Home » » தேடுதல் வேட்டையில் பலியான இருவர்...

தேடுதல் வேட்டையில் பலியான இருவர்...

Written By DevendraKural on Monday, 26 September 2011 | 03:53

ந்தக் கறுப்பு ஞாயிறில், பரமக்குடியில் 7 உயிர்கள் பறிபோன பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில்... போலீஸாரின் தேடுதல் வேட்டையால் மேலும் இரு உயிர்களும் பலியானதாகப் புதுப் பதற்றம்! 

கடந்த 11-ம் தேதி பரமக்குடியில், இம்மானுவேல்சேகரன் குருபூஜை விழாவுக்கு வந்தவர்கள் திடீர் மறியலில் இறங்கினார்கள். 'ஜான்பாண்டியனைக் கைது செய்துவிட்டார்கள்' என்று பரவிய செய்தியைத் தொடர்ந்து அந்தப் பரபரப்பு தொடங்கியது. கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிப் பிரயோகத்தில் இறங்கியது போலீஸ். இதில் ஆறு பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் இரு தரப்பிலும் பலருக்கும் காயம். அரசு மற்றும் தனியார் வாகனங்கள் பல தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து, 'கலவரத்தில் ஈடுபட்டார்கள்' என 2,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ். அதில் 21 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களைத் தேடி கிராமம் கிராம​மாகச் சென்று போலீஸார் சல்லடை போட... இந்தத் தேடுதல் வேட்டையால் தொளுவளூர் வேலு, களக்குடி காளியப்பன் ஆகிய இருவர் பலியானதாக தற்போது புகார் சொல்லப்​படுகிறது!

தொளுவளூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதனை சந்தித்தோம். ''கடந்த 11-ம் தேதி ராத்திரி எங்க கிராமத்தினரைத் தேடி போலீஸ் வருதுன்னு தகவல் சொன்னாங்க. ஊருக்குள்ள இருந்த ஆம்பளைங்க எல்லாரும் பக்கத்துல இருக்குற காட்டை நோக்கி ஓடுனோம். இருட்டுல வாய்க்கா எது, வரப்பு எதுன்னுகூட பாக்காம வேகமா ஓடினதில், எங்​களோட ஓடிவந்த வேலு, கால் இடறி வரப்புல இருந்து வயலுக்குள்ள விழுந்துட்டாரு. தூக்குனப்ப, மூச்சுப் பேச்சில்லாமக் கிடந்தாரு. ஊருக்குள்ள கொண்டுபோய், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொல்லி, வந்து பார்த்தப்பதான் அவர் இறந்துபோயிட்டது தெரிஞ்சது. கலவரத்துக்கு சம்பந்தமே இல்லாத எங்க ஊருக்கு போலீஸ் வந்த பதற்றத்தாலதான் இப்ப வேலுவோட குடும்பம் அநாதை ஆயிருச்சி!'' என்றார் சோகமாக.

இதே போல் போலீஸ் தேடுதல் வேட்டையால், காட்டில் மறைந்திருந்த காளியப்பன் என்பவர் பாம்பு கடித்துப் பலியானார். இவர் களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். நாம் அங்கே சென்றபோது, ஆண்கள் யாருமே ஊருக்குள் இல்லை. காளியப்பனின் வீட்டை அடைந்தோம். அவரது மூத்த மனைவி காளியம்மாளையும் மகள் நாகவள்ளியையும் சந்தித்தோம்.

''எங்கப்பாவுக்கு ரெண்டு சம்சாரம். மூத்தவங்க எங்கம்மா. அன்னிக்கு, 'நம்மூரு ஆம்பளைகளத் தேடி போலீஸ் வருது'ன்னு தகவல் கிடைச்சதும், காட்டுப் பக்கமா ஊர்க்காரங்க ஓடுனாங்க. எங்கப்பாவும் அவங்களோட ஓடினாரு. ஆனா, மறுநாள் வரை எங்கப்பா வீட்டுக்கு வராததால, தேடினோம். அப்பதான் அவர் ஒரு கண்மாய்க்குள்ள இறந்து கிடந்தது தெரிஞ்சுது. அவரோட கழுத்துல பாம்பு கடிச்சதுக்கான அடை​யாளம் இருந்திச்சு. எங்க குடும்பத்துல அப்பாவைத் தவிர எல்லாருமே பொம்பளைகள். கூலி வேலை செஞ்சு காப்பாத்துன அவரும் இப்ப இல்லை. ஏதாவது எங்களுக்கு உதவி செய்யுங்க...'' எனக் கதறினார், நாகவள்ளி.

