தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வைக்கும் கோரிக்கைகள் மற்றும் அரசு சார்பில் மத்திய அரசை தொடர்பு கொள்ள டெல்லி பிரதிநிதி ஒருவரை மாநில அரசு நியமிக்கும். கடந்த தி.மு.க. ஆட்சியில் கம்பம் செல்வேந்திரன் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. அரசின் டெல்லி பிரதிநிதியாக முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
பதவி கிடைத்தது பற்றி அசோகன்,
''புரட்சித் தலைவி அம்மா, என்னை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்துள்ள தகவல் கிடைத்த போது முதலில் நான் நம்பவில்லை. எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அரசியலில் எனக்கு இது பெரிய பதவியாகும்.
தாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த என்னை தி.மு.க.வில் அவமானப்படுத்தி வெளியே அனுப்பினார்கள். அப்போது தாயாக ஆறுதல் கூறி எனக்கு அரசியலில் மறு பிரவேசம் அளித்தவர் புரட்சித் தலைவி. இப்போது உயர்ந்த பதவி கொடுத்து எனக்கு புத்துயிர் கொடுத்துள்ளார். அம்மாவை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு நான் உதாரணம்.
நடந்து முடிந்த தேர்தலில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட எனது பெயர் முதலில் வந்தது. அதன் பிறகு இந்த தொகுதி கம்யூனிஸ்டு கூட்டணிக்கு சென்று விட்டது. உடனே நான் கட்சி தொண்டன் என்ற முறையில் கம்யூனிஸ்டுக்கு ஆதரவாக வேலை பார்த்தேன்.
தமிழ்நாடு முழுவதும் சென்று அ.தி.மு.க. பொதுக் கூட்டங்களில் பேசினேன். எனக்கு கிடைத்த பதவி விசுவாசத்துக்கு கிடைத்த பதவி. அம்மாவை என்றென்றும் மறக்க மாட்டேன்'' என்று கூறினார்.
அசோகன் - தி.மு.க. சார்பில் 1996- 2001-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2006-ம் ஆண்டு சட்டசபைத்தேர்தலில் தி.மு.க.வில் சீட் கிடைக்காததால், அந்தக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தலைமை கழக பேச்சாளர் பதவி கிடைத்தது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட முதலில் இவருக்கு சீட் கிடைத்தது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டபோது இந்த தொகுதி மார்க்சிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதனால் அசோகனுக்கு எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
ஆனால் இப்போது அவருக்கு லாட்டரி அதிர்ஷ்டம் போல் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கிடைத்து இருக்கிறது. இந்த பதவி தமிழக அமைச்சர்களின் பதவிக்கு இணையானது. இவர் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ comments + 1 comments
Please do not write as "தாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த...!
please write as தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த...!