Home » » அதிகாரமற்றவர்களின் குரலே கலவரங்கள்

அதிகாரமற்றவர்களின் குரலே கலவரங்கள்

Written By DevendraKural on Tuesday, 13 September 2011 | 05:52

பரமக்குடி கலவரத்தையும், அதையொட்டி நடந்த உயிரிழப்பையும், இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன.  இதற்கு பதிலளித்துப் பேசிய செல்வி ஜெயலலிதா, பரமக்குடியில் ஒரு சுவரில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை, இழிவாகக் குறிப்பிட்டு ஒரு சுவற்றில் எழுதப் பட்டிருந்ததாகவும், அதன் காரணமாக பழனிக்குமார் என்ற 15 வயதுச் சிறுவன் கொல்லப் பட்டதாகவும், அந்தப் பழனிக்குமார் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த ஜான் பாண்டியன் சென்றதாகவும், அவரை தடுத்ததால் அவர் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், இப்படியாக சங்கிலித் தொடர் போலச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

 Natarajan-IAS

ஜெயலலிதாவின் இந்தச் சங்கிலித் தொடர், அவருக்கே நியாயமாக இருக்கிறதா என்பது தெரியவில்லை.   ஒரு தலைவரைப் பற்றி சுவற்றில் தவறாக எழுதப் பட்டிருக்கிறது என்பதற்காக ஒரு 15 வயதுச் சிறுவனை சாதி வெறியர்கள் கொலை செய்திருக்கிறார்கள்.  அந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அந்தச் சிறுவனின் சாதியைச் சேர்ந்த ஒரு தலைவர் வந்தால் கலவரம் ஏற்படும் என்பதற்காக அவர் தடுக்கப் பட்டார், அதனால் தான் கலவரம் நடந்தது என்று ஒரு முதல்வர் சட்டசபையில் பேசலாமா ?   ஒரு மனநிலை பிறழ்ந்தவன் சுவற்றில் ஏதோ கிறுக்கி  விட்டான் என்பதற்காக, ஒரு 15 வயதுச் சிறுவனை கொல்லலாமா ?   அப்படியே அந்தச் செயலை அந்தச் சிறுவன்  செய்தான் என்றே வைத்துக் கொள்ளலாம்.    அதற்காக அவனை கொலை செய்வது சரியா ?  ஏற்கனவே காலம் காலமாக ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஒரு அரசு ஏற்படுத்தும் நம்பிக்கையா இது ?   இருக்கும் ஒட்டு மொத்த காவல்துறையையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குவித்து, அந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டாமா ?

 Seven_Killed_In10652

சில அரசியல் தலைவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக இந்தச் செயலில் ஈடுபட்டார்கள் என்று ஜான் பாண்டியனை குறிப்பிடுகிறாரே….   இன்று அரசியலில் ஆதாயத்துக்காக யார்தான் காரியங்களைச் செய்யவில்லை ?  இத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தும், இதே ஜான் பாண்டியனோடு, 2001 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தவர் தானே ஜெயலலிதா ?  அப்போது எழும்பூர் தொகுதியில் பரிதி இளம் வழுதிக்கு எதிராக நின்று, 86 வாக்குகளில் தோல்வியடைந்த ஜான் பாண்டியனும், பரிதி இளம் வழுதியும், கடும் வன்முறையில் ஈடுபட்டார்களே… அப்போது ஜான் பாண்டியனை கண்டித்தாரா ஜெயலலிதா ?

 

வருடம் தவறாமல், தேவர் குரு பூஜைக்கு சிறப்பு விமானத்தில் சென்று கலந்து கொள்கிறாரே ஜெயலலிதா ?  அது அரசியல் ஆதாயத்திற்காக இல்லாமல் வேறு எதற்காக ?   தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு, அரசியல் ஆதாயம் தேடுவதில், இடது சாரிகள் கூட விதிவிலக்கல்ல என்பதுதான் வேதனையான விஷயம். அரசியல் ஆதாயம் தேடாத ஒரே ஒரு கட்சியை ஜெயலலிதாவால் அடையாளம் காட்ட முடியுமா ?

 

ஜான்பாண்டியன் அரசியல் ஆதாயத்துக்காகத் தான் பரமக்குடி செல்ல முயன்றார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.   தேவேந்திர குல மக்களின் ஒரே பிரதிநிதி என்பதில் டாக்டர்.கிருஷ்ணசாமிக்கும், ஜான் பாண்டியனுக்கும் இடையே நிலவும் போட்டியே, ஜான் பாண்டியனை பரமக்குடிக்கு செல்லத் தூண்டியது என்றால் மிகையல்ல.