இந்த சம்பவங்கள் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராயிடம் கேட்ட​போது, ''இந்த நியூஸை கேள்விப்​பட்டு, உடனடியா எஸ்.பி-கிட்ட கேட்டேன். போலீஸார் கிராமங்களுக்குப் போனப்ப அப்படி எதுவும் நடக்கலைங்​கறாங்க. போலீஸ்காரங்க வர்றதைக் கேள்விப்பட்டு ஓடினப்ப யதார்த்தமாக இந்த சம்பவங்​கள் நடந்திருக்கலாம். இனி போலீஸார் கிராமத்தினருக்குத் தொந்தரவு கொடுக்க​மாட்டாங்க...'' என்று வாக்குறுதி கொடுத்தார்.

கலவரத்துக்குப் பிந்தைய இருட்டு மேகங்களை விரட்டுவதில் கவனமும் பக்குவமும் காட்டட்டும் காவல் துறை!

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி 

''மதம் மாறிடுவோம்''

பரமக்குடி-மதுரை சாலையில் 10 நிமிடப் பயணத்தில் வருகிறது, எச்.பரளை கிராமம். அங்கு, கடந்த 18-ம் தேதி மாலை மூன்று வாகனங்களில் வந்த, காவல் துறையினர் நடத்திய 'ஒத்திகை' (?) சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது!

அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது, மக்கள் கொதிப்புடன் இருந்தனர். நம்மிடம் பேசிய நாகவள்ளி என்பவர், ''பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு ஊரில் ஆண்கள் தங்குவது இல்லை. அன்னிக்கு வந்த போலீஸ், 'ஒத்திகை பார்க்கப் போறோம்'னுட்டு, பொம்பளைங்களை வீட்டுக்குள் அனுப்பிட்டாங்க. பிறகு ஊரில் இருந்த கொடிக்கம்பத்தில் எங்க கட்சிக் கொடிகளைக் கழட்டி, மஃப்டியில் வந்த போலீஸ்காரங்க தலையில் சுத்திக்கிட்டாங்க. ஒரு பக்கம் அவங்க... இன்னொரு பக்கம் யூனிஃபார்ம் போலீஸ்காரங்க, கையில் பெரிய பெரிய பிரம்புத் தடுப்பு வெச்சிருந்தாங்க. மஃப்டிக்காரங்க ஊருக்குள்ள நின்னு போலீஸ்காரங்களைப் பார்த்து கல் வீச... போலீஸ்காரங்க தடுப்பால தடுத்தாங்க. 'போலீஸ் ஒழிக'ன்னு சத்தமா கோஷம் போட்டுக்கிட்டே முன்னாடி பாய்ஞ்சாங்க மஃப்டிக்காரங்க. மூணு கேமராவால வீடியோ வேற எடுத்தாங்க. சந்தேகப்பட்டு சிலர் கேட்டப்ப, 'கலவரம் நடந்தால் என்ன செய்வதுன்னு ஒத்திகை பார்க்கிறோம்'னு போலீஸ் சொன்னுச்சி. அந்த வீடியோ காட்சிகளை வெச்சு, உண்மையாக எங்க கிராம மக்கள் கலவரத்தில் ஈடுபட்டாங்கன்னு சொல்றதுக்கா?!'' என்று கொதித்தார்.

''இப்படியே போனா, எங்க கிராமத்தினரும் மொத்தமா மதம் மாறிடுவோம்!'' என்றார், பாபு என்கிற கிராமவாசி.

''பாதுகாப்பு ஏற்பாடுகளில் நாங்கள் இருக்கிறோம். அதை குறை சொன்னால் எப்படி?'' என்று போலீஸ் தரப்பு கேட்கிறது!

சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கத்தானே போலீஸ் ஒத்திகை... மாறாக மக்களை மிரட்டுவதற்கா?

- கவின் மலர்


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்