Home » » நாம் ஏன் வேறு ஒரு கட்சியை தேர்ந்தெடுக்கக் கூடாது....?

நாம் ஏன் வேறு ஒரு கட்சியை தேர்ந்தெடுக்கக் கூடாது....?

Written By DevendraKural on Monday, 13 February 2012 | 03:54

ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவிற்கோ அல்லது அதிமுகவிற்கோ வாக்கினை செலுத்தி விட்டு ஓட்டாண்டிகளாயிருக்கும் எம் தமிழ் மக்களுக்கு அனுதாபங்களைக்கூறி இக்கட்டுரையைத் துவக்குகிறோம். 

திமுகவின் ஆட்சியில் சலிப்புற்று அதிமுகவிற்கு வாய்ப்பு கொடுத்து விட்டு தற்போது என்ன சாதித்து விட்டோம் தோழர்களே? விலைவாசியில் மாற்றம் இருக்கிறதா? வாழும் தினசரிகளில் அபரிதமாய் ஏதேனும் புதிய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா? அரசினை ஆளும் கட்சிதான் மாறியிருக்கிறதே அன்றி வேறு ஏதேனும் குறிப்பிட தகுந்த நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்?

மின்சாரத் தடையால் தமிழகமே இருண்டு போய் கிடக்கிறது என்று திமுகவைச் சாடிவிட்டு அதிமுகவை அறியணை ஏற்றியதால் மாற்றம் ஏன் ஏற்படவில்லை என்று யோசித்தாவது பார்த்தீர்களா? வரிச்சுமையை ஏற்றி விளையாடிய நமது சகோதரியின் அரசு கொடுக்கும் இலவசங்களை பல் இளித்துக் கொண்டு நாம் வாங்கித்தான் ஆக வேண்டுமா என்று கண நேரமேனும் யோசித்தீர்களா?

இலவச அரசு தொலைக்காட்சியையும், மடிக்கணியையும் வைத்துக் கொண்டு மெழுகுவர்த்திகளோடு சோக மொழி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்...? திமுகவை ஆட்சியை விட்டு இறக்க போதும் போதுமென்ற காரணங்களை நாம் கையிலெடுத்துக் கொண்டிருந்தோம்....சரி இப்போது போதும் போதுமென்ற அளவிற்கு காரணங்களை அம்மையாரின் அரசும் நமக்கு படியளந்து கொண்டிருக்கிறது....

இந்த ஐந்து வருடம் முடிவதற்குள் திமுக அரசின் எல்லா தவறுகளும் காலப்போக்கில் மறந்து வழக்கம் போல அதிமுகவின் தவறுகளும், அந்த தவறுகளால் விளைந்த கஷ்டங்களும் நமது கண் முன் நிற்க....

மறுபடி திமுகவை அரியணை ஏற்றப் போகிறோம் அவ்வளவுதானே நிகழப் போகிறது....அல்லது வேறு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறோமா மாற்றாக....?

என் அன்பான தமிழ்த் தேசத்தின் மக்களே....! ஏன் இந்த மனோவசியக்கட்டு நமக்கு...? சட்டசபை நிகழ்வுகளில் ஏழரை கோடி ஜனங்களின் பிரதிநிதியான முதலமைச்சர் சினிமாத்தனமாய் பேசி சண்டையிடுகிறார்....! எல்லா விலைவாசியையும் நாங்கள் ஏற்றி விட்டோம்....இருந்தும் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நாங்கள்தான் வெல்வோம் என்று சீறிப்பாய்கிறார்...? இது நிர்வாக ரீதியான பேச்சு அல்லவே.? என் கட்சி பலம் வாய்ந்தது என்ற மார்தட்டல்தானே ? 

போன ஆட்சியில் தொடங்கிய மின்வெட்டினை இன்னும் வளர்த்து விட்டு முழுக்க முழுக்க தமிழகத்தை இருள் வெள்ளத்தில் தள்ளி விட்டு தொழில் துறையை முடக்கி வைத்திருக்கிறார்...? தொழில் துறை மட்டுமல்ல., தேர்வுப்பருவம் நெருங்கி வரும் சமயத்தில் இரவில் கடும் மின்வெட்டு., டீசல் பயன்பாடும் மிக அதிகமாகிறதுதானே?

