Home » » பசுபதி பாண்டியன் கொலை வழக்கு சரணடைந்த 2 பேர் உண்மை குற்றவாளியா?

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு சரணடைந்த 2 பேர் உண்மை குற்றவாளியா?

Written By DevendraKural on Monday, 16 January 2012 | 02:39


திண்டுக்கல் : பசுபதிபாண்டியன் கொலை வழக்கில், நெல்லை வாலிபர் உட்பட 2 பேர் நேற்று காலை வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரும் உண்மையான குற்றவாளிகளா என்பதை கண்டறிய, அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீசார் முடிவு செய்துள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன் திண்டுக்கல்லில், கடந்த 10ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்த வழக்கில் பசுபதி பாண்டியனுக்கு பாதுகாப்புக்காக இருந்த 20 பேரை பிடித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் 5 பேரிடம் சோதனை நடத்தியதில், அவர்களிடம் புத்தம் புதிய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இந்தப் பணம் எப்படி வந்தது? யார் கொடுத்தது? என்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
பசுபதிபாண்டியன் கொலை செய்யப்படுவதற்கு முன், அவரது வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசிய மர்ம நபர் திருப்பூரில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படையினர் அங்கு சென்றனர். ஆனால் அவர் திருச்சிக்கு தப்பிவிட்டதால் தனிப்படை போலீசார் திருச்சி விரைந்தனர்.

இதற்கிடையே, நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே இடையர்தவணையை சேர்ந்த ஆறுமுகச்சாமி(29), தூத்துக்குடி மாவட்டம் சுபாஸ் பண்ணையாரின் சொந்த ஊரான மூலக்கரையை அடுத்துள்ள முள்ளக்காடு அருளானந்தன்(26) ஆகியோர் நேற்று, பசுபதி பாண்டியன் கொலை தொடர்பாக வள்ளியூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் சதீஷ் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை 7 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திண்டுக்கல் எஸ்.பி ஜெயச்சந்திரன் கூறுகையில், ''வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்துள்ள இருவரும் உண்மையான குற்றவாளிகளா, இல்லையா என்பது காவலில் எடுத்து விசாரித்தால் தெரியவரும். எனவே, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, திண்டுக்கல் ஜேஎம் 1 கோர்ட்டில் போலீசார் இன்று  மனு செய்வர். கோர்ட் அனுமதி கிடைத்ததும் அவர்கள் இருவரும் திண்டுக்கல் கொண்டு வரப்பட்டு விசாரணை செய்யப்படுவர்'' என்றார்.

இலங்கை அகதிக்கு தொடர்பா?: பசுபதிபாண்டியன் கொலை நடந்த இடத்தில், சந்தேகத்துக்கிடமாக நடமாடிய ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் இலங்கையை சேர்ந்த அகதி மகேந்திரன் என்பதும், பதிவு செய்யாமல் தமிழகத்தில் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. அவரை திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வைத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்படை இன்ஸ்பெக்டர் தெய்வம் ஆகியோர் விசாரணை நடத்தினர். 

அதில், பல ஆண்டுக்கு முன் அகதியாக வந்த மகேந்திரன், முகாமில் தங்காமல் மதுரை அருகே திருநகரில் தனியாக வீடு எடுத்து வசித்துள்ளார். முறைகேடாக ரேஷன் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளார். 2 ஆண்டுக்கு முன் டி.வாடிப்பட்டிக்கு குடிபுகுந்த மகேந்திரன், பின்னர் திண்டுக்கல் நந்தவனப்பட்டி இ.பி. காலனியில் உள்ள பசுபதிபாண்டியன் வீட்டுக்கு அருகே குடிபெயர்ந்துள்ளார். கொலை நடந்த இடத்தில் மகேந்திரன் நடமாடியதால் கொலையாளிகளுக்கு இவர் உதவியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

பழிக்குப்பழி?

வெங்கடேஷ் பண்ணையார் சகோதரர் சுபாஷ் பண்ணையார் குடும்பத்தினருக்கும், பசுபதி பாண்டியனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இருதரப்பிலும் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சுபாஷ் பண்ணையாரின் தந்தை அசுபதி, தாத்தா சிவசுப்பிரமணிய நாடார் ஆகியோர் பசுபதி பாண்டியன் தரப்பினரால் கொலை செய்யப்பட்டனர். இப்போது சரணடைந்துள்ள அருளானந்தன், சுபாஷ் பண்ணையாரின் சொந்த ஊரான மூலக்கரையை அடுத்துள்ள முள்ளக்காடை சேர்ந்தவர். எனவே, மூலக்கரை பண்ணையார் கொலைக்கு பழிக்குப்பழியாக பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கொலை, கொள்ளையில் தொடர்புடையவர்கள்

சரணடைந்துள்ள ஆறுமுகச்சாமி, 2007ல் கேரளாவில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற மீன் வேனை கடத்தியது தொடர்பாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர். 16&12&08ல் சுரண்டை அருகே குருங்காவனம் நாட்டாமை பெரியசாமியை கொலை செய்த வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டார். மேலும், இவர் மீது பாவூர்சத்திரம், சுரண்டை காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், அருளானந்தன் மீது தூத்துக்குடி ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்