்னேற்றத்துக்காக செயல்படுவது இல்லை!'' என்பது சமூக ஆர்வலர்கள் பலரது ஆதங்கம். இதுபற்றி கதிர் நம்மிடம் விளக்கினார்.

''தாழ்த்தப்பட்டோருக்கும் அரசியல் அங்கீகாரம் பெறத்தான் 'ரிசர்வ்' தொகுதி​களை ஏற்படுத்தினர். ஆனால், கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை ரிசர்வ் தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவருமே தங்களைத் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதியாக அடையாளம் காட்டிக்கொள்ளவே தயங்குகிறார்கள். தாங்கள் சார்ந்த கட்சிக்கு அடிமையாக இருந்து, அது சார்ந்த பணிகளையே செய்கின்றனர். தொல். திருமாவளவன், பெரம்பூர் மகேந்திரன், குடியாத்தம்  லதா போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு என்றாலும்கூட, அவர்களுமே ஓரளவுக்கு மேல் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை! ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ-க்கள் கட்சிக்கும் தங்கள் பகுதியின் தொழில் நிறுவனங்களுக்கும் பயந்து தாழ்வு மனப்பான்மையோடு உள்ளனர். அதனால்தான் இந்த கோட்டாவில் வந்தவர்கள் யாருமே இதுவரை பவர்ஃபுல் மனிதர்களாகப் பரிணமிக்கவில்லை. இவர்கள் ஒழுங்காகச் செயல்பட்டு இருந்தால், நாட்டில் இரட்டை டம்ளர் முறை இன்னமும் இருக்குமா? ஆக, சட்டமன்றத்தில் கட்சி என்ற பெயரால் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை நொறுக்கப்படுகிறது.

இப்போது அமைச்சர்களாக இருக்கும் பரிதி இளம்வழுதி, மதிவாணன், தமிழரசி போன்​றவர்​கள் கட்சியைக் கடந்து பெரிதாக எதைச் சாதித்துவிட்டார்கள்? இவர்கள் எல்லாம் சாதியை அடிப்படையாகக்கொண்டு பதவியில் இருக்கிறார்களே தவிர, இன உரிமைகளைப் பெற்றுத் தருவதில் அக்கறை காட்டுவது இல்லை. இதனால்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டிய ஆதி திராவிடர் நலத் துறை, சவலைப் பிள்ளையாக இருக்கிறது. ரொம்ப அமைதியானவர்களை 'ரிசர்வ் டைப்' என்பார்கள்... இவர்களது நடவடிக்கைகளும் அப்படித்தான் 'ரிசர்வ் டைப்'பாகவே இருக்கிறது!'' என்று முன்னோட்டம் கொடுத்தவர், தொடர்ந்தார்.

''இந்த 46 எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை அலசுவோம். இவர்களில் எத்தனை பேர் தங்கள் தொகுதிகளில் ஆதி திராவிடர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களில் தங்கள் அதிகாரத்தைப் பயன்​படுத்தி வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய வைத்திருப்பார்கள்? 'ஆண்டுக்கு இத்தனை ஆதி தி​ராவிடர்களுக்கு அரசாங்கத்தில் கல்வி ஒதுக்கீடு நிதி வாங்கிக் கொடுத்தேன்' என்று இவர்​களால் சொல்ல முடியுமா? ராமர் பால விவகாரத்தில் 'கருணாநிதியின் நாக்கை அறுப்பேன்' என்று சொன்ன வட நாட்டு சாமியாருக்கு எதிராக, 'வெட்டுவேன், குத்துவேன்' என்று அறிக்கை விட்ட அமைச்சர் பரிதி இளம்வழுதிக்கு, ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ-க்களான லதாவும் ரவிக்குமாரும் தாக்கப்பட்டபோது, அந்த ஆவேசம் எங்கே போனது? எதுவுமே செய்யவில்லையே! ஆவேசப்பட்டால், சாதி இந்துக்களிடமும் தாங்கள் சார்ந்த கட்சியிடமும் சவுக்கடி கிடைக்கும் என்பதால் பயப்படுகிறார்கள். நில அபகரிப்புகளுக்கு எதிராக ஒட்டுமொத்தமாகப் போராட்டக் களத்துக்கு வந்தார்களா? 'ஆதி திராவிடர்களுக்கு குழும வீடுகள் கட்டித் தர வேண்டும். காலனிக்கு குடிதண்ணீர் வசதி வேண்டும்' என்பது போன்ற வாடிக்கையான கோரிக்கைகளோடு, அமைதியாக இருந்துவிடுகிறார்கள்!

'என்னதான் ரிசர்வ் தொகுதிகளை ஒதுக்கினாலும், அங்கேயும் கட்சிக்காரனாகத்தான் வந்து உட்காருவார்கள். அந்த மக்களின் பிரதிநிதிகள் யாரும் வர மாட்டார்கள்' என்று அன்றைக்கு அம்பேத்கர் சொன்னது இன்னமும் தொடர்கிறது. ஆதி திராவிடர்கள், தங்களின் கட்சி நீரோட்டத்தில் இணைவது மட்டும் போதாது. அவர்கள், மக்கள் நீரோட்டத்தில் இணைய ​வேண்டும்.

இன்னும் சொன்னால், ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ-க்​களுக்கு மட்டும் குறிப்பிட்ட சில நாட்கள் தனியாக சட்டமன்ற கூட்டம் நடத்த வேண்டும். அதில் கட்சிக் கட்டுப்பாடுகளைக் கடந்து, ஆதி திராவிடர்கள் நலனுக்கான குறைந்தபட்ச செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோதுகூட, 'யாரும் என்னிடம் இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை. எனக்கு நானே கோரிக்கை வைத்துக்கொண்டு அதை நிறைவேற்றித் தந்திருக்கிறேன்' என்று சொன்னார் முதல்வர். இந்த நிலை மாறி, ஆதி திராவிடர்களுக்கான மானியக் கோரிக்கைகள் வரும்போது, 'எங்களுக்கான தேவை இவை' என கட்சித் தலைமையைப்பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலுடன் கோரிக்கை எழுப்ப வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த எம்.எல்.ஏ-க்களுக்குப் பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

ரிசர்வ் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் வேட்​பாளர்களை நிறுத்தத் தடை விதித்து, படித்தவர்களும் அறிவுஜீவிகளும் அங்கே போட்டியிட, தேர்தல் ஆணையம் சட்டத் திருத்தம் கொண்டுவரலாம். இந்த 46 தொகுதிகளுக்கு மட்டும் தனியாகவே தேர்தலை நடத்தலாம். அப்படி வந்தால், ரிசர்வ் தொகுதிகளில் தலையாட்டி பொம்மைகள் பதவிக்கு வரும் நிலை மாறி, ஒடுக்கப்பட்டோருக்காகப் போராடும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றம் செல்வார்கள். இது சாத்தியமா என்பது விவாதத்துக்கு உரியது. ஆனால், இது நடந்தால், விலங்குகள் உடைக்கப்பட்டு விடிவு பிறக்கும்!'' என்று முடித்தார்.

இந்த முறை தேர்ந்தெடுக்கப்படுபவர்களாவது, ரிசர்வ் இல்லாமல் நடக்கட்டும்!

- குள.சண்முகசுந்தரம்

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்