விடுதலைப் புலிகளை வெறுத்த இன்னமும் வெறுக்கும் ஜெயலலிதா அம்மையார், தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாட உச்ச கட்ட ஆயுதமாய் எடுத்திருக்கும் தனித் தமிழ் ஈழம் முழக்க நாடகம் எதுவரையில் என்று என் தமிழ் மக்களுக்கு தெரியுமா? ஈழப்பிரச்சினையைப் பற்றி பேசியதாலேயே தனது ஆதரவைக் கொடுக்கும் சீமான்களுக்கும் புரியுமா?

வண்டி வண்டியாய் தமிழர்களின் பிரச்சினைகளை கையில் வைத்துக் கொண்டு தனது சொந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதில் அவர் மும்முரமாக இருப்பதிலும், சசிகலாவை வெளியே அனுப்பிய கையோடு சசிகலாவைச் சார்ந்தவர்களை நோக்கி ஞானோதயம் வந்த அரசின் இயந்திரங்கள் பாய்வதையும் நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்..? 

கட்சியை பலம் வாய்ந்ததாக மாற்ற அரசு இயந்திரம் செயல்படுகிறதே தவிர எந்த கலெக்டர் அல்லது அமைச்சர் இதுவரை மாற்றப்படாமல் இருக்கின்றனர்? தனது துறையை,மாவட்டத்தை புரிந்து கொள்ளக்கூட நேரம் இருப்பதில்லையே அவர்களுக்கு...!!!!!!!

கூடங்குளத்தில் மக்கள் போராட்டம்...., முல்லைப் பெரியாறுக்கு மக்கள் போராட்டம், இன்று மின்சாரம் வேண்டி ஆங்காங்கே மக்கள் போராட்டம், பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு, புதிய சட்டசபை மாற்றம், நூலகம் மாற்றம் என அரசின் செயல் பாடுகளை ஒவ்வொரு தடவையும் கண்டித்து நறுக் நறுக் என்று கொட்டு வைக்கும் உயர் நீதிமன்றம்....., சட்டசபையில் கேலிக் கூத்து,

இவையெல்லாம்தானா நாம் எதிர்பார்த்த மாற்றங்கள்...? இவையெல்லாம் தானா புரட்சித் தமிழர்கள் தங்கள் வாக்குகளால் கொண்டு வந்த ஜனநாயகத்தின் விடியல்...?

கருணாநிதியைச் சுற்றி தனது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள திமுக என்னும் கட்சியினர் செய்யும் எல்லா அநீதிகளையும் பொறுத்துக் கொண்டு வாக்களிக்க ஒரு கூட்டம்..

ஜெயலலிதாவைச் சுற்றிலும் அதே போல தனது சுயநலத்துக்காய் அதிமுக கட்சியில் இருக்கும் முரண்பாடுகளையும், அநீதிகளையும் சகித்துக் கொண்டு ஒரு கூட்டம்.....

இவர்களுக்கு மத்தியில் சாதி மற்றும் மத ரீதியிலான சில கட்சிகளுக்குள் தனது சுயநலத்துக்காய் ஒரு கூட்டம்....

முதலமைச்சர் கனவுகளோடு அந்தப் பதவியை மட்டுமே குறி வைத்து அரசியல் களமிறங்கும் கத்துக் குட்டித் தலைவர்கள்...

