Home » » யார் வன்முறையாளர்கள் ?

யார் வன்முறையாளர்கள் ?

Written By DevendraKural on Friday, 30 September 2011 | 09:34

தமிழக காவல்துறையில் வம்புச் செல்வன் என்று ஒரு அதிகாரி இருக்கிறார். இந்த வம்புச் செல்வன்தான் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான செந்தில்வேலன் ஐபிஎஸ்.   இவர் எம்பிபிஎஸ் படித்த டாக்டர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே எஸ்.பியாக பணியாற்றிய அனுபவம் இருந்ததால் இவரை சிறப்புப் பணியாக (!!!!????) செப்டம்பர் 11 அன்று பரமக்குடிக்கு அனுப்பினார்களாம்.

 Senthilvelan__IPS

வம்புச்செல்வன் மருத்துவம் முழுமையாக படித்தாரா, இல்லை அரியர்ஸ் வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.  ஏனென்றால் உயிர்காக்கும் படிப்பை படித்து விட்டு, இப்படி கொலைகாரனாக மாறுவாரா ?   தன் கண் முன்னே காவல்துறையினர் வெறியாட்டம் போடுவதை இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாரா ?   இவர் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்கப் படப்போவதில்லை.  இறந்தவர்களுக்கு ஒரு நியாயமும் கிடைக்கப் போவதில்லை.  ஆனால் கொலைகாரன் என்ற பட்டம் மட்டும் இவரை விட்டு என்றுமே அகலாது.

 

காவல்துறையின் நடவடிக்கையால் மொத்தம் 6 பேர் இறந்திருக்கின்றனர்.  இவர்களுள் 4 பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிலும், இருவர் தாக்குதலிலும் உயிரிழந்துள்ளனர்.

 

இச்சம்பவம் நடந்தேறிய அன்றே அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, "திரு. ஜான் பாண்டியன் கைதினைக் கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி நகர போக்குவரத்தினை சீர்குலைக்கும் வகையில், பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல் துறையின் அறிவுரையை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.  இருப்பினும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பெருமளவு வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வண்டிக்கு தீ வைத்தனர்.   இதனையடுத்து, காவல் துறையினர் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வன்முறையாளர்கள் தொடர்ந்து வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்." என்று அறிக்கை வெளியிட்டார்.

 

ஆனால் பரமக்குடியில் சென்று விசாரித்தால் உண்மைக்கு நேர்மாறாக இருக்கிறது.   மேலும், பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த போது எடுக்கப் பட்ட வீடியோ, காவல்துறையினரின் கூற்றைப் பொய்யாக்குகிறது.

 

கடந்த 10 ஆண்டுகளாகவே, இமானுவேல் சேகரனின் நினைவு தினத்திற்கு பரமக்குடிக்கு வருகை தரும் தலித் மக்களின் எண்ணிக்கை வளர்ந்தே வந்திருக்கிறது.   கடந்த சில ஆண்டுகளாக 2 முதல் 3 லட்சம் வரை மக்கள் வருகை தந்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஜான் பாண்டியனின் வரவால் மக்கள் கூட்டம் மேலும் அதிகமாக எதிர்ப்பார்க்கப் பட்டிருக்கிறது.

 

சம்பவம் நடந்த அன்று காலை 8.30 மணி முதலே மக்கள் பெருமளவில் திரண்டு, இமானுவேல் சேகரனின் சமாதியில் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்திருக்கின்றனர்.   ஜான் பாண்டியனின் வருகையை எதிர்ப்பார்த்து அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.  சுமார் 10.30 மணி வாக்கில் ஜான் பாண்டியன் தூத்துக்குடியில் கைது செய்யப் பட்டுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இந்தத் தகவல், பரமக்குடியில் கூடியிருந்தவர்களிடம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதையடுத்து ஐந்து முனை சாலையில் முதலில் சுமார் 60 பேர் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

 

