Home » » ஏழு பேருக்காகத் துடிக்காதா தமிழகம்?

ஏழு பேருக்காகத் துடிக்காதா தமிழகம்?

Written By DevendraKural on Wednesday, 21 September 2011 | 03:10

''மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்றத் தமிழகமே துடிக்கிறது, கொதிக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான இந்த ஒட்டுமொத்த ஆவேசத்தைப் பார்க்கையில் நெஞ்சுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால், பரமக்குடியில் ஏழு பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக ஒரு சத்தத்தையும் காணோமே? அவர்கள் தலித்கள் என்பதால்தான் மௌனமோ?'' - 'எவிடன்ஸ்' அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கேட்கும் கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை! 

கோவை பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறி வியல் கல்லூரியில், சமீபத்தில் 'மனித உரிமை மீறல்கள்' குறித்து ஒரு கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்புரை ஆற்றினார் கதிர். ''இந்த உலகத்திலேயே முதல் மனித உரிமைப் போராளி யார் என்றால், அது இயேசுதான். சிலுவையில் அறையப்பட்டபோது, 'மரண தண்டனை என்னோடு முடியட்டும்!' என்று உதிரம் வழியக் குரல் கொடுத்த புரட்சியாளன் அவர். ஆனாலும் திருந்தியதா சமூகம்? இல்லை. ஒரு நாட்டில் கலவரங்கள் இருக்கலாம், துப்பாக்கி சப்தம் கேட்கலாம். ஆனால், அங்கே நீதி இருக்க வேண்டும். காகத்தைச் சுட்டால்கூட கையில் விலங்கு மாட்ட ஃப்ளூக்ராஸ் வந்துவிட்ட தேசத்தில்... மனிதர்களை மளமளவென சுட்டுக் கொல்கிறது போலீஸ். இந்தப் பயங்கரவாதத்தைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை. பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கிறோம். ஆனால், பரமக்குடி சாவு களுக்கு மட்டும் ஏன் வாய் மூடி மௌனிக்கிறது தமிழகம்? இறந்தவர்கள் உதிரிகள் என்பதாலா? செத்தது தலித்கள்தானே என்பதாலா? மனித உரிமை மீறலுக்கு எதிரான இந்தப் போக்கு பெரும் வெட்கம்.

தலித் கர்ப்பிணிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை மறுக்கப்படுவதில் ஆரம்பித்து... சுடுகாடு வரை நீள்கிறது சாதி துவேஷம். தமிழ்நாட்டில் தலித் மீதான அத்துமீறல்கள் படம் எடுத்து ஆடும் மாவட்டங்களில் கொங்கு மண்டலத்துக்கு முக்கிய இடம் உண்டு. அன்னூர், சத்தியமங்கலம் பகுதிகளில் ஆதிக்க சமுதாயத்தினரின் தோட்டங்களில் தலித்கள் கூலி வேலை செய்கிறார்கள். இடைவேளையில் இவர்களுக்கு முதலாளி வீட்டில் இருந்து காபி வரும். அதைப் பார்த்தால் நெஞ்சு வெடித்துவிடும். முதலாளி யின் வீட்டு வாசலில் துண்டை இடுப்பில் செருகியபடி குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருப்பார் தொழிலாளி. கையில் இருக்கும் தேங்காய் சிரட்டையில் காபி ஊற்றப்படும். இதுதான் தினமும் நடக்கும் உபசாரம்.

பல பள்ளிகளில் தலித் மாணவர்களை 'மைனஸ்' என்று சங்கேத வார்த்தையிலே நையாண்டித்தனம் செய்கிறார்கள். கூடவே, இந்தக் குழந்தைகளை மட்டும் 'துப்புரவு டீம்' என்றாக்கி, பள்ளியின் டாய்லெட்டை சுத்தம் செய்ய வைப்பது, பள்ளியைக் கூட்டிப் பெருக்குவது போன்ற வேலைகளில் இறக்கி விடுகிறார்கள். அட இங்கு மட்டுமா... அரசிய லிலும் இதுதான் நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊருக்கு முந்தி ஆ.ராசாவை தூக்கி உள்ளே போட்டார்களே... அந்த ஊழல் சுழலில் அடிபடும் தனியார் நிறுவனப் பொறுப்பாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

தமிழ்நாட்டில் மனித உரிமை பட்டவர்த் தனமாக மீறப்படும் மையங்களில் போலீஸ் ஸ்டேஷன் முக்கியமானது. கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 76 லாக்-அப் சாவுகள் நடந்திருக்கின்றன. போலீஸ் நிலையங்களைக் கொலைக்கூடங்களாக மாற்றி சாதித்திருக்கும் தமிழ்நாடு போலீஸ்தான், இந்தி யாவிலேயே நான்காவது சிறந்த போலீஸ் என்று பட்டம் வாங்கி இருக்கிறது. 'அடித்துக் கேட்டால்தான் உண்மை வெளியே வரும்!' என்று தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறது போலீஸ். அப்படியானால், குற்றவாளிகள் அத்தனை பேரும் ஒரே மாதிரிதானே ட்ரீட் செய்யப்பட வேண்டும்? பிக்பாக்கெட் வழக்கில் சந்தேகத்தில், பிடிபட்டவனிடம் உண்மையை வரவழைக்க அவனை உரித்துத் தொங்க விடுகிறது போலீஸ். சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரரிடம் இப்படியா நடத்தினார்கள்? இங்கே சட்டத்தின் முன் எல்லோரும் பொதுவாக இல்லை.

அரபு நாடுகளில் 'கண்ணுக்கு கண்' என்ற அளவில் தண்டனை இருந்தும் குற்றங்கள் குறைய வில்லையே... ஆக, தண்டனைகள் குற்றவாளியைத் திருத்தும் வகையில்தான் இருக்க வேண்டுமே தவிர, குற்றவாளியைத் 'தீர்க்கும்' வகையில் இருக்கக் கூடாது. சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரையில் இந்தியாவில் தூக்கில் இடப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3,000 என்று தகவல் வருகிறது. அரசாங்கமோ 100-க்குள் என்று கணக்குக் காட்டுகிறது. உலகில் பல நாடுகள் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. நாமோ இன்னமும் தூக்குக் கயிற்றை தூக்கிப் பிடித்துக்கொண்டு தொங்கவிட ஆள் தேடிக்கொண்டு இருக்கிறோம்!

தற்போது, தேசத்தில் நடக்கும் நிகழ்வு களுக்கு வெறும் பார்வையாளர்களாக இருக்கும் இளைஞர்களாகிய நீங்கள்தான், நாளை பல நிகழ்வுகளை நிர்ணயிக்கப் போகிறவர்கள். கீதை, பைபிள் மற்றும் குர் ஆன் போன்றவை தெரி யாமல் இருந்தாலும், பரவாயில்லை... ஆனால், நாட்டின் அரசியல் சாசனத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உயிர்நாடி!'' என்று கதிர் ஆவேசப்பட்டார்.

அவரது பேச்சைக் கேட்டு புதிய மனிதர் களாக உற்சாகமாகக் கலைந்தது இளைஞர் பட்டாளம்!

- எஸ்.ஷக்தி

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்