இப்படி ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் தமிழர்கள் தங்கள் முகாந்திரங்களை அமைத்துக் கொண்டு மூளைச் சலவை செய்யபப்ட்டது போல தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளுக்காக வாழ்க, ஒழிக கோசம் போடுகிறார்களே....அதுதான் இந்த தமிழ்த் தேசத்தின் சாபக் கேடு.....!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவின் கை எந்த அளவு இருந்தது என்றும் தமிழீழப் பிரச்சினையில் ஆட்சியில் இருந்த போது பாரமுகமாய் அதன் தலைமை நடந்து கொண்டு, காங்கிரசோடு ஏன் தமிழினத்தின் தலைவர் சமரசம் செய்து கொண்டு போக வேண்டும்...? திமுக என்னும் பெரும் கட்சிக்குள் ஏன் தனது குடும்பத்தினரை அடுக்கடுக்காக கொண்டு வந்து ஒரு தன்னிகரில்லாத தலைவன் சிறைப்பட்டுப் போக வேண்டும்....?

இத்தனை கேள்விகளும் திமுகவை ஆதரிக்கும் அத்தனை பேருக்குள்ளும் இருக்கும்....? சத்தியத்தின் கேள்விகள் அவரவர் மனசாட்சிகளுக்குத் தெரியும்...ஆனால் கேட்க மாட்டார்கள்.....காரணம் சுயநலம். 

அதிமுக என்னும் கட்சி 1991ல் இருந்து தமிழகத்தில் செய்த ஊழல்கள் வரலாறு காணாதவை..., இன்னமும் வழக்குகளோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் அதன் தலைமை, ஒரு கட்டத்தில் வேறு ஒருவரை முதல்வராய் வைத்து விட்டு பதவி விலக வேண்டியிருந்தது என்பதும், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் சசிகலா என்னும் ஒரு தனிநபர் அவர் மூன்றாம் முறை முதல்வர் ஆகும் போதுதான் தவறானவராக பார்க்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார் எனில் இதற்கு முன் எல்லாம் ஆளுமை நிறைந்த அவர் மழுங்கிப் போய்தான் இருந்தாரா? எனபது மட்டுமல்ல...

முழுக்க முழுக்க தன்னை ஒரு உயர்சாதிக்காரராய் பரிணமித்துக் காட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் இந்துத்வா அபிமானம் திராவிடம் பேசும் அதிமுகவின் கட்சித் தொண்டர்களுக்கு தெரியாதா என்ன? 


திமுக மற்றும் அதிமுகவை சார்ந்து இருக்கும் தமிழர்கள் அத்தனை பேருக்குமே தெரியும் தத்தம் கட்சியில் இருக்கும் முரண்கள்...! 

எல்லாம் தெரிந்தும் நாம் சமரசம் செய்து கொண்டு போக சொல்லும் ஒரே ஒரு காரணம் மாற்றாக வேறு யாரும் இல்லை என்பதுதான்...

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா இவை கடந்த மாற்று ஒன்று வந்து விடக்கூடாதா அன்பான மக்களே...? ஏன் வரக்கூடாது என்று  சிந்திப்பதே கேலிக்குரிய விடயமாய் இங்கே பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் நம்மைச் சுற்றி இருக்கும் நெருங்கிய உறவுகளே பற்பல காரணங்களுக்காக நாம் மேலே கூறியிருக்கும் கட்சிகளுக்குள் குடியிருப்பதுதானே...?

எல்லா கட்சிகளுக்குள்ளும் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழர்களளே!!!! உங்களின் மனசாட்சிகளைத் தொட்டு சொல்லுங்கள்... கடந்த 50 வருட அரசியலில் நாம் சாதனைகள் என்று குறிப்பிட்டு காட்டி சொல்பவை எல்லாம் நிஜத்தில் சாதனைகள் தானா>

நீ செருப்பில்லாமல் இருந்தாய் உனக்கு பிய்ந்த செருப்பு வாங்கிக் கொடுத்தோம் என்பதும்...நீ அம்மணமாய் இருந்தாய் உனக்கு கோமணம் கட்டி விட்டோம் என்று கூறுவதும் சாதனைகளா?

தேர்தல் அரசியலை முன்னெடுக்காத தந்தை பெரியார் சாதித்தை விட அவரை பின்பற்றுவதாய்க் கூறும் இந்த திராவிட இயக்கங்கள் சாதித்துக் கொடுத்தது என்ன? செய்த புரட்சிகள் என்ன...? சிந்தித்துப் பாருங்கள் அன்பானவர்களே...!