இதற்குப் பிறகு வீடியோவில் காட்சிகள் விரிகின்றன.  ஐந்து முனை சாலையில் அந்தக் கும்பல் அமர்ந்ததும், எஸ்.பி செந்தில் வேலன் தலைமையிலான 100 பேர் கொண்ட காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.   இதன் நடுவே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களே மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசுகின்றனர்.   ஆனால் மறியல் செய்பவர்கள் கலைவதாக இல்லை.   இந்த மறியலால் பெரிதும் பாதிக்கப் படப் போவது, இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு வருகை தரும் தலித் இன மக்கள் தான்.  ஏனெனில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 11 அன்று, காலை 5 மணி முதலே பரமக்குடி நகரத்தை வந்தடையும் அத்தனை சாலைகளிலும் பொதுமக்களின் வருகை தடை செய்யப் பட்டுள்ளது.  இமானுவேல் சேகரனின் நினைவிடம் பரமக்குடி நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால், ஏராளமான கூட்டம் கூடும் ஒரு இடத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக, கடந்த 10 ஆண்டுகளாகவே செப்டம்பர் 11 அன்று போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்றும் போக்குவரத்து நிறுத்தப் பட்டு, இமானுவேல் சேகரனின் நினைவு நான் நிகழ்ச்சிக்கு வருகை தரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க பட்டுள்ளன.

 

இந்நிலையில் வீடியோ காட்சிகளின் படி, சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தலித் தலைவர்கள்,  சாலை மறியல் செய்வதால் நினைவு நாள் நிகழ்ச்சி பாதிக்கப் படும், ஆகையால் கலைந்து செல்லுங்கள் என்று கூறுகிறார்கள்.  ஆனால் மறியல் செய்யும் கும்பல், ஜான் பாண்டியனை விடுதலை செய்யாமல் கலைந்து செல்ல மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.  இதற்குள், ஜான் பாண்டியன் கைது பற்றிய செய்தி பரவி, மேலும் மக்கள் கூட்டம் ஐந்து முனை சாலையில் கூடிய வண்ணம் இருக்கின்றனர்.

 

காவல்துறையினர் மறியல் செய்த கும்பலை மடக்கி, ஒரு பக்கமாக ஒதுக்கி விட்டு, வாகனங்களை அனுமதிக்கின்றனர். வருகின்ற வாகனங்கள் அனைத்தும் நிகழ்ச்சிக்கு வரும் ஜான் பாண்டியன் கட்சிக் கொடியோடு வருகின்றன.  சிறிது நேரம் கழித்து, கொடி ஏதும் இல்லாமல் வந்த ஒரு வாகனத்தை கும்பல் மறிக்கின்றது.  அந்தக் கும்பலிடம், செந்தில் வேலன் தலைமையிலான போலீஸ் டீம் பேசுகிறது.  ஒரு சில வினாடிகளிலேயே தடியடி நடத்த உத்தரவிடப்பட்டு காவல்துறையினர் கடுமையாக தடியடி நடத்துகின்றனர். கும்பல் பல்வேறு திசைகளில் சிதறிச் செல்கிறது.

 

தடியடிக்கு பின்பு கலைந்து சென்ற கும்பல், கற்களை வீசித் தாக்கத் தொடங்குகிறது.   ஒரு வயதான பெரியவர் ஒரு பெரிய சவுக்குக் கட்டையை எடுத்து காவல்துறையினரை நோக்கி வீசுகிறார்.   அந்த கட்டை யார் மீதும் படாமல், தரையில் விழுகிறது.  இதற்குப் பிறகு நடக்கும் துப்பாக்கிச் சூட்டில், சவுக்குக் கட்டையை வீசிய அந்தப் பெரியவர் குறிபார்த்துச் சுடப் படுகிறார்.   இவர்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு முதல் பலி.

 

தடியடியையும், துப்பாக்கிச் சூட்டையும் கண்டு உயிருக்கு பிழைத்து தப்பி ஓடி, ஆங்காங்கே இருந்த சந்துகளில் நுழைந்து கொண்டவர்கள் காவல்துறையினரால் வளைக்கப் பட்டு நையப் புடைக்கப் படுகிறார்கள்.  இவ்வாறு காவல்துறையினரிடம் சிக்கியவர்களில் ஒருவர் வெள்ளைச் சாமி என்ற 64 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.  இவர் வேட்டி கட்டிக் கொண்டு, ஜான் பாண்டியன் கட்சியின் நிறத்தில் ஒரு ரிப்பனை தலையில் கட்டிக் கொண்டு இருக்கிறார்.  அவரை தர தர வென இழுத்து வரும் காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர்.  அவர் வேட்டி அவிழ்ந்து விழுகிறது. வேட்டியைக் கூட எடுக்க விடாமல் தொடர்ந்து அடித்து இழுத்து வருகின்றனர்.  காவல்துறை சீருடை அணியாமல் காவல்துறையினரோடு இருக்கும் ஒருவர் அந்தப் பெரியவர் முதுகில் ஓங்கிக் குத்துகிறார்.   பிறகு அவருக்கு சராமரியாக அடி விழுகிறது.

