Home » » பெருஞ் சீற்றங்கொள்... நீ பிழைத்திருக்க!

பெருஞ் சீற்றங்கொள்... நீ பிழைத்திருக்க!

Written By DevendraKural on Monday, 2 January 2012 | 02:20

ரு பெரு வெடிப்புக்குப் பின்பே இந்த உலகம் என்று நாம் கருதுகிற புவி எனும் கோள் உண்டானதாக அறிவியல் சொல்கிறது. 'அடப் போடா... ஆண்டவன் படைத்திட்டான் இதை!' என்று ஆத்திகம் ஒருபுறம் பொழிப்புரை ஆற்றுகிறது. இந்த வெளி தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து ஒரு செல் உயிரி தோன்றி, அதன் பிறகு தன் இயல்பு நிலையில் இருந்து மாறி வந்த பரிணாம நிகழ்வுகளைத் தாக்குப் பிடித்து, இன்று மனிதர்களாக எழுந்திருக்கிறோம். இன்னும் சுருங்கச் சொல்வதானால், குரங்காய் குனிந்திருந்த நாம் நிமிர, இரண்டு கைகளையும் தூக்க வேண்டித்தான் இருந்தது. நாம் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டோம்... எதிர்காலத்தில் நம்மை மீண்டும் குனியச் செய்யும் ஆதிக்க இயக்கவியலை எதிர்த்து நாம் இன்னும் ஒருமுறை கைதூக்கத்தான் போகிறோம் என்பதை! 

பரமக்குடி தாக்குதல்

63 வயது முதியவரை சூழ்ந்து தாக்கும் 'வீரர்கள்'

Image-22

உள்ளே இருந்து உடைக்கப்பட்ட முட்டையில் இருந்துதான் ஓர் உயிர் வெளிப்படுகிறது. புதிதாகத் தோன்றும் எந்தவொரு விஷயமும் வெடிப்பு, உடைப்பு, எதிர்ப்பு போன்றவற்றில் இருந்தே தோன்றுகின்றன. உலகம் தோன்றி இத்தனை ஆயிரம் கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மற்ற உயிர்களோடு சேர்த்து மனிதனும் பிழைத்திருக்கிறான் என்று சொன்னால் அதற்கு முக்கியக் காரணம்.. டார்வின் சொல்லிச் சென்ற விதிதான். 'வலிவுள்ளதே வாழும்!' 

எனில், அந்த வலிவுள்ள உயிரினங்களின் இன்னொரு இயல்பு எதிர்ப்பு. தனக்கு ஆபத்து வந்தால் மட்டும் கொந்தளிப்பது எதிர்ப்பாகாது. தனக்கு நேர்ந்த ஓர் அபாயம் அடுத்தவனுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்னும் பதைபதைப்பில் உருவாவதுதான் உண்மையான எதிர்ப்பு, கொதிப்பு, கொந்தளிப்பு ஆகும். இதையேதான் சேவும் சொன்னான், "உலகத்தில் எங்கேனும் ஓர் அநீதியை காண நேர்ந்து அதனால் நீங்கள் கோபம் கொண்டால் நாம் அனைவரும் தோழர்கள்!".

ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் இரும்புத் தொழிற்சாலை வந்துவிடக் கூடாது என்று ஓலமிடுபவர்கள், கூடங்குளத்தில் அணு உலை கூடாது என்று கூக்குரலிடுபவர்கள், ஊழலை முடிவுக்குக் கொண்டு வர லோக்பால் கொண்டு வா என்று அரசை நிர்பந்திப்பவர்கள், முதலாளித்துவப் பேரலை தங்களை மூழ்கடித்துவிடக் கூடாது என்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்பவர்கள், ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர தஹ்ரீர் சதுக்கத்தில் இருந்து குரல் கொடுப்பவர்கள், ஊதியக் குறைப்பு, வரி விதிப்பு, வேலை நீக்கம் என அடுத்தடுத்து துன்பங்களைச் சந்தித்து ஏதென்ஸ் நகர வீதிகளில் ஊர்வலம் வருபவர்கள், பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்து மாட்ரிட் நகரில் கலவரத்தில் ஈடுபடுபவர்கள், கொடுங்கோண்மை புரியும் ஆட்சியாளர்களைக் கீழே தள்ளு என்று 'மல்லிகைப் புரட்சி'யில் ஈடுபட்டு மார்தட்டுபவர்கள், 'உடையைப் பார்க்காதே... உள்ளத்தைப் பார்!' என்று 'ஸ்லட் வாக்' நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிப்பவர்கள், முல்லைப் பெரியாறுக்காக அணி திரள்பவர்கள்.. இவர்கள் எல்லோரும் ஓரணியில் நின்றார்கள் கடந்த 2010ல். ஒரே காரணம்... அவர்களின் நம்பிக்கைக்கு உரியதாக அவர்களது அரசு இல்லை!

ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள். ஒவ்வொரு பிரச்னையும் ஒவ்வொரு அரசியல் தளத்தில் இயங்குபவை. எனினும் எல்லோரும் ஒரே மாதிரியான போராட்டத்தைக் கைக் கொண்டார்கள். அது.. வீதிகளில் இறங்குவது! அரசுகளிடம் இருக்கும் ஆள் பலம் இல்லை. அரசுகளிடம் இருக்கும் அதிகார பலம் இல்லை. அரசுகளிடம் இருக்கும் ஆயுத பலம் இல்லை. அரசுகளிடம் இருக்கும் கல் மனம் இல்லை. பிறகெந்த தைரியத்தில் இம்மக்கள் எல்லோரும் வீதிகளில் இறங்கி வந்தார்கள்? 

எதிர்ப்புக் குணம் என்பது எந்தவொரு உயிரினத்தினடமும் இருக்கும் இயல்பு. இந்த இயல்பு இப்போது வந்தது அல்ல. காலம் காலமாக இருந்து வந்ததுதான். எனினும், அதை மிகச் சரியாக நம்மிடம் கடத்தியவர்களில் முக்கியமானவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான். 

ஆங்கிலேயனின் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஒத்துழையாமைச் செய்வதையும், பட்டினி கிடப்பதையும் மேற்கொண்டார். அத்தனைக்கும் மேலாக, உள்ளளவும் நினைக்க வைக்கிற கலாசாரத்தின் குறியீடாக இருந்த உப்பின் மீது வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டி வரை சென்று உப்புக் காய்ச்சினார் காந்தி. இன்று வீதிகளில் இறங்கி வரும் போராட்டங்களுக்கு அதுதான் அடித்தளமாக இருந்திருக்க வேண்டும். 

இன்று நடைபெறும் இத்தகையப் போராட்டங்களை உற்றுப் பார்த்தால் ஒன்று நிச்சயமாக விளங்கும். அது.. போராட்டங்கள் அனைத்துமே தத்தம் நாடுகளுடனேயே, தத்தம் மாநிலங்களுடனேயே, தத்தம் மனிதர்களுடனேயே தான் நிகழ்கின்றன. இதே போராட்டம் இரு நாடுகளுக்கிடையே நிகழ்ந்திருக்குமானால் அதை 'போர்' என்றிருப்பார்கள். இதே போராட்டம் முதலாளித்துவ நாட்டுக்கும் மூன்றாம் உலக நாட்டுக்கும் இடையே நிகழ்ந்திருக்குமானால் அதை 'வன்முறை' என்றிருப்பார்கள். இதே போராட்டம் ஒரு நாட்டில் ஒதுக்கப்பட்ட இனத்தினருக்கும் ஒடுக்கும் இனத்தினருக்கும் இடையில் நிகழ்ந்திருக்குமானால் அதை 'தீவிரவாதம்' என்றிருப்பார்கள். ஆனால் போராட்டங்கள் மக்கள் தங்கள் நாட்டின் அரசுடன் நிகழ்த்தப்படும் போது அதை 'உள்நாட்டுக் கிளர்ச்சி'யாகப் பார்க்கிறது ஆளும் அரசு. இந்த இடத்தில் தான் 'போராட்டம்', 'கலகம்', 'புரட்சி' போன்ற சொல்லாடல்கள் முழு அர்த்தம் பெறுகின்றன! எனில், மக்கள் நலனுக்கு அரசு செய்யும் எந்தச் செயலையும் 'அரச பயங்கரவாதம்' என்று குறிப்பிடுவதும் சரிதானே? 