 

திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே, முத்துராமலிங்கத் தேவரை கவுரவித்து, அதன் மூலம், முக்குலத்தோர் வாக்கு வங்கிகளை வசப்படுத்த வேண்டும் என்பதில் கடும் போட்டி போட்டன.

 vehicle_779216g

2007ல், முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை அனைத்து சாதி பிரதிநிதி கருணாநிதி மிகச் சிறப்பாக நடத்தினார்.   பசும்பொன் விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் இந்த விழா நடந்தது.

 

2007 செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தேவர் சாதியினராலும், தமிழக அரசாலும் முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. அரசு சார்பில் அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் 'தேவர் ஜெயந்தி விழா' கொண்டாடப்பட இருப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் பேசும்போது, 'கமுதி தாலுகாவில் விழா நாட்களில் கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்' என்றும் 'தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்' என்றும் 'ஒவ்வொரு 30 கி.மீ. தூரத்திற்கும் ஓர் அவசர சிகிச்சை வண்டி நிறுத்தப்படும்' என்றும் "போக்குவரத்து வழித்தடங்களில் ஒவ்வொரு இடத்திலும் வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர், துணை மாஜிஸ்ட்ரேட் ஆகிய அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்' என்றும் தெரிவித்திருந்தார். முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழா மூன்று நாட்களும், மதுரையில் மருதுபாண்டியர் சிலை திறப்பு விழா ஒரு நாளும் மேலும் இவ்விழாப் பணிகளுக்காக அரசு ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பொறுப்பேற்றல், விடுபடல் என ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு தென் தமிழகத்தின் 8 மாவட்டங்களின் அரசு எந்திரம், அன்றாட மக்களின் பணிகளை விடுத்து இவ்விழாவில் முடக்கப்பட்டன. அனைத்து உழைக்கும் மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டன.

 

அதே ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட வேண்டிய, முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜீவா மற்றும் பகத் சிங் ஆகியோருக்கு கலைவாணர் அரங்கத்தில் நடக்க இருந்த அரசு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப் பட்டதை மறக்க முடியாது.

 THSHK_PARAMAKUDI_PT_779816g

ஜெயலலிதா தன் பங்குக்கு, இணையாக, மதுரையில் அவருக்கு நூறு அடி உயர சிலை நிறுவவும், 'இரண்டாம் படை வீடு' என்ற பெயரில் கோயில் கட்ட அடிக்கல் நாட்டி தன் பங்குக்கு தேவருக்கு காணிக்கை செலுத்தியுள்ளார்.  இதேநேரத்தில் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலை நிறுவ வேண்டுமென, அப்போது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த ஜான்பாண்டியன் தலைமையில் மறியல் நடந்தபோது, காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு நான்கு தலித் உயிர்கள் பலியான சம்பவம் நம் நினைவிற்கு வரவேண்டும். பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதில் ஆதிக்கச் சாதியினரோடு, ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அனைத்து அரசியல் சக்திகளும் ஒத்த கருத்தில் இருக்கின்றனர்.  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அரசே அண்ணா சாலையில் சிலை வைப்பதும், இமானுவேலுக்கு, சிலை வைக்க அனுமதிக்கே மறியல் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் உயிர் விடுவதும், இதே தமிழ்நாட்டில் தான் நடக்கிறது.

 

'தேவர்' பெயர் சூட்டலும், மணி மண்டபம் கட்டும் வேலைகளும், பொதுப் பெயர் சூட்டி குறிப்பிட்ட சாதியினரை வலிமைப் படுத்துதலும் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவால் தொடர்ந்து முன்னெடுக்கப்  படுகையில், அதற்கான எதிர்வினையாகவே  தலித் மக்கள் ஆங்காங்கே தன்னியல்பாக அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன், தளபதி சுந்தரலிங்கம் சிலைகளை நிறுவ முயல்வதும், இவர்களுக்கான விழாவை சிறப்பாக கொண்டாடுவதிலும் ஈடுபடுகிறார்கள்.

