Home » » சாராய சாக்கடையில் இருந்து மீண்ட தேவேந்திர‌ மக்கள் - சாத்தூர் அருகே சாதனை கிராமம்

சாராய சாக்கடையில் இருந்து மீண்ட தேவேந்திர‌ மக்கள் - சாத்தூர் அருகே சாதனை கிராமம்

Written By DevendraKural on Friday, 15 April 2011 | 09:43

சாத்தூர் மதுவே பிரதானம் என்று உழன்ற கிராமம் இப்போது கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன. ஏன் இவர்கள் மாறினர் என்பதை அறிய ஆவலா. அதற்கு முன் தமிழகத்தை உலுக்கிய அந்த சம்பவத்தை அறிய ஒரு "பிளாஷ்பேக்' விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கத்தாளம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அணைக்கரைபட்டி. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். விவசாயமே பிரதான தொழில். கடும் உழைப்பாளர்களான இக்கிராம மக்கள் கடும் பஞ்சத்தால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் தவித்தனர். 1990 - 95 காலகட்டத்தில் ஒரு சிலர் கள்ளச்சாராயம் தயாரித்து விற்க வேண்டிய நிலைக்கு உள்ளாகினர். 1995 அக்.,15ம் தேதி அணைக்கரைபட்டியில் விஷச்சாராயம் குடித்த பலர் தெருக்களில் மயங்கி விழுந்தனர். ஆங்காங்கே கிடந்த 31 பேர் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஏழு பேர் இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மொத்த பலி 23 ஆனது. குடி, 23 குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியது.
 
எட்டு பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர். கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்த தவறிய உயரதிகாரிகள் உட்பட பல போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன் பின் இந்த கிராமம் போலீஸ் வளையத்திற்குள் வந்தது. மக்கள் பயந்து பயந்து வாழும் சூழ்நிலைக்கு ஆளாகினர். பொருளாதார நெருக்கடிக்கும், பழிச்சொல்லுக்கும் ஆளாகினர். சில நாட்களே அனுபவித்த நரகவேதனை இவர்களை மனமாற்றத்திற்கு ஆட்படுத்தியது.
 
கள்ளச்சாராயம் "காய்ச்சுவதுமில்லை, விற்பதுமில்லை' என சபதம் எடுத்தனர். ஆண்டுகள் 16 உருண்டோடி விட்ட நிலையில், தற்போது அணைக்கரைபட்டி மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என அறிந்த போது ஆச்சரியம் ஆனந்தப்பட வைத்தது. அங்கு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருந்தது. "சுய கட்டுப்பாடு வாழ்வை உயர்த்தும், அயராத உழைப்பு நல்ல பலனை தரும்' என்பதை வாழ்வியலின் மாற்றம் கண்ட மக்களின் சாதனையாகி இருந்தது. கள்ளச்சாராயம் தயாரிப்பதை விட்டொழித்து விட்ட இம்மக்கள், கல்வியறிவு மிக்கவர்களாக மாறி உள்ளனர். 150 குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் யாருக்கும் "குடிப்பழக்கமோ, புகை பழக்கமோ' இல்லை. விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் டாக்டர்களாக உள்ளனர். விருதுநகர் கோர்ட் நீதிபதி அமிர்தவேலு, அணைக்கரைபட்டியை சேர்ந்தவர். 16 பேர் வக்கீல்களாக உள்ளனர்.
 
மாற்றம் பற்றி இவர்களின் பிரதிநிதியாக இருவரது கருத்துக்கள். எஸ்.முனிஸ்வரன்(35), வக்கீல்: 1995 ஆண்டு விஷச்சாராய சாவு சம்பவத்திற்கு பின், எங்கள் கிராம பெரியவர்கள் குடிப்பழக்கத்தை விட்டொழித்தனர். சமுதாயத்தில் மதிப்புபெற கல்வி, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு மிக்கவர்களாக எங்களை ஆளாக்கினர். எங்கள் கிராமத்தில் இளைஞர்களிடம் குடிப்பழக்கமோ, புகை பழக்கமோ கிடையாது. இங்குள்ள 150 குடும்பங்களில் படிப்பறிவு இல்லாத குடும்பமே இல்லை.
 

ஏ.எஸ்.ராஜ்குமார் (பி.இ.): மத்திய ரிசர்வ் படை, தமிழக போலீசில் தலா மூன்று பேர், எல்.ஐ.சி., ரயில்வேயில் தலா இருவர், பணிபுரிந்து வருகின்றனர். ஒரு பக்கம் துயரம், மறுபக்கம் அவமானம், இன்னொரு பக்கம் போலீஸ் கெடுபிடி என மும்முனை தாக்குதலால் துவண்டு விடாமல் மீண்டு வந்துள்ளது அணைக்கரைப்பட்டி. கல்வி மட்டுமல்ல... சுய ஒழுக்கமும் வாழ்வை மேம்படுத்தும் என்பதற்கு இக்கிராமமே சான்று.


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்