தங்களின் போராட்டங்களுக்கு அரசு எந்த விதத்திலும் செவி சாய்க்காத போது, அதற்கு எதிர்வினையாக போராட்டம் வேறு வடிவத்துக்குச் செல்கிறது. ஒடிசாவில் தன் வெற்றிலைக் கொடிக்காலுக்காகப் போராட்டம் நடத்துபவர்களின் குறைகளைக் கேட்கக் கூட முன்வரவில்லை அம்மாநில அரசு. பொறுத்துப் பார்த்த மக்கள், ஒருநாள் ஒன்று திரண்டார்கள். சுமார் 6 கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாஸ்கோ நிறுவனம் அமைய இருக்கும் கடற்கரைப் பகுதியில் வந்து அமர்ந்து கொண்டார்கள். உண்பது, உடுப்பது, உறங்குவது, உறவாடுவது என தங்கள் வாழ்வின் அனைத்தும் அந்த எல்லைப் பகுதியிலேயே கடந்த ஆறு வருடங்களாகக் கடந்து செல்கின்றது. 

கூடங்குளத்தில் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அணு உலைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டுதான் இருந்தார்கள். இன்று இருப்பது போன்ற ஊடகங்களின் 'பிரேக்கிங் நியூஸ்' கலாசாரமோ, அரசுக்கு எதிராக நிகழும் எந்தவொரு போராட்டத்தையும் 'லைவ் கவரேஜ்' செய்கின்ற முறையோ அப்போது இல்லை. எண்பதுகளில், தொண்ணூறுகளில் மக்கள் நம்பி இருந்தது அச்சு ஊடகங்களைத்தான். தூர்தர்ஷன் போன்ற சில சேனல்கள் தான் அப்போது சந்தையில் இருந்தன. அரசுக்கு எதிராக 'நெகட்டிவ் க்ரிடிஸிசம்' கொண்ட எந்த நிகழ்வுகளும் அவற்றில் இடம்பெறாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அப்படியே செய்தியாக்கப்பட்டிருப்பினும் 'காமாசோமா'வாக, முக்கியமற்றதாக நீர்த்துப் போகச் செய்துவிடும்.

இன்று ஒலி/ஒளிபரப்புச் சந்தை முழுவதும் கார்ப்பரேட் கைகளுக்குள் போய்விட்டதால் 'டி.ஆர்.பி. ரேட்டிங்'குக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றன ஊடகங்கள். வெறும் 'டி.ஆர்.பி. ரேட்டிங்'குக்காகவே செய்தி என்கிற ரீதியில் தான் பல காட்சி ஊடகங்கள் செயல்படுகின்றன. இப்படியான நிலையில் இருபது வருடப் போராட்டங்கள் எல்லாம் இரண்டு நிமிட 'டிக்டாட்' ஆகக் கடந்து போகின்றன.  இதனால் பிரச்னை குறித்த கருத்துக்கள், எதிர்க் கருத்துக்கள் பற்றி முழுமையான பார்வை மக்களுக்குக் கிடைக்காமல் போகின்றன. தவிர, புதிதாக ஒரு பிரச்னை வந்தால், ஏற்கெனவே இருக்கும் பிரச்னையை முழுவதுமாகக் கைகழுவி விட்டு புதியதற்குத் தாவிவிடுகின்றன. பழைய பிரச்னை பற்றி 25 நிமிட செய்தியில் (5 நிமிட இடைவெளிகள்) ஒரு நிமிட 'ஃபாலோ-அப்' கூட கிடையாது. இதுவும் போராட்டங்களை ஒரு வகையில் நீர்த்துப் போகச் செய்துவிடும்.  

