Home » » அதிரவைக்கும் பரமக்குடி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

அதிரவைக்கும் பரமக்குடி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

Written By DevendraKural on Wednesday, 7 December 2011 | 07:52

நீதிபதி சம்பத் கமிஷனின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக நான்கு லட்ச ரூபாயையும் வாரிசுகளுக்கு அரசு வேலையையும் அறிவித்திருக்கிறார் முதல்வர். இந்த நேரத்தில், பலியானவர்களின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வைத்து சர்ச்சை கிளம்பியுள்ளது! 

மதுரையில் உள்ள 'ஸ்பார்க்' அறக்கட்டளையின் இயக்கு​நரும் மனித நல ஆர்வலருமான மாரிக்குமார் நம்மிடம் பேசினார். ''பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தது நான்கு பேர்தான். மற்ற இருவரும் போலீஸ் அடித்ததால்தான் இறந்திருக்கிறார்கள். அதற்கு இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்​போர்ட்​​தான் சாட்சி.

ஜெயபால் என்பவருக்கு வலது மார்பில் குண்டு பாய்ந்து இடது தோள்பட்டையைத் துளைத்திருக்கிறது.

50 வயதான பன்னீர்செல்வத்துக்கு, முன் நெற்றியில் இடது புருவத்துக்கு நான்கு செ.மீ. மேலே பாய்ந்திருக்கும் தோட்டா, தலையின் பின் பகுதியில் உச்சந்​தலைக்கு நான்கு செ.மீ-க்கு கீழே வெளியேறி இருக்கிறது. ஆனால், பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார், 'குனிந்து ஒரு போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்துக்கொண்டு இருந்த​போது பன்னீர்செல்வத்தை சுட்டதுபோலீஸ்' என்று தனது ரிப்போர்ட்டில் சொல்கிறார். குனிந்தவரைச் சுட்டால் முன்னந்தலையிலா துப்பாக்கிக் குண்டு பாயும்?

முத்துக்குமாருக்கு அடிவயிற்றில் பாய்ந்த குண்டு, சிறுநீர்ப் பையை துளைத்து பின்புறமாக வெளியேறியதாக பி.எம். ரிப்போர்ட் சொல்கிறது.

54 வயதான வெள்ளைச்சாமிக்கு கையில் வலது மூட்டுக்கு மேலேயும் காலில் இடது முட்டிக்கு கீழேயும் குண்டு பாய்ந்திருக்கிறது. அத்துடன் முன்னங்காலும் முன்னங்கையும் சிதைந்து விட்டது. 'வய்ட்டல் பார்ட்ஸ்' என்று சொல்லப்படும் உடலின் முக்கியப் பாகங்கள் எதுவும் இவருக்குப் பாதிக்கவில்லை. எனவே, குண்டு பாய்ந்து கிடந்தவரை, போலீஸார் காட்டுமிராண்டித்தனமாக அடித்து ரத்தப் போக்கை ஏற்படுத்தியதாலேயே, வெள்ளைச்சாமி இறந்திருக்கிறார்.

தீர்ப்புக்கனி என்ற இளைஞரின் உடலில் தோட்டா காயமே இல்லை. தலையில் 34-க்கு 12 செ.மீ. அளவுக்கு ரத்தக் கட்டு. தலை முழுக்க ரத்தம் கட்டி வீங்கும் அளவுக்கு அடித்திருக்கிறது போலீஸ். இரண்டு கை, இரண்டு தொடைகளிலும், உடம்பு முழுக்கவும் ரத்தம் கட்டி இருந்துள்ளது. இடது காலின் முன் பகுதியில் இரும்பு ராடு துளைத்ததற்கான காயம்.

55 வயதான கணேசனுக்கு கீழ் முதுகில் பாய்ந்த குண்டு அடிவயிற்றுப் பகுதி வழியாக வெளியேறி இருக்கிறது. போலீஸுக்குப் பயந்து ஓடிய அந்தப் பெரியவரை, வெறித்தனமாய் சுட்டிருக்கிறது போலீஸ். கலவரத்தை அடக்க நினைக்காமல், கதையை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரையும் இடுப்புக்கு மேலேயே சுட்டு, துப்பாக்கிச் சூட்டுக்கான நெறிமுறைகளை மீறி இருக்கிறார்கள்.

நீதிபதி சம்பத் கமிஷனின் விசாரணை, அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதால்தான் மக்கள் அதைப் புறக்கணித்தார்கள். ஆனாலும், அவர்களின் வலிகளை தனது இடைக்கால அறிக்கையில் பதிவு செய்திருக்​கிறார் நீதிபதி சம்பத். அதனால்தான் இடைக்கால நிவாரணத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர்.

இது மட்டுமே மக்களின் ரணங்களுக்கு மருந்தாகி​விடாது. திட்டமிட்டுக் கலவரத்தை உண்டாக்கி, ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. அல்லது வேறு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரித்தால்தான் அது சாத்தியமாகும். போலீஸ் வாகனத்தை போலீஸாரே தீ வைத்துக் கொளுத்துவது போன்ற வீடியோ உள்​ளிட்ட சில முக்கியமான ஆவணங்கள் இப்போது கிடைத்திருக்கிறது. எனவே, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

''பரமக்குடி சம்பவத்தில் கலவரத்தைத் தூண்டியதும் நடத்தியதும் போலீஸ்தான். தொடக்கத்தில் சிலர் மட்டும் ரோட்டில் மறியல் செய்தபோதே அவர்களை அப்புறப்படுத்தாமல், ஒரு மணி நேரம் வேடிக்கை பார்த்தது போலீஸ். அதனால் அதிக அளவில் கூட்டம் கூடியது. கலவரம் நடந்த ஏரியாவில் பெரும்பாலும் பள்ளர் சமூகத்தினரின் கடைகள்தான் இருக்கிறது. அவர்களது வாகனங்களே கடை வாசல்களில் நிறுத்தப்பட்டு இருந்தன. தங்களது வாகனங்களை, அவர்களே தீ வைத்து எரிப்பார்களா? துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக போலீஸாரே அங்கு இருந்த வாகனங்களுக்கு தீ வைத்திருக்கிறார்கள். உயிரையும் உடமையையும் பாதுகாப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சொல்லும் போலீஸ்காரர்களுக்கு, ஒரு சுண்டு விரலில் கூட காயம் இல்லை. அரசாங்கம் அறிவித்திருக்கும் கூடுதல் இழப்பீடானது சிறு நிவாரணம்தானே தவிர, இதுவே தீர்வு ஆகாது'' என்கிறார் கலவரம் தொடர்பான ஆவணங்களைத் திரட்டிவரும் வன்கொடுமைக்கு எதிரான வழக்கறிஞர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பகத்சிங்.

ஆனால், கலவரக் களத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளோ, ''வெளியில் இருந்து பேசுகிறவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஸ்பாட்டில் இருந்தவர்களுக்குத்தான் பிரச்னையின் ஆழம் தெரியும். கலவரக்காரர்கள் என்ன செய்தார்கள்... துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்களை நாங்களும் வைத்​திருக்​கிறோம்'' என்கிறார்கள்.

    மீண்டும், புயல் வீசத்தொடங்கி விட்டது!

   - குள.சண்முகசுந்தரம்

    படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்