Home » » தென் தமிழகத்தைக் கலக்கிய பசுபதி பாண்டியன்

தென் தமிழகத்தைக் கலக்கிய பசுபதி பாண்டியன்

Written By DevendraKural on Thursday, 12 January 2012 | 23:08

ரணத்தின் பிடியில் இருந்து பல முறை தப்பிய, தமிழக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டி யன், கடந்த 10-ம் தேதி அவரது வீட்டுக்கு அருகிலேயே பலியாகி விட்டார்! 

தூத்துக்குடி மாவட்டம் அலங்கார்தட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி பாண்டியன். 15 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசப் பண்ணையாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் குற்றம் சாட்டப்பட்டார். அதனால், பண்ணையார் குடும்பத் துடன் ஏற்பட்ட பகை காரணமாக, தனது ஜாகையை திண்டுக்கல் நகரை ஒட்டியுள்ள நந்தவனப்பட்டிக்கு மாற்றிக்கொண்டார்.

எப்போதும் தனக்கு மிகவும் நெருக்கமான விசுவாசிகளின் பாதுகாப்புடன்தான் வலம் வருவார். வீட்டிலும் பாதுகாவலர்கள் இல்லாமல் இருக்கவே மாட்டார். அப்படிப் போதிய ஏற்பாடுகளுடன் இருந்தும்... பலமுறை எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் தப்பி இருக்கிறார்.

அ.தி.மு.க. தொழிற்சங்கப் பிரமுகர் பால்ராஜ் என்பவரின் கொலை வழக்கில் ஆஜர் ஆவதற்காக பசுபதி பாண்டியனும் அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியனும் தூத்துக்குடிக்குச் சென்றபோது, எப்போதும்வென்றான் என்ற ஊருக்கு அருகே நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் பசுபதி பாண்டியன் தப்பி விட்டார். ஆனால், அவரது மனைவி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு தன்னுடைய பாதுகாப்பை இன்னமும் அதிகப் படுத்திக்கொண்டார்.

'திண்டுக்கல்லுக்குக் குடியேறிய பிறகு, தனது சமூகத்தினரிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்ட பசுபதிபாண்டியன் இந்தப் பகுதிகளில் பெரிய அளவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடவில்லை. ஆனால், மதுரை, ராஜபாளையம் போன்ற தென் மாவட்டப் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டு வெடி குண்டு வைத்திருந்ததாக திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். விளாத்திகுளம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் பல கொலை வழக்குகள் இவர் மீது உள்ளன. இவருக்கு ஏகப்பட்ட பகையாளிகள் என்பதால், 'எப்போது வேண்டுமானாலும் தான் கொலை செய்யப்படலாம்' என்ற அச்சத்தோடுதான் இங்கு வாழ்ந்து வந்தார். பலமுறை அவருக்குக் குறி வைத்த எதிரிகள், இந்த முறை முடித்து விட்டனர்'' என்று காவல்துறை வட்டாரம் சொல்கிறது.

மனைவி இறந்த பிறகு, பசுபதி பாண்டியனுடன் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். அவரிடம் பேசி னோம். '9-ம் தேதி தேனியில் முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி விட்டு லேட்டாத்தான் வந்தார். 10-ம் தேதி மதியம் 12 மணிக்கு எந்திரிச்சார். அதுக்குப் பிறகு, கூட இருந்த பசங்க ஊருக்குப் போகணும்னு கேட்டதும், மூணு பேரை மட்டும் வெச்சுக்கிட்டு மிச்சப் பேரை அனுப்பிட்டார்.

எங்களுக்கு திருச்சியில் ஒரு கம்ப்யூட்டர் சென்டர் இருக்கு. அதைப் பார்க்கிறதுக்காக நான் கார்ல டிரைவரோட மதியம் கிளம்பிப் போயிட்டேன். வீட்டுல அவரோட ரெண்டு குழந்தைங்க, அம்மா இருந்தாங்க. இவர், எப்பவும் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற காலி இடத்துல உக்காந்துதான் செல்போன்ல பேசுவார். அப்போ, பசங்கள்லாம் வீட்டு காம்பவுண்ட் சுவத்துக்குப் பக்கத்துல பாதுகாப்பா நிப்பாங்க. அன்னைக்கும் அப்படி உக்காந்து பேசிட்டு இருக்கறப்பத்தான் வந்து குத்திட்டாங்க. பைக், கார்ல வந்திருந்தா பசங்க சுதாரிச்சிருப்பாங்க. கொலை பண்ணுனவங்க சைக்கிள்ல வந்ததால கண்டுபிடிக்க முடியலை. அந்த நேரத்துல கரன்ட்டும் கட்டாகி இருந்துச்சு.

ஏழரை மணிக்கு எனக்கு போன் பண்ணி, 'நமக்கு வேண்டியவர் ஒருத்தருக்கு பெங்களூர்ல சின்னப் பிரச்னை. அதனால, நாம பெங்களூர் சிவாஜி நகருக்குப் போக வேண்டியிருக்கும். பசங்களையும் கூட்டிட்டுப் போயிட்டு வரலாம்'னு சொன்னார். எட்டே கால் மணிக்கு கொலை பண்ணின தகவல் வந்துருச்சு' என்று கலங்கினார்.

அடுத்த நாள் காலை, பிரேதப் பரிசோதனை முடிந்து, அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் அவருடைய சொந்தக் கிராமத்தில் அடக்கம் செய்வதற்காக உடல் எடுத்துச் செல்லப் பட்டது.

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஜெயச்சந்திரன், 'பசுபதி பாண்டியனுக்குப் பல எதிரிகள் இருக்கிறதாக தெரிய வருது. கொலையாளிகள் வந்ததாகச் சொல்லப்படும் சைக்கிளைக் கைப்பற்றி இருக்கோம். விசாரணையில் சில முக்கியமான விஷயங்கள் கிடைச்சிருக்கு. சீக்கிரம் கொலையாளிகள் சிக்கிடுவாங்க' என்றார்.

வழக்கமாக, பசுபதி பாண்டியனுடன் அவரது சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள்தான் காவலுக்கு இருப்பார்களாம். ஆனால், சம்பவத்தன்று காவலுக்கு இருந்தவர்கள் அனைவருமே திருச்சியைச் சேர்ந்தவர்களாம். அதனால் எழுந்த சந்தேகத்தால் சுந்தரியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது போலீஸ்.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்