மேற்சொன்ன காரணங்களால் தான் இன்று இருக்கும் மக்களுக்கு, கூடங்குளம் போராட்டம் ஏதோ நேற்று பெய்த மழையில் இன்று  முளைத்த காளானாகக் காட்சி அளிக்கின்றது. 127 பேர் பட்டினிப் போராட்டத்தில் இறங்குவது, கடலில் கறுப்புக் கொடி காட்டுவது, அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்கள் சிலருக்கு 'கார்டூன்ஸ்கேப்' ஆகத் தெரிகின்றன. மீண்டும், இந்தப் போராட்டத்தையும் அரசு திறந்த மனதுடன் பார்க்காததால் இதுபோன்ற வகைகளில் மக்கள் களம் இறங்கியிருக்கிறார்கள்.  

இப்படியே முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் இரண்டு மாநில அரசுகள் மோதிக் கொள்வதை வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு. பொறுமையின் எல்லை கைமீறிப் போக, அணைய உடைக்க மலையாளிகள் சுத்தியலை எடுக்க... அவர்களின் மண்டையை உடைக்க தமிழர்கள் கல் எடுக்கிறார்கள். இதுபோலவே உலக அளவில் போராட்டங்களை எதிர்க்கும் அரசு பகடைக்காய்கள் மீது ஷூ, செருப்பு வீச்சும், 'பளார்' அறைகளும், கொடுங்கோன்மையரை சாக்கடை வெளியேறும் குழாயில் இருந்து இழுத்து வந்து சுட்டுப் பொசுக்குவதும், செங்கொடி போன்று தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதும் நடைபெறுகின்றன. இவை எல்லாம் போராட்ட மக்களின் பிரதிநிதியாக யாரோ ஒருவர் செய்கிறார் என்கிற அதே நேரத்தில், இவ்வகை வெறுப்புகள் தாக்குதலுக்கு உள்ளான அந்தக் குறிப்பிட்ட பிரபலங்கள் மீதானது அல்ல... ஒட்டுமொத்த அரசின் மீதும் நிகழ்த்தப்பட்டவை என்பதாகவே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

இவ்வாறாக, எதிர்ப்பின் விளிம்பு நிலைக்கு போராட்டக்காரர்கள் செல்லும் அளவுக்கு எங்கே, என்ன தவறு நிகழ்ந்தது? வெடித்துக் கிளம்பும் எரிமலையில் இருந்து 'குபுக்'கென்று குழம்புகள் கொட்டுவதைப் போல, பல காலமாக அடக்கி வைக்கப்பட்ட கோபமும், ஆற்றாமையும் திடீரென்று ஏதோ ஒரு நிலையில் கொதித்து வழிந்தோடக் காரணம் என்ன? கட்டுரையின் ஆரம்பப் பத்திகளில் சொன்னது பதில்... மக்களின் நம்பிக்கைக்கு உரியதாக அவர்களின் அரசு இல்லை! 

தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தன் முதுகின் மீதே சவாரி செய்வது மட்டுமல்லாமல், தான் தயங்கி நிற்கிற, துயரப்பட்டு வெதும்புகிற, சோர்வடைகிற சமயங்களில் தன் புட்டத்தின் மீது சவுக்கால் விளாசுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாத கணத்தில்தான் அந்த 'மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள்' மேல் சேறு பூசுகிறான். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் முகத்தில் கரி பூசுகிறான். இப்படியே அடுத்து வரும் ஆட்சியும் அமைந்தால், பாவப்பட்ட குடிமகன் என்ன செய்வான்? இயலாமையால் நடப்பது அனைத்தையும் சகித்துக் கொள்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறான். 'இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஒரு நாள் முடிவு வராதா' என்று ஏங்கும் நேரத்தில் அவனையும் சேர்த்து அவதிப்படும் அனைவரையும் ஒன்று திரட்டிப் போராட ஒரு நாயகன் உதயமானால்... அங்குதான் அத்தனை பேரின் ஒற்றுமைப்பட்ட கோபமும் பெருஞ் சீற்றமாக உருவெடுக்கிறது. 