 

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரும் வெள்ளைச் சாமியை சந்தித்த போது அவர், .   "ஜான் பாண்டியனை கைது செய்த விபரம் கேள்விப் பட்டதுமே நான் காவல்துறையினரை அணுகி, ஜான் பாண்டியனை ஏன் கைது செய்தீர்கள். உடனடியாக விடுதலை செய்யுங்கள். நிகழ்ச்சியை சிறப்பாக நடக்க அனுமதியுங்கள்" என்று கேட்டேன்.  இதைப் பார்த்து கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தடியடி தொடங்கியதும், என்னை அடையாளம் கண்டு, என்னையாடா கேள்வி கேட்கிறாய் என்று கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டே என்னை அடித்தார்.  எனக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  அதன் பிறகு இரவு 10.30 மணிக்கு என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள்" என்றார்.

 

பரமக்குடியில் சம்பவ தினத்தன்று இருந்த பொதுமக்களிடம் பேசிய போது, மதியம் 2 மணிக்கு மேல், காவல்துறை கூடுதல் எண்ணிக்கையில் குவிக்கப் பட்டு, ஐந்து முனை சாலையை இணைக்கும் அத்தனை சாலைகளிலும் ரோந்து சென்று கையில் கிடைத்தவர்களையெல்லாம் சராமரியாக தாக்கியிருக்கிறார்கள்.  இவ்வாறு தாக்கப் பட்டதில், பரமக்குடி வாட்டர் டேங்கின் வாட்ச் மேனான 60 வயதான  பாண்டியும் அடக்கம்.   அவரிடம் பேசிய போது "வாட்டர் டேங்கில் நான் மாலை 4.30 மணிக்கு நின்று கொண்டிருந்த போது, 10 பேர் கொண்ட போலீசார் சூழ்ந்து கொண்டு என்னை கட்டைகளாலும் லத்தியாலும் தாக்கினர்.  எனக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்றார். இவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.  பிற்பகலுக்கு மேல் நடந்த இந்தத் தாக்குதலில் தான், இருவர் உயிரிழந்திருக்கின்றனர்.   இறந்தவர்கள் யார், உயிரோடு இருப்பவர்கள் யார் என்பது தெரியாமலேயே, மூன்று உடல்களை இளையான்குடி மார்ச்சுவரியில் போட்டு விட்டு சென்றிருக்கின்றனர்.  அதில் குமார் என்ற ஒருவர் இரவு 11 மணிக்கு தண்ணீர் என்று கத்தியதும் தான், அவரை எடுத்து சிகிச்சை அளித்திருக்கின்றனர்.

 

நடந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஒரு புகாரை அளித்து அதன் பேரில் எப்ஐஆர் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.   அந்தப் புகாரில் சிவக்குமார் "இன்று இமானுவேல் சேகரனின் 54வது நினைவு தினம் காலை 6 மணி முதல் அனுசரிக்கப் படுகிறது.   இந்த நிகழ்ச்சி, பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் மற்றும் தியாகி இமானுவேல் பேரவை என்ற அமைப்புகளால் நடத்தப் படுகிறது.   ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான இமானுவேல் ஆதரவாளர்கள் பரமக்குடிக்கு வந்து, இதில் கலந்து கொண்டு மருதுபாண்டிநகரில் உள்ள அவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.   அது போலவே இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டது.   வழக்கமாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தலித் அமைப்புக்களின் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்துவர்.   சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.  (அப்புறம் ஏன் சார் கலவரம் நடந்துச்சு ?) டாக்டர்.செந்தில்வேலன் ஐபிஎஸ் (வம்புச் செல்வன்) அவர்கள் ஐந்து முனை சந்திப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த போது ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் சுமார் 1000 பேர் ஐந்து முனை ஜங்ஷனில் கூடி எங்கள் தலைவர் ஜான் பாண்டியனை உடனே விடுதலை செய் என்று கோஷம் போட்டு, போலீசாரை நோக்கி ஆபாசமாக திட்டினர்.  உடனே எஸ்பியும், பரமக்குடி தாசில்தாரும் அந்த கலவர கும்பலைப் பார்த்து இது சட்டவிரோதமாக கூடிய கூட்டம் என்று அறிவித்து உடனடியாக கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.    ஆனால் கலவரக் கும்பல் கலைந்து செல்லாமல் வாகனங்கனை மறித்து வாகனங்களையும் கடைகளையும் சேதப்படுத்த முயன்றது.   நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, தாசில்தார் வாய்மொழியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவர கும்பலை கலைக்குமாறு உத்ததரவிட்டார். அதன் படி ஆயுதப் படை காவல்ர்கள் பிசி 8326 மணிமாறன், பிசி 29442 வேம்பு செல்வம், பிசி 1834 சுந்தரபாண்டி மற்றும் பிசி 1197 சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலவர கும்பலை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.  ஆனால் கலவர கும்பல் கலைந்து செல்லாமல், பின்னால் பெயர் கேட்டுத் தெரிந்த கணேசன், ஜெயபால், வெள்ளைச்சாமி, மாணிக்கம், தீர்த்தக்கனி உள்ளிட்ட (இவர்கள் துப்பாக்சிச் சூட்டில் இறந்து போனவர்கள்) பலர் கற்களை வீசி வன்முறையில் இறங்கினர்.

