Home » » மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்?

மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்?

Written By DevendraKural on Wednesday, 4 January 2012 | 02:55

ட்சி மாறும்போது அதிகாரிகள் மாற்றப்படுவது சகஜம்தான். ஆனால் ஆறு மாதங்களில் நான்கு முறை மாற்றம் என்றால்...? அப்படி ஒரு 'விளையாட்டுக்கு' ஆளாகி இருப்பவர் வேறு யாருமல்ல... கடந்த ஆட்சியிலும் பந்தாடப்பட்ட உமாசங்கர் ஐ.ஏ.எஸ். 

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் டான்சி நிறுவனத்​தில், பிறகு, கோ-ஆப்டெக்ஸில், மூன்றாவதாக நில உச்சவரம்பு ஆணையராக மாற்றப்பட்டார். இந்தக் கட்டுரை அச்சேறும் வரை, சென்னை மண்டல ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்!

கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசு ஆணை ஒன்றுதான், இப்போதைய பிரச்னைக்குக் காரணம் என்கிறார்கள். அரசு கையகப்படுத்திய நிலம் என்று தெரியாமல், ஏமாந்து வாங்கி 'அறியாக்கிரயம்' செய்தவர்களுக்கு பட்டா தரலாம் என்பதுதான் அந்த அரசு ஆணை. நில மோசடிக் குற்றவாளிகள்இதனைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, 'இந்த ஆணையை ரத்துசெய்ய வேண்டும்' என தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார், நில உச்சவரம்பு ஆணையராக இருந்த உமாசங்கர்.

இந்த நிலையில், அறியாக்கிரயம் பெற்றவர்கள் 500 பேர் பட்டா பெறுவதை நிறுத்தி வைக்குமாறு அமைச்சர் தரப்பில் இருந்து வாய்மொழியாக சொல்லப்பட்டதாம். ஆனால், உமாசங்கரோ எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும் அல்லது புதிதாக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இதையடுத்துதான் இப்போதைய பதவிக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். இதற்கிடையில், உமாசங்கர் ஊர் ஊராகப் போய் கிறிஸ்தவ மதப் பிரசங்கம் செய்தது குறித்து சில மதவாதத் தலைவர்கள் புகார் சொன்னதுதான் மாற்றத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இது பற்றி உமாசங்கரிடம் கேட்டதற்கு, ''என்னை வழிநடத்தும் இயேசு கிறிஸ்துவின் மகிமையை,  லட்சக்கணக்கான மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது, என்னுடைய கடமை. சமய உரிமை என்பது இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. என் வாழ்நாள் முழுவதும் இந்த தெய்வக் கடமையை இன்னும் வீச்சாக செய்துகொண்டே இருப்பேன். முறைப்படி விடுமுறையில்தான் வெளியூர் பிரசங்கங்களுக்குச் செல்கிறேன். வாகனம் உட்பட அரசின் எந்தப் பொருளையும் நான் அதற்காகப் பயன்படுத்துவது இல்லை. மேலும், திருவாரூரில் ஆட்சியராக இருந்தபோது, சமகால வரலாற்றில் முதல்முறையாக, தியாகராஜசுவாமி கோயில் குளத்தைத் தூர் வாரச் செய்தேன். குளத்தில் உயிரிழப்புகளைத்  தடுக்க, இரும்புத் தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுத்தேன். தேரோட்டம் உட்பட இந்துமத நிகழ்ச்சிகளை முன்னின்று செய்தேன். அப்போது என்னை குறிப்பிட்ட மதம் சார்பானவனாகப் பார்க்காதவர்கள், சமீபமாக மட்டும் வேறுபடுத்திப் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, எந்த ஐ.ஏ.எஸ். வேலையையும் செய்வேன்'' என்றார் புன்னகையுடன்.

இரா. தமிழ்க்கனல்

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்