லோக்பாலுக்காக அண்ணா ஹஜாரேவும், கூடங்குளம் எதிர்ப்புக்காக உதயகுமாரனும், அரசியல் தாண்டி எந்தப் பிரச்னைக்கும் முன் நிற்கிற வைகோவும் இவ்வாறான 'பெருஞ் சீற்ற'த்துக்குக் காரணமாக அமைந்திருக்கிறார்கள் என்பதால் நிச்சயம் நாம் அவர்களைத் தொழுதுதான் ஆக வேண்டும். அங்கீகாரம், மதித்தல், மரியாதை போன்ற அர்த்தங்கள் 'தொழுதல்' என்ற சொல்லின் மறைபொருட்களாக இங்கே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 

ஒரு பிரச்னை அரசியலாக்கப்படுவது (Politicised issue) என்பது வேறு. கட்சியியல் ஆக்கப்படுவது (Party politics issue) என்பது வேறு. இன்று நாம் காண்கிற பிரச்னைகள் எல்லாம் அரசியலாக்கப்பட்டவை. அப்படி அரசியலாக்கப்பட்டதால் தான் உலகம் முழுவதும் விவாதங்கள் ஏற்படுகின்றன. எந்தப் பிரச்னையும் அறிவு தளத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது அது அரசியலாக்கப்படுகிறது. அதுவே குழப்பவாதிகளின் கைகளுக்குச் சேர்ந்தால் அவற்றுக்கு கட்சி நிறம் பூசப்படுகிறது. கூடங்குளம் போராட்டத்தை கிறிஸ்தவர்கள் கூப்பாடு என்றும், லோக்பால் போராட்டத்தை மேல்தட்டு வர்க்கப் பூசல் என்றும், முல்லைப் பெரியாறு போராட்டத்தை இனச் சச்சரவு என்றும் விமர்சிப்பது இத்தகைய மதிமங்கிய செயலால்தான். 

எந்தப் பிரச்னையையும் கட்சி சார்ந்த ஒன்றாக மாற்றம் செய்யப்படாமல் இருக்க போராட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் நல்லதொரு தலைமைக்கான தேவை ஏற்படுகிறது. அரசு முதலில் போராட்டத்தை ஒடுக்கும். முடியாமல் போனால் விமர்சிக்கும். அதுவும் செயலற்றுப் போனால் போராட்டத் தலைமைகள் மீது தனிநபர் ஒழுக்கம் குறித்தான பொய்ப் பிரசாரத்தைப் பரப்பும். அடித்து உள்ளே தள்ள அரசுக்கு நிமிடம் பிடிக்காது. ஆனால் அவ்வாறு செய்தால் அது எரிகின்ற தீயில் 'தவுசண்ட் வாலா' பட்டாசைத் திரி கிள்ளிப் போடுவது போலத்தான் அமையும் என்பதாலும், போராட்டத் தலைமையின் தூய்மையைக் கேலி செய்தால் பொங்கிய சீற்றம் பின்னடைந்துவிடும் என்ற தவறான கருதுகோளாலும் அரசு இந்தத் தவறைச் செய்கிறது. 

ஹஜாரேவும், உதயகுமாரனும், வைகோவும் எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இத்தனைக்கும் பிறகு அந்தத் தலைமைகள் எல்லாம் நின்று களமாடுகின்றன என்றால் அவற்றின் நேர்மை சந்தேகத்திற்கு இடமானது அல்ல! 

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்பதை அரசியல்வாதிகள் யாரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழலில் இந்தப் போராட்டங்கள் எல்லாம் எதை நோக்கிப் பயணிக்கின்றன? இவற்றின் இறுதி வெற்றி / முடிவு என்பது யாது? அரசுக்குக் கிடைக்கும் லாபம்/நட்டம் என்ன? வெற்றி கிட்டும் எனில், அது மக்களுக்கு எவ்வாறாகப் பயன்படப் போகிறது?  

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் முன், எந்தப் பிரச்னையை போராட்டத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு, வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு, கெய்ரோவில் பெண்களின் எதிர்ப்புப் பேரணி.... என இவற்றின் வரிசையில் 'ஸ்லட் வாக்' போன்ற விஷயங்களை கட்டுரையின் ஒரு பத்தியில் நான் இணைத்துச் சொல்லக் காரணம் என்ன?  

'இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று சொல்லாதே!' என கூக்குரலிட்டு மேலைநாட்டுப் பெண்கள் பேரணி சென்றதில் முக்கியமான ஒரு விஷயம்.. ஆண்களின் ஒழுக்கத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது! 'நான் இப்படி உடை அணிவதால் உன் புத்தி தடுமாறி என்னைக் கற்பழிக்கிறாய் என்றால் உனது ஒழுக்கம் உன் பிறப்பையே சந்தேகிக்க வைக்கிறது!' என்பதைச் சொல்லாமல் உணர்த்தியதாகத்தான் அந்தப் பேரணி அமைந்தது. 'என்னுடைய உடல்வாகிற்கு ஏற்ற உடையை நான் அணிந்தால், அது உன் பார்வையில் உறுப்புகளை எடுத்துக் காட்டுவது போன்று தோற்றமளிக்கிறது என்ற காரணத்துக்காக, வேசி (ஸ்லட்) என்று எங்களைக் கருதுவாயா?' என கேட்பதாகவே அந்தப் பேரணி அமைந்தது. 'பத்தினிக் கவிதைகள் படித்தீரே... உன் மச்சினி கிடைத்தால் விடுவீரோ...' எனும் ஜெயகாந்தனின் வரிகள் உங்கள் மூளையில் உதைத்தால் உங்கள் அளவில் நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள் என்று பொருள் கொள்க! 

எனது உடல் எனது பசி அறியும். உண்பதும், உடுத்துவதும் என் முடிவுக்கு உட்பட்டது. எதை மூடிக் கொண்டு செல்ல வேண்டும், எதை திறந்து கொண்டு திரிய வேண்டும் என்பது எல்லாம் என் உரிமையின் பால்பட்ட விஷயங்கள். உண்மைதான். பெண்மை என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த விஷயம் அல்ல. ஆபாசத்திற்கு உரித்தானதும் அல்ல. அது ஆராதிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை காட்சிப் பொருளாக்கி உலகத்தினரின் பார்வைச் சுரண்டலுக்கு ஆளாவது பெண்ணியம் கிடையாது. முக்காடு விலக்குவதுதான் முற்போக்கு. முந்தானை விலக்குவது அல்ல! இருந்தும், தங்களுக்கான உரிமையைப் பெற வேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வை நாம் போராட்டமாக அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்.  

அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கின்ற உரிமைகள் அனைத்தும் உனக்கு மறுக்கப்படும் போதும், உனக்கு விதிக்கப்பட்ட நியாய, தர்மங்கள் மீறப்படும் போதும் நாம் போராடித்தான் ஆக வேண்டும். வறுமை, பட்டினி, ஊழல் போன்ற மனிதனின் தினசரி வாழ்க்கையினோடு மோதுகின்ற ஒவ்வொன்றையும் போராட்டமாக்கத்தான் வேண்டும். 

அகிம்சை வழியோ, ஆயுத வழியோ... காலமும், சூழ்நிலையும் முடிவு செய்யட்டும். உன் வாழ்க்கையை, உன் தலைமுறையின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டுமென்றால், நீ பெருஞ்சீற்றம் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை. உன் சீற்றத்தை உன்னால் வெளிப்படுத்த இயலாமல் போனால் நீ ஏற்கனவே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதாகத்தான் பொருள். 

உள்ளேயிருந்து உடைக்கப்பட்டு உன் வாழ்வுரிமையைப் பாதுகாக்கப் போகிறாயா அல்லது வெளியே இருந்து உடைக்கப்பட்டு நீ உணவாகப் போகிறாயா? கோழிக் குஞ்சுக்கும் கழுகுக்கும் உள்ள வித்தியாசம் இதுவே!  

இன்னும் வேறு என்ன சொல்வேன்... ஒன்று சொல்வேன்... 'பெருஞ் சீற்றங்கொள்... நீ பிழைத்திருக்க!'

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்