Home » » பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்!

பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்!

Written By DevendraKural on Sunday, 11 September 2011 | 20:16

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிர் இழந்தனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், கவலையும் தருகிறது.

துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மதுரை துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றவர்கள் பூரண சுகம் அடையும் வகையில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதோடு, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்துவதும், அமைதியைச் சீர்குலைப்பதும் எந்த விதத்திலும் ஏற்கத் தக்கதல்ல. அந்தச் செயல்கள் பொது அமைதிக்கு பெரும் கேடாகவே அமையும். எனவே அந்தச் செயல்கள் பொது அமைதிக்கு பெரும் கேடாகவே அமையும். எனவே, ஆத்திரத்திற்கு ஆட்பட்டு எத்தகைய செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன். 

தென் மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் சமூக ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் உள்ளிட்ட அனைவரின் நலன் கருதி அமைதி காக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறேன். 

இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று துப்பாக்கி சூடு: காவல்துறை அணுகுமுறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினமான செப்டம்பர் 11ல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் இம்மாவட்டம் முத்துராமலிங்கபுரம் பள்ளப்பசேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் தங்கவேல் என்ற தலித் மாணவனை சாதி வெறி கொண்ட கும்பல் 09.09.2011 இரவில் படுகொலை செய்துள்ளது. தலித் மக்களை ஒட்டு மொத்தமாக மிரட்டி அச்சுறுத்தும் நோக்கத்தோடு ஆதிக்க சக்திகளால் செய்யப்பட்ட இந்த படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.   


இப்பதட்டமான நிலையில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் திரு.ஜான்பாண்டியனை கைது செய்திருப்பது காவல்துறையின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையை காட்டுகிறது.  இதனால் நிலைமை மேலும் மோசமடைந்து விரும்பபத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. பரமக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் பைபாஸ் ரோடு சிந்தாமணியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
  காவல்துறையின் இத்தகைய தவறான அணுகுமுறைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இத்தகைய சம்பவங்களால் இராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.  இந்த ஒட்டுமொத்த சம்பவம் குறித்து தமிழக அரசு உடனடியாக உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடுமாறும், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.  காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குமாறும், காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிறந்த மருத்துவ சிகிச்சையும், நிவாரணமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிளிட் கட்சி வலியுறுத்துகிறது.


பதட்டமான பகுதியில் அமைதி திரும்ப மக்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும்  மாணவனை படுகொலை செய்து அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய சாதி வெறியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்,  தலித் மக்களுக்கு எதிராக நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு தாமதமின்றி முடிவுகட்ட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிளிட் கட்சி வலியுறுத்துகிறது.  சமூக சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் ஏற்பட இணைந்து செயல்படுமாறு அனைத்து பகுதி மக்களையும் ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பரமக்குடி கலவரத்தில் உயிரிழப்பு: தா.பா. கவலை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று (11.09.2011) நடைபெற்ற கலவரத்தில் காவல்துறை நடத்திய தடியடி  மற்றும் துப்பாக்கிச் சூடு குறித்து  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

'தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் இன்று காலை பரமக்குடி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற செய்தியும் அதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் வந்துள்ள செய்தி  மிகுந்த கவலையளிக்கிறது.

காவல்துறையினரும் காயம் பட்டியிருக்கிறார்கள் என்றும், வாகனங்கள் சொத்துக்கள்  சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும்  வந்துள்ள செய்தி கவலைக்குரியதாக இருக்கிறது. அமைதி தவழ வேண்டிய தமிழகத்தில் இந்த சம்பவங்கள் சாதிக் கலவரங்களாக வளர்ந்து விடாமல் உடனடியாக அமைதி நிலை நாட்டப்பட வேண்டும். சம்பவம் குறித்து உண்மை நிலையைக் கண்டறிய ஒரு பகிரங்க விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

அமைதி காப்பதில் அனைத்துக் கட்சியினரும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தா.பாண்டியன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


தமிழக அரசு தலித் இளைஞர்களின் உயிரை மிகக் குறைத்து மதிப்பிடுகிறது: பரமக்குடி கலவரம் குறித்து திருமா அறிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளான இன்று பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய சூப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகி உள்ளனர். இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. மதுரையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் மேலும் வன்முறை பரவும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய அரசு பயங்கரவாத அடக்குமுறைப் போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை இன்று காலை சுமார் 10 மணியளவில் வல்லநாடு அருகே காவல்துறையினர் வழிமறித்துக் கைது செய்துள்ளனர். காரணம் கேட்டால், ஜான்பாண்டியன் பரமக்குடி சென்றால் வன்முறை உருவாகும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், ஜான்பாண்டியன் பரமக்குடிக்கு செல்லாமலேயே மிகப் பெரிய வன்முறை காவல்துறையால் அரங்கேற்றப்பட்டுள்ளது. அப்பாவி இளைஞர்கள் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரையில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அஞ்சலி செலுத்துவற்கான அனுமதியை ஏற்கனவே வழங்கியிருந்த காவல்துறை, திடீரென அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு போட என்ன காரணம்? பல்லாயிரக்கணக்கில் மக்கள் அங்கே கூடியிருக்கும் வேளையில் ஒரு சமூகத் தலைவரை அங்கே செல்லவிடாமல் தடுப்பது அப்பகுதியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்பது காவல்துறையினருக்கு தெரியாதா?

பரமக்குடி அருகே பழனிக்குமார் என்கிற பள்ளி மாணவன் ஒருவனை காரண காரியமில்லாமலேயே சாதிவெறிக் கும்பல் படுகொலை செய்துள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த அக்கரை காட்டாத காவல்துறை, அப்பகுதிக்கு ஜான்பாண்டியன் செல்லக்கூடாது என்று தொலைபேசி மூலமாக வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவரும் உடன்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனாலும் அவர் அப்பகுதிக்கு வந்தால் கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதுல் சொல்வதற்காகச் செல்லக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகப்பட்டு பரமக்குடியில் அஞ்சலி செலுத்துவதற்கே வரக்கூடாது எனத் தடை விதித்து, அவரைக் கைது செய்து, அதன் மூலம் ஒரு பதற்றத்தை உருவாக்கி, தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று சாக்குப்போக்குச் சொல்லி அப்பாவி இளைஞர்களைப் படுகொலை செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

எனவே இந்த வன்முறைகளுக்கும் படுகொலைகளுக்கும் காரணமான தவறான முடிவுகளை எடுத்த காவல்துறை அதிகாரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். படுகொலையானவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கமாக இவ்வாறான வன்முறைகளின்போது உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேலும் வழங்கி வந்துள்ளது. ஆனால், தற்போது தமிழக அரசு ரூ.1 லட்சம் வழங்கியிருப்பது தலித் இளைஞர்களின் உயிரை மிகக் குறைத்து மதிப்பிடுவதாகவே கருத நேரிடுகிறது. ஆகவே தமிழக அரசு தம்முடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அக்குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும், அக்குடும்பங்களில் தகுதியுள்ள தலா ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட உறுதியளிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனையும் அவருடன் கைதானவர்களையும் உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்