 

உடனே தாசில்தார் லத்தி சார்ஜ் செய்து கலவர கும்பலை கலைக்க உத்தரவிட்டார்.   ஆனால் கலவர கும்பல் கலைந்து செல்லாமல் கற்களாலும், கட்டைகளாலும் தாக்கியது.  பிறகு லேசான தடியடிப் பிரயோகம் நடைபெற்றது.  காவல்துறையினர் முதுகளத்தூர் சாலையிலிருந்து பின்வாங்கி ஐந்து முனை சந்திப்புக்கு வந்தனர்.   அதற்குள் கலவர கும்பல் 14 வாகனங்களுக்கு தீ வைத்தது.

 

 

பரமக்குடியிலிருந்து வந்த தீயணைப்பு வாகனமும் தடுத்து நிறுத்தப் பட்டு தீ வைக்கப் பட்டது.  இந்த தாக்குதலில் டிஐஜி சந்தீப் மிட்டல் தலையிலும், டாக்டர் செந்தில் வேலன் வலது கையிலும், பரமக்குடி டிஎஸ்பி வலது காதிலும், நாங்குநேரி காவல் நிலைய காவலர் செல்வின் செல்வகுமார், குற்றாலம் காவல் நிலைய காவலர் மணி பார்த்திபனூர் காவல் நிலைய கான்ஸ்டபிள் பூமிநாதன், பெண் காவலர் டெய்சி மற்றும் கலைவாணி, சப் இன்ஸ்பெக்டர் நர்மதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  எனக்கு இடது முக்கையிலும், வயிற்றிலும், காலிலும் காயம் ஏற்பட்டது.  நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, பரமக்குடி தாசில்தார் பொதுச் சொத்தையும் உயிரையும் பாதுகாப்பதற்காக துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்க நேரிடும் என்று கூட்டத்தைப் பார்த்து எச்சரித்தார்.

 