மூன்று வேளை உண்ணவும், குடியிருக்கவும், திருமணம் செய்யவும், பிள்ளைப் பெற்றுக் கொள்ளவும், ஓசி வேட்டி சேலைகளை வாங்கி உடுத்திக் கொண்டு தேவ தூதர்கள் கொடுக்கப் போகும் வண்ணத் தொலைகாட்சிப் பெட்டிகளையும், மடிக்கணிணிகளையும், செயற்கைக்கோள் தொலைகாட்சி இணைப்புகளையும் பெற....

இருள் சூழ்ந்த தமிழகத்தில் கையேந்தி நிற்பதுதானே...நமது நிலைமை?

இவைதானே...திமுக மற்றும் அதிமுக கட்சிகள் சாதித்துக் கொடுத்தவை....? கடந்த 20 வருடங்களாக மாறி மாறி வாக்களித்து நாம் ஒன்றும் சாதித்து விடவில்லை...., சமூகம்20 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இன்னும் கேவலமாக பின்னோக்கித் தான் சென்றிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா எம் தோழர்களே...?

அறிவியலும் நவீனமும் காலத்தின் கட்டாயம். அது மட்டுமே மாற்றம் என்று பார்க்கும் ஒரு தெளிவில்லாத தன்மையை விடுத்து பாருங்கள்..நாம் சாதித்திருப்பது எல்லாம் சுயநல அரசியல் தலைவர்களையும் அவர்களின் முதாலாளித்துவ ஏகாதிபத்திய் வாழ்க்கையையும் அதனால் நமக்கு கிடைக்கப் பெற்ற அடக்கு முறைகளையும் அநீதிகளையும்தான்...!

அடுத்த தேர்தலிலாவது.....

திமுக அல்லது அதிமுக இல்லாத, காங்கிரசைச் சாராத, மதவாதம் இல்லாத...

வேறு ஒரு கட்சியை நாம் ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது....? என்ற வலுவான கேள்வியோடு இந்தக் கட்டுரையை நாம் நிறைவு செய்கிறோம்...!

Share this article :

+ comments + 1 comments

16 February 2012 at 04:15

திமுக மற்றும் அதிமுக இரண்டும் நம்மை அழிப்பதில் சளைத்தவர்கள் இல்லை. காங்கிரஸ் ஒட்டு மொத்த தமிழர்களையும் அழிக்க துடிக்கிறது. தேமுதிக நம்மை ஆதரிப்பதாக தெரியவில்லை, அது பரமக்குடி விசயத்திலேயே தெரிந்து விட்டது. பாமக சொல்லிக் கொள்ளும் நிலையில் இருப்பதாக தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியும் அதே நிலைமையில் தான் உள்ளது.
மதிமுகவை சப்போர்ட் செய்யலாம் என்றாலும், வைகோ தனிப்பட்ட முறையில் சாதியத்தை ஆதரிப்பவர், இதை எங்கள் ஊரில் நடந்த சம்பவத்தின் மூலன் நான் அறிந்தது.
கிருஷ்ணசாமி மற்றும் ஜான் பாண்டியன் ஆகிய இருவரும் தனிப்பட்ட புகழ் மற்றும் தான் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள் என்பது என் கருத்து. இவர்கள் பின்னாடி போவது என்பது மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்குவது போலாகும். பிஸ்பி தலித் மனப்பான்மையோடு இருப்பவர்கள், நமக்கு சுத்தமா ஒத்து வராது. சுப அண்ணாமலை அண்ணனும் இன்னும் மள்ளர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள படவில்லை.
இனி இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும். தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA) தான் இதற்கு சிறந்த வழி. வேறு தேவேந்திரர் அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டால், அவர்களை ஆதரிக்க தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு தயங்காது. நமது நோக்கம், சிந்தனை அனைத்தும் தேவேந்திரர் முன்னேற்றம் ஒன்றே.

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்