 

இன்று இமானுவேல் நினைவு தினத்துக்கு பரமக்குடியில் திரண்டிருந்த பெரும்பாலானோருக்கு, இமானுவேல் வரலாறு என்ன என்பது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், தங்களை ஒடுக்கும் சாதிக்கு தங்கள் எதிர்ப்பை காண்பிப்பதற்கான ஒரு களமாகவே இமானுவேல் நினைவு தினத்தை பார்க்கிறார்கள்.   இப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் தங்கள் சாதிக் கட்சித் தலைவரை காவல்துறை கைது செய்துள்ளது என்கிற செய்தி, ஒடுக்கப் பட்ட ஒரு கூட்டத்திடம் கோபத்தை வரவழைப்பது இயல்பே. "அதிகாரமற்றவர்களின் குரலே கலவரங்கள்" (riots are the voice of the powerless) என்று மார்ட்டின் லூதர் கிங் சொல்வது பொறுத்தமானதே.

 THSHK_PARAMAKUDI_5_779813g

இந்த பின்புலத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சம்பவங்களைக் காண வேண்டும்.  வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல்களில், டாக்டர்.கிருஷ்ணசாமியை விட, நான் வலுவானவன் என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயம் ஜான் பாண்டியனுக்கு.  அதற்காக, இமானுவேல் நினைவு தினத்தன்று விரிவான ஏற்பாடுகளை செய்கிறார்.  ஏராளமான பணத்தையும் செலவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

இந்த நிலையில் இமானுவேல் நினைவு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், சாதீயக் கொலை என்று சந்தேகப் படும் வகையில் பழனிக்குமார் என்ற 15 வயது சிறுவன் கொல்லப் படுகிறான்.  மறுநாள் ஊடகங்களில் வந்த செய்திகள், அந்தச் சாதியைச் சேர்ந்த யாராவது ஒருவரை கொல்ல வேண்டும் என்று ஒரு கும்பல் தேடிய போது, இந்தச் சிறுவன் மாட்டிக் கொண்டான் என்று கூறின.

 THSHK_PARAMAKUDI_2_779810g

காவல்துறை, இந்தச் சிறுவனின் மரணத்தை அறிந்த உடனேயே, ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தியிருக்க வேண்டும்.   கொடி அணிவகுப்பு நடத்தியிருக்க வேண்டும்.   மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.    ஒரு 15 வயதுச் சிறுவனை சாதியின் காரணமாக ஒரு கும்பல் கொலை செய்திருக்கிறதென்றால், அந்தச் சம்பவத்தை, பாதிக்கப் பட்ட மக்கள், உணர்ச்சி வசப் பட்ட நிலையிலேயே அணுகுவார்கள் என்பதை காவல்துறை கணித்திருக்க வேண்டும்.

 THSHK_PARAMAKUDI_1_779809g

சனிக்கிழமை இரவு முதல், ஞாயிற்றுக் கிழமை காலை வரை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தமிழகமெங்கும் இருந்து, மக்கள் வந்து குவிந்தது, காவல்துறைக்கு நன்கு தெரியும்.   தெருவுக்குத் தெரு, டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருந்தால், அந்த மக்கள் எப்படி வருவார்கள் என்பதும் தெரியும்.    இப்படி மக்கள் குவியும் போது, அதற்கு ஏற்றார் போல, அந்தக் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் போதுமான காவல்துறையினர் அந்த மாவட்டத்தில் திரட்டப் பட்டிருக்க வேண்டும்.  அந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கூடுகிறார்கள், எத்தனை பேர் எதிர்ப்பார்க்க படுகிறார்கள், ஜான் பாண்டியன் செய்திருக்கும் ஏற்பாடுகள் என்ன என்பதையெல்லாம் கணிக்க வேண்டியது உளவுத் துறையின் பொறுப்பு.   1997ல் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரத்தின் போது, உளவுத்துறையில் பணியாற்றிய, தற்போது தமிழகத்தின் உளவுத்துறை தலைவராகவும், காவல்துறை இயக்குநராகவும் இருக்கும் ராமானுஜத்திற்கு, இந்த விஷயங்களில் போதுமான அனுபவம் உண்டு. 