செந்தில்வேலனும் கலவரக்காரர்களை கலைந்து செல்லும் படியும் இல்லாவிட்டால் துப்பாக்கியால் சுட்டு கலைக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். கலவரக் கும்பல் கட்டுக்கடங்காமல் தாக்கியபடி இருந்தால் பரமக்குடி தாசில்தார் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்குமாறு எழுத்து பூர்வமான உத்தரவை கொடுத்தார்.  ராமநாதபுரம் ஆயுதப் படைக் காவலர்களிடம் கலவரத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்துபவர்களை காலுக்கு கீழே சுடும்படி உத்தரவிட்டார்.  ஒருவர் ஒரு வாகனத்துக்கு தீ வைக்க முயன்று கொண்டிருந்தார்.   அவரை குறி பார்த்துச் சுடச் சொன்னார் (வண்டி எரிஞ்சா அதுக்காக கொல்லுவீங்களா ?)  நான் எனது பிஸ்டலை எடுத்து அந்த நபரை நோக்கி சுட்டேன்.  அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.  ஆனால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கலவரக் கும்பல் தொடர்ந்து கற்களாலும், பெட்ரோல் குண்டுகளாலும் தாக்கியது. காவல் ஆய்வாளர் கலவர கும்பலை நோக்கி 30 முறை சுட்டார்.   ஆனால் எப்போது துப்பாக்சிச் சூடு நிறுத்தப் பட்டாலும் கலவர கும்பல் வன்முறையாக தாக்கியது.  கலவர கும்பல் கலைந்து செல்லாமல் அரசு மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துக் கொண்டிருந்தால் நான் என் பிஸ்டலால் கலவர கும்பலை நோக்கிச் சுட்டேன்.   பிறகு கலவரக் காரர்கள் கலைந்து சென்றனர். மாலை 4 மணிக்கு ஆயுதப் படை ஆய்வாளர் உதவியுடன் எத்தனை முறை சுடப்பட்டது என்று கணக்கு பார்த்த போது 30 ரவுண்டுகள் .303 துப்பாக்கியாலும், 410 மஸ்கட் துப்பாக்கியாலும் பிஸ்டலாலும் சுடப்பட்டது தெரிய வந்தது. (சிவக்குமார் சார், காவல் ஆய்வாளர் 30 முறை சுட்டார் என்று சொல்லி விட்டு மொத்தமே 30 ரவுண்டுன்னு எப்பிடி சார் சொல்றீங்க).  காயமடைந்தவர்களை எண்ணிப் பார்த்ததில் 30 நபர்கள் காயமடைந்தது தெரிய வந்தது.   காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் படடனர்.  மேலும் 60 ஆய்வாளர்கள் காயமடைந்து சிகிச்சை எடுக்க உள்ளனர். (60 ஆய்வாளர்கள் எங்க சார் வந்தாங்க பரமக்குடிக்கு ?  யாருமே மருத்துவமனைக்கு போனதாக தெரியவில்லையே).  போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு நான் காவல்நிலையம் திரும்பினேன்.   அந்த சம்பவம் பற்றி இந்த புகாரை உங்களுக்கு அளிக்கிறேன். நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று அந்தப் புகார் மனுவில் சிவக்குமார் தெரிவித்திருந்தார்.  எங்கேயாவது குற்றவாளியே புகார் கொடுப்பதை  பார்த்திருக்கிறீர்களா ?

 

பரமக்குடியில் சம்பவம் நடந்த அன்று எடுக்கப் பட்ட வீடியோ காட்சியில் முக்கிய நிகழ்வுகள், வரிசை மாறாமல் புகைப்படமாக்கப் பட்டு உங்களுக்காக அளிக்கப் படுகிறது.

 34

சாலை மறியல் தொடங்குகிறது

35


சாலையில் அமர்ந்திருக்கும் மக்கள்.

image-1


Image-2

மறியல் செய்பவர்களுக்கு அருகே வம்புச்செல்வன்.

36

பேச்சுவார்த்தையை அடுத்து அனுமதிக்கப் படும் வாகனங்கள்

Image-3

Image-4

Image-6


தொடங்கியது தடியடி

Image-9

வேட்டையாடி திரும்பி வரும் டிஎஸ்பி கணேசன்

39

தடியடிக்கு பதிலடி

Image-10

முதல் துப்பாக்கிச் சூடு


40

போலீஸ் வேனுக்குள் ஒருவரை ஏற்றி நையப் புடைக்கும் போலீசார்

Image-23

பொதுமக்கள் வேனை நோக்கி வருவதை பார்த்து தெறித்து ஓடும் போலீசார்

Image-24

கைப்பற்றப் பட்டு துவம்சமாகும் போலீஸ் வேன்

Image-25

தொடரும் துப்பாக்கிச் சூடு

Image-28

Image-27

கைத்துப்பாக்கியோடு டிஐஜி சந்தீப் மிட்டல்

Image-15

காயம்பட்டு கைத்தாங்கலாக அழைத்து வரப்படும் சந்தீப் மிட்டல்

Image-17

அழைத்து வரப்படும் 63 வயது முதியவர் வெள்ளைச்சாமி

Image-18

தொடங்கியது தாக்குதல்

Image-19

63 வயது முதியவரை சூழ்ந்து தாக்கும் 'வீரர்கள்'

Image-22

முதியவரை முதுகில் அடிக்கும் வீரன்

Untitled-24

Image-21

41

IMG_0088

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெள்ளைச்சாமி

42

தூக்கி வரப்படும் பிணம்

43

IMG_0092

உடல் முழுக்க எலும்பு முறிவுகளோடு இருக்கும் வாட்டர் டேங்க் வாட்ச்மேன்.

 

இதில் யார் வன்முறையாளர்கள் ?
 
.........சவுக்கு
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்