THSHK_PARAMAKUDI_779808g

 மேலும், காவல்துறை அதிகாரிகளுக்கு கலவரத்தின் போது, கூட்டத்தின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை பயிற்சியிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள்.  முதல் கல் எறியப் படும் வரைக்கும் தான் பேச்சுவார்த்தை எல்லாம். அதன் பிறகு பேசுவதற்கு இடமே கிடையாது. கலவரம் தொடங்கியதும், பொதுமக்கள் காவல்துறை எல்லோருமே ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்.  சென்னை உயர்நீதிமன்ற காவல்துறையினர் வழக்கறிஞர் மோதலின் போது, சும்மா நின்று கொண்டிருந்த கார்களையும், பைக்குகளையும், காவல்துறையினர் அடித்து நொறுக்கவில்லையா ?

 THSHK_PARAMAKUDI_779807g

ஏராளமான பணத்தை செலவு செய்து, தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்ட ஜான் பாண்டியன் முயலப்போகிறார் என்பது உளவுத்துறைக்கு நன்கு தெரியும்.  அப்படி இருக்கையில், இவ்வளவு செலவு செய்து விட்டு, ராமநாதபுரம் செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டால், அதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்கும் நிலையில் அவர் அரசியல் செல்வாக்கு இல்லை.  ஜான் பாண்டியனை கைது செய்தால், ராமநாதபுரத்தில் கூடியிருக்கும் 3 ஆயிரம் மக்களை எப்படிக் கட்டுப் படுத்துவது என்பதை காவல்துறையினர் யோசித்திருக்க வேண்டும்.  ஜான் பாண்டியன் தடையை மீறுவார், கைது செய்ய நேரிடும் என்பதையும் கணித்திருக்க வேண்டும்.   இதைக் கணித்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையாமல், மாவட்ட எல்லையிலேயே மக்களை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.   அப்படி இல்லையென்றால் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, அதிரடிப்படை, லொட்டு லொசுக்கு படைகளையெல்லாம், ராமநாதபுரத்தில் குவித்திருக்க வேண்டும்.

THSHK_PARAMAKUDI_3_779811g

அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் வருகை தருவதற்கு நான்கடுக்கு பாதுகாப்பை வழங்கும் தமிழக காவல்துறை, சொந்த மாநிலத்தில், சக குடிமகன்களுக்கு பாதுகாப்பு வழங்காமல், ஓட விட்டு சுடுவது வெட்கக் கேடு.

இப்படி முன்னேற்பாடுகளைச் செய்யாமல், போதுமான எண்ணிக்கையில் காவல்துறையினரை குவிக்காமல், 7 பேரை ஓட ஓட விரட்டிச் காக்கைக் குருவிகளைப் போல சுடுவதென்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கலவரத்திற்கு பொறுப்பான அதிகாரிகள்

 THSHK_PARAMAKUDI_779817g

1)  திரு.கே.ராமானுஜம், உளவுத் துறை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்

2)  திரு.எஸ்.ஜார்ஜ், கூடுதல் டிஜிபி சட்டம் மற்றும் ஒழுங்கு

3)  திரு.டி.ராஜேந்திரன், உளவுத்துறை கூடுதல் டிஜிபி

4)  திரு.ராஜேஷ் தாஸ், தென் மண்டல காவல்துறை தலைவர்

5)  திரு.சந்தீப் மிட்டல், ராமநாதபுரம் டிஐஜி

6)  திரு.காளிராஜ் மஹேஷ்வர், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர்

7)  திரு.செந்தில் வேலன், அடையாறு துணை ஆணையர், ராமநாதபுரத்தில் ஏற்கனவே பணியாற்றியதாக ஞாயிறன்று பரமக்குடிக்கு அனுப்பப் பட்டவர்.  இவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்.

அந்தக் கூட்டத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர், அதனால் காவல்துறைக்கு வேறு வழியில்லை என்று காவல்துறையினர் சமாதானம் சொல்லக் கூடும்.

கடந்த மாதம் 6 முதல் 10 வரை, லண்டன் மாநகரில் நடந்த கலவரங்களை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம்.    அன்று லண்டன் பெருநகர காவல்துறை துப்பாக்கிச் சூடு  நடத்தியிருந்தால், நூற்றுக்கணக்கில் செத்திருப்பார்கள்.  ஆனால், லண்டன் காவல்துறை ஒரு முறை கூட துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.    இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள்.  இதைவிடவா பரமக்குடியில் கலவரம் நடந்து விட்டது ? 

 

bp26

bp25

bp23

bp22

bp21

bp20

 

bp19

bp18

 

bp17

 

bp16

bp15

bp13

 

bp12

 

bp11

bp10

bp9

bp8

bp7

bp6

bp5

bp4

bp3

bp1

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்